-வ.மு.முரளி
கோவையில் உள்ள ஈவெரா அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் நிகழ்ந்துள்ள ஊழலும் முறைகேடுகளும் இன்று உலகம் அறிந்தவையாகிவிட்டன. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். பெருங்குற்றங்களைச் செய்துவிட்டு அதிலிருந்து தப்ப பொய்களைக் குவிக்கும் அதீத அறிவுஜீவிகள், இன்னமும் மறைக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஊரார் அவர்களைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். பெருங்குற்றங்களைச் செய்துவிட்டு அதிலிருந்து தப்ப பொய்களைக் குவிக்கும் அதீத அறிவுஜீவிகள், இன்னமும் மறைக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஊரார் அவர்களைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள்.
கோவையில் உள்ள ஈவெரா அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் நிகழ்ந்துள்ள ஊழலும் முறைகேடுகளும் இன்று உலகம் அறிந்தவையாகிவிட்டன. ஆரம்பத்தில் ஊழல் வெளிவந்தவுடன், இந்த ஊழல்கள் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தன என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள் திமுகவினரும் தவெகவினரும். சொல்லப்போனால், தற்போது தவெக ஆட்சியில் இருப்பதால் இதற்கு பதிலளிக்கும் தார்மிகக் கடமை உண்டு. ஆனால், பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உத்திகளில் திமுக ஆதரவு எழுத்தாளர்கள் ஒரே குரலில் போராடினார்கள். இப்போது, அவர்களே ஓய்ந்து, நிதர்சனத்தை உணர்ந்து, ‘அனைத்து எழுத்தாளர்கள் கூட்டறிக்கை’ என்ற பெயரில் பம்மாத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
கோவை ஈவெரா (தமிழக அரசு பெரியார் அறிவுலகம் என்று கூறுகிறது. நாம் பகுத்தறிவுடன் இயற்பெயரையே பயன்படுத்துவோம்) அறிவுலகத்தில் என்ன நடந்தது?
சென்ற திமுக ஆட்சியில் கோவை (ஈவெரா), திருச்சி (காமராஜர்), கடலூர் (அஞ்சலையம்மாள்), சேலம் (பாரதிதாசன்), திருநெல்வேலி (இஸ்மாயில்) ஆகிய இடங்களில் ‘அறிவுலகம்’ என்ற பெயரில் சிறப்பு நூலகங்களுடன் பிரமாண்டமான கட்டடங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு அறிவியல் கண்காட்சியகங்கள், நூலகம் ஆகியவை அமைத்து அறிவை விருத்தி செய்யப்படும் என்பது அரசின் அறிவிப்பு. அவற்றில் ஒன்றான கோவை ஈவெரா அறிவுலகம் கட்டடப் பணி நிறைவடைந்தாலும், சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால், அதனை திமுக அரசால் திறக்க முடியவில்லை.
தேர்தலுக்குப் பிறகு ஆட்சி கைமாறியது. தவெகவின் ஜோசப் விஜய் முதல்வரானார். அவர் கடந்த அக். 16ஆம் தேதி அறிவுலகத்தைத் திறந்துவைத்தார். உடனே திமுக தரப்பில் பலமான ஒப்பாரி. திமுகவினர் அமைத்த அறிவுலகத்தை தவெக அரசு திறந்துவைத்து பெருமை தேடிக் கொள்வதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரற்றினார். இப்போது நூலக ஊழல் வெளியானவுடன், இதற்கு தவெக அரசு தான் பொறுப்பு என்று ஒத்திசைக் கானம் பாடுகிறார்கள் உடன்பிறப்புகள். அறிவுலகம் அமைத்ததற்கு உரிமை கோரியவர்கள், அங்கு அமைக்கப்பட்ட நூலகத்தில் நடந்துள்ள ஊழலுக்கும் உரிமை கோருவது தானே முறை?
ஊழல் வெளியானது எப்படி?
