சத்திய சோதனை- 5 (41-44)

-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்

41. அறிவூட்டிய சம்பாஷணை

     கதர் இயக்கத்தையும் அப்பொழுது சுதேசி இயக்கம் என்றே சொல்லி வந்தனர். இந்த இயக்கத்தை ஆரம்பம் முதற்கொண்டே ஆலை முதலாளிகள் அதிகமாகக் குறை கூறி வந்தனர். காலஞ்சென்ற உமார் ஸோபானியே திறமை மிக்க ஆலை முதலாளிதான். தமது அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவர் எனக்கு ஆலோசனைகள் கூறி வந்ததோடு, மற்ற ஆலை முதலாளிகளின் அபிப்பிராயங்களையும் அப்போதைக்கப்போது எனக்குத் தெரிவித்தும் வந்தார். அந்த ஆலை முதலாளிகளில் ஒருவர் சொன்ன வாதங்கள் அவர் மனத்தை அதிகம் கவர்ந்தன. அவரை நான் சந்திக்க வேண்டும் என்று உமார் ஸோபானி வற்புறுத்தினார். நானும் சம்மதித்தேன். அதன் பேரில் நாங்கள் சந்தித்துப் பேச அவர் ஏற்பாடு செய்தார். ஆலை முதலாளி, சம்பாஷணையைப் பின்வருமாறு ஆரம்பித்தார்:

“இதற்கு முன்னாலேயே சுதேசிக் கிளர்ச்சி நடந்துகொண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?”

“ஆம். அறிவேன்” என்றேன்.

“வங்காளப் பிரிவினைக் கிளர்ச்சியின்போது ஆலை முதலாளிகளாகிய நாங்கள், சுதேசி இயக்கத்தை எங்கள் சொந்த லாபத்திற்கு முற்றும் பயன்படுத்திக் கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கம் உச்ச நிலையில் இருந்த சமயம், துணியின் விலையை நாங்கள் உயர்த்தினோம். அதையும் விட மோசமான காரியங்களையும் செய்தோம்.”

“ஆம். அதைக் குறித்தும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நான் மனம் வருந்தியதும் உண்டு.”

“உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை நான் அறிய முடியும். ஆனால், அவ்வாறு வருத்தப்படுவதற்கு எந்தவிதமான காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. நாங்கள் பரோபகார நோக்கத்திற்காக எங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கவில்லை. லாபத்திற்காகத் தொழில் நடத்துகிறோம். அதில் பங்கு போட்டிருப்பவர்களையும் நாங்கள் திருப்தி செய்ய வேண்டும். ஒரு பொருளின் விலை ஏறுவது, அப்பொருளுக்கு இருக்கும் கிராக்கியைப் பொறுத்தது. தேவைக்கும் சரக்கு விற்பனைக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றிய விதியை யார் தடுத்துவிட முடியும்? சுதேசித் துணிகளின் தேவையை அதிகரிப்பதனால் அத்துணிகளின் விலை ஏறித்தான் தீரும் என்பதை வங்காளிகள் அறிந்தே இருக்க வேண்டும்.”

நான் குறுக்கிட்டுக் கூறியதாவது: “என்னைப் போன்றே வங்காளிகளும் பிறரை எளிதில் நம்பிவிடும் சுபாவமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆலை முதலாளிகள் இவ்வளவு படுமோசமான சுயநலக்காரர்களாகவும் தேசாபிமானம் இல்லாதவர்களாகவும் இருந்துவிட மாட்டார்கள் என்று பரிபூரணமாக அவர்கள் நம்பி விட்டார்கள். தாய்நாட்டிற்கு நெருக்கடியான நிலைமை நேர்ந்துள்ள சமயத்தில் ஆலை முதலாளிகள், அவர்கள் செய்துவிட்டதைப் போன்று, அந்நிய நாட்டுத் துணியை சுதேசித் துணி என்று மோசடியாக விற்றுவிடும் அளவுக்குப் போய்த் துரோகம் செய்து விடுவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.”

“பிறரை எளிதில் நம்பிவிடும் சுபாவமுள்ளவர்கள் நீங்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் என்னிடம் வரும்படி உங்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்தேன். கபடம் இல்லாதவர்களான வங்காளிகள் செய்துவிட்ட அதே தவறை நீங்களும் செய்துவிட வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கை செய்யவே இங்கே வரும்படி செய்தேன்” என்றார் அவர்.

