-எஸ்.வையாபுரிப் பிள்ளை

15. முத்தொள்ளாயிரம்
நமது மூதாதையர் நமக்குத் திரட்டி வைத்துள்ள செல்வங்களுள் பெருஞ் சிறப்பு வாய்ந்தது முத்தொள்ளாயிரம். இப்போது இந்நூல் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இதற்குரிய செய்யுட்கள் சில ‘புறத் திரட்டு’ என்னுந் தொகைநூலுள் தொகுக்கப் பெற்றுள்ளன. இச் செய்யுளின் அருமை பெருமைகளையுணர்ந்து முதன்முதல் 1905-ல் ‘செந்தமிழ்’ பத்திரிகை வாயிலாக இவற்றை வெளியிட்டவர்கள் ஸ்ரீ.ரா.இராகவையங்காரவர்கள்.
இந்நூல் வெளிவந்து 38 ஆண்டுகளாய் விட்டன. *1 இதன் பெயரை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் ‘முத்துள்ள யீரம்’ என்று தமிழிற் பெயர்த் தெழுதினாரும் உளர். சமீப காலத்தில்தான் இந்நூலின் அழகினையும், இனிமையினையும் தமிழ் மக்களிற் பெரும்பாலார் அறிந்து அனுபவித்து வருகின்றனர். எனது நண்பர் திருவாளர் டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களே இதற்கு முக்கிய காரணமாயுள்ளவர்கள். திரு. முதலியாரவர்களைப் போலக் கவிதை யின்பத்தைப் பிறர்க்கு எடுத்துக்காட்டி அனுபவிக்குமாறு செய்ய வல்லவர்கள் தமிழ்நாட்டில் மிகச் சிலரேயுள்ளார்கள்.
ஒரு சிலர்க்குத் தமிழ்க் கவியென்பது இலக்கண விதிகளைக் கோத்து வைப்பதற்குரிய மாட்டு-கருவியாகவே தோன்றிக் கொண்டிருக்கும். வேறு சிலர்க்கு அது வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்துவதற்குரிய தர்க்கப் பொருளாகவே தோன்றிக் கொண்டிருக்கும். இன்னும் ஒரு சாரார்க்கு அது காலவாராய்ச்சிக்கு உதவும் சரிதப் பொருளாகவே தோன்றும். கடைசியாக ஒரு சிலர்க்கு நலிந்து சிதைத்துத் தாம் கருதிய நுணுக்கப் பொருள்களை யிட்டு வைப்பதற்குரிய சொற்பையாகவே தோன்றி விடுகிறது. சிறந்த கவித்துவ நலம் படைத்தவன் தனது இதயத்தினின்றும் உணர்ச்சி ததும்பத் தோன்றிய கவிதையின் இன்பத்தைப் பிறர் அனுபவிக்க வேண்டுமென்றே கருதுவான். உண்மைக் கவிதையின் பயன் இன்பவுணர்ச்சியே யன்றிப் பிறிதல்ல.
இக் கவிதைத் தத்துவத்தை நன்குணர்ந்தவர்கள் திரு.முதலியாரவர்கள். இவர்கள் போன்ற ஒரு சிலராலேயே தமிழ் நாட்டில் உண்மைக் கவிதையுணர்ச்சி பரவி வருகிறது.
முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் அடங்கிய ‘புறத்திரட்டு’ என்னுந் தொகைநூலைப் பதிப்பித்து வெளியிடும் பேறு எனக்கு 1938-ல் வாய்த்தது. பல பிரதிகள் பெற்று நன்கு பரிசோதித்து, சென்னைப் பல்கலைக்கழகத்துப் பதிப்பாக இதனை வெளியிட்டேன். இப்பதிப்பில் நான் எழுதிய முன்னுரையால் முத்தொள்ளாயிரம் பற்றிய சில செய்திகளை அறியக்கூடும். இச் செய்திகளில் ஒரு சில ஸ்ரீ இராகவையங்காரவர்களது பதிப்பிலிருந்து கொள்ளப்பட்டன. சில மாதங்களுக்கு முன் நான் செய்துவந்த ஆராய்ச்சியால் சில நூதன விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. அவற்றில் இரண்டினை இங்கே வெளியிட விரும்புகிறேன்.