சிறப்பு நூலகங்களுக்கு புத்தகங்களைக் கொள்முதல் செய்ய 112 வல்லுநர்களைக் கொண்ட பரிந்துரைக் குழு, தேர்வுக்குழு, விலை நிர்ணயக் குழு, உயர்மட்ட ஆய்வுக்குழு ஆகியவற்றை முந்தைய திமுக அரசு கடந்த 2025 நவம்பர் 5ஆம் தேதி அமைத்திருந்தது. அதில் பெரும்பாலும் திமுக ஆதரவு எழுத்தாளர்கள், பதிப்பாளர்களே இடம்பெற்றனர். ஜெயரஞ்சன், தமிழ்ச்செல்வன், பெருமாள்முருகன் போன்றவர்கள் இந்தக் குழுக்களில் அங்கம் வகித்தார்கள்.
அண்மையில் ஈவெரா அறிவுலகம் திறக்கப்பட்ட பின், அங்குள்ள நூலகத்திற்கு எழுத்தாளர் பெருமாள்முருகன் சென்றிருக்கிறார். அவர் தனது பரிந்துரைப்படி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா என்று பார்க்க ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நூலகத்தின் நான்காம் தளத்தில் சில அலமாரிகளில் ஒரே பதிப்பகத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த அவர், அந்த நூல்களை ஆராய்ந்தார். அவை அனைத்தும் ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் வெளியானவை என்பது தெரியவந்தது.

40 ஆண்டுகள் இலக்கிய உலகில் இருந்துவரும் அவருக்கே அறிமுகமாகாத ஒரு பதிப்பகத்தின் 1,700 புத்தகங்களை அங்கு கண்டு திகைத்தார். உடனே மெனக்கெட்டு பல நூல்களைப் படித்து ஆராய்ந்தார். ‘பீனிக்ஸ் பதிப்பகம்’ என்ற பெயரிலும் பல நூறு நூல்கள் அங்கு இருந்தன. அந்த நூல்கள் அனைத்தும் ஒரே வடிவமைப்பில் இருந்தன. கெட்டியான அட்டை பைண்டிங், மூன்று மடங்கு விலை, மோசமான மொழிநடை, செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு, கொடூரமான தகவல் பிழைகள் ஆகியவை அந்த நூல்களின் பொதுவான அம்சங்கள்.
இதுகுறித்து, புதிய தலைமுறைக்குச் சொந்தமான ‘சிந்தை’ என்ற இணையதளத்தில் நவ. 6ஆம் தேதி கட்டுரை எழுதினார். ‘பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்’ என்பது தான் தலைப்பு. தமிழ் அறிவுலகில் தீப்பற்றிக் கொண்டது; நூலக ஊழல் அம்பலமாகிவிட்டது.
ஊழல் என்பது நிதி முறைகேடு மட்டுமல்ல, இங்கு நடந்தேறியிருப்பது அறிவுப்புல ஊழல். இந்த நூல்கள் அனைத்தும் அனர்த்தமானவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்ற நூலைக் குறிப்பிடுகிறார் பெருமாள்முருகன். இது குறித்து தனது கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு பகுதி கீழே…
’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் முந்நூறு பக்க நூலின் விலை ரூ. 1445/- மட்டும்தான்! ஒவ்வொரு நூலின் விலையும் இப்படித்தான்…
சரி, இத்தனை விலையுள்ள நூல்கள் பெரும் உழைப்பில் அரிய செய்திகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்று கருதி உள்ளே பிரித்துப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் நூல் இப்படித் தொடங்குகிறது: ‘நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி. அத்துடன் உலகம் முழுவதும் அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தின் தொலைநோக்கிய அணுகுமுறை போன்றவராக வாழ்ந்தவர். அவர் தனது பாடல்களிலும் கவிதைகளிலும் மனித வாழ்க்கையின் உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.’
