-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
48. பாவம் போக்கும் புனித நீர்நிலை
.
நித்யானந்த ரஸாலயம் ஸுரமுனிஸ்வாந்தாம்பு ஜாதாச்ரயம்
ஸ்வச்சம் ஸத்த்விஜஸேவிதம் கலுஷஹ்ருத் ஸத்வாஸனாவிஸ்க்ருதம்/
ஸம்புத்யான ஸரோவரம் வ்ரஜமனௌ ஹம்ஸாவதம்ஸஸ்திரம்
கிம் க்ஷுத்ராச்’ரய பல்வல ப்ரமண ஸஞ்ஜாதச்’ரமம் ப்ராப்ஸ்யஸி//
.
நிலைக்களி நீர்நிரம்பி முனிக்கமல வசிப்பிடமாய்
தூயோர்கள் நாட்டமாய் புண்ணியத் தேட்டமாய்
பாவக்கறை நீக்கும் சிவத்யான நீர்நிலையை
அடைவாயே மனப்புள்ளே, சிறுகுட்டை நாடாதே!
.
இந்த ஸ்லோகத்தில் சிவத்தியானத்தை, அனைத்துப் பாவங்களையும் போக்குகின்ற புனித நீர்நிலை என எடுத்தியம்புகிறார் ஸ்ரீஆதிசங்கரர். நீர்நிலை அதில் குளிப்போருக்கும், நீர் சேகரிப்போருக்கும் ஆனந்தத்தைத் தருகிறது. அந்த நீர்நிலையில் தாமரைகள் மலர்கின்றன. உடலையும் உடுக்கும் உடைகளையும் தூய்மையாக்க விரும்புவோர் நீர்நிலையை நாடுகின்றனர். புனித நீராடலுக்கும் நீர்நிலை தேடி அடையப்படுகிறது. அழுக்குகளையும், கறைகளையும் அங்குள்ள நீர் நீக்குகிறது. அதனைப்போல சிவத்தியானம் பக்தர்களுக்குப் பயன் தருகிறது.
சிவத்தியானம் என்பது வற்றாத நீர்நிலை. அங்கே சிவனருளால் மகிழ்ச்சியாகிற நீர் எப்போதுமே நிரம்பியிருக்கிறது. முனிவர்களும் தவசிரேஷ்டர்களுமான தாமரைகள் சிவத்தியான நீர்நிலையையே தமது இருப்பிடங்களாகக் கொண்டுள்ளன(ர்). தூய மனம் கொண்டவர்கள் இதனையே நாடுகின்றனர். தேடி அடையப்படுகின்ற புண்ணியத்தை சிவத் தியான நீர்நிலை தருகின்றது. அனைத்து விதமான பாவங்களின் கறைகளையும் சுவடு தெரியாமல் இந்த நீர்நிலை போக்கிவிடுகிறது. இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த சிவத்தியானமாகிய வற்றாத நீர்நிலையை (நீர் எப்போதும் நிலைத்திருக்கின்ற இடம் நீர்நிலை) மனமாகிய பறவையே நீ விரும்பி அடைந்துவிடு. அதனை விடுத்து, அவ்வப்போது வற்றிவிடுகின்ற, சிறப்புகள் இல்லாத, சற்றே நீர் தேங்கியிருக்கும் சிறு குட்டைகளை நாடி வீணாக அலையாதே என்று மிக அருமையாக உரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$