-மகாகவி பாரதி
பிரிட்டனில் வெளியான ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியை சுதேசமித்திரன் வாசகர்களுக்கு தமிழில் பெயர்த்து வழங்கும் மகாகவி பாரதியின் மொழித்திறனும், இதழியல் கடமை உணர்வும், அவற்றை விஞ்சும் உலக அரசியல் நுண்ணுணர்வும் நம்மை வியக்கச் செய்கின்றன. இச்செய்தியை தமிழர்களுக்கு அளிக்க, நம்மவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் (அப்போதுதானே சுதந்திரப் போரில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?) என்ற எண்ணமே காரணம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.

2 பிப்ரவரி 1917 நள தை 21
இங்கிலாந்திலுள்ள “ந்யூ ஸ்டேட்ஸ்மன்” என்ற பத்திரிகையில் ௸ தேசத்துக் குடியுரிமைக் காப்பு மஹாசபையின் கிளையாகச் சேர்ந்த வியாபார ஐக்யப் பகுதிச் சங்கத்தின் கெளரவ காரியதரிசி ஒரு கடிதமெழுதி யிருக்கிறார். அதில் ஒரு பகுதி இங்கு மொழி பெயர்க்கப்படுகிறது. ௸ மஹாசபையின் நோக்கங்கள் என்னவென்றால்:-
1. 1916-ஆம் வருஷத்து ராணுவச் சேவக வி்திகளை நீக்கிவிடும்படி வேலை செய்வதும், நமது (ஆங்கிலேய) ஜாதிக்கு ராணுவச் சேவகம் எப்போதும் கட்டாயமாகாதபடி தடுப்பதும்;
2. சொல்லுரிமை, குடிவிசாரணை (படை விசாரணை யல்லாதது) முதலிய ப்ரிடிஷ் ஜாதியாரின் மற்ற குடியுரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளுதல்;
3. குடி விடுதலைக்கு இடர் விளைவிக்கக்கூடிய ராணுவச் சேவகச் சட்டம், பூமி ரக்ஷணைச் சட்டம் முதலிய சட்டங்களின் அமுலைக் கவனித்துக் கொண்டு வருதல்;
4. ௸ சட்டங்களின் குண காரியங்களை வளரவிடாதபடி எதிர்த்தல் என்பன.
உள்நாட்டு மந்திரியாகிய மிஸ்டர் ஸாமுயெல் ௸ சபையின் நோக்கங்களைக் குறிக்குமிடத்தே தாம் விரோதப்படுவதாகவும், ௸ சபையின் காரியம் தேச நன்மைக்குக் கேடு விளைவிக்குமென்றும் சொல்லுகிறார். ஆனால் இந்த சபையின் தலைவரோ ராபர்ட் ஸ்மில்லி, பண்டித க்ளிபோர்டு, மாஸிங் ஹாம், ப்ரெய்ல்ஸ் போர்டு முதலிய கீர்த்தியுள்ள பண்டிதர். இவர்களுடைய கார்டிப் நகரத்துக் கூட்டத்திற்குக் கிரயச் சீட்டு வாங்கி வந்த ஜனங்களைத் தவிர்த்து மற்றப் பிரதி்நிதிகளின் விவரம் பின்வருமாறு:-
வியாபார ஐக்கியக் கிளைகள்- 220 பிரதிநிதி. வியாபார சபைகளும் ஸ்தலத் தொழிற் சங்கங்களும் அனுப்பிய பிரதிநிதிகள் 37.
ஸமூஹ (ஸோஷலிஸ்ட்) கக்ஷி சபைகளும் ஸமாதான சபைகளும் அனுப்பிய பிரதிநிதிகள் 100. மதாபிமான சங்கத்தார்களின் பிரதிநிதிகள் 13. கூட்டுறவு சபையார்களி்ன் பிரதிநிதிகள் 16. ஸ்திரீ சபையாரின் பிரதிநிதிகள் 29. பகுதிப் படாதோர் 34.
இந்த மஹா சபையுடன் 500 சபைகள் வரை சேர்ந்திருக்கின்றன.
மேற்படி காரியதரிசி சொல்லியிருப்பதிலி்ருந்து ௸ சபையின் காரியங்கள் உள்நாட்டு மந்திரிக்கு ஸம்மதமில்லை யென்று தெரிகிறது. அப்படியிருந்தும், உள்நாட்டு மந்திரி அவர்களுடைய கூட்டத்தைத் தடுக்காமலிருந்தது அவருடைய பெருந்தன்மையை விளக்குகிறது. ஜனங்களின் உரிமைகளை எதிர்த்தால் பிரமாதமுண்டாகுமென்று தீர்மானத்தினால் உள்நாட்டு மந்திரி மேற்படி கூட்டத்தை அதிகாரிகள் தடுக்காதபடி நியமி்த்திருக்கலாமென்று மேற்படி காரியதரிசி தமது கடிதத்தில் சொல்லுகிறார். அதை நாம் நம்பவில்லை. ப்ரிடிஷ் மந்திரிகள் இயற்கையிலேயே குடியுரிமைகளைத் தடுக்க மனதில்லாதவர்கள். இது நிற்க. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.
ஆதலால், ௸ குடியுரிமைக் காப்புச் சபையார் தேசப் பொதுமைக்கு விபத்து நேர்நந்தண்டுப்பதைத் தடுத்து வெற்றி பெறுவதாகிய ஒரே நோக்கத்துடன் எல்லாக் காரியங்களும் செய்யாதபடி சில்லரைச் சட்டங்களின் மெதுவான ப்ரயோகங்களைக் கண்டனம் பண்ணிக் கொண்டிருப்பது லெளகிகமில்லை யென்றாலும், இந்த விஷயத்தில் அவர்களுடைய செய்கை விபரீதமென்பது மெய்யேயானாலும், அவர்களுடைய வார்த்தையில் எத்தனை குன்றுமணி உண்மை சேர்ந்திருக்கிற தென்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
யுத்தம் நடப்பது காரணமாக ஜனங்களுடைய ஸாதாரண உரிமைகளை அதிகாரிகள் புறக்கணிப்பது சில ஸமயங்களில் அவசியமாக ஏற்பட்ட போதிலும், ஒரேயடியாக ஜன தர்மங்களைப் படுகுழியிலே கொண்டு அமிழ்த்தி விடும்படி ஜனத் தலைவர் பார்த்துக் கொண்டிருக்கலாமா? யுத்த காலத்தில் ஜன உரிமை எவ்வளவு தூரம் வளைய இடங்கொடுக்கலாம்? அதை எல்லைப் படுத்த வேண்டிய காரியம் இப்போது ஐரோப்பியப் பண்டிதர்களை வந்து சூழ்ந்திருக்கிறது.
- சுதேசமித்திரன் (02.02.1917)
$$$