இவ்வாறு கூறிவிட்டு, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தமது குமாஸ்தாவை அழைத்து, தமது ஆலையில் தயாராகும் துணிகளின் மாதிரிகளைக் கொண்டுவரும்படி கூறினார். அதைச் சுட்டிக்காட்டி அவர் என்னிடம் கூறியதாவது: “இதைப் பாருங்கள்; எங்கள் ஆலையில் இப்பொழுது கடைசியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் துணியின் மாதிரி இது. இதற்குக் கிராக்கி ஏராளமாக இருந்து வருகிறது. வீணாகப் போகும் கழிவிலிருந்து இதைத் தயாரிக்கிறோம். ஆகையால், இயற்கையாகவே இது மலிவானது. வடக்கே ஹிமாலயப் பள்ளத்தாக்குகள் வரையில் இதை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாடெங்கும் எல்லா இடங்களிலுமே – உங்கள் குரலும், ஆட்களும் போகவே முடியாத இடங்களிலும்கூட – எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்குப் புதிதாக, அதிகப்படியான ஏஜெண்டுகள் தேவை இல்லை என்பதை நீங்கள் காணலாம். அதோடு, இந்தியாவில் அதன் தேவைக்குப் போதுமான அளவு துணி உற்பத்தி ஆகவில்லை என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். ஆகவே, சுதேசி இயக்கம், இங்கே துணி உற்பத்தி அதிகமாவதையே பெரிதும் பொறுத்திருக்கிறது. நாங்கள் உற்பத்தி செய்வதைப் போதிய அளவு அதிகரித்து, அவசியமாகும் அளவுக்கு அதன் தரத்தையும் எப்பொழுது அபிவிருத்தி செய்துவிடுகிறோமோ அப்பொழுதே அந்நியத் துணி இறக்குமதி, தானே நின்று போய்விடும். ஆகையால், நான் உங்களுக்குக் கூறும் யோசனை என்னவென்றால், நீங்கள் இப்பொழுது நடத்தி வரும் முறையில் உங்கள் கிளர்ச்சியை நடத்திவர வேண்டாம்; ஆனால், புதிதாக ஆலைகளை அமைப்பதில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்பதே. இப்பொழுது நமக்குத் தேவையெல்லாம் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதே அன்றி எங்கள் சரக்குகளுக்குத் தேவையை அதிகப்படுத்தப் பிரசாரம் செய்வதன்று.”

“அப்படியானால், நீங்கள் குறிப்பிடும் இதே காரியத்திலேயே இப்பொழுதே நான் ஈடுபட்டிருக்கிறேனென்றால், என் முயற்சியை நீங்கள் வாழ்த்துவீர்களல்லவா?” என்று கேட்டேன்.

கொஞ்சம் திகைத்துப்போய், “அது எப்படி முடியும்?” என்றார், அவர். “ஆனால், புதிய ஆலைகளை அமைப்பதைக் குறித்து நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். அப்படியானால், நிச்சயமாக உங்களைப் பாராட்ட வேண்டியதே” என்றார். “நான் இப்பொழுது செய்துகொண்டிருப்பது அதுவல்ல. ஆனால், கைராட்டினத்திற்குப் புத்துயிர் அளிப்பதில் நான் இப்பொழுது ஈடுபட்டிருக்கிறேன்” என்று அவருக்கு விளக்கிச் சொன்னேன்.

இன்னும் குழப்பமடைந்தவராகவே அவர், “அது என்ன விஷயம்?” என்று என்னைக் கேட்டார். கைராட்டினத்தைப் பற்றிய விவரங்களையும், அதைக் கண்டுபிடிப்பதற்காக வெகு காலம் தேடியலைந்ததைப் பற்றியும் அவருக்குச் சொல்லி நான் மேலும் கூறியதாவது: “இவ் விஷயத்தில் என் அபிப்பிராயம் முற்றும் உங்கள் அபிப்பிராயமே ஆகும். ஆலைகளின் ஏஜெண்டாகவே நானும் ஆகிவிடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை. அப்படி ஆகி விடுவதனால் நாட்டிற்கு நன்மையை விடத் தீமையே அதிகமாகும். நம்மில் துணிகளை வாங்குகிறவர்கள் இன்னும் வெகுகாலம் வரையில் குறையவே மாட்டார்கள். ஆகையால், கையினால் நூற்ற துணி உற்பத்திக்கு ஏற்பாடு செய்து, அவ்விதம் தயாரான கதர் விற்பனையாகும்படி பார்ப்பதே என் வேலையாக இருக்க வேண்டும், இருந்தும் வருகிறது. எனவே, கதர் உற்பத்தியிலேயே என் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன். இந்த வகையான சுதேசியத்திலேயே நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஏனெனில், அரைப்பட்டினி கிடந்து, போதிய வேலையும் இல்லாமல் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இதன்மூலம் நான் வேலை கொடுக்க முடியும். இந்தப் பெண்களை நூல் நூற்கும்படி செய்து, அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை இந்திய மக்கள் உடுத்தும்படி செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த இயக்கம் இப்பொழுது ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. ஆகையால், இந்த இயக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியாது. என்றாலும், இதில் பூரணமான நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் அதனால் எந்தவிதமான தீமையும் விளைந்துவிடப் போவதில்லை. அதற்கு மாறாக, நாட்டின் துணி உற்பத்தி நிலையை அது அதிகமாக்கும் அளவுக்கு – அந்த அளவு மிகக் குறைவானதாகவே இருந்தாலும், அந்த அளவுக்கு – அதனால் நிச்சயமான நன்மையே உண்டு. ஆகவே, நீங்கள் குறிப்பிட்ட தீமை எதுவும் இயக்கத்தில் கிடையாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.”