முத்தொள்ளாயிரத்தில் எத்தனை செய்யுட்கள் உள்ளன?
இக்கேள்வி யாவருக்கும் வியப்பாகத் தோன்றும். ஐந்திணை யைம்பது, நாலடி நானூறு இவற்றில் எத்தனை செய்யுட்கள் உள்ளன என்ற கேள்வியைப் போன்றதல்லவா இதுவெனப் பலரும் நினைக்கக்கூடும். சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் 900 செய்யுட்கள் வீதம் 2700 செய்யுட்கள் அடங்கிய ஒரு நூலென்று சாதாரணமாக நாம் கருதுவோம். ஸ்ரீ இராகவையங்காரவர்களும் இங்ஙனமே அவர்கள் எழுதிய முகவுரையிற் கூறினார்கள். எனது புறத்திரட்டு முன்னுரையில் நானும் இவ்வாறே கொண்டுள்ளேன். முத்தொள்ளாயிரச் செய்யுட் பகுதியைக் கவித்வக் கண்ணால் நோக்கி மூல பாடங்களைத் திருத்தி ரசிகருக்கென உரை வகுத்த திரு டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களும் ‘சேரன் சோழன் பாண்டியன் இவர்கள் மீது பாடிய தொள்ளாயிரம் தொள்ளாயிரமான மூன்று தொள்ளாயிரங்களும் சேர்ந்து ஒரு நூலாகி, முத்தொள்ளாயிரம் என்ற பெயரோடு வழங்கி வந்தது’ என்று எழுதி யிருக்கிறார்கள். இதுவே முடிந்தமுடிபாக இன்று வரை பலராலும் கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் சிற்சில ஊகங்களால் இம்முடிபில் எனக்கு ஐயப்பாடு தோன்றியதுண்டு. முதலாவது முத்தொள்ளாயிரம் பழையவுரைகாரர்களால் பல இடங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது; ஆனால் ஓரிடத்திலேனும் (2700 செய்யுட்களடங்கிய) அத்தனை பெரிய நூலென்று அது குறிப்பிடப் படவில்லை. இங்ஙனம் குறிப்பிடப் படவில்லை என்பது ஒரு காரணமாக எடுத்துக் கூறுந்தகுதியுடைய தன்று. எனினும் பிறவற்றோடு இதுவும் சேர்ந்து சிறிதளவு சான்றாகப் பயன்படுகிறது. இரண்டாவது சமீப காலம் வரையில் (சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை) முழுவதும் அகப்படுவதாயிருந்த ஒரு இனிய சிறந்த நூலில் மிக மிகச் சிறியதொரு பகுதியே (27-ல் ஒரு பகுதி) இப்போது அகப்படுகிறது என்பது அத்தனை நம்பிக்கைக்கு உரியதாகத் தோன்றவில்லை. நூலை இயற்றிய புலவர் கவிதைத் துறையில் முன்னணியிலுள்ளவர் என்பது இப்போது கிடைக்குஞ் செய்யுட்களால் அறியலாகும். ‘இச் செய்யுட்கள் தாம் சிறந்தன; ஏனையவைகளெல்லாம் தகுதியின்மையால் இறந்தொழிந்தன என்றெண்ணுதலும் பொருத்தமன்று. கவிதைச் சிறப்பினை அளந்தறிதற்கு இப்போது கிடைக்கும் செய்யுட்கள் ஒரு கருவி; நூற்பெயர் பிறிதொரு கருவியாகும். நூலை இயற்றிய கவிஞனது பெயர் மறைந்து விட்டது; நூலின் அருமை பெருமைகளைக் கருதி ஆசிரியர் பெயர் கூறாது நூலின் பெயரையே தமிழ் மக்கள் வழங்கி வரலாயினர். இவ்வகைச் சிறப்புடைய நூலில் மிகச் சிறியதொரு பகுதியே இப்போது அகப்படுவதென்றால் அதனை நம் மனம் எளிதில் ஒப்புவதன்று.
