-சு.சத்தியநாராயணன்
திரு. சு.சத்யநாராயணன், திருப்பூரில் வசிக்கிறார். பின்னலாடை வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளார். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கத்தின் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது.....

இன்றைக்கு நாம், நம் தேசம் சந்திக்கின்ற பல பிரச்னைகளுக்குக் காரணமாக பல விஷயங்களை முன்வைக்கிறோம். ஆனால் உள்ளார்ந்து நோக்கிடில் இவை அனைத்துக்கும் நமது கல்விமுறையே என்பதனைக் கண்ணுறலாம். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாம் அவர்கள் விட்டுச்சென்ற கல்விமுறை, நிர்வாக முறை எதிலிருந்தும் நாம் சுதந்திரம் பெற்றோமா என்றால் நிச்சயமாக இல்லை.
இந்தச் சமுதாயம் ஒரு கண்ணாடி போல, அது தான் கற்றதை, பெற்றதைப் பிரதிபலிக்கிறது. நாம் கண்ணாடியைக் குறை கூறிக் கொண்டிருக்கிறோம், பாவம் அது தான் பெற்றதைத் தானே பிரதிபலிக்க இயலும்?
இன்று ஒரு தொழிலாளியோ, அலுவலக ஊழியரோ தனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்று வரையறை செய்கிறாரோ அதே கவனத்தை, தான் செய்ய வேண்டிய கடமையில் செய்வது கிடையாது. இது அவரது குணமல்ல, அவ்வாறு அவர் உருவாக்கப்பட்டிருக்கிறார்.
ஒருவன் தான் கல்வி கற்பது பொருளீட்டுவதற்குத் தானே தவிர வேறெதற்கும் அல்ல என்ற ஒரு தோற்றம் இந்தச் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் ‘கல்வி வழிகாட்டி’ என்று செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றில் என்ன அதிகமாக சொல்லப்படுகின்றது? எந்தப் பாடத்தைப் படித்தால் எங்கு வேலை கிடைக்கும், எந்தப் பட்டப் படிப்புப் படித்தால் அதிக பொருளீட்டலாம் என்பது தானே? ஒருவனை பொருளை நோக்கிச் செலுத்துவது தான் கல்வியா?
இங்கு யார் அறிவாளியாகக் காட்டப்படுகிறார்? அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், அதிகப்படியான தகவல்களைச் சேர்த்து வைத்திருப்பவர்கள், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்களே ஒழிய, அறிவாளிகள் அல்ல.
சுவாமி விவேகானந்தர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “ லௌகீகமான அறிவோ, ஆன்மிக அறிவோ, எல்லாமே மனதில் தான் உள்ளது. பலரிடம் இவை கண்டுபிடிக்கப்படாமல் மூடப்பட்டிருக்கிறது. மூடியிருக்கிற திரைகள் மெல்ல மெல்ல நீக்கப்படும்போது நாம் கற்கிறோம் என்று கூறுகிறோம். நாம் பெறுகின்ற அறிவின் அளவு இந்தத் திரையை விலக்குகின்ற அளவைப் பொருத்தே அமைகிறது. இந்தத் திரை முழுவதுமாக நீங்கப் பெற்றவன் எல்லாம் தெரிந்தவனாகிறான்”.
குப்பைகளைப் போலத் தகவல்களைச் சேர்த்து வைத்துக் கொள்பவனால் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள முடியும்?
சுவாமி கூறுகிறார் “உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது அல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.”
வள்ளுவன் கூறுகிறான்,
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு. (திருக்குறள்- 396)
அறிவு என்பது ஊற்றோடுகின்ற கிணற்றினைப் போல இருக்க வேண்டும், வெறும் குப்பைக்குழியாக அல்ல. குப்பைக்குழி கூட தன்னுள் கொட்டப்பட்ட குப்பையை மட்கச் செய்து உரமாக்கிவிடும், ‘குப்பைத்தொட்டி’ என்றே குறிப்பிட வேண்டும்.