அதன் பேரில் அவர் கூறியதாவது: “உங்கள் இயக்கத்தை நீங்கள் நடத்துவதற்கு நாட்டின் துணி உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கமென்றால், அதற்கு விரோதமாக நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. ஆனால், இயந்திர யுகமான இந்தக் காலத்தில் கைராட்டினம் முன்னேற முடியுமா என்ற விஷயம் வேறு இருக்கிறது. என்றாலும், நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.”

$$$

42. அதன் அலை எழுச்சி

     கதர் இயக்கம் அடைந்த அபிவிருத்தியைக் குறித்து விவரிப்பதற்கு மேலும் சில அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. நான் பற்பல காரியங்களில் ஈடுபட்டு இருந்திருக்கிறேன். அவை பொதுஜனங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிறகு அவற்றின் சரித்திரத்தைக் குறித்து இந்த அத்தியாயங்களில் நான் கூறிக் கொண்டிருப்பது இவற்றின் நோக்கத்திற்கே புறம்பானதாகும். நான் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் எழுதிக் கொண்டிருந்தால், அதற்கே தனி நூல் எழுத வேண்டியிருக்கும். அதை முன்னிட்டே அம்முயற்சியை நான் செய்யக் கூடாது. என்னுடைய சத்திய சோதனையின் ஊடே சில விஷயங்கள், தாமே வந்தவைகளைப் போன்றே எனக்கு எப்படி வந்து சேர்ந்தன என்பதை விவரிப்பதுதான் இந்த அத்தியாயங்களை நான் எழுதுவதன் நோக்கம்.

ஆகவே, ஒத்துழையாமை இயக்கக் கதைக்கே திரும்புவோம். அலி சகோதரர்கள் ஆரம்பித்த பலம் பொருந்திய கிலாபத் கிளர்ச்சி தீவிரமாக நடந்துவந்த சமயத்தில், அகிம்சை விதியை ஒரு முஸ்லிம் எந்த அளவுக்கு அனுசரித்து நடக்க முடியும் என்ற விஷயத்தைக் குறித்து மௌலானா அப்துல் பாரி முதலிய உலாமாக்களுடன் நான் விரிவாக விவாதித்தேன். இஸ்லாம், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் அகிம்சையை கொள்கையாக அனுசரிப்பதைத் தடுக்கவில்லை என்றும், அக்கொள்கையை அனுசரிப்பதென்று அவர்கள் விரதம் கொண்டிருக்கும் போது அந்த விரதத்தை அவர்கள் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்றும் முடிவாக எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். கடைசியாகக் கிலாபத் மகாநாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேறியது. ஒரு சமயம் அலகாபாத் கூட்டத்தில் இந்த விஷயத்தின்மீது இரவெல்லாம் விவாதம் நடந்தது, எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. ‘அகிம்சையோடு கூடிய ஒத்துழையாமை, காரிய சாத்தியமாகுமா?’ என்பதில் காலஞ்சென்ற ஹக்கீம் சாகிபுக்கு ஆரம்பத்தில் சந்தேகமே இருந்தது. ஆனால், அவருடைய சந்தேகம் நீங்கிய பின்னர் அந்த இயக்கத்தில் அவர் முழு மனத்துடன் ஈடுபட்டார். அவர் உதவி, இயக்கத்திற்கு மதிப்பிடற்கரிய பலனை அளித்தது.

அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு குஜராத் ராஜீய மகாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அதை எதிர்த்தவர்கள், பூர்வாங்கமாக ஓர் ஆட்சேபத்தைக் கூறினார்கள். இதைப் பற்றி காங்கிரஸ் ஒரு முடிவு செய்வதற்கு முன்னால், இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு மாகாண மகாநாட்டுக்குத் தகுதி கிடையாது என்பது அவர்களுடைய வாதம். இந்த வாதத்தை எதிர்த்த நான், பின்னோக்கிப் போகும் இயக்கம் சம்பந்தமாகத்தான் இந்தத் தடை பொருந்தும் என்றும், முன்னோக்கிப் போகும் விஷயத்தில் அதற்குப் போதிய நம்பிக்கையும் உறுதியும் நம்மிடம் இருக்குமானால், இத்தகைய தீர்மானம் செய்வதற்கு கீழ்ப்பட்ட ஸ்தாபனங்களுக்குப் பூரணமான தகுதி இருப்பதோடு அப்படிச் செய்வது அவைகளின் கடமை என்றும் கூறினேன். தாய் ஸ்தாபனத்தின் கௌரவத்தை அதிகரிப்பதற்குச் செய்யும் முயற்சியை, ஒருவர் அம்முயற்சியை தமது சொந்தப் பொறுப்பிலேயே செய்வாராயின், அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என்றும் வாதித்தேன். பின்னர் அந்த யோசனையின் தன்மைமீது விவாதம் நடந்தது. விவாதத்தில் சிரத்தை முக்கியமாக இருந்ததெனினும், ‘இனிய நியாயத்திற்கு’ ஏற்ற சூழ்நிலையிலேயே விவாதம் இருந்தது. முடிவில் தீர்மானத்தின் மீது வாக்கெடுத்தபோது அது மிக அதிக ஆதரவுடன் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதற்கு ஸ்ரீ வல்லபபாய், ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி ஆகிய இருவரின் செல்வாக்கே முக்கியமான காரணமாகும். ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜியே அம் மகாநாட்டின் தலைவர். அவருடைய ஆதரவு முழுவதும் ஒத்துழையாமைத் தீர்மானத்திற்குச் சாதகமாகவே இருந்தது.

