-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
57. முற்பிறவிப் பயன்
.
நித்யம் ஸ்வோதர போஷணாய ஸகலானுதிச்’ய வித்தாச’யா
வ்யர்தம் பர்யடனம் கரோமி பவதஸ்ஸேவாம் ந ஜானே விபோ/
மஜ்ஜன்மாந்தர புண்யபாக பலதஸ்த்வம் ச’ர்வ ஸர்வாந்தரஸ்-
திஷ்டஸ்யேவ ஹி தேன வா பசு’பதே தே ரக்ஷணீயோsஸ்ம்யஹம்//
.
என்றுமென் உந்திபோற்றப் பணம்வேண்டி பலர்நாடி
நன்றிலாமல் சுற்றினேன் நின்சேவை நினைகிலையே
முற்பிறவிப் பயனன்றோ எங்கெங்கும் நினைக்கண்டேன்
நற்காப்புத் தரவேண்டும் அஃதொன்றால் பசுபதியே!
.
சிவபெருமானின் மகிமையைக் கூறும் ஆனந்தத் தாண்டவத்தை மனக் கண் முன்னர் பக்தர்கள் காண்பது, அவர்களது முற்பிறவிப் பயனால்தான் அமைகிறது. அந்தத் திருக்காட்சியைக் கண்டதும் இறைவன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இறைவனிடமே அருள் புரிய இறைஞ்ச வேண்டும் என்பதை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். சாதாரண மனிதரைப்போல் தம்மை பாவித்துக்கொண்டு, நமக்காக இதனை அவர் பாடியுள்ளார்.
எப்போதுமே எனது வயிற்றை வளர்ப்பதற்காக பணத்தாசை பிடித்து அலைகிறேன். அதற்காக யார் யாரையோ நாடி நின்று, நல்லவை அல்லாத வழிகளில் சுற்றித் திரிகிறேன். இறைவா, சிவனே, இதுபோன்ற தருணங்களில் உனது சேவையே நான் நினைத்துப் பார்க்கவில்லையே! இருப்பினும் நான் செய்த பூர்வஜென்ம புண்ணிய பலன்களால், எல்லாவிடத்திலும், எல்லோருள்ளும் நீயே வீற்றிருக்கிறாய் என்பதைக் கண்டுகொண்டுவிட்டேன். இத்தகு அரிய காட்சியிலிருந்து, ஞானப் பார்வையில் இருந்து நான் விலகாமல் என்னை நீதான் காப்பாற்ற வேண்டும் பசுபதியே! ஏனென்றால், உனது விருப்பத்தால்தான் எனக்கு இத்தகு திருக்காட்சி காணக் கிடைத்துள்ளது. ஆகையால் நீயேதான் என்னைக் காத்தருள வேண்டும்.
பொருளாசை, இதர பிற ஆசைகளின் பின்னே ஓடாமல், எங்கும், யாவருள்ளும் இறைவன் உறைந்திருப்பதை முற்பிறவிப் பயனால், நாம் காணத் தலைப்படுகிறோம். அதனைக் கண்டுவிட்டால் போதும், அவரால் பிறவித் தளையில் இருந்து காப்பாற்றுவதற்கு உரியவராக நாம் ஆகிவிடுகிறோம் என உறுதியளிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$