ஜாதிக் குழப்பம்


-மகாகவி பாரதி

 “ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்த்ரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது ஸாதாரண வேலையா?” மகாகவி பாரதியின் இதயப் பொருமலுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லையே?

இந்தியாவின் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு. பணமில்லாதது ஒன்று; ஜாதிக் குழப்பம் இரண்டாவது. பணக் கஷ்டமானது வயிற்றுக்குப் போதிய ஆஹாரமில்லாத கொடுமை. இந்தத் துன்பத்துக்கு முக்யமான நிவர்த்தி யாதென்றால், நமது தேசத்தில் விளையும் உணவுக்குப் பயன்படக்கூடிய தான்யங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகாமல் தடுத்துவிட வேண்டும்.

இங்கிலாந்து முதலிய சில தேசங்களில் காலையில் எழுந்தால் ஆஹாரத்துக்கு மீன் தென் அமெரிக்காவிலிருந்து வரவேண்டியதாக இருக்கும். வெண்ணெய் ஆஸ்டிரேலியாவிலிருந்து வரும்படியாக இருக்கும். இந்நாட்டாரின் நிலைமை அப்படி யில்லை. இங்க பூமி நம்முடைய ஜனங்களுக் கெல்லாம் போதிய ஆஹாரம் கொடுக்கிறது. ஆதலால், ஏற்கெனவே போதிய அளவு பணம் குவித்து வைத்திருந்தா லன்றி, உணவுக்கு வழி கிடையா தென்ற நிலைமை நம்முடைய தேசத்திற்கில்லை.

உணவுத் தானியங்களின் ஏற்றுமதியை எந்த நிமிஷத்தில் நிறுத்தி விடுகிறோமோ, அந்த நிமிஷம் முதல், நம்முடைய ஜனங்களுக்குத் தட்டில்லாமல் யதேஷ்டமான ஆஹாரம் கிடைத்துக்கொண்டு வரும். இந்த விஷயத்தில் ஜயமுடைய வேண்டினால், நம்முடைய வியாபாரிகள் வெறுமே தம்முடைய வயிறு நிரப்புவது மாத்திரம் குறியாகக் கொள்ளாமல், தமக்கும் லாபம் வரும்படியாகவும் பொது ஜனங்களுக்குக் கஷ்டம் ஏற்படாமலும் செய்தற்குரிய வியாபார முறைகளைக் கைக்கொள்ளும்படி அவர்களை வற்புறுத்த வேண்டும்.

இங்ஙனம் நம்முடைய நாட்டிலேயே தான்யங்களை நிறுத்திக்கொண்டு, அந்தந்த ஊரிலுள்ள காரியஸ்தர்களும், செல்வர்களும் அந்தந்த ஊரில் மிக எளியோராக இருப்போரிடம் தக்க வேலைகள் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு உணவு வேண்டியமட்டும் கொடுத்து வர ஏற்பாடு செய்தல் மிகவும் எளிது.

பூரி (ஜகந்நாதம்) பிரதேசங்களில் மிகவும் கொடிய பஞ்சம் இந்த க்ஷணத்தில் நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் ராஜாக்களும், சாஸ்திரிகளும், பெரிய மிராஸ்தார்களும், ஸாஹுகார்களும், வியாபாரிகளும் வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும் வயிறு கொழுக்க, விலாப் புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாரங்களைத் தம்முள் திணித்துக் கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும் தீராத, மாறாத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமைத் தீர்க்க வழி தேட வேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படிதிருப்பதை எண்ணுந்தோரும் எண்ணுந்தோரும் எனக்கு மிகுந்த வருத்த முண்டாகிறது. இத்தனை கஷ்டத்துக்கிடையே ஜாதிக் கொடுமை ஒருபுறத்தே தொல்லைப்படுத்துகிறது.

பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே, அதில் ஏழைகளாக இருக்கிறார்களென்பது மறுக்க முடியாத விஷயம். உழைப்பும் அவர்களுக்குத்தான் அதிகம். அதிக உழைப்பு நடத்தி வரும் வகுப்பினருக்குள்ளே அதிக வலுவு ஏற்படும். அநீதி உலக முழுதிலு மிருக்கிறது. எனினும், நம்முடைய தேசத்தைப்போல் இத்தனை மோசமான நிலை வேறெங்கு மில்லை.