இந்த விஷயத்தைக் குறித்து விவாதிப்பதற்காக கல்கத்தாவில் 1920 செப்டம்பரில் காங்கிரஸ் விசேஷ மகாநாட்டைக் கூட்டுவது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது. அம் மகாநாட்டிற்காகப் பெருமளவில் முன்னேற்பாடுகளெல்லாம் நடந்தன. லாலா லஜபதிராயை அம்மகா நாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். பம்பாயிலிருந்து காங்கிரஸ், கிலாபத் ஸ்பெஷல் ரெயில்கள் சென்றன. கல்கத்தாவில் பிரதிநிதிகளும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஏராளமாகக் கூடியிருந்தார்கள்.

மௌலானா ஷவுகத் அலி கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்துழையாமைத் தீர்மானத்தின் நகலை நான் ரயிலிலேயே தயாரித்தேன். அச்சமயம் வரையில் நான் தயாரித்த நகல்களில் ‘பலாத்காரமற்ற’ என்ற சொல்லை அநேகமாக நான் தவிர்த்து வந்தேன். ஆனால், என்னுடைய பிரசங்கங்களில் மாத்திரம் அதை அடிக்கடி உபயோகித்து வந்தேன். இவ்விஷயத்தைக் குறித்து உபயோகிக்க வேண்டிய சொற்களை நான் அப்பொழுதுதான் சேகரித்துக் கொண்டு வந்தேன். முற்றும் முஸ்லிம்களையே கொண்ட கூட்டத்திற்குப் ‘பலாத்காரமற்ற’ என்பதற்குச் சரியான சமஸ்கிருதச் சொல்லை உபயோகிப்பதினால், நான் கூறுவதன் பொருளை அவர்கள் சரியானபடி அறிந்து கொள்ளும்படி செய்ய முடியாது என்பதைக் கண்டேன். ஆகையால், அதற்குப் பொருத்தமான வேறு ஒரு சொல்லை எனக்குக் கூறும்படி மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தைக் கேட்டேன். ‘பா அமன்’ என்ற சொல்லை அவர் கூறினார். அதேபோல, ஒத்துழையாமைக்கு ‘தர்க்-ஈ-மவாலாத்’ என்ற சொற்றொடரை உபயோகிக்கலாம் என்று அவர் யோசனை கூறினார்.

இவ்வாறு ஒத்துழையாமை என்பதற்குச் சரியான ஹிந்தி, குஜராத்தி, உருதுச் சொற்றொடர்களைக் கண்டுபிடிப்பதிலேயே நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில், அந்த முக்கியமான காங்கிரஸ் மகாநாட்டிற்கு நான் ஒத்துழையாமைத் தீர்மானத்தைத் தயாரிக்க வேண்டி வந்தது. அசல் நகலில் ‘பலாத்காரமற்ற’ என்ற சொல்லை நான் விட்டுவிட்டேன். இவ்வாறு விட்டுப் போய் விட்டதைக் கவனிக்காமல், அதே வண்டியில் என்னுடன் பிராயணம் செய்த மௌலானா ஷவுகத் அலியிடம் அந்த நகலைக் கொடுத்தேன். அன்றிரவு தவறைக் கண்டுகொண்டேன். அச்சகத்திற்கு நகலை அனுப்புவதற்கு முன்னால், விட்டுப் போனதைச் சேர்த்துவிட வேண்டும் என்ற செய்தியுடன் காலையில் மகாதேவை அனுப்பினேன். ஆனால், விட்டுப் போனதைச் சேர்த்துவிடுவதற்கு முன்னாலேயே நகல் அச்சாகிவிட்டது என்று எனக்கு ஞாபகம். விஷயாலோசனைக் கமிட்டி, அன்று மாலையே கூட வேண்டும். ஆகையால், அச்சான நகல் பிரதிகளில் அவசியமான திருத்தங்களை நான் செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய நகலுடன் நான் தயாராக இல்லாதிருந்திருந்தால், அதிகக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதைப் பின்னால் கண்டுகொண்டேன்.

என்றாலும், என் நிலைமை உண்மையில் பரிதபிக்கத்தக்கதாகவே இருந்தது. இத்தீர்மானத்தை யார் ஆதரிப்பார்கள், யார் எதிர்ப்பார்கள் என்பதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. லாலா லஜபதிராய் எந்தவிதமான போக்குக் கொள்ளுவார் என்பதும் எனக்குத் தெரியாது. பிரசித்தி பெற்ற போராட்ட வீரர்கள், போருக்கு ஆயத்தமாகப் பெருங்கூட்டமாக வந்து, கல்கத்தாவில் கூடியிருப்பது ஒன்றையே நான் கண்டேன். டாக்டர் பெஸன்ட், பண்டித மாளவியாஜி, ஸ்ரீ விஜயராகவாச்சாரியார், பண்டித மோதிலால்ஜி, தேசபந்து ஆகியோர் அவர்களில் சிலர்.