வேறொன்றும் நாம் இங்கே கவனித்தற்குரியது. இலக்கணம், நாட்டியக்கலை, முதலியன சிற்சில தொகுதியாரே அறிந்து அனுபவிக்கும் துறைகள். கவிதை அங்ஙனமன்று; தமிழ் மக்கள் அனைவரும் கற்று இன்புறத்தக்கது. ஆதலால் முற்கூறிய துறைகளின் பாற்பட்ட நூல்கள் இறந்தொழிதல் எளிது. கவிதைத் துறை நூல்கள் இறந்து மறைதல் அத்துணை எளிதன்று. இதனையும் நாம் ஞாபகத்தில் கொண்டால், முத்தொள்ளாயிரத்தில் சுமார் 100 செய்யுட்களொழியச் சுமார் 2600 செய்யுட்களும் மறைந்தொழிந்தன என்றல் அசம்பாவிதமாதல் வெளிப்படை.
மூன்றாவது தொள்ளாயிரம் என்ற தொகையை யுடைய நூல்கள் பல இருந்தன. ‘வச்சத் தொள்ளாயிரம்’ ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலியன உதாரணங்களாம். இவற்றை நோக்கும்போது தொள்ளாயிரஞ் செய்யுட்களில் நூலியற்றுதல் பண்டை மரபுகளுள் ஒன்றென்று கருதலாமல்லவா?
மேற் கூறியன போன்ற ஏதுக்களால் என் ஐயப்பாடு உறதி பெற்றுக் கொண்டே வந்தது. சமீபத்தில் பாட்டியல் பற்றிய நூல்களை நான் ஆராய நேர்ந்தது. இலக்கண விளக்கப் பாட்டியலில் ‘எண் செய்யுள்’ என்பதொன்று விளக்கப்பட்டுள்ளது.
ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே சீரிதிற் பாடலெண் செய்யு ளாகும்
என்பது சூத்திரம் (88)
ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை யிசைத்து மெண்ணாற் பெயர் பெற ஈரைந்து கவிமுத லாயிரம் வரைச் சொல் லெண் செய்யு ளாகு மன்றே' (14)
என்பது பிரபந்த தீபிகை. *2
இலக்கண விளக்கப் பட்டியல் உரையில் ‘பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் வெண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன’ எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யுளென்று வகைப்படுத்தப்பட்ட ஒரு நூலே உணர்த்தப்படுகிறது. இதன்கண் வரும் செய்யுட்களின் பேரெல்லை ஆயிரமாகும். அஃதாவது ஆயிரத்தின் விஞ்சுதல் கூடாது. இத்தனையென்பது நூற்பெயரால் அறியப்படும். முத்தொள்ளாயிரம் என்பதில் தொள்ளாயிரம் என்பது அவ்வெண்ணாதலின் அத்தனை செய்யுட்கள் இருத்தல் வேண்டுமேயன்றி அதனின் மிகுதிப்பட்ட செய்யுட்கள் கொண்டதாக இந்நூலைக் கருதுதல் கூடாது. ஆகவே முத்தொள்ளாயிரத்தில் தொள்ளாயிரஞ் செய்யுட்களே உள்ளன என்பதும் சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு செய்யுட்களே இயற்றப் பட்டன வென்பதும் அறியத்தக்கன.
இந்நூலைச் சார்ந்தனவென ஊகித்தற்குரிய செய்யுட்கள் எவையேனும் உளவோ?
தமிழ்ச் சங்கப் பதிப்பில் சேர்க்கப் பெறாத முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் இரண்டு எனது புறத்திரட்டுப் பதிப்புரையில் காட்டியுள்ளேன். அவற்றுள் ஒன்று பொருள் காணவியலாதபடி பிழைபட்டுள்ளது. பிறிதொன்று முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்ததென ஆசிரியர் இளம்பூரணரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு:
ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே
கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்.
இங்கே ‘ஏற்றூர்தியான்’, ‘கூற்றக் கணிச்சியான்’ என்பன சிவனைக் குறிக்கும். ‘வானவன்’ என்றது சேரனை.
