பாஞ்சாலி சபதம் – 2.2.1

-மகாகவி பாரதி

சூதாட்டம் அதன் அதி உச்சத்தை எட்டுகிறது. பாஞ்சாலியைப் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். மகாகவி பாரதி பொங்குகிறார். அவருக்கு பாஞ்சாலியின் வீழ்ச்சி பாரத அன்னையின் வீழ்ச்சியாகத் தெரிகிறது.  “செருப்புக்கு தோல் வேண்டியே - இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” என்று வினவும் அவர், “வேள்விப் பொருளினையே - புலை நாயின்முன் மென்றிட வைப்பவர்போல்”, ஆவியில் இனியவளை, வடிவுறு பேரழகை, புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை, கொடியவர் அவைக்களத்தில் பணயம் வைத்து இழந்து விட்டான் கோமகன் தருமன்- என்கிறார்....

இரண்டாம் பாகம்

2.2 துகிலுரிதற் சருக்கம்
2.2.1. திரௌபதியை இழத்தல்

பாவியர் சபைதனிலே, – புகழ்ப்
.பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவளை, – உயிர்த்
.தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவியம் நிகர்த்தவளை, – அரு
.ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திருவை, – எங்குந்
.தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை, 39


படிமிசை இசையுற வே – நடை
.பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை, – ஒரு
.கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை, – இன்ப
.வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் – அறக்
.கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான். 40

வேறு

வேள்விப் பொருளினையே – புலை நாயின்முன்
      மென்றிட வைப்பவர்போல்,
நீள்விட்டப் பொன்மாளிகை – கட்டிப் பேயினை
      நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கியே – செய்த பூணையோர்
      ஆந்தைக்குப் பூட்டுதல்போல், –
கேள்விக் கொருவரில்லை – உயிர்த்தேவியைக்
      கீழ்மக்கட் காளாக்கினான். 41

செருப்புக்கு தோல்வேண்டியே, – இங்குக் கொல்வரோ
      செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக்கே – ஒத்த பந்தயம்
      மெய்த்தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போனவுடன், – கெட்ட மாமனும்
      உன்னியத் தாயங்கொண்டே
இருப்பகடை போடென்றான், – பொய்மைக் காய்களும்
      இருப்பகடை போட்டவே. 42

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s