பாரதியின் தொழிலாளர் பாடல்கள்

-மகாகவி பாரதி

பல்வகைப் பாடல்கள்

8. தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
      யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
      கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
      ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
      பிரம தேவன் கலையிங்கு நீரே!       1

மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
      மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
      உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
      இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
      மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!       2

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
      பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
      கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
      நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
      தெய்வ மாக விளங்குவிர் நீரே!       3

$$$

9. மறவன் பாட்டு

மண்வெட்டிக் கூலிதின லாச்சே;- எங்கள்
      வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே- இந்த
      மேதினியில் கெட்டபெய ராச்சே!       1

நாணிலகு வில்லினொடு தூணி- நல்ல
      நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு,- நாங்கள்
      போர்செய்த காலமெல்லாம் பண்டு.       2

கன்னங் கரியவிருள் நேரம்- அதில்
      காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே- எங்கள்
      தேகமெல்லாம் மூடிநரி போலே.       3

ஏழை யெளியவர்கள் வீட்டில்- இந்த
      ஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிக ளென்னவே- பொருள்
      கொண்டு வந்து……       4

முன்னாளில் ஐவரெல்லாம் வேதம்- ஓதுவார்;
      மூன்று மழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்ம்மைப் பார்ப்பார்- இவர்
      ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்,       5

பேராசைக் காரனடா பார்ப்பான்- ஆனால்
      பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை … … …
      … … … … … …       6

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்- நம்மைப்
      பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
கொள்ளைக் கேசென் … …
      … … … … … …       7

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்- வெறுஞ்
      சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
… … … … … …
      … … … … … …       8

நாயும் பிழைக்கும் இந்தப்- பிழைப்பு;
      நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்- காரப்
      பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.       9

சோரந் தொழிலாக் கொள்வோமோ?- முந்தைச்
      சூரர் பெயரை அழிப் போமோ?
வீர மறவர் நாமன்றோ?- இந்த
      வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?       10

  • (இப்பாடலில் பல சொற்கள், வரிகள் பிரதியில் அழிந்துவிட்டன).

$$$

Leave a comment