பாரதியும் பாரதிதாசனும் – 2

-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

சங்கரதாஸ் சுவாமிகள்

2. சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன்

இற்றைக்கு நூறாண்டுகளின் முன்னர்த் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறனை ஆராயு முன்னர் அன்றைய தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை அறிதல் வேண்டும். பிற சமயத்தை வளர்க்கும் நோக்குடன் இத் தமிழ் நாடு நோக்கிய வேற்று மொழியாளர்கள் தமிழை வளர்க்கும் நோக்குடன் புதிய உரைநடை வகுத்த காலம் அது. இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் பக்திச் சுவை நனி சொட்டப் பாடிய காலம் அது. கவிதையில் ஒரு புது வகை பிறக்கத் தேவை ஏற்பட்டது. அருணாசலக் கவி போன்றவர்கள் தமிழில் நாடகக் கீர்த்தனைகள் யாத்தனர். இங்ஙனம் கீர்த்தனைகள் தமிழில் தோன்றி இன்றைக்கு இரு நூறு ஆண்டுகளே ஆகின்றன.

மக்களுக்கு இலக்கியத்தின் மூலம் அறிவூட்ட விழைவோர் விரும்பி மேற்கொள்ளும் துறை நாடகத் துறையேயாகும். பல பாடல்கள் அல்லது பல பக்க உரைநடை மூலம் புகட்ட முடியாத ஒன்றை ஒரு சிறு நாடகக் காட்சி மூலம் புகட்டிவிட முடியும் என்பதை இத்தமிழர் என்றோ கண்டுவிட்டனர். அதனாலேயே தம் உயிரனைய தமிழ் மொழியையே முத்தமிழ் என்று கூறிட்டு அதில் ஒன்றாக நாடகத் தமிழை வைத்தனர். இந்த நுணுக்கத்தை நன்கறிந்த இப் பெரியார் நாடகத் துறையைத் தம் குறிக்கோளுக்குப் பயன்படுத்திக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை.

மிகப் பலவாய நாடகங்களையும் கீர்த்தனைகளையும் சுவாமிகள் எழுதியுள்ளார்கள் என்று அறிகிறோம். தமிழ் நாடகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் பலரை சுவாமிகள் உருவாக்கித் தந்துள்ளார் என்பதையும் அறிகின்றோம். ஒளவை சண்முகம் போன்றோர் தமிழ் நாடக உலகின் முடி மணியாய் விளங்குமாறு செய்த பெரியார் இரண்டு துறைகளில் மேம்பட்டு விளங்கினதை அறிய முடிகிறது. சிறந்த நடிகர்களை ஆக்கிய திறன் முதலாவது; அத்தகைய சிறந்த நடிகர்கள் சிறப்பைப் பெறத்தக்க முறையில் சிறந்த நாடகங்களை ஆக்கிப் படைத்த திறன் இரண்டாவது.

ஓர் இரவில் ஒரு முழு நாடகத்தை எழுதி முடித்த சிறப்பை திரு. சண்முகம் அவர்கள் எழுதிய சுவாமிகளின் வரலாற்றிலிருந்து அறிகிறோம். நடிகர்கள் தாம் மேற்கொண்ட பாத்திரத்திற்கேற்ப உரையாடல் அமைய வேண்டும். உரைநடையாயினும் பாடலாயினும் இதனை மனத்துட் கொண்டு அமைக்க வேண்டும். பாத்திரத்தின் தகுதி, சிறப்பு இடம் என்பவற்றிற்கேற்ப உரையாடல் அமைப்பதில் தான் நாடகாசிரியனின் சிறப்பை அறிய முடிகிறது. உதாரணமாக ஒன்றைக் காணலாம். ‘சுலோசனா சதி’ என்பது இந்திர சித்தன் பற்றிய நாடகம். முதன்முதலாக இந்திர சித்தன் ஆதிசேடன் மகளாகிய சுலோசனையைக் கண்டு அவளை விரும்பி அவளுடன் உரையாடும் இடத்தில் அடிகளின் கவிதைத் திறம், புலமை நயம், பழைய இலக்கியங்களில் அவரது புலமை ஆகிய அனைத்தையும் காண முடிகிறது.

