-பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நிகழ்த்தி வரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக நிகழ்ச்சியின் நிறைவு நாளான 6.1.2013 அன்று, கோவை, பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தமது தலைமை உரையில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பே இக்கட்டுரை.

சுவாமி விவேகானந்தர் இரண்டு அம்சங்களை வற்புறுத்திக் கூறினார். ஒன்று சேவை. மற்றொன்று துறவு (Service and Renunciation). துறவு பூணுவதே சேவை செய்யத் தான்.
விவேகானந்தரை சிகாகோ சர்வமத மாநாட்டில் காலையிலிருந்து மாலை வரை பலமுறை பேச அழைத்தார்கள். ஏனோ அவர் பேசச் செல்லவில்லை. பிறகு மேடைக்குச் சென்றார். ஏறி நின்று ஒரு நிமிடம் பரமஹம்சரைத் தியானித்த பிறகு பேசத் தொடங்கினார்.
அவர் பேசிய அந்த ஏழு நிமிடப் பேச்சு எழுப்பிய அலைகள் இன்னும் ஓயவில்லை. அங்கு தான் சொன்னார், “நான் எந்த தேசத்திலிருந்து வந்திருக்கிறேன் தெரியுமா? எனது தேசத்தின் ஹிந்து மதம் மற்ற மதங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று அல்ல, சமமாக மதிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. அந்தத் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். மற்ற மதங்களும் உண்மையானவை தான் என்று சொன்ன மதம் எனது தேசத்தின் ஹிந்து மதம்” என்று அந்த மாநாட்டிலே குறிப்பிட்டார்.
மிக மிக எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய கருத்தைத் தான் அவர் சொன்னார். மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு முன்பு, உனக்கு நீயே போதித்துக் கொள் (Teach Yourself) என்று சொன்ன அவர் கருத்தில், நமக்கு என்ன புரியாமல் போகிறது? எளிய கருத்து. புரிகிறது. ஆனால், அதன்படி நடக்கத் தான் முடியவில்லை.
உனக்கு நீயே போதனை செய்து கொண்டால், உனக்குள்ளே உறங்கிக் கிடக்கும் உன் ஆன்மா வீறு பெற்று எழும். அந்த வீரியம் உனக்குச் சக்தியைத் தரும், புகழைத் தரும். என்னவெல்லாம் உன்னதமானதோ அவையனைத்தையும் அந்த ஆன்மா உனக்கு அள்ளித் தரும். ஆகவே, உனக்கு நீயே போதனை செய்து கொள்.
மதம் என்பது என்ன? வேறொன்றுமில்லை. உன்னை நீயே அறிந்து கொள்வதற்கான உபாயம்தான் மதம். (Religion is Realization).
அதுமட்டுமல்ல. மதம் என்பது, பகுத்தறிவு நடத்தும் பரீட்சையில் அது ஜெயிக்க வேண்டும். சிகாகோ தேவாலயத்தில் இவரைப் பேச அழைத்த போது, முப்பதே வயது நிரம்பிய விவேகானந்தர் என்ன துணிச்சல் இருந்தால் அங்கே போய் அப்படிப் பேசியிருக்க முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
சங்கைக்குரிய புனிதர்களே! ஏசுநாதர் முன்பு எதற்காக நீங்கள் மண்டியிட வேண்டும்? எழுந்து நில்லுங்கள். தூய நெஞ்சத்தோடு, துணிச்சலோடு எழுந்து நில்லுங்கள். அதைத் தான் ஏசுநாதரே ஏற்றுக் கொள்வார். மண்டியிட்டு நீங்கள் மன்றாட வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய உள்ளம் தான் மெய்யுள்ளமாக வேண்டும். ஆகவே எழுந்து நில்லுங்கள்! என்று திருச்சபை மண்டபத்தில் பேசினார். என்ன துணிச்சல் இருந்தால் அப்படிப் பேச முடியும்!
அவருக்கு மனிதனை ஒட்டிய மதம் தான் தேவைப்பட்டது. மனிதனை மையப்படுத்திய மதம் தான் வேண்டியதாக இருந்தது. கடவுளே மனிதனுக்காகத் தான் என்று உரக்கச் சிந்தித்தார். ஏனெனில் மனித விழுமியங்கள் மகத்தானவை, மறக்கத் தகாதவை.
யாருக்குத் தேவை இந்த ராமனும், கிருஷ்ணனும்? சாஸ்திரங்களால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன? பக்திக்கும் முக்திக்கும் தான் என்றால் இந்த உலக வாழ்க்கை எதற்காக?

ஏவுகணைகளைப் போல் இப்படிப்பட்ட கேள்விக்கணைகளைத் தொடுத்தவர் விவேகானந்தர்.
அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வந்தார். எனது மதம், மனிதத்தைச் சமைக்கிற மதம். எனது கனவு, தேசத்தைக் கட்டமைக்கிற கனவு என்று பிரகடனம் செய்தார்.
ஒருமுறை அவரிடத்தில் சுவாமிஜி, நீங்கள் மட்டும் வித்தியாசமாக இருக்கிறீர்கள். காவி உடையோடும் தலைப்பாகையோடும் ஒரு வித்தியாசத்தோடு இருக்கிறீர்கள். இதனால், உங்களைப் பார்ப்பவர்கள் சிரிக்கிறார்கள் என்று கேட்டார்கள்.
அப்படியா? நான் வித்தியாசமாகவா இருக்கிறேன்? உங்களுக்கு அது விளக்கமாகவும் தெரிகிறதா? அதனால் தான் என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நான் உங்கள் எல்லோரையும் பார்த்துச் சிரிக்கிறேன். காரணம், நீங்கள் ஒருவர் கூட வித்தியாசமாக இல்லை. ஒரே மாதிரி இருக்கிறீர்கள். இது எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது என்று ஆச்சர்யப்பட்டுச் சிரிக்கிறேன் என்றார்.
இந்த மானுடம் மகா சமுத்திரம் போன்றது. இதில் அவ்வப்போது உயரமாக எழும் அலைகளைப் போன்றவர்கள் தான் புத்தரும் ஏசுவும் ராமனும் கிருஷ்ணனும். அந்த மகான்களையும் விட மகத்தானது இந்த மகா சமுத்திரம். அது வேறொன்றுமில்லை. இந்த மக்கள் சமுதாயம் தான்.
விவேகானந்தர் திரும்பத் திரும்பக் கூறிய கருத்தை இன்றைய மொழியில் கூறுவதென்றால் அது மனிதவள மேம்பாடு தான்.
- நன்றி: ஓம் சக்தி (பிப்ரவரி 2013)
$$$