-டாக்டர் என்.ராம்
டாக்டர் திரு. என்.ராம் தமிழகத்தைச் சார்ந்தவர்; தற்போது லண்டன் நகரில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவர் 2013-இல் தினமணியில் எழுதிய கட்டுரை இங்கே....

உலகின் தலைசிறந்த சொற்பொழிவுகளில் முக்கியமானதாகப் போற்றப்படும் கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்தப்பட்டு இன்றோடு (நவம்பர் 19) சரியாக 150 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிஸ்பர்க் போர்க்களத்தின் நினைவிடத்தில் நின்றுகொண்டு 1863-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் மதிய நேரத்தில் நிகழ்த்திய இந்த உரையில்தான் மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி (Government of the people by the people for the people) என்ற புகழ்பெற்ற சொற்றொடர் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்க நாட்டில் கெட்டிஸ்பர்க் களத்திலிருந்து சுமார் 600 கல் தொலைவில் உள்ள சிகாகோ நகரத்தையும், அங்கே 30 ஆண்டுகள் கழித்து 1893-ல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் விவேகானந்தர் நிகழ்த்திய புகழ்பெற்ற சொற்பொழிவையும் ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன.
கிரேக்க- ரோமானிய நாகரிக காலத்தைச் சேர்ந்த அரிஸ்டாடில், டெமாஸ்தானிஸ், குவின்டிலியன் போன்ற அறிஞர்கள் ஆராய்ந்து முன்வைத்த சொற்பொழிவுக் கலையின் நுணுக்கங்களைத்தான் இன்றைய மேடைப் பேச்சாளர்களும் கையாண்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க முயல்கிறார்கள் என்று அறியும்போது வியப்பே மேலிடுகிறது. அரிஸ்டாடில் எழுதிய பேச்சுக்கலை (Rhetoric) என்ற நூல் தொடங்கி, போன மாதம் வெளியான மார்க் ஃபோர்சைத் (Mark Forsyth) எழுதிய பேச்சாற்றல் நுட்பங்கள் (Elements Eloquence) என்ற நூல் வரை சுமார் 30 அல்லது 40 நுட்பங்களைத்தான் பேச்சாளர்கள் மீண்டும் மீண்டும் கையாளுகிறார்கள் என்று தெரிகிறது.
லிங்கன் உரையில் இந்த அரியநுட்பங்கள் எப்படி அமைந்து அந்த உரையை அழகுபடுத்துகின்றன என்று பல அறிஞர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். ஆனால் அதே அளவுக்கு விவேகானந்தர் உரை பேச்சுக்கலை என்ற கோணத்தில் ஆராயப்படவில்லை. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி நடக்கும் இந்த வேளையில் அதுபற்றிய ஆய்வு நடத்துவது அவசியம்.
அமெரிக்க நாட்டின் தென் மாநிலங்கள் கறுப்பர்களை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டின. ஆனால் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று லிங்கன் தலைமையில் அமெரிக்க அரசும் வடமாநிலங்களும் போராடின. இரு தரப்புக்கும் 1861 முதல் 1865 வரை நடந்த யுத்தமே அமெரிக்க உள்நாட்டுப் போர் என்று அழைக்கப்படுகிறது.
அதில் பென்சில்வேனியா மாநிலத்தில் ‘கெட்டிஸ்பர்க்’ என்ற போர்க்களத்தில் வட மாநிலங்கள் பெற்ற வெற்றி போரின் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. வடமாநிலங்கள் தரப்பில் அமெரிக்க அரசுக்காகப் போராடி 23,000 வீரர்கள் உயிர்நீத்தனர். அந்த வீரர்களின் நினைவிடத்தில் நின்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் என்ற முறையில் 54 வயது நிரம்பிய ஆபிரகாம் லிங்கன் செலுத்திய அஞ்சலிதான் ‘கெட்டிஸ்பர்க் உரை’ என்று புகழ்பெற்றது.
சிகாகோவில் 1893-இல் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றம் உலகப் பொருட்காட்சியை ஒட்டி நடத்தப்பெற்றது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததன் 400-ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகவே அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகின் கிழக்கு மேற்கு நாடுகளின் மத அறிஞர்கள் ஒரே மேடையில் கூடியது அதுவே முதல்தடவை. கிறிஸ்தவ மதம் அல்லாதவர்கள் அமெரிக்காவில் ஒரு மேடையில் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தது அன்றைக்கு ஒரு புதுமையாகும்.