இச் செய்யுளை பூவை நிலைக்கு (தொல்- புறத். 5 உரை) உதாரணமாக இளம்பூரணர் காட்டினார். இவை யிரண்டேயன்றி, வேறோர் அழகிய செய்யுளும் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்ததென ஊகிக்க இடமுண்டு. பேராசிரியர் (தொல். செய்யுளில் 158 உரை) ‘பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிற்சான்றோரு மெனக்கொள்க’ என்றெழுதி, இங்ஙனம் வந்தமைக்குக் கீழ்க்கணக்கு நூலுள் ஒன்றாகிய களவழியிலிருந்து ஒரு செய்யுளும், நூற்பெயர் குறிக்கப்படாத செய்யுளொன்றும் தந்துள்ளார். இப் பிற்செய்யுள் முத்தொள்ளாயிரத்துக் குரியதாதல் வேண்டும் என்பது வெளிப்படை. செய்யுளின் துறையும், அழகும் இனிமையும் முத்தொள்ளாயிரச் செய்யுட்களுள் ஒன்று என்னுந் துணிபினையே வற்புறுத்துகின்றன.
தென்னவனாகிய பாண்டியன் யானை மீது உலா வருகின்றான். அக்காட்சியை இளங்கன்னியர் மூவர் கண்ணுறுகின்றனர். ஒருத்தி, ‘யானை முகத்தை அலங்கரித்த பொன்முக படாம் அழகிது’ என்றனள். மற்றொருத்தி, ‘பொன்னோடையைக் காட்டினும் யானை அழகிது’ என்றனள். இவ்விருவரும் உலாக்காட்சியைக் கண்டு மகிழ்ந்து அவ்வளவில் அமைந்துவிட்டனர். ஆதலால் இவர்கள் எவ்வகையான கவலையுமின்றிப் பரிபூரண சௌக்கிய நிலையில் இருக்கின்றனர். மூன்றாவதொருத்தி உலாக் காட்சியில் ஈடுபடுவதோடமையாமல் யானை மீது உலா வரும் தலைவனது பேரழகிலே மனத்தைப் பறிகொடுக்கின்றாள். அவன் ஆயுதந் தாங்கிவரும் வீரக்கோலம் அவளுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. அவனுடைய அகன்ற மார்பிலே ஆடித் துவண்டு வரும் மாலையைக் குறிப்பாகப் பார்க்கின்றாள். மாலையின் அழகு, அதற்குத் தலைவனது மார்பிலே கிடந்து துவளுமாறு கிடைத்துள்ள நற்பேறு, உலாக் காட்சியில் அதற்குக் கிடைத்துள்ள சமுதாய சோபை, அதனைத் தலைவனது அருளுக்கு அறிகுறியாக முன்னையோர் கூறிவரும் மரபு, அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற பேராசை – இவையெல்லாம் அவள் மனக் கோட்டையைத் தகர்க்கின்றன. கோட்டையில் ஒரு சிறு பிளவு ஏற்பட்டு விடுகிறது. அதன் வழியாகப் ‘பொன்னோடை, யானை முதலிய எல்லாவற்றைக் காட்டிலும் தென்னவனுடைய திருத்தார் நன்று’ என்ற சொற்கள் மூச்சோடு மூச்சாய் இழைந்து வெளிவந்து விடுகிறது. காதலால் மனம் வெதும்பி வருந்துகின்றாள். ‘உய்தியில்லாத இந்நோய் உண்டாவதற்குத் தீயேனாகிய நான் என்ன தீங்கு இழைத்து விட்டேன்?’ எனத் தனது பெருங்காதலை மெல்லச் சுருங்க வெளியிடுகின்றாள்.
இம்மென்மையும் சுருக்கமும் திருத்தார் நன் றென்றேன் தீயேன் – என்ற அடியில் நன்கு புலப்படுகின்றன. இப்போது செய்யுளைக் கேளுங்கள்.
பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றா ரிருவர் அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றான் நல்லளே - பொன்னோடைக்கு
யானை நன் றென்றாளும் அந்நிலையன் - யானை
எருத்தத் திருந்த இலங்கிலைவேற் றென்னன்
திருத்தார்நன் றென்றேன் தியேன்
தியேன் என்றது தீயேன் என்பதன் குறுக்கம். இதுபோன்ற அழகிய பல செய்யுட்களையுடைய நமது இலக்கியச் செல்வங்களை நாம் போற்றி வருதல் நமது முதற்பெருங் கடமையல்லவா?
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1.இது 1943-ல் வெளியான கட்டுரை.
2. இதுவரையில் அச்சில் வெளிவாராத நூல். இந்நூலின் ஏட்டுப்பிரதி ஒன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ளது.
$$$