-மகாகவி பாரதி
தொழில் சிறப்பு குறித்த சான்றோரின் மேற்கோள்களை முதல் பகுதியில் குறிப்பிட்டு, அதற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறார் காளிதாஸன் (எ) மகாகவி பாரதி. “முயற்சி யிருந்தால் பயமில்லை. முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்” என்று அறிவுறுத்துகிறார்...

5 மார்ச் 1917 நள மாசி 22
1
(வசனத்திரட்டு – ‘ஆர்ய’ பத்திரிகை)
1. மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது – தொழிலாளியின் கை தொழில் செய்யும்போது பரிசுத்தமாகிறது.
2. சீ-பிங் என்ற சீன ஞானி: தர்மிஷ்டன் எப்போதும் முயற்சியோடிருப்பான்.
3. (நபி) ஸுலேமான் என்ற யூதஞானி:- சோம்பேறியின் மனவிருப்பம் அவனையே கொல்லுகிறது.
4. தோல்ஸ்தோய் என்ற ருஷிய ஞானி: தொழில் எத்தனை அசுசியாக இருந்தாலும், அதைச் செய்வதில் அவமானமில்லை. சோம்பலொன்றுதான் அவமானம்.
5. உத்தம ஸுக்தம் என்ற பெளத்த நூல் சொல்லுகிறது: சோம்பல் ஒரு குற்றம். தொழிலின்றி வாழ்தல் ஒரு மலம்.
6. தோரோ என்ற அமெரிக்க ஆசிரியர்: உடம்பை சோம்பலுக்கும் சொகுசுக்கும் இரையாக்கி வைத்திருப்பவனை ஞானியாகக் கொள்ளலாகாது. ஆத்மாவுக்கு உடம்பே முதலாவது சீடன்.
7. கார்லைல் என்ற ஆங்கிலேய ஆசிரியர்: சந்தேகம், விசனம், மனச்சோர்வு, கோபம், ஏக்கம், இந்தப் பிசாசுகளெல்லாம் மனிதனை அடிக்கும் பொருட்டுப் பதுங்கி நிற்கின்றன. அவன் சோம்பலுக்கிடங்கொடுக்கும் போது இவையெல்லாம் அவனை வந்து தாக்குகின்றன. தீவிரமாக உடம்பை உழைப்பதே இந்தப் பிசாசுகள் அடிக்காமல் தன்னைக் காத்துக் கொள்ளுவதற்கு நிச்சயமான வழி. தொழிலைக் கைக்கொண்டால், பிறகு எந்தப் பிசாசும் பக்கத்தில் நெருங்காது. மிஞ்சி வந்தால், தூரத்திலிருந்து உறுமும். அவ்வளவுதான்.
8. மோந் தாஞ் என்ற ப்ரான்ஸ் தேசத்துப் பண்டிதர்: சோம்பலை நரகவாதனைகளில் ஒன்றாகக் கணக்கிட வேண்டும். அதைச் சிலர் சொர்க்க இன்பங்களில் ஒன்றாக நினைக்கிறார்கள்.
9. நபி ஸுலேமான்: சோம்பேறியே, எறும்பினிடம் போ. அதன் நெறிகளைப் பார். உனக்குப் புத்தி வரும்.
2
விளக்கம்
-காளிதாஸன்
மேலே மொழிபெயர்த்திருக்கிற வசனங்களில் தொழிலில்லாதவனுக்கு ஆத்ம ஞானமில்லையென்று தோரோ (6) சொல்லுகிறார். ஆத்மாவுக்கு முதலாவது சிஷ்யன் சரீ்ரமென்பது அவர் கொள்கை. ஆத்மஞானி சோம்பேறியாக இருக்கமாட்டானென்ற இவருடைய கொள்கை பகவத்கீதையின் கருத்துக்கு இணங்கியதேயாகும். தொழிலின்றியிருப்பவனுக்கு விடுதலையில்லை, ஞானமில்லை, பக்தியில்லை. அவனுக்குச் சோறு கிடையாது; தண்டச் சோறு தின்று தொழில் செய்யாதிருப்பவன் கொழுத்து நோய் கொண்டு சாவான். இந்த விஷயங்கள் பகவத்கீதையில் மிகத் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.
கார்லைல் (7) என்ற ஆங்கிலேய ஆசிரியர் தொழிலின்றியிருப்பவனைச் சந்தேகம் முதலிய பிசாசுகள் வந்து தாக்குமென்று சொல்லிய் வார்த்தை பொது அனுபவத்திலே காணத்தக்கது. சந்தேகம், பயம் முதலிய பிசாசுகள் வந்து தாக்காமலிருக்கும் பொருட்டாகவும், அங்ஙனம் தாக்கும் போது அவற்றை மடிக்கும் பொருட்டாகவும் தொழிலென்ற மருந்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
பூஜை, கல்வி, போதனை முதலியனவும் சரீர உழைப்புப் போலவே கவலையை நீக்கி உடம்பைப் பேணும். உண்மையாகச் செய்யப்படும் பூஜையும், உபதேசமும் எல்லாத் தொழில்களைக் காட்டிலும் சிறந்தன. பொய்ப் பூஜையும், காசைப் பெரிதாக நினைத்துச் செய்யும் ஞானோபதேசமும் மிகவும் இழிந்த தொழில்களாகும். பல இடங்களில் வியாபாரிக்குள்ள மதிப்புப் பூசாரிக்கும் குருக்களுக்கும் இல்லாதிருக்கக் காண்கிறோம். இவர்களுக்கு மதிப்புக் குறைவுண்டாகும் காரணம் உண்மைக் குறைவு தவிர வேறொன்றுமில்லை.
அறிவை நல்ல வழிகளி்ல் உழைப்பவனுடைய உடம்பு முயற்சியில்லாமல் சோம்பிப் படுத்திருக்க நியாயமில்லை. சோம்பேறியின் விருப்பங்கள கவலைகளாக மாறுகின்றன. கையினால் உழைக்காமல் மனத்தால் விரும்புவோன் தன்னைத் தானே தின்று கொள்ளுகிறான். சோம்பேறியின் மனத்தைக் கவலைகள் சூறையாடுவது போல், அவனுடைய வியாதிகள் சூறையாடுகின்றன. முயற்சியினாலே செல்வம் வருமென்றும் முயற்சி யில்லாவிட்டால் வறுமை வருமென்றும் திருவள்ளுவர் சொல்லுகிறார்.
முயற்சி யில்லாதவருக்கு நோய் வரும், பந்தங்கள் வரும்; அவர்கள் மோந்தாஞ் ஆசிரியர் (8) சொல்வது போல் இவ்வுலகத்திலேயே நரகவாதனைப்படுவார்கள், ஆதலால் ஹிந்துக்களாகிய நாம் முயற்சியைக் கைவிடாமல் நடத்த வேண்டும். முயற்சியுண்டானால் உடம்பிலே வலிமையுண்டு. உள்ளத்திலே மகிழ்ச்சியுண்டு, கல்வியுண்டு, செல்வமுண்டு, நீண்ட வயலும் புகழும் இன்பங்களுமுண்டு, முயற்சி யிருந்தால் பயமில்லை. முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்.
- சுதேசமித்திரன் (05.03.1917)
$$$