இந்து மதத்தின் சார்பாக 30 வயது நிரம்பிய விவேகானந்தர் பேச அழைக்கப்பட்டார். 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி மதிய நேரத்தில் அவர் நிகழ்த்திய உரை அந்த நாடாளுமன்றத்திற்கே நெறியமைத்துக் கொடுப்பதுபோல் அமைந்துவிட்டது.
லிங்கன் நீண்ட காலம் புகழ்பெற்ற வழக்குரைஞராகவும், பின்னர் அரசியல்வாதியாகவும் புகழ்மிக்க பல உரைகளை நிகழ்த்திய அனுபவப் பின்புலத்துடன் கெட்டிஸ்பர்க் வந்தார். போர்முனையில் மாண்டுபோன போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அமெரிக்க வரலாற்றின் இக்கட்டான திருப்பு முனையில் உண்மைகளைத் திறம்பட எடுத்துரைத்து நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாத்து எதிர்காலத்துக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. 15,000 பேர் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் லிங்கன் பேசியது மூன்றே மூன்று நிமிடங்கள்தான். ஆனால் 272 சொற்கள் மட்டுமே அடங்கிய அந்தப் பேச்சு வரலாற்றில் இடம்பெற்று விட்டது.
விவேகானந்தர் பேச்சின் பின்னணி இதற்கு முற்றிலும் வேறுபட்டது. அன்றைய தினம் வரைக்கும் அவர் பெயரையே அமெரிக்காவில் யாரும் கேள்விப்பட்டதில்லை. அதைவிடப் பெரிய ஆச்சரியமான தகவல், அவர் அன்று வரையில் எந்த மேடையிலும் பேசியதே இல்லை. அதுதான் அவருடைய முதல் மேடைப்பேச்சு. 7000 பேர் திரண்டிருந்த அந்த அரங்கத்தில் “அமெரிக்க நாட்டின் சகோதர சகோதரிகளே” என்று தொடங்கியவுடன் அவருடைய கம்பீரமான கவர்ச்சியில் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று இடைவிடாது கைதட்டினார்கள். 544 சொற்கள் அடங்கிய அந்தப் பேச்சும் 5 நிமிடத்தில் முடிந்து விட்டது.
“போர் வீரர்களுக்கு இந்த மண்னை அர்ப்பணிப்பதை விட, மேலான லட்சியங்களுக்கு நம்மை நாமே அர்ப்பணிக்க இங்கே கூடியுள்ளோம். விடுதலை உணர்வுக்குப் புத்துயிர் அளிப்போம். மக்களால் மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி மறையாது பாதுகாப்போம்” என்று அவர் (லிங்கன்) முடித்த அச்சிறிய பேச்சில் ஆங்கிலச் சொற்களைத் திறம்பட அமைத்து எடுத்துரைத்த பாங்கு இன்றளவும் வல்லுநர்களை வியக்க வைக்கிறது.
விவேகானந்தர் பேச்சின் ஒரு மாறுபட்ட அம்சம் நம் சிந்தனைக்குரியது. ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதத்தின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருந்த மேடையில் விவேகானந்தர் முற்றிலும் மாறுபட்ட செய்தியை முன்வைத்தார். “ஒரு மதத்தினர் பிற மதங்களைச் சகித்துக் கொண்டால் மட்டும் போதாது. எல்லா மதங்களும் உண்மையே என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி அனைவரையும் சிந்திக்க வைத்தார்.
எல்லா நதிகளும் ஒரே கடலில் கலக்கின்றன. எல்லா மதங்களும் ஒரே ஆண்டவனை நோக்கியே செல்கின்றன. மதவெறியாலும் மதப்போர்களாலும் மனிதர்கள் அடைந்த கஷ்ட நஷ்டம் போதும். நல்ல காலம் வந்துவிட்டது. இன்று காலை அடிக்கப்பட்டது இந்த மாநாட்டின் அழைப்புமணி மட்டுமல்ல, மதவெறியின் சாவுமணியும் ஆகும் என்று அவர் முடித்தபோது அந்த அரங்கில் இருந்த 7,000 பேரும் எழுந்து நின்று பல நிமிடங்கள் கைதட்டினார்கள்.
