-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
10. தேக அசெளக்கிய நிலை -அ
நான் திருவாவடுதுறைக்கு வந்தது
அக்காலத்தில் நான் என்னுடைய வேலைகளையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்து இவரைப் பார்த்தேன். பார்த்ததுமுதல் இவரது குறிப்பறிந்து முன்பு நான் செய்து வந்த காரியங்களைச் செய்து வரத் தொடங்கினேன்.
கம்பராமாயணம் பாடஞ்சொல்லியது
பின்பு எங்களுடைய வேண்டுகோளின்படியே இவர் கம்பராமாயணத்தை ஆரம்பத்திலிருந்து பாடம் சொல்லத் தொடங்கினார். தேக அசெளக்கியத்தால் வழக்கமாக நடக்கிறபடி அதிகச் செய்யுட்கள் நடைபெறவில்லை. நூறு அல்லது நூற்றைம்பது செய்யுட்களே நடைபெற்றன. முக்கியமான இடங்களுக்கு மட்டும் பொருள் தெரிந்துகொண்டு வந்தோம். அதைப் படித்துக்கொண்டே வருகையில் இவர், “இவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! இவையெல்லாம் யோசித்துப் பாடிய பாட்டுக்களா?” என்று மனமுருகிக் கூறிச் சில சமயங்களிற் கண்ணீர் விடுவதுமுண்டு.
சூரியனார் கோயில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்
பிள்ளையவர்களுக்கு இளமையில் கம்பரந்தாதியைப் பாடஞ் சொன்னவரும் திருவாவடுதுறை யாதீனத்தில் நெடுங்காலம் இருந்தவருமாகிய *1 அம்பலவாண முனிவர் பின்பு சூரியனார் கோயிலாதீனகர்த்தராக நியமிக்கப்பெற்று அம்பலவாண தேசிகரென்ற பெயருடன் விளங்கி வந்தார். முதுமைப்பருவமுடைய அவர் ஒருநாள் பரிவாரங்களுடன் திருவாவடுதுறை மடத்துக்கு விஜயம் செய்திருந்தார். பிள்ளையவர்கள் அவரைப் பற்றியும் அவர்பால் தாம் பாடங்கேட்டதைப் பற்றியும் எங்களிடம் முன்னரே சொல்லியிருப்பதுண்டு. ஆதலின் அந்தப் பெரியவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு மிகுதியாக இருந்தது.
மடத்தின் ஓரிடத்தில் நானும் உடன்படிப்பவர்கள் சிலரும் பழைய பாடங்களை வாசித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். கம்பராமாயண அச்சுப்பிரதிகள் எங்கள் கையில் இருந்தன. அப்பொழுது அவ்வழியே முற்கூறிய அம்பலவாண தேசிகர் வந்தார். நாங்கள் அவரை இன்னாரென்று அறிந்து எழுந்து நின்றோம். அவர் நாங்கள் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, “என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? கையில் இருப்பது என்ன புத்தகம்?” என்று கேட்டார். “கம்பராமாயணம்” என்று விடை கூறினோம். உடனே அவர் வியப்பையடைந்து, “ஓகோ! இதைக்கூடப் ‘புக்குப்’ போட்டுவிட்டானா?” என்று கூறினார். அந்த நூல் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதற்காக ஆச்சரியப்பட்டனரென்று நாங்கள் அறிந்தோம். உலக இயல்பு அதிகம் அவருக்குத் தெரியாதென்பதையும், சிவபூஜை செய்தல் புஸ்தகங்களைப் படித்தல் முதலியவற்றில் நல்ல பழக்கமுள்ளவ ரென்பதையும் பிள்ளையவர்கள் மூலமாக நாங்கள் அறிந்திருந்தோமாதலின் அப்பொழுது அவர் கூறிய வார்த்தைகள் எங்களுக்குச் சிரிப்பை உண்டாக்கிவிட்டன. அவர் போகும் வரையில் சிரிப்பை அடக்கிக்கொண்டே இருந்து போன பின்பு சிரித்தோம். எல்லாப் புத்தகங்களையும் வெள்ளைக்காரர்களே அச்சிற் பதிப்பிப்பவர்க ளென்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது.
அம்பலவாண தேசிகர் தொடுத்த வழக்கு
இந்த அம்பலவாண தேசிகர் தம்முடைய மடத்தைச் சார்ந்த மிராசுதார் ஒருவர் ஏதோ நிலத்தின் விஷயத்திற் சரியாக நடக்கவில்லையென்று எண்ணி அவர்மேல் நீதிஸ்தலத்தில் ஒரு வழக்குத் தொடுத்தனர். மிராசுதார்பால் பொறாமை கொண்ட சிலர் இந்த அம்பலவாண தேசிகரிடம் வந்து மிராசுதாரைப் பற்றிப் பலவகையாகக் குறைகூறி வழக்கை ஊக்கத்துடன் நடத்தும்படி தூண்டிவிட்டார்கள். அவர் வழக்கின்முறை, நியாயம் முதலிய விஷயங்களிற் சிறிதும் பயிற்சி இல்லாதவர்; பிறர் செய்யும் மரியாதையையும் உபசாரங்களையுமே அதிகமாக எதிர்பார்ப்பவர்; ஆதலால் அந்த மிராசுதார் தம்மிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளாமையால் பெருங்குற்றம் செய்துவிட்டாரென்றும் அதற்குரிய தண்டனையை நியாயஸ்தலத்தின் மூலம் விதிக்கச் செய்வதே முறையென்றும் எண்ணிப் பிடிவாதமாக வழக்காடினார்.
தூண்டுபவர்களுடைய வார்த்தை அவருக்கு மேன்மேலும் ஊக்கத்தை உண்டாக்கியது. வழக்கின் இயல்பு தெரிந்தவர்களும் தக்கவர்களுமாகிய சிலர் அவர்பாற் சென்று அவ்வழக்குப் பயன்படாதென்று சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. மிராசுதார் இறுதியில் தமக்கே வெற்றியுண்டாகு மென்பதை நன்றாக அறிந்திருந்தாலும் இடையில் வீண் செலவாதலையும் அதனால் தமக்கு மிக்க துன்பமுண்டாகுமென்பதையும் எண்ணிச் சமாதானமாதற்காகப் பலவகையான முயற்சிகளைச் செய்தார். ஒன்றும் பலிக்கவில்லை.
பின்பு அவர் பிள்ளையவர்களைக்கொண்டு சொல்லச் செய்தால் ஒருகால் தேசிகர் உண்மையை உணர்வாரென எண்ணிச் சில கனவான்களைக்கொண்டு இக்கவிஞர்பிரானுக்குச் சொல்லும்படி செய்தார். அவர்கள் இவரிடம் வந்து விஷயங்களை விளக்கிச் சொன்னார்கள். உடனே இவர் சூரியனார் கோயில் சென்று அம்பலவாண தேசிகருக்குப் பலவாறு நியாயங்களை எடுத்துக் கூறி வழக்கை நடத்தாமல் நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். தேசிகருடைய பிடிவாதம் குறையவில்லை. துர்மந்திரிகளுடைய போதனை அவர் மனத்தில் அதிகமாக உறைத்திருந்தது. இந்தக் கவிநாயகர் பின்பு திருவாவடுதுறைக்கு வந்து விட்டார் .