இந்த ஊரில் (கடையத்தில்) ஒரு செல்வர் வீட்டு விசேஷமொன்றுக்காகச் சங்கரநயினார் கோயிலிலிருந்து கோவில் யானையை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அது ஆண் யானை; 18 வயதுள்ள குட்டி. அது மிகவும் துஷ்ட யானை யென்று பெயர் கேட்டிருப்பதால், அதை இவ்வூரில் அனேக ஜனங்கள் திரள்திரளாகச் சென்று பார்க்கிறார்கள்.

இன்று காலை நானும் என் நண்ப ரொருவருமாக இந்த யானையைப் பார்க்கச் சென்றோம். அந்த யானையைப் பற்றிய முக்கிய விசேஷம் யாதெனில், இதற்கு மாவுத்தர்களாக இரண்டு பிராமணப் பிள்ளைகளும், சைவ ஓதுவார் (குருக்கள்) வம்சத்தைச் சேர்ந்த ஒருவரும் வேலை பார்க்கிறார்கள். ஸாதாரணமாக, மாவுத்தர் வேலை செய்ய மஹமதியர்களும், ஹிந்துக்களில் தணிந்த ஜாதியாருமே ஏற்படுவது வழக்கம். இந்த யானைக்குப் பிராமண மாவுத்தர் கிடைத்திருக்கிறார்கள்.

மேற்படி பிராமண மாவுத்தரில் ஒருவனிடம் நான் இநத் யானையின் குணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நான் நதிக்குப் போகையில், அவன் அந்த யானையை நிஷ்கருணையாக அடித்துக் கொண்டிருக்க, நான் பார்த்தே னாதலால், அதை அவனுக்கு நினைப்பு மூட்டி,  “மிருகங்களை அன்பினால் பழக்க வேண்டும். கருணை யில்லாமல் அடித்துப் பழக்குவது சரியில்லை” என்றேன்.

நான் இநத் வார்த்தை சொன்னதுதான் தாமஸம். அவன் மிகவும் நீளமாகத் தன் சாஸ்திரக் கட்டுக்களையெல்லாம் அவிழ்த்து விரிக்கத் தொடங்கிவிட்டான்.

அந்த மாவுத்தன் சொல்லுகிறான்:  “இந்த யானை கீழ் ஜாதி யானை; யானைகளில் பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு முக்ய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக்க ளிருக்கின்றன. அவற்றுள் இது சூத்ர ஜாதியைச் சேர்ந்த யானை. மனிதர்களில் சூத்திரர்களுக்ள்ளே ஈழுவர் என்ற ஜாதியார் இருக்கிறார்களே, அதே மாதிரி இந்த யானை  ‘வீரன்’ என்னும் வகுப்பைச் சார்ந்தது..” இங்ஙனம் அந்த  மாவுத்தன் நீண்ட கதை சொன்னான்.

நான் இந்த விஷயத்தை இங்கெடுத்துச் சொல்லியதன் நோக்கம் யாதெனில், நம்மவர்கள் மனத்தில் இந்த ஜாதி பேதக் கொள்கை எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறதென்பதை உணர்த்தும் பொருட்டேயாம்.

யானையை எடுத்தால், அதில் பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்ரர்! குதிரையிலும் அப்படியே! வானத்திலுள்ள கிரகங்களிலும் அதே மாதிரி பிரம, க்ஷத்திரிய முதலிய ஜாதி பேதங்கள்; இரத்தினங்களிலும் அப்படியே!

இங்ஙனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்த்ரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது ஸாதாரண வேலையா?

கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம்! நுளை நூற்றெட்டாம்! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும், நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம்.

மேலும், பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லாரும் வெவ்வேறு ஜாதிகள்! ஒன்றுக்குகொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண் கொடுத்தல், வாங்கல் கிடையாது. கேலி, கேலி, பெருங் கேலி.