இதை வாசித்து தலைசுற்றிப் போனேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தமிழ் இலக்கியக் கல்வியை முறையாகப் பயின்றும் முப்பது ஆண்டுகள் அக்கல்வியைப் பயிற்றுவித்தும் வந்த எனக்கு, நாலடியார் ஒரு கவிஞர், தத்துவஞானி என்பது தெரியவில்லையே! பெயர் தெரியாத சமண முனிவர்கள் எழுதிய நாலடி வெண்பாக்கள் நானூற்றின் தொகுப்புத்தான் நாலடியார் என்று படித்து வந்திருக்கிறேனே, அது பொய்யா? இத்தனை ஆண்டுகள் கழித்து சூர்யா பாலு என்பவரும் அகல்விளக்கு பதிப்பகமும் இப்படி ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த உண்மையை நூலின் பிற்குறிப்பாகவும் போட்டிருக்கிறார்கள். நூல் முழுவதும் இப்படிப்பட்ட உண்மைகளால் நிறைந்து வழிகிறது…
ஈவெரா அறிவுலகத்தில் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நூல்கள் இதே பாணியில் தான் இருக்கின்றன. இது எப்படி நடந்தது?
ஊழலின் ஊற்றுக்கண்:
இந்த ஊழலின் ஊற்றுக்கண் நூலகத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முந்தைய அரசு நியமித்த புத்தக பரிந்துரைக் குழுவினர் பரிந்துரைத்த நூல்கள் பட்டியல் பெயரளவிற்கான ஏற்பாடு மட்டுமே. அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, நூலகத் துறை அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு நூல்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். இதுதான் திமுக அரசுக்கு வால் பிடிக்கும் இடதுசாரி எழுத்தாளர்களின் புலம்பல். இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இது அரை உண்மை மட்டுமே. எந்த ஒரு அரசிலும் அதிகாரிகள் இப்படி தறிகெட்டுச் செயல்பட, அவர்களுக்கு அரசியல் பின்புலம் இருந்தாக வேண்டும். சென்ற திமுக ஆட்சியில் மட்டுமல்ல, கடந்த 40 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நூலகத் துறையின் ஈரல் அழுகிவிட்டது (உவமை உதவி: மு.கருணாநிதி) தான் இந்த ஊழலின் ஊற்றுக் கண்.
இந்த ஊழலின் பரிணாமத்தை மூன்று கட்டங்களாக வகுத்துக் கொள்ளலாம். அவற்றை விரிவாக உணர, நமது நூலக வரலாற்றை கொஞ்சம் அறிந்தாக வேண்டும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக பொது நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது சென்னை மாகாணத்தில் தான் (1948). பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்த பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் தான் (1972). மாவட்டந்தோறும் நூலக ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என தமிழகம் முழுவதும் 4,635 நூலகங்கள் இயங்குகின்றன.
இந்த நூலகங்களுக்கு புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை நியாயமாகவே நடைபெற்று வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தங்கள் கொள்கையைப் பிரசாரம் செய்யும் சிறந்த கருவியாக நூலகத்தைக் கண்டனர். அதை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும் தொடங்கினர். அதுதான் நூலகத் துறையில் நடந்த முதல் முறைகேடு. ”அரசியல் தலையீடே ஊழலின் தொடக்கம்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விளக்கும் ஆதரிக்கும் நூல்கள் நூலகங்களில் திணிக்கப்பட்டன; தேசிய சிந்தனை கொண்ட புத்தகங்களும் எழுத்தாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். இது முதல் கட்டம். இந்த நிலை 1980 வரை நீடித்தது. இதனை ‘திராவிட சிண்டிகேட்’ என்று சொல்லலாம்.
திமுகவுக்கு மாற்றாக அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அளவிற்கு திராவிட சித்தாந்தத்தில் பிடிப்பு இல்லாததால், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பாரபட்ச அணுகுமுறை உருவானது. அப்போதுதான் நூலகத்துறையில் தரகு கமிஷன் கலாச்சாரம் எட்டிப் பார்த்தது. இது இரண்டாவது கட்டம். ஆளும்கட்சிக்கு ஜால்ரா போடும் எழுத்தாளர்களுக்கும் கமிஷன் தரும் பதிப்பகங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலை 2000 ஆண்டு வரை நீடித்தது. ‘இதனை கமிஷன் சிண்டிகேட்’ என்று சொல்லலாம்.