பின்னரும் வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. வேறு சிலர் பிள்ளையவர்கள்பால் வந்து முறையிட்டனர். அப்பொழுது இக் குணமணி அம்பலவாண தேசிகருக்கு,
(விருத்தம்) “வாய்ந்ததிரு வடிக்கன்பன் மீனாட்சி சுந்தரநா வலவன் மாற்றம் ஆய்ந்த *2 கதி ரவன்றளியம் பலவாண தேசிகன்பே ரருளின் ஓர்க வேய்ந்தவழக் கால்வீணே பொருட்செலவா மெனல்விளம்ப வேண்டுங் கொல்லோ ஆய்ந்தசிலர் சொற்படிச மாதான மாதன்மிக அழகி தாமே”
என்ற செய்யுளை எழுதி யனுப்பினார். அதனைப் பார்த்து அவர் சிறிது நேரம் யோசித்தார்; “மகாவித்துவானும் நமக்கு வேண்டியவரும் மதிப்புப் பெற்றவருமாகிய இவருடைய வார்த்தையை அவமதிக்கலாமா?” என்று எண்ணினார்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் தூண்டிவிட்டு வாதிப்பிரதிவாதிகளுக்குள் மேன்மேலும் மனஸ்தாபத்தையும் கலகத்தையும் விளைவித்து அதனால் வரும் வருவாயால் பிழைக்கும் இயல்புடைய சிலர், “புராணம் பாடுவதற்குத்தான் மகா வித்துவானேயல்லாமல் வியாஜ்ய விஷயங்களில் அவருக்கு என்ன தெரியும்? தமிழ்ப் பாடல்களிற் சந்தேகம் இருந்தால் அவர் சொல்வதைக் கேட்கலாம். சட்ட விஷயத்தில் அவர்பால் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஸந்நிதானத்தில் தொடுத்த வழக்கைப் பாதியில் நிறுத்திக்கொண்டால் பிரதிவாதியினுடைய கொட்டம் எப்படி அடங்கும்? செலவையும், தப்பு வழக்கென்பதையும் எண்ணிப் பயந்து நிறுத்திக்கொண்டார்களென் றல்லவோ ஊரார் கூறுவார்கள்? இன்றைக்கு இந்த வழக்கில் இப்படிச் செய்து விட்டால் நாளைக்கு வேறொருவன் வேண்டுமென்றே அக்கிரமம் பண்ணுவான். ‘கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’ என்பது போலக் கொஞ்சம் சூடு போட்டு வைத்தால் தானே இவர்களெல்லாம் அடங்கியிருப்பார்கள்? பெரிய இடத்தை எதிர்க்கக் கூடாதென்பதை இவர்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்வது? நம்முடைய கட்சியில் நியாயம் இருக்கும்போது ஸந்நிதானத்தில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? பத்துப் பேர் பத்து விதம் சொல்வார்கள். ஆதீன நிர்வாகப் பொறுப்பு அவர்களுடையதா? ஸந்நிதானத்தினுடையதா?” என்று பலவகையில் தூபம் போட்டார்கள். பாவம்! பெரியவருக்கு அவர்களுடைய மாய வார்த்தைகள் உண்மையாகவே பட்டன. வழக்கைப் பின்னும் நடத்திவந்தார்.
வழக்கின் முடிவில் பலர் எதிர்பார்த்தபடியே தேசிகர் பக்கம் அபஜயந்தான் ஏற்பட்டது. திருவாவடுதுறைக்கு வந்த சில பிரபுக்கள் இந்தச் செய்தியை இவருக்கு அறிவித்தனர். இப் புலவர்கோமான் கேட்டு, “அம்பலவாண தேசிகரவர்கள் பரமஸாது; திருவாவடுதுறையில் இருக்கும்போது பூஜையும் புஸ்தகமுமே அவர்களுக்குத் தெரியும். உலக வழக்கமே தெரியாது. இப்பொழுது ஆதீனத் தலைமை பெற்றவுடன் அவ்வழக்கம் எப்படிப் புதிதாகத் தெரியவரும்? பிடிவாதமும் கடின சித்தமும் இப்பொழுது உண்டாயிருக்கின்றன. பணம் பண்ணும் வேலை அது; ‘ *3 அறநிரம்பிய அருளுடை யருந்தவர்க்கேனும், பெறலருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்’ என்று சொன்ன கம்பர் வாய்க்குச் சர்க்கரை போடவேண்டும்” என்று சொன்னார்.
சிங்கப்பூர் நாராயணசாமி நாவலர்
சிங்கப்பூரில் நாராயணசாமி நாவலரென்னும் ஒருவர் இருந்தார். அவர் இவருடைய புலமைத் திறத்தைப் பலர் வாயிலாக அறிந்தவர். இவருடைய பழக்கத்தைப் பெற வேண்டுமென்னும் விருப்பம் அவருக்கு மிகுதியாக உண்டு. ஆயினும் நேரிற்கண்டு பழகுவதற்கு இயலாத நெடுந் தூரத்தில் இருந்தவராதலின், கடிதங்கள் மூலமாகத் தம்மை அறிவித்துக்கொண்டார். இவருடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களையும் நல்ல பழங்களையும் சிறந்த பிற பொருள்களையும் அனுப்பிவந்தார். இவர் விஷயமாகச் செய்யுட்களும் எழுதியனுப்பியதுண்டு. கம்பராமாயணம் முதலியவற்றில் தமக்கு விளங்காத பகுதிகளை எழுதியனுப்பி இவரிடமிருந்து விடைபெற்றுத் தெரிந்து கொண்டனர்; தமக்கு வேண்டிய சில நூல்களை எழுதுவித்து வருவித்துக் கொண்டார்.
நோயின் தொடக்கம்
அக்காலத்தில் இவருடைய காலிலும் அடிவயிற்றிலும் வீக்கத்தைத் தோற்றுவித்துக்கொண்டு ஒருவகையான நோய் உண்டாயிற்று; இவருடைய தேகம் வரவரத் தளர்ச்சியடையத் தொடங்கியது; ஆகாரம் செல்லவில்லை. அதனால் இவர் நூலியற்றுதலும் பாடஞ் சொல்லுதலும் வழக்கம்போல் நடைபெறாமல் சில சமயத்துமட்டும் நடைபெற்று வந்தன.
*4 திருவிடைமருதூர்த் திரிபந்தாதி
இவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அப்போது திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணியீசர் மீது திரிபந்தாதியொன்று இயற்றி அதைப் பல அன்பர்களுக்கு இடையே இருந்து இவரிடம் திருத்தம் செய்துகொள்வதற்காகப் படித்துக் காட்டினார். இவர் அதனை முற்றுங் கேட்டு முடித்தனர். பின்பு அவர் இல்லாத சமயம் பார்த்து, “இந்த அந்தாதி சிறிதும் நன்றாக இல்லை; மிகவும் கடினமாக இருக்கின்றது; சரியான இடத்தில் மோனையில்லை; பொருள் நயமுமில்லை; அவருடைய நிர்ப்பந்தத்தினால் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்விடத்து வாக்கினால் இந்தத் தலத்திற்கு ஓரந்தாதி செய்துதர வேண்டும்” என்று மாணாக்கர்கள் எல்லாரும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
இவர், “அவர் செய்திருக்கும்பொழுது இத்தலத்திற்கு நான் செய்வது முறையன்று; வேண்டுமானால் திருவிடைமருதூருக்குச் செய்வேன்” என்று கூறி அவ்வாறே செய்யத் தொடங்கி விநாயகர் காப்பை முடித்தவுடன் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய துதி செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது நான், “ஐயா அவர்கள் உடையவர் பூஜை எழுந்தருளப் பண்ணிக் கொண்டபோது குரு ஸ்தோத்திரமாக ஒரு செய்யுள் செய்ததுண்டு; எனக்கு அது ஞாபகமிருக்கிறது” என்று சொன்னேன். அதைச் சொல்லச் சொல்லிக் கேட்டு அதைச் சேர்க்கும்படி சொன்னமையால் அப்படியே அது சேர்க்கப்பட்டது. சில தினங்களில் அவ்வந்தாதி முற்றுப் பெற்றது. அந்த நூல்தான் இறுதியில் இவராற் பாடப்பெற்றவற்றுள் முற்றுப் பெற்ற பிரபந்தம். அந்நூலிற் சில பாடல்கள் திருவிடைமருதூருக்குச் சென்றிருந்தபொழுது பாடப்பெற்றன.