இங்ஙனம் ஏற்கெனவே, மலிந்து கிடக்கும் பிரிவுகள் போதாவென்று புதிய புதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்க முடையவர்களிலே சிலர் செய்கை நெறி யுணராமல் புதிய வகுப்புக்க ளேற்படுத்துகிறார்கள். கடையத்து வேளாளரில் இங்கிலீஷ் படித்த சிலர் தங்கள்  ‘திராவிடப் பிராமணர்’ என்று பெயர் வைத்துக்கொண்டு, பரம்பரையாக வந்த ‘பிள்ளை’ப் பட்டத்தை நீக்கி  ‘ராயர்’ பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திருஷ்டாந்தமாக, ஒருவருக்கு  ‘ஆண்டியப்ப பிள்ளை’ என்ற பெயர் இருந்தால், அவர் அதை ஸர்க்கார் மூலமாக  ‘ஆண்டியப்ப ராயர்’ என்று மாற்றி அப்படியே ஸகல விவகாரங்களும் நடத்துகிறார். இந்த திராவிடப் பிராமணர்களுக்கு  ‘ராயர்’ என்ற கர்நாடக, மஹாராஷ்ட்ர பிராமணரின் பட்டம் எப்படி நேரிட்ட தென்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை.

இங்ஙனமே சில தினங்களின் முன்பு வள்ளுவர்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கூட்டங் கூடித் தாங்கள் உயர்ந்த ஜாதியாரென்றும், மற்றைப் பறையர்களைத் தொடக் கூடாதென்றும், சேரிகளுக்குப் போகக் கூடாதென்றும், அவர்களுக்குப் பஞ்சாங்கம் முதலியன சொல்லக் கூடாதென்றும், அவ்வாறு செய்யும் வள்ளுவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் துண்டுப் பத்திரிகைகள் போட்டிருந்தார்களாம்.

இதைக் கண்டு மனம் பொறுக்காமல் வள்ளுவர் குலத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் வி.எல்.பெருமாள் நாயனார் என்பவர்  ‘வள்ளுவர் பறையரே, பஞ்சமரே’ என்பதை மிகவும் தெளிவாக ருஜுப்படுத்திச் சென்ற வியாழக்கிழமை (ஜுன் 3-ந் தேதி) ‘சுதேச மித்திர’னில் ரஸமான வ்யாஸமொன்றெழுதி யிருப்பதைக் கண்டு என் மனம் சால மகிழ்ச்சி யெய்திற்று.

ஆனால், அதே வ்யாஸத்தில் நாயனார் நான்காம் வகுப்பாகிய வேளாளர் குலத்திலிருந்து பறையர் பிரிந்தாரென்று சொல்வது பொருத்தமில்லாத வார்த்தை. இவர் எந்த ஆதாரத்தால் இங்ஙனம் சொல்லுகிறா ரென்பது விளங்கவில்லை. வெறும் ஜாதி விரோதத்தாலேதான் இங்ஙனம் சொல்லுகிறா ரென்று தோன்றுகின்றது. வீண் பகைமைகளால் நன்மை ஏற்படாது.

எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லாரும் ஸமான அறிவுடையோராய் வுடுவார்கள். மாம்ஸ போஜனம் செய்யும் வகுப்பினர் அதை நிறுத்திவிட வேண்டும். பிறகு ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியபடி, எல்லாரையும் ஒரே யடியாக பிராமணராக்கி விடலாம். கீழ் ஜாதியாரை நல்ல ஸம்ஸ்காரங்களால் பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்த்ரங்களில் தக்க ஆதாரங்க ளிருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுமையும் பிராமண தேசமாகச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம்.

எந்த ஜாதியாக இருந்தாலும் சரி. அவன் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து, அவனுக்கொரு பூணூல் போட்டு, காயத்திரி மந்திரம் கற்பித்துக் கொடுத்துவிட வேண்டும். பிறகு அவன் பிராமணனாகவே கருதப்பட வேண்டும். இதுதான் விவேகாநந்தர் சொல்லிய உபாயம். கூடிய வரை நல்ல உபாயமுங்கூட. ஆனால், மேல் வகுப்பினர் தம்முடைய உயர்வை மறந்து கீழ் வகுப்பினருடன் கலத்தல் இதனிலுஞ் சிறந்த உபாயமாகும்.

-சி.சுப்பிரமணிய பாரதி

  • சுதேசமித்திரன் (09.06.1920)

$$$

One thought on “ஜாதிக் குழப்பம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s