இங்கு கல்விக்கூடங்கள் தான் சொன்னதைச் செய்தால் போதும் எனச் சொல்ல, மாணவன் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக வடிக்கப்படுகின்றான். அவன் சுயசிந்தனையில்லாதவனாக காயடிக்கப்படுகின்றான். வெறுமே மனனம் செய்து, அதனைப் பிரதியெடுக்கும் ஒரு இயந்திரமாக உருவாக்கப்படுகின்றான்.
இப்படி உருவாக்கப்பட்டவர்களால் அமைக்கப்பட்ட சமுதாயம் எவ்வாறிருக்கும்? ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனங்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.
நிச்சயமாக அரசாங்கம் வரும் காலகட்டத்தில் கல்வியை அளிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும். உங்கள் அறிவும் சேவையும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு நீங்கள் முழுமையாகத் தயாராக வேண்டிய தருணம் இப்பொழுது வந்துவிட்டது. சற்றே இந்த சமுதாயத்தை உற்று நோக்குங்கள். இது உங்களால் உருவாக்கப்பட்டது என்பதை நன்றாக நினைவில் பதியுங்கள். இது உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போன்றது.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் (திருக்குறள் – 373)
– இது வள்ளுவன் வாக்கு. எத்தனை நூல்களைக் கற்றாலும் ஒருவனுக்கு அவனது உண்மை அறிவே சொந்தமாகும். உண்மையறிவு என்பது என்ன? ஒவ்வொன்றையும் ஆய்ந்து அதன் உண்மையை கண்டுணறும் சக்தி. அதனை வெறும் தகவல் சேகரிப்பால் செய்ய முடியாதென்பதே நிதர்சனமான உண்மை.
பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனதிற்குள்ளேயே இருக்கிறது. புறவுலகம் நீங்கள் உங்கள் மனதை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல் வாய்ப்பு மட்டுமே என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
தன் மனத்தின் சக்தியை, தன் சுய அறிவை பயன்படுத்த வகை செய்யாத கல்வி எப்படி ஒரு நல்ல மனிதனை சமுதாயத்துக்குக் கொடுக்கும்?
சுவாமி மேலும் கூறுகிறார், “ஆன்மிகம் சோறு என்றால் பிற அனைத்தும் கறிகள். இவை அனைத்தும் ஒன்றாகப் படைக்கப்பட வேண்டுமேயன்றி தனித்து அல்ல. தனித்துப் படைப்பின் அது அஜீரணத்தை உண்டு பண்ணும்.”
இன்றைய சூழல், கல்வி நிறுவனங்களை ஏதாவது ஒன்றை மட்டுமே அளிக்கச் செய்வதாய் அமைந்துள்ளது. சில நிறுவனங்கள் ஒழுக்கம், ஆன்மிகம் முக்கியம் என்று முயற்சி செய்கின்றன. ஆனால் அவை சொல்லும் விதம் மாணவனைச் சிந்திக்கத் தூண்டுவதாக இல்லை, வெறுமே பின்பற்றக்கூடியவனாக மாற்றக்கூடியவை. இவை அஜீரணத்தைத் தான் உண்டாக்கும்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (திருக்குறள்- 394)
-இது வள்ளுவன் வாக்கு. ஒரு கற்றறிந்த புலவர் தான் சேர்ந்திருப்போரை மகிழச் செய்து, பிரியும் நேரத்தே மீண்டும் இவரை எப்போது சந்திப்போம் என்ற பேராவலை உண்டாக்குபவராக இருப்பார் என்கிறார். இன்றைய நிலை என்ன? நிறைய பேர் கற்றறிந்தோரே, ஆனால் இந்த ஒரு நிலையைக் காணமுடியுமா? சகமனிதனோடு அன்போடு பழகுபவர் எத்தனை பேர் இங்குண்டு? பசித்தவனுக்கு ஒரு பிடி உணவு கொடுக்கும் மனத்தை உருவாக்காத கல்வி எதற்கு? என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
உறவுகளின் அருமை தெரியாமல் கலாசாரச் சீர்கேட்டினை நோக்கி நகர்த்தும் இன்றைய கல்வி கூட்டுக் குடும்பத்தினைச் சிதைத்தது மட்டுமல்லாமல், பெற்றோரை மதிக்கவோ, பாதுகாக்கவோ கற்றுத் தரவில்லை. மணம் புரிந்தோர் மனமது புரிந்துகொள்ள இயலாமல் நீதிமன்றத்தை சில நாட்களிலேயே தேடிச்செல்லும் வருத்தம் தரக்கூடிய போக்கு அதிகரித்து வருகின்றது. எதையும் சிந்திக்க இயலாத ஒருவனுக்கு இவ்வாறு நிகழ்வது ஒன்றும் வியப்பல்லவே?
“சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி”
-என்கிறார் சுவாமிஜி.
இங்கு சொந்தக் காலில் நிற்பது என்பது, பொருளீட்டுவது மட்டுமே என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சுவாமிஜி சொல்கின்ற வாழ்க்கைப் போராட்டம், ஒழுக்கம், பிறர்நலம் இவை அத்தனையும் சேர்ந்தது தான் அது என்பது விளக்கப்படவில்லை; புரிந்து கொள்ளப்படவில்லை.
இந்தக் கல்வியில் உருவான பெற்றோர் தங்களைவிட ஒரு படி மேலாக தங்கள் குழந்தைகளை இந்தப் பொருளிய மனோபாவத்தில் சிக்க வைக்க, ஒரு போட்டி மனப்பான்மையோடு தான் வாழப் பழக்குகிறார்கள். தொலைக்காட்சிகளில் நடத்தப்பெறும் பாட்டு, நடனப்போட்டிகளைக் காணும் போது, பெற்றோர் தங்கள் விருப்பங்களை குழந்தைகளின் மீது திணிப்பதைப் பார்க்கும்போது கோபம் பொங்கி வரவே செய்கிறது.
ஓட்டைப் பாத்திரத்தில் நீரை சேமிக்க நினைப்பது போன்றது இது. குழந்தையிடம், ஒருமுகப்பாட்டினைக் கைகொள்ளவோ, சுயமாக சிந்திக்க செய்யவோ பழக்காமல், அதன் விருப்பம், திறமை இதனை கவனத்தில் கொள்ளாமல், அதனை ஒன்றைச் செய்யச் சொல்லும்போது பாவம் அந்த குழந்தைகள் படும் பாடு! ஐயகோ எனக்கே வேதனை மிகும்போது அந்த குழந்தைகளின் நிலை என்ன?
எஃகு போன்ற தசைகளை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும், தினமும் கால்பந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் விரும்பினார் சுவாமி விவேகானந்தர். சிறந்த ஆரோக்கியம் கொண்ட தேகத்தில் தான் சிறந்ததொரு ஆத்மா ஜொலிக்கும் என்பதால் ஏற்பட்ட விருப்பம் இது. ஆனால் இன்று விளையாட்டு என்பது ஒரு கேலிக்கூத்தாகப் போனது பள்ளிகளில். தனிப்பட்ட விருப்பும் வசதியும் உள்ளவர்கள் மட்டுமே விளையாட்டில் சிறக்கும் சூழல் உருவாகிவிட்டது. பள்ளிகளில் புத்தகங்கள் மட்டுமே பிரதானமாய்ப் போய்விட்டது.
இவ்வாறு உருவாக்கப்படும் இளைஞர்கள் கோடிப் பேர் கிடைத்தாலும் சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க இயலாது. எனவே சுவாமி விவேகானந்தரின் இந்த 150 -ஆவது பிறந்த ஆண்டு * சமயத்திலே, நாம் உறுதி ஏற்போம், அவர் கனவு கண்ட கல்வி முறையை உருவாக்க!
அதன்மூலம் புதிய பாரதம் படைக்க ஒரு நூறு இளைஞர்கள் போதும்.
- குறிப்பு: * 2013-இல் எழுதப்பட்ட கட்டுரை இது….
$$$