அதன்பாலுள்ள சில செய்யுட்கள் வருமாறு :
(கட்டளைக் கலித்துறை) “இளங்கொடி யான வுமைபாகன் வாழு மிடைமருத வளங்கொடி யானஞ் செயேன்பூச நீர்த்துறை வாஞ்சைவையேன் களங்கொடி யானலை வேனையை யோவென்ன கன்மந்திரு வுளங்கொடி யான னினைத்ததென் னோவொன்று மோர்கிலனே.” (28) [இடைமருதவளங்கொள் தியானத்தை. கள்ளங்கொடு யான் அலைவேன், திருவுள்ளம் கொடி ஆனன் நினைத்தது; கொடி ஆனன் - விடைக் கொடியையுடையவன்.]
இவர் முன்பு அத்தலத்திற்கு உலாவொன்று இயற்றியிருத்தலை, “சொல்லையப் பாக முறுவெ னுலாவுங்கொள் தூயவ” (93) எனக் குறிப்பித்திருக்கின்றார்.
“திறப்பா வனைய மனமோ ரணுத்துணை செப்பலென்ன மறப்பா வனைய மனமிலை யோவிடை மாமருதும் சிறப்பா வனைய மருதருந் தேவியுந் தேவிடையும் அறப்பா வனையக் கொடுவைக வென்னு ளடக்கியதே” (30) [திறப்பாவனைய - பலதிறப்பட்ட பாவனைகளை உடைய. மறப்பாவம் - மிகக் கொடிய பாவம். நைய மனம் இலையோ - அணுவென்பவர்களுக்கு நைய மனம் இல்லையோ; நையவேண்டும் என்றபடி. சிறப்பா அனைய. தே - தெய்வத்தன்மை. அறப்பாவை வனையக்கொண்டு; கொடு: தொகுத்தல்விகாரம். மனம் அடக்கியது.]
என்னும் செய்யுளை இவர் சொல்லி முடித்தபொழுது அதனுடைய கருத்தை எங்களுக்குச் சொல்லத் தொடங்கி, “மனம் அணுத்துணையென்பது தார்க்கிகருடைய கொள்கை. இந்தத் திருவிடைமருதூரென்னும் ஸ்தலம் *5 திருவலஞ்சுழியை விநாயக ஸ்தலமாகவும், ஸ்வாமிமலையை சுப்பிரமணிய ஸ்தலமாகவும், திருமாந்துறையைச் சார்ந்த சூரியனார் கோயிலை நவக்கிரக ஸ்தலமாகவும், திருவாப்பாடியைச் சண்டேசுவர ஸ்தலமாகவும், சிதம்பரத்தை நடராஜஸ்தலமாகவும், சீகாழியைப் பைரவ ஸ்தலமாகவும், திருவாவடுதுறையை ரிஷப தேவஸ்தலமாகவும், திருவாரூரை ஸோமாஸ்கந்த ஸ்தலமாகவும், ஆலங்குடியைத் தட்சிணாமூர்த்தி ஸ்தலமாகவும் இயல்பாகவே பெற்று விளங்குகின்றது.
இங்ஙனம் விநாயகர் முதலியோர் தனித்தனியே சிறப்புற்று விளங்கும் ஸ்தலங்களையே பரிவார தேவதைகளுக்குரிய ஸ்தானங்களாகக் கொண்ட ஸ்தலம் வேறொன்றுமில்லை. இதனாலேதான் அடைமொழியின்றி மகாலிங்கமென்று வழங்கும் திருநாமம் இத்தலத்து மூர்த்திக்கே அமைந்துள்ளது. இங்ஙனம் பல வகையாலும் பெரியனவாயுள்ள தலத்தையும் மூர்த்தி முதலியவற்றையும் தியானத்தால் தன்பால் அடக்கியுள்ள மனத்தை அணுவென்பது பிழையென்னும் கருத்து இதில் அமைக்கப்பெற்றுள்ளது” என்று விரித்துக் கூறினார். நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம்.
*6 வண்டானம் முத்துசாமி ஐயர்.
அக்காலத்தில் அயலிடத்திலிருந்து வந்தவர்களில் பெரியோர்கள் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் ஏனையோர் இவருடைய மாணாக்கர்களிடத்திலும் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டுச் சென்றனர். குமாரசாமித் தம்பிரானிடம் முத்துசாமி ஐயரென்ற ஒருவர் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய ஊர் எட்டையபுரத்தைச் சார்ந்த வண்டானமென்பது. சூடாமணி நிகண்டிலுள்ள பன்னிரண்டு தொகுதிகளும் அவருக்கு மனப்பாடம் உண்டு. சில சிலேடை வெண்பாக்கள், சில அந்தாதிகள் முதலியவற்றை முறையாகப் பாடங் கேட்டார்.
இயல்பாகவே தமிழறிவுடைய குடும்பத்திற் பிறந்தவராகையால் நல்ல தமிழ்ப்பயிற்சியை யடைந்தார். அவர் பிறரிடத்திற் பேசுதல் மிக அருமை; பிறர் சொல்வதையும் முகங் கொடுத்துக் கேளார்; யாரோடும் கலந்து பேசார்; எப்பொழுதும் தனியே இருப்பதன்றி மெளனமாகவும் இருப்பார்; அகங்காரத்தினால் அவ்வாறிருந்தவரல்லர். அவருடைய இயல்பே அது. சிலேடையாகப் பேசுவார்; அவர் ஜனங்களோடு பழக விரும்பாதவராகையால் எல்லாரும் உண்ட பின்னரே மடத்தைச் சார்ந்த சத்திரத்தில் அகாலத்தில் வந்து ஆகாரம் செய்து கொள்ளுவார். அவருடைய நிலைமையை உத்தேசித்து எல்லோரும் அவரை, “வண்டானம் வந்தது, போயிற்று” என்று அஃறிணையொருமையாகவே வழங்குவார்கள். படித்த கோஷ்டிக்கு அவரிடம் மதிப்புக் கிடையாது. அவர் வஸ்திரம் அழுக்கு மலிந்திருக்கும்.
ஒருநாள் சத்திரத்தின் சுவரில் கீழேகண்ட பாடல் மாக்கல்லால் எழுதப்பட்டிருந்தது :
(விருத்தம்) “இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும் வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே அந்தணருக் கடிசிலிட யாதுமிலை யெனலால் சுந்தரசுப் பிரமணிய தேவனிடம் சொன்மின்”. [வந்த அரி - வந்த அரிசி. மதிதம் - மோர்.]