2000 ஆண்டுக்குப் பிறகு பதிப்பகத் துறையில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிநவீன டிடிபி தொழில்நுட்பம், சாதாரணமானவரையும் புத்தகங்கள் வெளியிடக் காரணமானது. நூலகத் துறையிலும் தரகு கலாச்சாரம் பெருகி இருந்தது. பதிப்பகங்கள் நூலகத்துறையை அணுகிய நிலைமை மாறி, நூலகத் துறையில் இருந்து அதிகப் பயனளிக்கும் பதிப்பகங்களுக்கு நூலகக் கொள்முதல் ஆணை வழங்கும் போக்கு உருவானது. அனைத்தும் கொள்முதல் விதிமுறைப்படி நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள். அதிகாரிகள் விரும்பினால், புதிய பதிப்பகங்கள் கூட உருவாகும். இந்த நிலையால் வானதி பதிப்பகம் போன்ற பாரம்பரிய பதிப்பகங்களின் நிலை பரிதாபகரமானது. தற்போது வரை நீடிக்கும் இந்த மூன்றாவது கட்ட ஊழலின் உச்சநிலைதான் கோவை, ஈவெரா நூலகத்தில் நடந்திருக்கும் ஊழல். இதனை ‘அதிகாரவர்க்க சிண்டிகேட்’ என்றுதான் சொல்ல வேண்டும்.



ஊழலுக்காகவே கொள்முதல்:
நூலகங்களுக்காக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலைமை மாறி, அங்குள்ளவர்கள் சம்பாதிப்பதற்காகவே புத்தகங்கள் கொள்முதல் செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளும் கொண்டுவரப்பட்டுவிட்டன. மிகவும் சிறந்த பதிப்பகங்கள் கூட இந்த நடைமுறைகளுக்கு உட்பட்டே தங்கள் நூல்களை நூலகங்களுக்கு விற்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனை கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன், சாஹித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளர் சோ.தர்மன், காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன் சுந்தரம் போன்றோர் தெளிவுபடக் கூறி இருக்கின்றனர்.
இந்த ஊழலின் உச்சமாக கோவை ஈவெரா நூலக ஊழலை ஏன் குறிப்பிடுகிறோம் என்பதற்கான காரணங்கள்:
# ஒரே பதிப்பகத்தின் (அகல் விளக்கு பதிப்பகம்) 1,700 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரே பதிப்பகத்தில் புத்தகங்களை வாங்குவதால், பிற பதிப்பகங்களின் சீரான வர்த்தக உரிமை பாதிக்கப்படுகிறது.
# அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன், ‘பீனிக்ஸ்’ என்ற பதிப்பகம் மூலமாக மேலும் பல நூறு நூல்களை வழங்கி இருக்கிறார். இது நூல் கொள்முதலில் நிலவிய வெளிப்படையற்ற தன்மைக்குச் சான்று.
# இந்த நூல்களின் சராசரி விலை ரூ. 1,500. அதாவது கோவை நூலகத்திற்கு மட்டுமே, சுமார் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை அகல் விளக்கு பதிப்பகம் வழங்கி இருக்கிறது. பிற பதிப்பகங்களிடம் பெயரளவிற்கு (செலவுத் தொகை சில ஆயிரங்களில்) நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. 300 பக்கங்கள் கொண்ட நூலுக்கு வழக்கமாக நிர்ணயிக்கும் ரூ. 300 விலைக்கு மாறாக ரூ. 1,499 என்று விலை அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தக் கூடுதல் தொகை அநேகமாக நூலகத் துறை அதிகாரிகளுக்குத் தான் சென்றிருக்கும்.
# அகல் விளக்கு பதிப்பக நூலகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் அவசரகதியில் தயாரிக்கப்பட்டிருப்பதால், தகவல் பிழைகள் மலிந்துள்ளன. மிகவும் கேவலமான பிழைகள் நிறைந்துள்ளன. ஓர் உதாரணம்: தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ என்ற நூலில் வரும் அரிய தகவல் (பக்கம்: 108) இது…
‘தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) இருந்தார். அவர் அத்தியாவசியமான முதன்மை தலைமையிலும் சட்டப்பேரவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்… அதன் பிறகு 1952-ம் ஆண்டில் இருந்து திராவிட கிழக்கின் அரசியல் வீரவாகிய மு.க.இராமசாமி முக்கிய அரசியல் தலைவராக நின்றார். அவரின் வேலையை பிறகு காமராஜர் (1954 – 1963) எடுத்தார்.’