தன்னை மணக்க விரும்பும் வீரனைக் கண்ட மாத்திரத்தில் அவனுடைய வீரம், வன்மை, கூர்த்த அறிவு, கல்வி நலம் ஆகிய அனைத்தையும் ஒரு நொடியில் அறிந்து விடுகிறாள் சுலோசனை. அப்படி இருக்கத் தன்னை விரும்பும் அவனைக் கடிய வேண்டுமானால் என்ன கூறிக் கடிவது! ‘என் தந்தையார் வந்து விடுவார், உன்னை வென்று விடுவார்’ என்று கூறினால் அது அசம்பாவிதம். எனவே, ஒரு தூய வீரன் எதனைக் கண்டு அஞ்சுவானோ அதனை எடுத்துக் காட்டி அச்சுறுத்துகிறாள். கலித்தொகை என்ற பழந்தமிழ் இலக்கியம் தூயவர்கள், வீரர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவரும் அஞ்சும் பொருள் ஒன்றை எடுத்துக் கூறுகிறது.

கழியக் காதல ராயினும் சான்றோர்
பழியொடு வரு உம் இன்பம் வெஃகார்

என்று பேசுகிறது. ‘எத்துணை ஆசை இருப்பினும், இன்பத்தை விரும்பினும், அந்த இன்பத்தால் பழி வருவதாயின் பெரியோர்கள் விரும்ப மாட்டார்கள்’ என்பதே இதன் பொருள். இந்த இலக்கிய நயம் அறிந்த சுவாமிகள் சுலோசனையின் கூற்றாக இதனைப் பெய்கிறார்.

நல்லோர்கள் எல்லோரும் கொள்ளாத பொல்லாத
சொல்லோதி மல்லாடி நிற்கிறீர் - தீய
சொல்லோதி மல்லாடி நிற்கிறீர்
……. ……… …………. …..
காதலினால் வரும் தீது பழிதரும்
ஆதலினால் இது கேவலம்

தன்னைப் பெரியவனாக மதிக்கும் எவனும் தீயவை பேசக் கூடாது என்று குறள் பேசுகிறதன்றோ !

ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

எனவே, ‘நீ இங்ஙனம் பேசுவது தீது’ என்று முதலில் எடுத்துக் காட்டுகிறாள் தலைவி. ஆனால், தீமையை பற்றி அஞ்சாமல் மேலும், அவன் அவளை நெருங்கியவுடன் சுலோசனை பழிவரும் என்று எடுத்துக் காட்டுகிறாள். இரண்டு அடிகளில் கலித்தொகையும் குறளும் பொதுவாய்க் காண்கிறோம்.

இன்னும் ஓரளவு சென்றவுடன் இந்திரசித்தன் மேலும் சுலோசனையுடன் உரையாடுகிறான். ஆனால், அந்த இடத்தில் சுவாமிகள் அவன் பண்பு முழுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறார். பெண்களிடம் ஒரு குறை; இரந்து நிற்பவன் மறந்தும் செய்யக் கூடாதது ஒன்றுண்டு. அதுவே அவளுடை பிறந்த இடத்தைக் குறைத்துப் பேசுவதாகும். தன் தாய் தந்தையரைக் குறைத்துப் பேசும் யாரையுமே ஒரு பெண் மன்னிக்க மாட்டாள். அப்படியிருக்கப் புதிதாக ஒருத்தியின் அன்பை வேண்டி நிற்கும் ஒருவன் அவளுடைய தந்தையை இழித்துப் பேசினால் அவனைவிட மமதை அல்லது அகங்காரம் பிடித்த பைத்தியக்காரன் ஒருவன் இருக்க முடியாதன்றோ! என்றாலும், சுலோசனையின் அன்பை யாசிக்கும் இந்திரசித்தன் இதோ பேசுகிறான்.