பாஞ்சால, கிலாபத் அநியாயங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் நோக்கத்துடன் ஒத்துழையாமையை அனுசரிப்பது என்று மாத்திரமே என் தீர்மானத்தில் கண்டிருந்தது. ஆனால், அது ஸ்ரீ விஜயராகவாச்சாரியாருக்குத் திருப்தியளிக்கவில்லை. “ஒத்துழையாமைப் பிரகடனம் செய்வதென்றால், குறிப்பிட்ட அநீதிகளைப் பொறுத்ததாக மாத்திரம் அது ஏன் இருக்க வேண்டும்? நாடு அனுபவித்துக் கொண்டுவரும் பெரிய அநீதி, அதற்குச் சுயராஜ்யம் இல்லாதிருப்பதேயாகும். ஆகையால், ஒத்துழையாமைப் போராட்டம் அந்த அநீதியை எதிர்த்து நடத்துவதாகவே இருக்க வேண்டும்” என்று அவர் விவாதித்தார். தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையையும் சேர்த்துவிட வேண்டும் என்று பண்டித மாளவியாஜியும் விரும்பினார். அதற்கு நான் உடனே சம்மதித்து, சுயராஜ்யக் கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்ந்தேன். தீர்மானம், நீண்ட, விரிவான, ஓரளவுக்குக் கடுமையான விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது.

இந்த இயக்கத்தில் முதலில் சேர்ந்தவர் மோதிலால்ஜி. தீர்மானத்தின் பேரில் அவருடன் நான் நடத்திய இனிமையான விவாதம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சொல்லமைப்பில் சில மாற்றங்களை அதில் செய்ய வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அவ்வாறே நான் செய்தேன். தேசபந்துவையும் இந்த இயக்கத்தில் தாம் சேர்த்து விடுவதாகச் சொன்னார். தேசபந்துவின் உள்ளம் தீர்மானத்திற்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், வேலைத் திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் பொதுமக்களுக்கு இருக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்தது. நாகபுரி காங்கிரஸில்தான் அவரும் லாலாஜியும் அதை முழு மனத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.

லோகமான்யர் இல்லாததன் நஷ்டத்தைக் குறித்து விசேஷ மகாநாட்டில் நான் மிகுந்த மன வருத்தத்துடன் உணர்ந்தேன். லோகமான்யர் அன்று உயிரோடிருந்திருப்பாராயின், அச்சமயம் அவர் நிச்சயம் எனக்கு ஆசி கூறியிருப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிறது. அது வேறுவிதமாக இருந்து, ஒத்துழையாமை இயக்கத்தை அவர் எதிர்த்திருந்தாலும், அவருடைய எதிர்ப்பை எனக்கு ஒரு பாக்கியமாகவும், போதனையாகவுமே நான் மதித்திருப்பேன். எங்களிடையே எப்பொழுதும் அபிப்பிராய பேதம் இருந்திருக்கிறது. ஆனால், அது மனக்கசப்பை உண்டாக்கியதே இல்லை. எங்களுக்குள் இருந்த பந்தம் மிகவும் நெருக்கமானது என்று நம்பிக் கொள்ளுவதற்கு அவர் எப்பொழுதும் என்னை அனுமதித்து வந்தார். இதை நான் எழுதும்போது கூட, அவர் மரணத்தைப் பற்றிய சந்தர்ப்பங்கள் என் கண் முன்பு மிகத் தெளிவாக நிற்கின்றன. அப்பொழுது நடுநிசி நேரம். என்னுடன் அப்பொழுது வேலை செய்து வந்த பட்டவர்த்தன், அவர் மரணமடைந்தார் என்ற செய்தியை டெலிபோன் மூலம் எனக்கு அறிவித்தார். அச்சமயம் என்னுடைய சகாக்கள் என்னைச் சூழ்ந்து இருந்தனர். அச்செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே, “என் மிகப் பெரிய துணைவர் போய் விட்டார்” என்பதை என் உதடுகள் தாமே ஒலித்தன. அப்பொழுது ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்துடன் நடந்து கொண்டிருந்தது. அவரிடமிருந்த ஆதரவையும் உற்சாகமூட்டும் சொல்லையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒத்துழையாமையின் முடிவான கட்டத்தைக் குறித்த அவருடைய போக்கு எவ்விதம் இருக்கும் என்பது. எப்பொழுதும் வெறும் ஊகமாகவும், அதைப்பற்றிச் சிந்திப்பது வீண் வேலையாகவுமே இருக்க முடியும். ஆனால், அவருடைய மரணத்தால் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத நஷ்டத்தை கல்கத்தாவில் கூடியிருந்த ஒவ்வொருவரும் அதிகமாக உணர்ந்து வருந்தினார்கள் என்பது மாத்திரம் நிச்சயம். நாட்டின் சரித்திரத்தில் ஏற்பட்டிருந்த அந்த நெருக்கடியான சமயத்தில் அவருடைய ஆலோசனைகள் கிடைக்காது போனதைக் குறித்து ஒவ்வொருவரும் வருந்தினார்கள்.