(குறிப்பு: இதில் உள்ள பிழைகள் நூலில் உள்ளபடியே குறிக்கப்பட்டுள்ளன. எனவே நமது வாசகர்கள் தவறாகக் கருதி குழம்பிவிட வேண்டாம்).
# இந்த நூல்களின் எழுத்தாளர்களின் பெயர்கள் அனைத்தும் புனைப்பெயர்கள்: திரிஷா விஜய், சங்கீதா விஜய், ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர், ராணி பன்னீர், தாமரை கார்த்தி, தாமரை சிவா, தாமரை முரளி, மங்களேஸ்வரி பாலு, விஜய பாலு, விஜய ஆதித்தன், மோனிகா சூர்யா, மோனிகா ரவி, பிருந்தா சேதுராமன், தர்ஷினி சேதுராமன், மனிஷா சரவணன், மனிஷா தினேஷ், திவ்யா தினேஷ், கமலாம்பாள் கருணாநிதி, பௌனாம்பாள் கருணாநிதி, பவித்ரா கருணாநிதி. அதாவது வாசகர்களை முழு முட்டாளென்று முடிவே செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.
# நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எவரும் படிக்கப் போவதில்லை என்ற துணிவுடன் மட்டுமே இதுபோன்ற புத்தகங்களைத் தயாரிக்க முடியும். தேவைக்கேற்ப குறைந்த பிரதிகளை அச்சிடும் ‘பிரின்ட் ஆன் டிமாண்ட் – பிஓடி’ முறையில் தான் இந்த நூல்கள் அனைத்துமே அச்சாகி இருக்கின்றன. இதுவும் நூலகக் கொள்முதல் விதிகளை மீறுவதாகும்.
# அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற நிறுவனங்கள் தங்கள் பதிப்பக உறுப்பினர் பட்டியலில் இல்லை என்பதை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் (பபாசி) தெளிவுபடுத்தி உள்ளது. தோண்டித் துருவினால், நூலகங்களில் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் இதுபோன்ற போலி பதிப்பகங்களின் தயாரிப்பாகவே இருக்கும் போலிருக்கிறது.
# இந்த ஊழலை முந்தைய திமுக அரசு முழுமையாக அறிந்திருக்கிறதா என்பதே சந்தேகம் தான். ஆட்சியில் இருப்பவர்களே உணராத வகையில், அல்லது அவர்களும் இதற்கு உடந்தையாகும் வகையில், இந்த ஊழல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்திருக்கிறது. ஆங்காங்கே பல்வேறு நூலகங்களில் பறிமுதலாகும் போலி நூல்களில் இருந்து இது தெரியவருகிறது. அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் “கடந்த மார்ச் மாதமே அனைத்து நூல்களையும் வழங்கிவிட்டோம்” என்று கூறிய பிறகுதான் திமுக ஆதரவுக் கும்பலின் கூப்பாடு குறைந்தது.
# போலி எழுத்தாளர்கள், போலி பதிப்பகங்கள், பிழையான தகவல்கள், அதிகபட்ச விலை, வெளிப்படையற்ற கொள்முதல், அரசின் செயலற்ற தன்மை, எழுத்தாளர்களின் அரசியல் சாய்வு ஆகியவை தான் இந்த நூலக ஊழலின் மூல காரணங்கள்.
இனி என்ன செய்ய வேண்டும்?
இப்போது நூலக ஊழல் முழுமையாக அம்பலமாகிவிட்டது. தற்செயலாக நடந்த கண்டுபிடிப்பென்றாலும், எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு நன்றி. ஆரம்பத்தில் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்த திமுக ஆதரவாளர்கள் இப்போது அடங்கிவிட்டார்கள். தரமான பதிப்பகங்கள் இப்போது துணிச்சலுடன் தங்கள் கருதுகளைக் கூறத் தொடங்கியுள்ளன; உண்மையான, அரசியல் சார்பற்ற எழுத்தாளர்கள் இந்த ஊழலை பொதுவெளியில் கண்டிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது திமுக ஆட்சியில் இல்லாததால், இவை சாத்தியமாகி இருக்கின்றன.