அங்கே சென்று ஆகாரம் செய்து வெளியே புறப்படும்போது ஒருவர் சுவரில் இந்தப்பாடலைக் கண்டு ஞாபகப்படுத்திக்கொண்டு சென்று பிற்பகலில் இராமாயணம் பாடங் கேட்பதற்காக அங்கே வந்திருந்த நண்பர்களிடம் சொல்லிக்காட்டியதன்றிப் பின்பு இக் கவிஞர்கோமானிடத்தும் சொன்னார். ‘இப்பாடலை யார் செய்திருத்தல் கூடும்?’ என்ற ஐயம் எல்லோருக்கும் உண்டாயிற்று. அந்தச் சத்திரத்திற்கு வந்து செல்பவர்கள் பலருள் யார் செய்ததோவென்று ஒவ்வொருவரையும் அங்குள்ளோர் குறிப்பிடத் தொடங்கினார்.
அப்பொழுது குமாரசாமித்தம்பிரான், “வண்டானம் எழுதியிருக்கலாம்; அது பெரும்பாலும் அகாலத்திலேதான் சென்று உண்ணுவது வழக்கம்; தனக்கு ஆகாரம் சரியாக ஒன்றும் கிடைக்கவில்லையென்று சில சமயங்களில் என்னிடம் சொல்லியிருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்” என்றார். சாப்பிடும் இடத்தில் விசாரிக்கையில் சமையற்காரர், வண்டானந்தான் ஏதோ நேற்றுக் கிறுக்கிக்கொண்டிருந்தது” என்றார். உடனிருந்தவர்களுக்கு அவரை எப்படியேனும் கண்டுபிடித்து அழைத்து வர வேண்டுமென்ற விஷயத்தில் ஊக்கம் உண்டாயிற்று. இரண்டு மூன்று பேர்கள் விரைந்து சென்று ஊருக்குள்ளே தேடிப் பார்க்கையில் எங்கும் அகப்படவில்லை. அப்பால் வடக்கு மடத்துத் தோட்டத்தில் ஒரு மரத்தின் அடியிலுள்ள மேடையில் ஏதோ யோசனை செய்து கொண்டு உட்கார்ந்திருந்தார். கண்டு அழைக்கையில் அவர் விரைவில் எழவில்லை. சென்றவர்கள் வலிய அவரை இழுத்துக்கொண்டுவந்து பிள்ளையவர்களுக்கு முன்னே நிறுத்தினார்கள்.
அவரை இவர் இருக்கச்செய்து, “இந்தப் பாடலைச் செய்தவர் யார்?” என்று கேட்டார். அவர், “நான் செய்யவில்லை” என்று கூறிவிட்டார். பின்னும் வற்புறுத்திக் கேட்கையில் அவர், “சரியாக நடந்து கொள்ளாமற் போனால் பின் என்ன செய்கிறது?” என்றார். குமாரசாமித் தம்பிரான், “நீ அகாலத்திற்போனால் உனக்கு என்ன கிடைக்கும்? உன்னுடைய தவறு அது” என்று கோபத்துடன் சொல்லுகையில், “சாமி, சும்மா இருக்க வேண்டும்; கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று பிள்ளையவர்கள் கையமர்த்திவிட்டு, “இந்தச் செய்யுளின் நடையைப் பார்க்கும் பொழுது, இதற்குமுன் இவர் பல பாடல்கள் செய்து பழகியிருக்க வேண்டுமென்று தோற்றுகின்றது. அதைப்பற்றி விசாரிக்க வேண்டும்” என்றார். விசாரித்ததில் அவர், ”யாதொன்றும் செய்ததில்லை” என்று அஞ்சிச் சொன்னார். “பாடுதலில் நீர் பழக்கமுள்ளவரென்பதை இப்பாடலே தெரிவிக்கின்றது; செய்திருந்தால் அச்சமின்றிச் சொல்லும்” என்று பின்னும் இவர் வற்புறுத்திக் கேட்கவே, அவர் பல திரிபு, யமகம், சிலேடை முதலியன தாம் செய்தனவாகச் சொல்லிக் காட்டினர். அவற்றுள் பிள்ளையவர்கள் செய்துள்ள, “துங்கஞ்சார்” என்ற நோட்டின் மெட்டில், தம்மை ஆதரித்த பிச்சுவையரென்பவர்மேல் இயற்றிய கீர்த்தனம் ஒன்றைச் சொன்னார்; “உச்சஞ்சார் வண்டானத் துறை பிச்சுவைய தயாநிதியே” என்ற அதன் பல்லவி மட்டும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
அவற்றைக் கேட்ட இக்கவிஞர்பெருமான் அவரைப் பார்த்து மிகவும் வருந்தி, “இவர் இவ்வளவு அழுக்கான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டு தமிழருமையறிந்த இந்த ஊரில் அநாதரவுடன் இருத்தல் மிகுந்த வருத்தத்திற்கு இடமாக இருக்கிறது” என்று சொல்லி வஸ்திரங்கொடுக்க வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஒரு செய்யுள் பாடும்படி சொன்னார். அவ்வாறே அவர் உடனே,
(விருத்தம்) “மாசாரக் கவிநுவல்வோர் குறைகள்தமை யடியோடே மாற்ற வெண்ணித் தூசார நிதியமுண வடிகள்தரல் தெரிந்துபெறத் துணிந்து வந்தேன் ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா னெடுந்துயருற் றிருக்கின் றேற்கின் றாசார மளித்தருள்சுப் பிரமணிய தேசிகமெய் யறிஞ ரேறே” [மா சாரம் - மிக்க சுவையையுடைய. தூசு ஆரம் நிதியம் உணவு ஆகிய இவற்றை அடிகள் தருதலைத் தெரிந்து. ஏசு - பழிக்கப்படுதல். ஆசாரம் - ஆடை.]
என்னும் ஒரு செய்யுளைச் சொன்னார்.
இதைக் கேட்ட இவர் மகிழ்ந்தார். “இச் செய்யுளைச் சந்நிதானத்தினிடம் விண்ணப்பம் செய்யும்” என்று சொல்லி அவரை அனுப்பியதன்றி உடன் சென்று வரும்படி எனக்கும் உத்தரவு செய்தார். கேட்ட அவர் பிள்ளையவர்களது முன்னே நிகழ்ந்தவற்றையும் அறிந்து மகிழ்ந்து கரைபோட்ட இரண்டு ஜோடி வஸ்திரங்களை வழங்கி அவற்றைக் கட்டிக்கொண்டு பிள்ளையவர்களிடம் சென்று காட்ட வேண்டுமென்று கட்டளையிட்டார். அப்படியே உடுத்திக்கொண்டு பிள்ளையவர்களிடம் முத்துசாமி ஐயர் வரவே, இவர் கண்டு மகிழ்ந்தார்.
‘இந்தியா மீனாட்சிசுந்தரம் பிள்ளை’
ஒருநாள் இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ‘மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா’ என்று மட்டும் விலாஸத்தில் எழுதப்பட்டிருந்தது. அது யாதொரு தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் இவருடைய பெரும்புகழென்பதை அறிந்து மாணவர்களும் அன்பர்களும் மகிழ்ந்தார்கள். சுப்பிரமணிய தேசிகரும் இதனை யறிந்து பாராட்டினார்.