$$$

43. நாகபுரியில்

     காங்கிரஸின் கல்கத்தா விசேஷ மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள், நாகபுரி வருட மகாநாட்டில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். கல்கத்தாவைப் போலவே இங்கும் பிரதிநிதிகளும் வேடிக்கை பார்ப்போரும் ஏராளமாக வந்திருந்தார்கள். அப்பொழுதும் காங்கிரஸுக்கு வரும் பிரதிநிதிகளின் தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், அம்மகாநாட்டில் பிரதிநிதிகளின் தொகை பதினான்கு ஆயிரத்திற்கு வந்துவிட்டது என்பதே என் ஞாபகம். பள்ளிக்கூடப் பகிஷ்காரத்தைப் பற்றிய பகுதியில் சிறு திருத்தம் செய்ய வேண்டும் என்று லாலாஜி வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். அதைபோல் தேசபந்துவின் யோசனையின் பேரில் மற்றும் சில திருத்தங்களும் செய்யப்பட்டன. பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

காங்கிரஸ் அமைப்பு விதிகளின் மாற்றத்தைப் பற்றிய தீர்மானமும், காங்கிரஸின் இந்த மகாநாட்டிலேயே விவாதத்திற்கு வர இருந்தது. உபகமிட்டி தயாரித்திருந்த நகல், கல்கத்தா விசேஷ மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையால், விஷயம் முழுதும் அறிவிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டிருந்தது. முடிவாகத் தீர்மானிப்பதற்காக அது நாகபுரி மகாநாட்டின் முன்பு வந்தது. அம்மகாநாட்டிற்கு ஸ்ரீ ஸி.விஜயராகவாச்சாரியார் தலைவர். ஒரே ஒரு முக்கியமான மாற்றத்துடன் விஷய ஆலோசனைக் கமிட்டி, நகலை நிறைவேற்றியது. பிரதிநிதிகளின் தொகை 1,500 ஆக இருப்பது என்று நகலில் இருந்தது என்று நினைக்கிறேன். அந்தத் தொகைக்குப் பதிலாக அந்த இடத்தில் 6,000 என்பதை விஷயாலோசனைக் கமிட்டி சேர்த்தது. இவ்விதம் இத்தொகையை அதிகரித்தது. அவசரப்பட்டு முடிவுக்கு வந்ததன் பலன் என்பது என் முடிவு. இத்தனை வருடங்களின் அனுபவமும் என்னுடைய அக்கருத்தையே ஊர்ஜிதம் செய்கிறது. காரியங்களைச் சரியாக நடத்துவதற்கு பிரதிநிதிகளின் தொகை அதிகமாக இருப்பது எந்த வகையிலும் உதவியாக இருக்கும் என்றோ, ஜனநாயகக் கொள்கையை அது பாதிக்கிறது என்றோ நம்புவது வெறும் மயக்கம் என்பதே என் கருத்து. எப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடும் ஆறாயிரம் பொறுப்பற்ற ஆசாமிகளை விட, மக்களின் நன்மையில் தீவிர ஆர்வம் கொண்ட, விசாலமான மனப்போக்குள்ள, உண்மையானவர்களான ஆயிரத்து ஐந்நூறு பிரதிநிதிகளே ஜனநாயகத்திற்கு என்றும் சிறந்த பாதுகாப்பாவார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் தீவிரமான சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பவர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்த வேண்டும். பிரதிநிதிகளின் தொகை விஷயத்தில் விஷயாலோசனைக் கமிட்டி ஏதோ மனக்கிலேசம் அடைந்திருந்ததால், ஆறாயிரம் என்ற எண்ணுக்கு மேலேயும் போக அது விரும்பியிருக்கக் கூடும். ஆகையால், ஆறாயிரம் என்ற எல்லை சமரசத்தின் பேரில் திட்டம் செய்யப்பட்டது.