சொற்பொழிவு நுட்பங்கள்
ஒரு பேச்சு எந்த மேடையில் நிகழ்த்தப்படுகிறதோ அந்த இடத்திற்கு மட்டுமே பொருத்தமாக இருந்தால், அது ஒரு நல்ல பேச்சாக மட்டுமே இருக்கும். காலத்தை வென்று நிற்கும் சொற்பொழிவாக உயர முடியாது. எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றுக் கொள்ளும்படியான உண்மைகளை உள்ளடக்கி இலக்கிய நயங்கள் மிளிர அமைக்கப்பட்ட உரைகளே தலையாய சொற்பொழிவுகளாக நிலைத்து நிற்கின்றன. மக்களாட்சியை வலியுறுத்திய லிங்கன் உரையும், மதங்களின் ஒற்றுமையை உணர்த்திய விவேகானந்தர் உரையும் இந்த வகையைச் சார்ந்தவை.
19-ஆம் நாற்றாண்டில் ஒலிபெருக்கி இல்லாத அந்த நாள்களில் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இந்த இரண்டு உரைகளும் இத்தனை ஆண்டுகளைத் தாண்டியும் நம் நெஞ்சைத் தொடுகின்றன என்றால் அதற்குக் காரணம், அரிய உண்மைகளை அழகிய சொற்களால் எடுத்துரைக்கும்போது கருத்தழகும் மொழியழகும் பின்னிப்பிணைந்து அது காலத்தால் அழியாத கலைப் பொருளாகவும் மாறி எந்நாளும் வழிகாட்டும் என்பதுதான்.
லிங்கன் உரையும், விவேகானந்தர் உரையும் அவர்கள் பேசிய மேடையோடு மறைந்துபோய் விடவில்லை. லிங்கன் வலியுறுத்திய மக்களாட்சித் தத்துவம் உலகெங்கும் பரவி இருக்கிறது. “மக்களால் மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி” என்ற சொற்களை ஒரு தாரக மந்திரமாக இன்றைக்கும் மற்ற பேச்சாளர்கள் கையாளுகிறார்கள். பல மக்கள் இயக்கங்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இன்றும் அமைந்துள்ளது. கறுப்பு இனத்தைச் சார்ந்த ஒருவர் வெள்ளை மாளிகையில் கோலோச்சுவது லிங்கன் பேச்சின் வெற்றியின் தொடர்ச்சியே.
விவேகானந்தர் சுட்டிக்காட்டிய மத ஒற்றுமைக் கருத்து அன்றைக்கு இருந்ததைவிட இப்போதுதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பேசிய அதே செப்டம்பர் 11-ஆம் தேதி அன்றுதான் சரியாக 108 ஆண்டுகள் கழித்து நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் மதவெறியர்களால் தாக்கித் தகர்க்கப்பட்டு 9/11 என்ற சோக நாளாக மாறிவிட்டது. # எனவே உலகெங்கும் விவேகானந்தர் உரையின் உண்மைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டிய தேவை தொடர்கிறது.
இன்னொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும். லிங்கன் தன்னுடைய தாய்மொழியாம் ஆங்கிலத்தில் பேசினார். ஆனால் விவேகானந்தர் ஓர் அந்நிய மொழியில் உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார். இது லிங்கன் வங்காள மொழியில் சொற்பொழிவாற்றினால் எப்படி இருக்குமோ அதைப் போன்ற ஒரு சாதனையாகும். உலகின் தலையாய சொற்பொழிவுகள் என்ற பெயருடன் வெளிநாடுகளில் வெளியாகும் பல நூல்களில் லிங்கன் உரை கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஆனால் விவேகானந்தர் உரை இடம் பெறுவதில்லை. இந்த முரணுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
- நன்றி: தினமணி (19.11.2013)
- # அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் இருந்த இரட்டைக் கோபுர கட்டடம் 2001, செப்டம்பர் 11-இல் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
$$$