சுந்தரதாஸ பாண்டியருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது
சேற்றூர் ஜமீன்தாராகிய முத்துசாமி பாண்டியருடைய குமாரரும் தமிழ்க்கல்வி கேள்விகளிற் சிறந்தவரும் ஆகிய சுந்தரதாஸ பாண்டிய ரென்பவருக்கும் திருவநந்தபுரம் அரசராயிருந்த ராமவர்மாவென்பவருக்கும் நட்புண்டு. ஒருசமயம் பாண்டியர் திருவநந்தபுரத்து அரசர் மீது ஒரு வண்ணம் பாடினார். அதற்குத் தக்க வித்துவான்களால் சிறப்புப் பாயிரம் பெற வேண்டுமென்பது அவருடைய விருப்பம். சேற்றூரிலிருந்த வித்துவான்கள், பிள்ளையவர்களிடமிருந்து பெற்றால் சிறப்பாக இருக்குமென்று தெரிவித்தார்கள். சுந்தரதாஸ பாண்டியருக்கும் அங்ஙனம் பெற வேண்டுமென்னும் வேணவா உண்டாயிற்று. ஆனால், அவருக்கும் இக்கவிஞர்பிரானுக்கும் பழக்கமில்லை. அதனால் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கு அவ்வண்ணத்தை அனுப்பித் தம்முடைய விருப்பத்தையும் விண்ணப்பஞ் செய்து கொண்டார்.
தேசிகர் பிள்ளையவர்களிடம் அதனை அளித்தனர். இவர் அவர் கட்டளைப்படியே உடனே அந்த வண்ணத்தைச் சிறப்பித்து ஐந்து செய்யுட்கள் இயற்றி யனுப்பினார். அவற்றில் திருவநந்தபுர ஸமஸ்தானத்தைப் பற்றிச் சொல்லுகையில், ‘இந்தக் கலிகாலத்தில் மற்ற தேசங்களில் ஒரு காலால் நடக்கும் தர்மமாகிய ரிஷபம் நான்கு காலாலும் நடக்கும் இடம்’ என்னும் கருத்தை அமைத்திருந்தார். அன்றியும் வண்ணத்தின் இலக்கணங்களையும் புலப்படுத்தியிருந்தார். அச்செய்யுட்களை சுப்பிரமணிய தேசிகர் சுந்தரதாஸ பாண்டியருக்கு அனுப்பினார். அவற்றைப் பெற்ற அவர் பிள்ளையவர்கள் தம்மை அறியாமலிருந்தும் தம் பாடலை மதித்துச் சிறப்புப் பாயிரம் அளித்ததைப் பாராட்டி நேரே இக்கவிஞர்பிரானுக்குத் தம் வந்தனத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியனுப்பினார்.
*7 ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்
சிவஞான யோகிகள் சரித்திரத்தைத் தமிழ்ச் செய்யுளாக இயற்ற வேண்டுமென்றும் அதில் ஆதீனத்தின் பரம்பரை வரலாறுகள் முறையே கூறப்பட வேண்டுமென்றும், ஆதீனத்து அடியார்கள் பலர் நெடுநாளாக விரும்பியதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர் இவருக்கு குமாரசாமித் தம்பிரான் மூலமாகத் தெரிவித்தார். அங்ஙனம் செய்ய வேண்டுமென்று தமக்கு நீண்ட நாளாக எண்ணம் இருந்ததென்றும் கட்டளையிட்டது அனுகூலமாயிற் றென்றும் சொல்லிச் செய்வதற்கு இவர் உடன்பட்டார்.
கச்சியப்ப முனிவருடைய நூல்களில் இவர் மிக்க மதிப்பு வைத்துப் படித்தும் பாடஞ் சொல்லிக்கொண்டும் வந்தவராதலால், அவரிடம் இவருக்குப் பக்தி அதிகம். அவர் சிவஞான யோகிகளைப் போலவே புலமை வாய்ந்தவரென்பதும் உடன் படித்தவரென்பதும் இவருடைய கருத்து. இதனை அடிக்கடி எங்களிடத்தும் பிறரிடத்தும் இவர் சொல்லி வருவதுண்டு. சிவஞான யோகிகள் இயற்றிய செய்யுள் நூல்களிலும் வசன நூல்களிலும் மிக்க பயிற்சியுடையவராகையால் அவருடைய பயிற்சி உயர்ந்த தென்பதும், கச்சியப்ப முனிவர் அவருடைய மாணாக்கரென்பதும் சுப்பிரமணிய தேசிகருடைய கருத்து.
இந்த விவாதம் நெடுநாளாக நிகழ்ந்து வந்ததுண்டு. இரு திறத்தாரும் தம்பால் வந்தவர்களோடு பேசிக் கொள்வதேயன்றிச் சந்தித்தபொழுது நேரே தம்முள் பேசிக் கொண்டதில்லை. இவர், சிவஞான யோகிகளோடு கச்சியப்ப முனிவர் படித்தவரென்று பாடிவிடுவாரென நினைந்து கச்சியப்ப முனிவரை சிவஞான யோகிகளுடைய மாணாக்கரென்று பாட வேண்டுமென்று தேசிகர் இவருக்குத் தெரிவித்தார். அதற்கு இவருடைய மனம் உடன்படவில்லை. அது தெரிந்த தேசிகர் மடத்துப் புத்தகசாலையிலிருந்த பழஞ்சுவடி ஒன்றை எடுத்து வரச்செய்து அதில் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவருடைய மாணாக்கரென்று குறிப்பிட்டிருந்த,
(விருத்தம்) “ஏர்தரு சாலிவாகன சகாத்தம் ஆயிரத் தெழுசதத் தொருபத் திரண்டின்மேற் சாதா ரணவரு டத்தில் இயைதரு சித்திரைத் திங்கள் சார்தரு தேதி பத்தினோ டொன்று தகுசெவ்வாய் வாரம்பூ ருவத்திற் சத்தமி புனர்பூ சத்திரு நாளில் தவலருங் கும்பலக் கினத்திற் சீர்தரு துறைசை வாழ்சிவ ஞான . தேவன்மா ணாக்கரின் முதன்மை திகழ்ந்துள கச்சி யப்பமா முனிவன் திருப்பெருங் காஞ்சியி லெய்திச் சேர்தரு மடியார் தமதக விருளைத் தினகரன் முன்னிரு ளென்னத் திருந்துதன் னருளா லகற்றிவீ டுறுத்திச் சிறந்தபூ ரணமடைந் தனனே”
என்ற ஒரு செய்யுளைப் படித்துக் காட்டச்செய்தார்.
அப்பால் இவர் தேசிகருடைய நோக்கத்தை அறிந்து அங்ஙனமே செய்வதாக ஒப்புக்கொண்டு அக்கருத்தை அமைத்துப் பாடுவாராயினர். அது சிவஞான யோகிகள் சரித்திரத்திலுள்ள,
(விருத்தம்) *8 “திருக்கிளர் முனிவ னாஞ்சத் தியஞான தரிச னிக்குக் கருக்கிளர் தரஞ்சா ராத பரஞ்சோதி கிடைத்த காட்சி உருக்கிளர் துறைசை யெங்கள் சிவஞான யோகிக் குண்மைப் பொருட்கிளர் கச்சி யப்ப முனிவரன் புணர்ந்த தொக்கும்”
என்னும் செய்யுளால் விளங்கும். அந்நூல் திருவாவடுதுறையில் தொடங்கப்பெற்றுத் திருவிடைமருதூருக்கு அசெளக்கிய நிவிர்த்திக்காக இவர் போயிருந்தபொழுதும் செய்யப்பட்டு வந்தது; நடுநாட்டு வருணனையிற் பத்துப்பாடல்கள் வரையில்தான் நடைபெற்றது; எழுதியவன் யானே. அப்பால் தேகத் தளர்ச்சி இவருக்கு அதிகரித்து வந்தமையால் மேலே செய்யப்படாமற் போயிற்று.