காங்கிரஸின் லட்சியத்தைப் பற்றிய விஷயத்தில் பலமான விவாதம் நடந்தது. நான் சமர்ப்பித்திருந்த அமைப்பு விதிகளில் சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது என்பது காங்கிரஸின் லட்சியம் என்று இருந்தது. காங்கிரஸிலிருந்த ஒரு கோஷ்டியினர், ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் சுதந்திரம் அடைவது என்பது மாத்திரம்’ என்று காங்கிரஸின் லட்சியத்தைக் கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று விரும்பினார்கள். இக்கட்சியினரின் கருத்தை பண்டித மாளவியாஜியும், ஸ்ரீ ஜின்னாவும் எடுத்துக் கூறினர். ஆனால், தங்களுக்கு ஆதரவாக அதிக வாக்குகளைப் பெற அவர்களால் முடியவில்லை. அதோடு, ‘சுதந்திரத்தை அடைய அனுசரிக்கும் முறை, சமாதானத்தோடு கூடியதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்’ என்றும், அமைப்பு விதிகளின் நகல் கூறியது. இந்த நிபந்தனைக்கும் எதிர்ப்பு இருந்தது. அனுசரிக்கும் முறையைப் பற்றி எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது என்று எதிர்த்தவர்கள் கூறினார்கள். இதைக் குறித்துத் தெளிவாக மனம் விட்டு விவாதித்த பிறகு, அசல் நகலில் கூறியிருப்பதை காங்கிரஸ் அங்கீகரித்தது. இந்த அமைப்பு விதிகளை மக்கள் யோக்கியமாகவும், புத்திசாலித்தனத்தோடும், உணர்ச்சியோடும் நிறைவேற்றியிருந்தால், பொதுமக்கள் அறிவைப் பெறுவதற்கு அதுவே சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். அதோடு, அதை நிறைவேற்றி வைப்பதற்குச் செய்யும் காரியங்களே நமக்குச் சுயராஜ்யத்தையும் கொண்டு வந்திருக்கும். ஆனால் இந்தக் கருத்தைக் குறித்து இங்கே விவாதிப்பது பொருத்தமற்றதாகும்.

இந்த காங்கிரஸ் மகாநாட்டில் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதர் ஆகியவைகளைப் பற்றிய தீர்மானங்களும் நிறைவேறின. அது முதற்கொண்டு காங்கிரஸின் ஹிந்து உறுப்பினர்கள், ஹிந்து மதத்திலிருந்த தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழித்துக் கட்டும் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றனர். கதரின் மூலம், இந்தியாவிலிருக்கும் எலும்புக் கூடுகளான ஏழை மக்களுடன் உயிரான உறவுப் பந்தத்தையும் காங்கிரஸ் கொண்டுவிட்டது. கிலாபத்திற்காக ஒத்துழையாமைப் போராட்டத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகக் காங்கிரஸ் அதனளவில் செய்த பெரிய பிரத்தியட்ச முயற்சியாகும்.

$$$

44. விடைபெற்றுக் கொள்ளுகிறேன்

     இந்த அத்தியாயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டிய சமயம் இப்பொழுது வந்திருக்கிறது. இந்தக் கட்டத்திற்கு மேல் என்னுடைய வாழ்க்கை மிகவும் பகிரங்கமாக ஆகிவிட்டது. அதில் பொதுமக்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. மேலும் 1921-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவர்களுடன் அதிகமாக நெருங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறேன். ஆகையால், அவர்களுடன் எனக்குள்ள உறவைப் பற்றிக் குறிப்பிடாமல் என் வாழ்க்கைச் சம்பவங்களில் எதையுமே அக்காலத்திற்குப் பிறகு நான் விவரிக்கவே முடியாது. சிரத்தானந்தஜி, தேசபந்து, ஹக்கீம் சாகிப், லாலாஜி ஆகியவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். என்றாலும், பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் இன்னும் வாழ்ந்து நம்முடன் இருந்து வேலை செய்துவரும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். நான் மேலே விவரித்துள்ளபடி, காங்கிரஸில் பெறும் மாறுதல்கள் ஏற்பட்ட பின்னரும் காங்கிரஸின் சரித்திரம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.

மேலும், சென்ற ஏழு ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கும் முக்கியமான சோதனைகளை யெல்லாம் காங்கிரஸின் மூலமாகவே செய்து வந்திருக்கிறேன். ஆகையால், மேற்கொண்டும் நான் செய்த சோதனைகளைப் பற்றி நான் கூறிக்கொண்டு போவதாயின், தலைவர்களுடன் எனக்குள்ள தொடர்பைப் பற்றிச் சொல்லுவதைத் தவிர்க்கவே முடியாது. நியாய உணர்ச்சியை முன்னிட்டேனும் இப்போதைக்காவது அதை நான் செய்ய முடியாது. கடைசியாக, இப்பொழுது நான் செய்து வரும் சோதனைகளைப் பற்றிய முடிவுகள், திட்டமானவை என்று இன்னும் சொல்லி விடுவதற்கில்லை. ஆகையால், இந்த வரலாற்றை இந்த இடத்தோடு முடித்துவிடுவதே என்னுடைய தெளிவான கடமை என்பதைக் காண்கிறேன். உண்மையில் என் பேனாவும், இயற்கையாகவே அதற்குமேல் இதை எழுதிக்கொண்டு போகவும் மறுக்கிறது.