ஒரு உலகத்துக்கு இறையோன் உனது தந்தை;
மூவுலகுக்கு உரிமை பூண்டு
வரும் இறையோன் எனது தந்தை; நினது வாசம்
கீழ்நகரம்; வனப்பு மிக்க
பெருமைபெறும் என் வாசம் மேல் நகரம்
எனைக்கட்டில் பிழைவ ராது;
திரு உருவம் உடையாளே என் பின்னே
வருவதற்குத் திடங்கொள் வாயே.

தான் விரும்பும் ஒரு பெண்ணின் முன்னர்த் தன் பெருமையைப் பேசுவதையாவது மன்னிக்கலாம். ஆனால், அவள் பெருமையை – அவள் தந்தை பெருமையை – அவள் நாட்டின் பெருமையைப் படியிறக்கிப் பேசுபவன் எத்தகையன்? “என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன்” என்று கூறும் அகங்கார வடிவினனாகிய இராவணன் மகனாகத்தான் இருக்க முடியும். இந்திரசித்தன் குணாதிசயங்களுள் தலையாய் நிற்கும் பண்பு. அகங்காரமேயாகும். கம்பராமாயணங் கற்ற யாரும் இதனை அறிவர். ஒப்பற்ற நாடகாசிரியராகிய அடிகள் இந்தச் சிறந்த பாடல் மூலம் அந்தப் பாத்திரத்தின் பண்பைச் சாறு பிழிந்து தந்து விடுகிறார்.
இத்துணை அகங்காரமுடையோரும் காமத்தால் கண்டுண்ட பொழுது தம் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு எளியராகி விடுகின்றனர். அகங்காரத்தின் அடிப்படையில் எழும் இது காதலன்று. உண்மைக் காதலில் தலைவியின் நலத்திலேயே கண்ணோட்ட மிருக்கும். அகங்காரத்தில் விளைந்த காமத்தில் தன் வெறி தணிக்கும் ஆசை மட்டுமே எஞ்சுவதால் மானத்தை விட்டேனும் தன் ஆசையைத் தணிக்க முனைகிறான் மனிதன். எனவேதான், காமங் கொண்டவன் மான அவமானம் பற்றிச் சிந்திக்க முற்படுவதில்லை. இக்கருத்தை அடிகளார் சுலோசனையின் விடையில் நன்கு விளக்குகிறார்

ஆசை கொண்ட பேர்களுக்கு ரோசமில்லை
என்னும் மொழி அவனிமீது
பேசுகின்ற நிலைமைதன்னை இன்றறிந்தேன்;
உம்மிடத்தில் பின்யாது என்றால்
கூசுகின்ற நிலையன்றி யாசகர் போல்
எனை விரும்பல் குளிக்கச் சேறு
பூசுகின்ற நிலையன்றோ? உமது குல
மேன்மைநல்ல புதுமை யாமே!

‘குலப் பெருமை பேசுகின்ற உன்னிடம் மானம் இல்லை; ஏன் எனில் இவ்வளவு பெருமை பெற்றுள்ளதாகக் கூறும் நீ கேவலம் பெண்ணாகிய என்னிடம் மானத்தைவிட்டு யாசகர் போல் கெஞ்சுகிறாய்’ என்று சுலோசனை விடை கூறுகையில் இந்திர சித்தன் அகங்காரத்திற்கு நல்ல அடி தருகின்றார்.

நாடகத்தில் உரையாடல் மூலமாக மட்டுமே பாத்திரங்களின் பண்புகளை விளக்க வேண்டும் என்ற திறனாய்வாளர் இலக்கணத்திற்குச் சுவாமிகள் எத்துணைச் சிறந்த இலக்கியமாகிறார் என்பதற்கு இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமானவை.