அந்நூலில் இவர் செய்த இறுதிச் செய்யுள்,
(கொச்சகக் கலிப்பா) *9 “மருவுலகங் களிதூங்க *10 வண்சமயா சாரியராம் இருவர்களுஞ் சந்தானத் திருவர்களு மவதரிக்கப் பெருகுதவஞ் செய்ததெனிற் பிறங்குவள நடுநாட்டின் அருகுதவிர் சிறப்புரைக்க வடியேனா லாகுவதோ”
என்பது. அதன் இறுதியடியில் உள்ள ”அடியேனாலா குவதோ” என்ற தொடர் மேலே இவர் இயற்ற இயலாராயினாரென்பதைத் திருவருள் குறிப்பிக்கின்றதென்று எல்லாரும் பலநாள் கழித்துச் சொல்லத் தொடங்கினார்கள்.
அது குமாரசாமித் தம்பிரான் விருப்பத்தின்படி செய்யப்பெற்றதென்பதும், கச்சியப்பமுனிவரே அச்சரித்திரத்தைப் பாட வல்லவரென்பதும் பின்வரும் பாடல்களால் விளங்கும்:
(ஆக்குவித்தோர்) (விருத்தம்) “குலவுமுரு கக்கடவுள் கருணையினோ தாதனைத்தும் கூட வோர்ந்தே உலவுபுகழ்க் குமரகுரு பரமுனிவ னுதித்தமர புதித்த மேலோன் நிலவுபுக ழிலக்கணமு மிலக்கியமும் வரம்புகண்டோன் நிகரொன் றில்லோன் கலவுசிறப் புத்தமநற் குணங்களெலா மோருருக்கொள் காட்சி போல்வான்“."”. “கூடுபுகழ்க் கோமுத்திக் குருநமச்சி வாயனருள் கொண்ட மேலோன் பாடுபுகழ்ச் சித்தாந்த பர்டியமுற் றொருங்குணர்ந்த பான்மை யாளன் நீடுபுகழ்த் துறவொழுக்கமந் தவறாது காத்தோம்பும் நெறியில் வல்லோன் தேடுபுகழ் வளர்குமர சாமிமுனி வரன்முனிவர் செயசிங் கேறே.” (அவையடக்கம்) “அன்னமுனி வரன்கனிவிற் சிவஞான யோகிவர லாறு முற்றும் நன்னர்வள முறப்பாடித் தருகவெனச் சொற்றமொழி நலத்தை யோர்ந்தே என்னவலி யுளமெனப்பா டுதற்கிசையேன் மறுப்பதற்கும் இசையே னேனும் சொன்னமொழி மறாததிற மென்றொருவா றோதுதற்குத் துணிபுற் றேனால்.” “நலம்பூத்த தென்கலையும் வடகலையும் பணிசெய்சிவ ஞான யோகி புலம்பூத்த வரலாற்றை யான்பாடப் புகுந்ததிறம் புலவோர் தேரின் வலம்பூத்த விலாமுறிய நகைப்பரெனும் வருத்தமுமென் மனநீங் காதித் தலம்பூத்த வஃதியற்றீர் தவிருதிரென் பாரொருவர் தமைக்கா ணேனே.” “ஏய்ந்தவிளம் பூரணர்சே னாவரையர் நச்சினார்க் கினியர் மேலும் வாய்ந்தபரி மேலழகர் மயங்குசிவ ஞானமா தவத்தோன் சீர்த்தி தோய்ந்தபுகழ்க் கச்சியப்ப முனிவர்பிரான் சொலிற்சொலலாம் சொல்லா ரொன்றும் பாய்ந்தநில வரைப்போர்மற் றகத்தியனு மகத்துவமாப் பாலிப் பானே” “மிகப்பெரிய னாகியசீர்ச் சிவஞான முனிவரன்சீர் விளம்ப லாகும் இகப்பின்மட முடையேனு மெவ்வாற்றா னென்னின்முனம் இருவர் தேறா நகப்படிவ மாய்வளர்ந்த சோதியையா ராதனைசெய் நன்மை பூண்டோர் உகப்பரிய மூன்றிழைநான் கிழைத்தீப மல்லாமல் உஞற்ற லுண்டோ”
சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைப் புராணம் இயற்றுவிக்க விரும்பியது
“திருவாவடுதுறைக்குச் சுந்தரலிங்க முனிவரென்பவராற் செய்யப்பெற்ற புராணம் ஒன்று உண்டு; இருந்தாலும் அது சிவஞான யோகிகளுடைய முறைப்படியே காப்பிய இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. அம்முறையில் ஸ்தல புராணங்கள் பாடிவரும் பிள்ளையவர்கள் இந்தத் தலத்திற்குப் புராணம் இக்காலத்திற்கு ஏற்றபடி செய்தால் நாம் அதற்காகவும் இதுவரையில் இங்கிருந்து சிறப்பித்து வந்ததற்காகவும் மூன்றுவேலி நிலங்கள் வாங்கித் தருவோம்” என்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினார்; இவருக்கும் அங்ஙனம் செய்தலில் உடன்பாடே; அங்ங்னமே செய்யலாமென்றெண்ணியும் அஸெளக்கிய மிகுதியால் அதனைப் பாடத் தொடங்கவில்லை.
திருவாவடுதுறைச் சிலேடை வெண்பா
தென்னாட்டிலிருந்து வந்த முதிய கவிராயர் ஒருவர் திருவாவடுதுறைக்கு சிலேடை வெண்பா ஒன்றை இயற்றிக்கொணர்ந்து ஆதீனத் தலைவருக்கு அதனைப் படித்துக் காட்டினார். அதில் பல பொருளொரு சொல்லே சிலேடையாக அமைக்கப் பெற்றிருந்தது; ஒருவரும் பாராட்டவில்லை. ஆனாலும் வந்தவரைச் சும்மா அனுப்பக் கூடாதென்று நினைத்து தேசிகர் அவருக்கு ஸம்மானம் செய்து அனுப்பிவிட்டார். அதில் சில பாடல்களைக் கேட்ட தம்பிரான்களிற் சிலர், “சிவஞான முனிவர் முதலிய பெரிய கவிகள் எழுந்தருளியிருந்த இடமும், நீங்கள் பாடஞ் சொல்லிக்கொண்டும் நூல்களை இயற்றிக் கொண்டும் விளங்கும் இடமும் ஆகிய இந்தத் தலத்திற்குச் செய்யுள் செய்யும் ஆற்றலில்லாத அக்கவிராயரா சிலேடை வெண்பாச் செய்கிறது? உங்களுடைய அருமையான வாக்கினால் ஒரு சிலேடை வெண்பா இயற்றித் தர வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே இவர் இயற்றத் தொடங்கினார். அதிற் காப்புச்செய்யுளும் நூலில் ஒரு செய்யுளுமே இயற்றப்பட்டன. தேகம் வரவர மெலிவடைந்து வந்த காலமானபடியால் அந்நூல் முற்றுப்பெறவில்லை; காப்புச் செய்யுளின் முற்பாதியாகிய,
“சீர்வெண்பா மாலைத் திருவாவடுதுறையார்க்
கூர்வெண்பா மாலை யுரைப்பவே”
என்பது மட்டும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. இக்காப்புச் செய்யுளை இவர் சொல்லியபொழுது சீர்வெண்பா மாலை யென்பதற்கு ஐயடிகள் காடவர்கோன் நாயனார் செய்த க்ஷேத்திரத்திருவெண்பா வென்றும் சிலேடைவெண்பா வென்பது ஊர்வெண்பா வென்னும் பிரபந்த வகையைச் சார்ந்ததென்றும் கூறினர்.