வாசகரிடமிருந்து இப்பொழுது நான் விடைபெற்றுக் கொள்ளுவதில் எனக்கு மன வருத்தம் இல்லாமலில்லை. என்னுடைய சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான் கருதுகிறேன். அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படி நான் செய்திருக்கிறேனோ என்பதை நான் அறியேன். உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரமே நான் கூற முடியும். எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டுகொண்டேனோ அதே விதமாக அதை விவரிப்பதே என் இடையறாத முயற்சியாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் பயிற்சி, அழித்துவிட முடியாத மனச்சாந்தியை எனக்கு அளித்திருக்கிறது. ஏனெனில், சந்தேகம் உள்ளவர்களுக்கும் சத்தியத்திலும் அகிம்சையிலும் அது நம்பிக்கையை உண்டாக்கும் என்று நான் ஆசையோடு நம்பி வந்திருக்கிறேன்.

சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை, ஒரே மாதிரியான என்னுடைய அனுபவங்களில் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன. சத்தியத்தைத் தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அகிம்சைதான் என்பதை இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு அறிவுறுத்தவில்லை யாயின், இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக்கொண்ட சிரமமெல்லாம் வீணாயின என்றே கொள்ளுவேன். இந்த வகையில் என் முயற்சிகளெல்லாம் பலனற்றவையே என்று நிரூபிக்கப்பட்டு விட்டாலும், அதன் குற்றம் என்னுடையதேயன்றி அம்மகத்தான கொள்கையினுடையதல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். அகிம்சையை நாடுவதில் எவ்வளவுதான் உள்ளன்போடு நான் முயற்சிகள் செய்து வந்திருந்தாலும், அவை இன்னும் குறைபாடுடையவைகளாகவும், போதுமானவை அல்லாதனவாகவுமே இருந்து வருகின்றன. ஆகையால், சத்தியத் தோற்றத்தை அவ்வப்போது ஒரு கண நேரம் கண்டுகொண்டது, சத்தியத்தின் விவரிக்கவொண்ணாத பெருஞ்ஜோதியை நான் தெரிந்துகொண்டு விட்டதாகவே ஆகாது. நான் தினந்தோறும் கண்ணால் பார்க்கும் சூரியனைவிட கோடி மடங்கு அதிகப் பிரகாசம் உடையது சத்தியத்தின் ஜோதி. உண்மையில் நான் கண்டிருப்பதெல்லாம், அந்த மகத்தான பரஞ்ஜோதியின் மிகச் சிறிய மங்கலான ஒளியையே ஆகும். ஆனால், என்னுடைய எல்லாச் சோதனைகளின் பலனாகவும் ஒன்றை மாத்திரம் நான் நிச்சயமாகக் கூற முடியும். அகிம்சையைப் பூரணமாக அடைந்தால் மாத்திரமே சத்தியத்தின் பூரணமான சொரூபத்தையும் தரிசிக்க முடியும்.

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின், மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகி நின்றுவிட முடியாது. அதனாலேயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்து விட்டிருக்கிறது. சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த விதமான சம்பந்தமுமே இல்லை என்று கூறுவோர், சமயம் என்பது இன்னதென்பதையே அறியாதவர்களாவர். இதைக் கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.

தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விடாமல், எல்லா உயிர்களிடத்திலும் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ளுவது என்பது முடியாத காரியம். தம்மைத் தாம் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் அகிம்சை தருமத்தை அனுசரிப்போமென்பது வெறும் கனவாகவே முடியும். மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அறிதல் இயலாது. ஆகையால், தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவது என்பது, வெகு விரைவில் மற்றவர்களுக்கும் தொத்திக் கொள்ளும் தன்மை உடையதாகையால், ஒருவர் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவதனால், அவசியமாக தம்முடைய சுற்றுச் சார்பையும் தூய்மைப்படுத்தி விடுவதாகிறது.

ஆனால், ஆன்மத் தூய்மைக்கான மார்க்கம் மிகவும் கஷ்டமானதாகும். பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு, அவர் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருக்க வேண்டும். அன்பு – துவேஷம், விருப்பு – வெறுப்பு என்னும் எதிர்ப்புச் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும். அம்மூவகைத் தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாது நான் முயற்சி செய்து கொண்டு வருகிறேனாயினும், அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன். இதனாலேயேதான் இவ்வுலகத்தின் புகழுரைகளெல்லாம் எனக்கு இன்பம் தருவதில்லை; உண்மையில் அவைகளினால் எனக்கு அடிக்கடி மனக் கஷ்டமே உண்டாகிறது. ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டு விடுவதைவிட, உள்ளுக்குள் இருக்கும் காமக் குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது.

நான் இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து, என் உள்ளத்தினுள்ளே மறைந்துகொண்டு தூங்கிக் கிடக்கும் ஆசாபாசங்களை நான் அனுபவித்து வருகிறேன். அவை இன்னும் என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பற்றிய எண்ணம், நான் தோல்வியுறும்படி செய்து விடவில்லையாயினும், அவமானப்படும்படி செய்கிறது. அனுபங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டுவிட வேண்டும்.

தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும். தற்போதைக்கேயாயினும் வாசகரிடம் நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். மனம், வாக்கு, காரியங்களில் அகிம்சை விரதத்தை எனக்கு அருளுமாறு சத்தியமேயான கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தப் பிரார்த்தனையில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு வாசகரைக் கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

முற்றிற்று

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s