அவருடைய சொல்லாட்சித் திறத்திற்குச் சிறந்த உதாரணமாய் விளங்குவது ‘மா பாவியோர் கூடி வாழும் மதுரை’ என்ற வாக்கியமாகும். இவ்வாறு திடுக்கிடும் ஒரு அடியைக் கூறிவிட்டு ‘மா என்றால் அலைமகள், பா என்றால் கலைமகள், வி என்றால் மலைமகள்; எனவே, இம் மூவருங் கூடி வாழும் மதுரை’ எனப் பொருள் விரிப்பவரின் புலமை நயத்தை யாரே மறுக்க முடியும்?

ஆசிரியப்பா நடையையும் அடிகள் அழகுறக் கையாண்டுள்ளார். ஒரு தாயும் மகனும் தம்முள் உரையாடும்பொழுது அது எவ்வளவு சகச பாவத்தில் நடைபெறுகிறது என்பதைக் காட்ட ஆசிரிய நடையை ஓரளவுக்கு விரிந்த மனப்பான்மையில் ஆசிரியர் இதோ கையாள்கிறார். கடோத்கஜனின் தாயும் அபிமன்யுவும் இதோ உரையாடுகின்றனர்:

வனவாசம் போனவர்கள் சேதிகள் அடிக்கடி
வந்து கொண் டிருக்குதா, வரவில்லையா?
.......... ………… ……….
காட்டிலும் கெளரவர் கூட்டிய படையொடு
கலகஞ் செய்தனர் என்று கேள்வியுண்டு
கடவுள் கிருபையினால் இடரொன்றும் நேரவில்லை
கவலை விடுவாயம்மா மகிழ்ச்சி கொண்டு.

கடிய சொற்களை இங்கே பெய்திருக்க மாட்டார் சிறந்த நாடகாசிரியர். அபிமன்யுவாகிய குழந்தையும் அரக்கப் பெண் ஒருத்தியும் உரையாடும் பொழுது இவ்வாறு எளிய சொற்களைப் பெய்து உரையாடல் அமைக்கும் ஒருவர் நாடக நுணுக்கம் அனைத்தும் அறிந்த நாடகாசிரியர் என்று கூறுவதில் தவறொன்றுமில்லை.

திருக்குறளைக் கரைத்துக் குடித்த இப் பெரியார் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் நன்கு தோய்ந்துள்ளார் என்பதை இவர் பாடல்கள் நன்கு வெளிப்படுத்துகின்றன. குறள் மொழிகளை அப்படியே எடுத்தாளுவதிலும் வல்லவர் என்பதைக் கீழ்வரும் பகுதிகள் விளக்கும்:

பற்றற்றான் பற்றினைப் பற்றென்று சொன்னதும்
பாவனை உண்மையின் மார்க்கம்.
சற்றும் சந்தேகமில்லை குறளாகிய
சாத்திரம் ஒன்றுமே போதும்.
சர்வகலா சார ஞானம் தரும் அது
தன்னைப் படிப்பாய் எப்போதும்.

அனைத்துலகிற்கும் ஏற்கக்கூடிய ஓர் ஒப்புயர்வற்ற நீதி நூலை வள்ளுவர் வழங்கினார் என்பதைச் ‘சர்வகலாசார ஞானம் தரும்’ என்ற அடியால் எண்பதாண்டுகட்கு முன்னரே இப் பெரியார் கண்டு கூறியது வியப்பினும் வியப்பே.

தமிழே சிறந்தது என்ற கீர்த்தனையில் அவருடைய இலக்கணப் புலமையை அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது.

திணை பால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப் பகுதி
சேர்ந்த விதங்கள் எல்லாம் தென் மொழிக்கே தகுதி

எனப் பாடிச் செல்கிறார் பெரியார்.

பழங்கால நாடகப் பாடல் என விட்டு விடாமல் ஆழ்ந்து நோக்கினால் அவருடைய புலமை வரம்பை அறிந்து மகிழலாம்.

$$$

Leave a comment