திருவிடைமருதூர் சென்றது
அப்பால், கால் வீக்கம், அடிவயிற்று வீக்கம், தோள்களின் மெலிவு, அன்னத்துவேஷம் முதலியவை அதிகரித்து இவரை வருத்தின. வந்து பார்த்த வைத்தியர்கள் அதனை இரத்தபாண்டு வென்னும் நோயென்று சொன்னார்கள். அந்நோயைப் பரிகரித்தற் பொருட்டுச் சுப்பிரமணிய தேசிகர் திருவிடைமருதூருக்கு இவரை அனுப்பி அங்கேயுள்ள கட்டளை மடத்திலேயே தக்க வஸதி ஏற்படுத்தி திருவிடைமருதூர் அரண்மனை வைத்தியர்களைக் கொண்டு பார்க்கும்படி செய்வித்தார்.
இரவில் ஆகாரஞ்செய்துகொண்டு இரண்டு நாளைக்கு ஒரு முறை திருவாவடுதுறையிலிருந்து சென்று நானும் பிறரும் இவரைப் பார்த்து வந்தோம்.
இவருக்கு இரவிற் பெரும்பாலும் நித்திரை இராது. அக்காலத்தில் பெரியபுராணம் முதலாகிய நூல்களிலுள்ள பாடல்களைப் படிக்கச் சொல்லியும் முத்துத்தாண்டவராயர், பாவநாச முதலியார், மாரிமுத்தா பிள்ளை முதலிய பெரியோர்கள் செய்த தமிழ்க் கீர்த்தனங்கள், அருணாசல கவிராயரியற்றிய இராமாயணக் கீர்த்தனம், நந்தன் சரித்திரக் கீர்த்தனம் முதலியவற்றைச் சொல்லச் சொல்லியும் கேட்டு இவர் பொழுது போக்குவார்,
மஹந்யாஸ ஜபம்
தேக அசௌகரியம் இவருக்கு அதிகரித்தபொழுது சிறந்த வைதிகப் பிராமணர்களை வருவித்து அவர்களைக்கொண்டு யுவ வருஷம் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ மஹாலிங்க மூர்த்திக்கு மஹந்யாஸ ஜபத்தோடு கால் மண்டலம் அபிஷேகம் முதலியனவும் இவர் செய்வித்தனர்; அதனாற் பிணி சிறிது நீங்கியும் சிலநாள் சென்றபின் திரும்பத்தோன்றி வருத்தத் தொடங்கிவிட்டது;
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
என்பது உண்மையன்றோ?
நாளுக்கு நாள் இவருடைய நல்லுடல் மெலிவுறுவதை யறிந்து, சுப்பிரமணிய தேசிகர் திருவிடைமருதூருக்கு விஜயஞ்செய்து ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு மடத்திற்கு வந்து இவரைப் பார்த்தனர்; அப்பொழுது இவர் திடுக்கிட்டு எழுந்து இரண்டு கைகளையுஞ் சிரமேற் குவித்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் நின்றுவிட்டார். அவர் சற்று நேரம் நின்று கவனித்து, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி அங்கேயுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத் திருவாவடுதுறைக்குச் சென்றனர். ஆதீனகர்த்தர் இங்ஙனம் செய்வது வழக்கமல்லாமையால் எல்லோரும் வியப்புற்று இவர்பால் தேசிகருக்கு இருந்த நன்மதிப்பை நன்றாக அறிந்து பாராட்டினார்கள்.
திருவாவடுதுறைக்கு வந்தது
வியாதி குணப்படாமையைத் தெரிந்து இவரை திருவாவடுதுறையிலேயே வந்திருக்கும்படி தேசிகர் இவருக்குத் திருமுகம் அனுப்பினார். அப்படியே இவர் திருவாவடுதுறைக்கு வந்துவிட்டார். பூஜை செய்வதற்கு முடியாமல் இவர் வருந்துவதை அறிந்த குமாரசாமித் தம்பிரான் நாள்தோறும் தம்முடைய பூஜையை முடித்துவிட்டு வந்து இவர் செய்துவரும் முறைப்படியே பூஜையை இவருடைய பார்வையிலேயே இருந்து செய்து பிரஸாதத்தை அளித்து வந்தார். அப்பொழுது சின்ன ஒடுக்கப்பணி பார்த்து வந்த சுந்தரலிங்கத் தம்பிரானென்பவர் தேசிகருடைய கட்டளையின்படி இவருக்கு எந்தச் சமயத்தில் எந்தப் பொருள் வேண்டுமோ அதனை விசாரித்து உடனுடன் சேர்ப்பித்து வந்தார்.
புதியவர்களாகப் பாடங்கேட்க வந்தவர்களுக்கு மாணாக்கர்களே பாடஞ்சொல்லி வந்தார்கள்; கடினமான பாகங்களை மட்டும் இவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வார்கள்.
இரவில் தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் படிப்பித்துக் கேட்டு வருவார். கடினமான பதங்களைப்பற்றியோ விஷயங்களைப் பற்றியோ கேட்டால் சுருக்கமாக விடையளிப்பார்.
மாயூரம் சென்றது
அப்பால் துலாமாதத்தில் தீபாவளி ஸ்நானத்திற்கு வர வேண்டுமென்று இவருடைய குமாரர் சிதம்பரம்பிள்ளை வந்து அழைக்கவே, மாயூரஞ் செல்லுதற்கு இவர் புறப்பட்டார். அதனை யறிந்த சுப்பிரமணிய தேசிகர் தீபாவளி ஸ்நானம் செய்த பின்பு தரித்துக் கொள்ளும்படி வழக்கம்போலவே அப்பொழுது இவருக்கும் உடனிருந்தவர்களுக்கும் வஸ்திரங்கள் கொடுத்து மேனாப் பல்லக்கை வருவித்துச் சௌக்கியமாக அதிற் செல்லும்படி செய்வித்து உடன் செல்லக் கூடியவர்களையும் அனுப்பினார். நான் மட்டும் இவருடைய கருத்தின்படியே திருவாவடுதுறையில் இருந்துகொண்டு இடையிடையே மாயூரம் சென்று பார்த்து வந்தேன்.
எனக்கு வஸ்திரம் வாங்கி அளித்தது
தீபாவளிக்கு முதல்நாள் திருவாவடுதுறையில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும் தேசிகர் வஸ்திரம் அளிப்பது வழக்கம். நான் இருப்பது அவருடைய ஞாபகத்துக்கு வராமையால் எனக்கு வஸ்திரம் கொடுக்கப்படவில்லை. நானும் அதனைப் பெற வேண்டுமென்று முயலவில்லை. அதற்கு முன்னர் பலமுறை பெற்றவற்றை நினைந்து அப்போது அளியாததைக் குறித்து வருந்தவுமில்லை. எனக்கு வஸ்திரம் கொடுக்கப்படவில்லை யென்பதை அப்பொழுது திருவாவடுதுறையிலிருந்து மாயூரம் சென்ற காரியஸ்தரொருவர் முகமாகத் தெரிந்து இவர் வருத்தமடைந்தார்.