தவெக அரசு ஆரம்பத்தில் சொத்தப்பினாலும், பிற்பாடு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இந்த ஊழலை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், அகல்விளக்கு பதிப்பகம் என்பது அம்பு மட்டுமே; அதனை ஏவிய, திரைமறைவில் உள்ள அதிகாரவர்க்கத்தையும் கண்டறிந்து களையெடுக்க வேண்டும்.
கன்னிமாரா நூலகத்திலும் 500 போலி நூல்கள் அகப்பட்டிருக்கின்றன. பல மாவட்ட நூலகங்களிலும் பெருமளவிலான புத்தகங்கள் பறிமுதல் ஆகி வருகின்றன. நவ. 12 ஆம் தேதி நிலவரப்படி, ரூ. 90 லட்சம் மதிப்பிலான 26,000 போலி நூல்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. நாமக்கல், ஈரோடு, திருச்சி, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தகவல்களின்படி, கிளை நூலகங்களிலும் போலி நூல்கள் சிக்கியுள்ளன. எனவே அரசின் சோதனைகள் தொடர வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம், கருணாநிதி நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களிலும், தமிழகத்திலுள்ள அனைத்து நூலகங்களிலும், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள நூலகங்களிலும் உள்ள போலி நூல்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதுடன், இனிமேல் இத்தகைய தவறுகள் நடவாத வண்ணம் கண்காணிப்புக் குழுக்களை அரசு அமைக்க வேண்டும். புத்தக தேர்வுக் குழுக்களை அரசியல் சார்பின்றி அமைக்க வேண்டும்.
குறிப்பிட்ட இடைவெளியில் அரசியல் சார்பற்ற வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கங்கள் கொண்ட குழுவால் நூலகத் தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும்.
நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த மின்னணுக் கொள்முதல் முறையை அமல்படுத்துவது அவசியம். கொள்முதலில் பபாசி போன்ற தொழில் அமைப்புகள், வாசகர் மன்றங்கள், எழுத்தாளர்களையும் ஓர் அம்சமாக்க வேண்டும். அரசியல் சார்புடன் புத்தகங்கள் கொள்முதல் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
கிடைத்த படிப்பினை:
கண்காணிப்பில்லாத இடத்தில் முறைகேடுகள் சூழும். அதுபோலவே, அரசியல் சார்பும் சித்தாந்தப் பற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் போன்ற இடதுசாரி பதிப்பகங்களின் கள்ள மௌனம் வெளிப்படுத்தும் உண்மை இதுவே.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு சிறப்பான வழிகாட்டல்களை அரசுக்கு வழங்கி இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முறைகேடான புத்தகக் கொள்முதலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் குறித்த விவரங்களை நூலக இயக்ககத்தின் இயக்குநர் ஷஜீவனா தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும், துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தவெக அரசு ஆட்சி நிர்வாகத்திற்கு புதியது. திராவிட கட்சிகளின் தொடர் அலங்கோல ஆட்சிகளால் அதிகாரவர்க்கத்தில் புரையோடி இருக்கும் ஊழலை ஒரே நாளில் சரிசெய்துவிட முடியாது. எனினும், அரசாங்கம் கடுமையாகச் செயல்படும் என்பது தெரியப்படுத்தப்பட்டாலே, முறைகேடுகள் ஓரளவு கட்டுக்குள் வரும். அதையே தவெக அரசிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அறிவை வளர்க்கும் புத்தகங்களிலும் ஊழல் என்பது கற்பனை செய்ய முடியாததாக இருக்கிறது. இது அறிவுலகை அரிக்கும் நச்சாகும். எனவே, இதனை முறியடிக்க கடுமையான விதிமுறைகளை வகுப்பதும், கண்காணிப்பை தீவிரமாக்குவதும் காலத்தின் தேவை. “ஒரு புத்தகம் திரக்கப்படும்போது ஒரு குற்றம் குறைகிறது” என்ற பொன்மொழி கேலிக்குரியதாகிவிடக் கூடாது.
- நன்றி: விஜயபாரதம்
$$$