துலா மாஸமானவுடன் இவர் திருவாவடுதுறைக்கு வர எண்ணியிருப்பது தெரிந்தமையால் கூட இருந்து அழைத்து வருதற்காக மாயூரம் சென்று இவரைப் பார்த்தேன். பார்த்தவுடன், “தீபாவளிக்கு மடத்திலிருந்து வஸ்திரம் கிடைக்கவில்லையாமே” என்று சொல்லிவிட்டுக் கடையிலிருந்து விலைகொடுத்து ஒரு புதிய பத்தாறு மடி வருவித்து மஞ்சள் தடவி என்னிடம் கொடுத்து அதைத் தரித்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னார். அப்படியே தரித்துக் கொண்டேன்.
இராமாயணப் புத்தகங்கள்
அப்பால் சில தினங்கள் மாயூரத்திலேயே இருந்தேன். ஒரு நாள் கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்தபோது ஒரு புஸ்தகக் கடையில் கம்பராமாயணம் ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் இருந்தன. ஏழு ரூபாய் விலையென்று கடைக்காரர் சொன்னார். அதற்கு முன்பு அந்நூலைப் பாடங்கேட்கையில் புத்தகமில்லாமல் இரவற் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்த எனக்கு அவற்றை வாங்கிவிட வேண்டுமென்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால் வாங்குதற்கோ கையிற் பணமில்லை. உடனே புறப்பட்டுத் திருவாவடுதுறைக்குச் சென்று அங்கே இருந்த என் சிறிய தந்தையாரிடம் (சிறிய தாயாரின் கணவரிடம்) ஏழு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வந்து அந்தப் புஸ்தகங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டேன். எனக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிசிக்கு அளவே இல்லை. உடனே சென்று பிள்ளையவர்கள் கையால் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்து இவரிடம் கொடுத்தேன். “என்ன புஸ்தகங்கள்?” என்றார். “இராமாயணம்; இவற்றை ஐயா அவர்கள் கையாற் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்” என்றேன். “எப்படி இவை கிடைத்தன?” என்று இவர் வினவவே நான், “விலைக்கு வாங்கினேன்” என்றேன். “பணம் ஏது?” என்றபோது நடந்ததைச் சொன்னேன். இக்கவிச்சக்கரவர்த்தி புஸ்தகங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, “எதற்காகச் சிரமப்பட்டு விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்னிடம் சொல்லக் கூடாதா? என்னிடமுள்ள புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாமே” என்று சொல்லிவிட்டு அவற்றை எனக்கு அன்புடன் அளித்தார். எனக்கு ஒருவிதமான கவலையும் ஏற்படக் கூடாதென்று இவர் எண்ணியிருந்ததை இவருடைய அன்பார்ந்த செயல்களும் வார்த்தைகளும் புலப்படுத்தின.
திருவாவடுதுறைக்கு வந்தது
அப்பால் மாயூரத்திலிருந்து மேனாவிலேயே இவர் திருவாவடுதுறைக்கு வந்தார். நானும் மற்றவர்களும் உடன் வந்துவிட்டோம்.
நோய் வரவர அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. வைத்தியர்கள் தக்க மருந்துகள் கொடுத்துவந்தும் அது தணியவே இல்லை. இவருக்கு விருப்பமுள்ள உணவுகள் இன்னவையென்று எனக்குத் தெரியுமாதலால், அக்காலத்தில் அவ்வூரில் இருந்த என் சிறிய தாயாரிடம் சொல்லி அவற்றைச் செய்வித்து எடுத்துச் சென்று இவருக்குக் கொடுத்து வந்தேன்; இவர் பிரியமாக உண்டு வந்தனர்.
நெல்லையப்பத் தம்பிரான் வெள்ளித்தொன்னை அளித்தது
தம்மிடமிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் பூஜைக்கே இவர் உபயோகப்படுத்தி விட்டமையால் கஞ்சி பால் முதலியவற்றை உண்ணுவதற்குத் தக்க வெள்ளிப் பாத்திரம் இல்லை. நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு வெள்ளித்தொன்னை செய்வித்து அனுப்ப வேண்டுமென்பதைக் குறிப்பித்து இவர் திருவிடைமருதூர்க் கட்டளை விசாரணைத் தலைவராக அப்போது இருந்த நெல்லையப்பத் தம்பிரானுக்கு ஒரு கடிதம் எழுதுவித்து, அதன் தலைப்பில்,
(விருத்தம்) “எல்லையப்ப னாயவிதி யிவற்குமேற் போயவிது இவரே மாறச் சொல்லையப்பன் மலங்கடிந்து துகளிலாச் சிவானந்தத தோயந் தோயத் தொல்லையப்பன் றுறைசைநமச் சிவாயவப்பன் திருவடியே சூட்டுஞ் சென்னி நெல்லையப்ப முனிவர்பிரா னிக்கடிதம் நோக்கிமகிழ் நிரம்ப மாதோ?” [எல்லை அப்பனாய - யுகாந்தப் பிரளய வெள்ளத்தை உடையவனாகிய; அப்பு - நீர். விது - திருமால். சொல் ஐயம்; சொல் லயமென்று பிரித்தலும் பொருந்தும்.]
என்னும் பாடலை இயற்றி அமைப்பித்து அனுப்பினார். உடனே அவர் தமது சம்பளத் தொகையிலிருந்து வெள்ளித்தொன்னை ஒன்று செய்வித்துக் கொடுத்தனுப்பினர். அது பின்னர் இவருக்கு மிக உபயோகமாக இருந்து வந்தது.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. முதற்பாகம், ப. 79 – 81, பார்க்க.
2. கதிரவன் தளி – சூரியனார் கோயில்.
3. கம்ப. மந்தரை சூழ்ச்சிப். 70
4. மீ. பிரபந்தத்திரட்டு, 2237-2338.
5. இச்செய்தி திருவிடைமருதூருலாவிலுள்ள, “ஒப்பேதும், இல்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக, மல்லே ரகமுருகன் வைப்பாக – நல்லார்சேர், தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக, வண்மாந் துறையிரவி வைப்பாக – எண்மாறா, நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக, மன்காழி யேவடுகன் வைப்பாக – முன்காணும், தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர், மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக – உன்னிற், றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக, இடைமருதில் வீற்றிருக்கு மீசன்” (131 – 6) என்னும் கண்ணிகளிலும் காணப்படும்.
6. இவருடைய விரிவான வரலாற்றை, ‘கலைமகள்’ என்னும் பத்திரிகையின் முதல் தொகுதி 273-80-ஆம் பக்கங்களிற் காணலாம்.
7. சிவஞான முனிவரெனவும் வழங்கப்பெறுவர்.
8. மீ. பிரபந்தத்திரட்டு, 3941.
9. மீ. பிரபந்தத் திரட்டு, 3953.
10. சமயாசாரியராம் இருவர் – திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார். சந்தானத்து இருவர்கள் – மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியாரென்பவர்கள்.
$$$