-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்
36. பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத்?
பாஞ்சாலத்தில் நடந்த அட்டூழியங்களைத் தற்சமயத்திற்கு நாம் நிறுத்திவிட்டு மற்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
பாஞ்சாலத்தில் நடந்த டயர் ஆட்சிக் கொடுமைகளைக் குறித்து காங்கிரஸ் விசாரணையைத் தொடங்கிய அச்சமயத்தில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. கிலாபத் பிரச்சனையைக் குறித்து ஆலோசிப்பதற்காக டில்லியில் நடக்கவிருந்த ஹிந்து, முஸ்லிம் கூட்டு மகாநாட்டுக்கு வருமாறு என்னை அழைத்திருந்தார்கள். அந்த அழைப்பில் கையொப்பமிட்டிருந்தவர்களில் காலஞ்சென்ற ஹக்கீம் அஜ்மல் கான் சாகிபும், ஸ்ரீ ஆஸப் அலியும் இருந்தனர். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் அம்மகாநாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அந்த வருடம் நவம்பரில் கூடவிருந்த மகாநாட்டிற்கு அவர் உபதலைவராக இருப்பது என்று இருந்ததாகவும் எனக்கு ஞாபகம்.
கிலாபத் விஷயமாகச் செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தினால் ஏற்பட்ட நிலைமையைக் குறித்தும், யுத்த சமாதான வைபவங்களில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்துகொள்ளுவதா என்பதைப் பற்றியும் அம்மகாநாடு விவாதிக்க இருந்தது. அழைப்புக் கடிதத்தில் இன்னுமொன்றும் கூறியிருந்தார்கள். மகாநாட்டில் கிலாபத் விஷயம் மாத்திரமே அன்றிப் பசுப் பாதுகாப்பைப் பற்றிய விஷயமும் விவாதிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். பசுப் பிரச்சனையைக் குறித்து இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அழைப்புக்குப் பதிலளித்து நான் எழுதிய கடிதத்தில் மகாநாட்டுக்கு வருவதற்கு என்னாலான முயற்சியைச் செய்வதாகக் கூறினேன். அதோடு, இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாகக் கவனிக்கவோ அல்லது பேரம் பேசும் உணர்ச்சியுடன் அவற்றைக் கலப்பதோ சரியல்ல என்றும், அதனதன் தகுதிக்கு ஏற்பத் தனித்தனியாக இவ்விஷயங்களை விவாதித்து முடிவுக்கு வர வேண்டும் என்றும் எழுதினேன்.
இவ்விதமான எண்ணங்களோடேயே நான் அம்மகாநாட்டிற்குச் சென்றேன். அதற்குப் பின்னால் நடந்த மகாநாடுகளுக்கு பத்தாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள். அவைகளைப் போல் இம்மகாநாடு இல்லாவிட்டாலும், இதற்கும் அநேகர் வந்திருந்தார்கள். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் மகாநாட்டுக்கு வந்திருந்தார். மேலே சொன்ன விஷயத்தைக் குறித்து அவருடன் விவாதித்தேன். என்னுடைய வாதத்தை அவரும் ஏற்றுக்கொண்டார். மகாநாட்டில் அதை எடுத்துக்கூறும் வேலையை அவர் எனக்கே அளித்தார். இதேபோல காலஞ்சென்ற ஹக்கீம் சாகிப்பிடமும் இதைப் பற்றி விவாதித்தேன். மகாநாட்டின் முன்பு நான் பேசியபோது கூறியதாவது:
“கிலாபத் பிரச்சனைக்குள்ள அடிப்படை, நியாயமானது, நீதியானது என்று நம்புகிறேன். அப்படி இருக்குமாயின் அரசாங்கம் மோசமான அநீதியையே இதற்கு முன்னால் செய்திருக்கிறது என்றால், கிலாபத் தவறுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோருவதில் முஸ்லிம்களுடன் ஒன்றுபட்டு நிற்க ஹிந்துக்களும் கடமைப் பட்டிருக்கிறார்கள். கிலாபத் பிரச்னைக்கு ஹிந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு விலை கொடுப்பதுபோல பசுவைக் கொல்லுவதில்லை என்று முஸ்லிம்கள் சொல்லுவது எவ்விதம் சரியல்லவோ, அதேபோல முஸ்லிம்களுடன் இதில் ஒரு சமரசத்திற்கு வர இச்சந்தர்ப்பத்தை ஹிந்துக்கள் பயன்படுத்திக் கொள்ளுவதும் அழகல்ல. ஆகையால், இதன் சம்பந்தமாக பசுப் பிரச்னையைக் கொண்டு வருவதே முறையாகாது. ஆனால், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்தும், அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் அவர்கள்பால் கொள்ள வேண்டிய கடமை உணர்ச்சியினாலும், முஸ்லிம்கள் தாங்களாகவே விரும்பி பசுவைக் கொல்லுவதை நிறுத்தி விடுவார்களானால், அது முற்றும் வேறான விஷயம். இது முஸ்லிம்களுக்குப் பெருந்தன்மையாவதோடு அவர்களுக்கு அதிகக் கௌரவத்தையும் அளிக்கும். இவ்விதம் ஒரு சுயேச்சையான முடிவுக்கு வருவது முஸ்லிம்களின் கடமை. இது அவர்கள் நடத்தையின் கௌரவத்தையும் உயர்த்தும். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ற வகையில் முஸ்லிம்கள், பசுக்களைக் கொல்லுவதை நிறுத்துவதாயிருந்தால் கிலாபத் விஷயத்தில் ஹிந்துக்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் அவ்விதம் செய்ய வேண்டும். நிலைமை இதுவாகையால், இவ்விரு விஷயங்களையும் தனித்தனியாக விவாதித்து முடிவுக்கு வர வேண்டும். இந்த மகாநாட்டில் கிலாபத் பிரச்னையைக் குறித்து மாத்திரமே விவாதிக்க வேண்டும்.”
மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு என்னுடைய வாதம் சரி என்று பட்டது. இதன் பலனாக, பசுப் பாதுகாப்பு விஷயம் இம்மகாநாட்டில் விவாதிக்கப்படவில்லை. ஆனால், என்னுடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மௌலானா அப்துல் பாரிசாகிப், “நமக்கு ஹிந்துக்கள் உதவி செய்தாலும் உதவி செய்யாது போனாலும் சரி, நாம் ஹிந்துக்களின் நாட்டினர் என்ற வகையில், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்து முஸ்லிம்கள் பசுக்களைக் கொல்வதை விட்டுவிட வேண்டும்” என்றார். பசுக்களைக் கொல்லுவதை அவர்கள் அடியோடு விட்டுவிடுவார்கள் என்றே அநேகமாகத் தோன்றியது.
கிலாபத் தவறு பற்றிய விஷயத்துடன் பாஞ்சால விஷயத்தையும் பிணைத்துவிட வேண்டும் என்று சிலர் ஒரு யோசனை கூறினார்கள். அந்த யோசனையை நான் எதிர்த்தேன். பாஞ்சாலப் பிரச்னை உள்நாட்டு விஷயமாகையால், யுத்த சமாதான வைபவங்களில் கலந்து கொள்ளுவதா, இல்லையா என்று நாம் முடிவுக்கு வருவதற்கு இது நமக்குப் பொருத்தமானதாகாது என்றேன். கிலாபத் பிரச்னை, யுத்த சமாதான ஒப்பந்தம் காரணமாக நேரடியாக எழுந்துள்ளது. அதில் போய் உள்நாட்டு விஷயத்தையும் கலந்து விடுவோமாயின், பகுத்தறியாத பெருங் குற்றத்தை செய்தவர்களாவோம் என்றேன். என்னுடைய வாதத்தை எல்லோரும் எளிதில் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
இக்கூட்டத்தில் மௌலானா ஹஸரத் மோகானி பிரசன்னமாகி இருந்தார். அதற்கு முன்பே அவரை நான் அறிவேன். ஆனால், அவர் எவ்வளவு சிறந்த போராட்ட வீரர் என்பதை நான் அங்கேதான் தெரிந்துகொண்டேன். ஆரம்பம் முதற்கொண்டே நாங்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தோம். அநேக விஷயங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தொடர்ந்து இருந்து வந்தன.
இம்மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேறின. அத்தீர்மானங்களில் ஒன்று, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதேசி விரதம் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அதை அனுசரிப்பதையொட்டி, அந்நியச் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அப்பொழுது கதர், இன்னும் அதற்குரிய ஸ்தானத்தை அடைந்து விடவில்லை. ஹஸரத் சாகிப் ஒப்புக்கொண்டு விடக்கூடிய தீர்மானமன்று இது. கிலாபத் விஷயத்தில் நீதி மறுக்கப்படுமானால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர் நோக்கம். ஆகையால், முடிந்தவரையில் பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரமே பகிஷ்கரிக்க வேண்டும் என்று போட்டித் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். அந்தக் கொள்கையே தவறானது என்றும், அது அனுபவ சாத்தியமில்லை என்றும் கூறி நான் அத்தீர்மானத்தை எதிர்த்தேன். நான் அப்பொழுது கூறிய வாதங்கள் இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்தவை. அகிம்சையைப் பற்றிய என் கருத்துக்களையும் மகாநாட்டில் கூறினேன், நான் கூறிய வாதங்கள் கூட்டத்தில் இருந்தோரின் உள்ளங்களை மிகவும் கவர்ந்தன என்பதைக் கண்டேன்.
எனக்கு முன்னால் ஹஸரத் மோகானி பேசினார். அவருடைய பேச்சுக்கு பலத்த ஆரவாரமான வரவேற்புகள் இருந்ததால் என் பேச்சு எடுபடாமலேயே போய்விடுமோ என்று அஞ்சினேன். என் கருத்தை மகாநாட்டின் முன் கூறாது போனால், கடமையில் தவறியவனாவேன் என்று நான் கருதியதனாலேயே பேசத் துணிந்தேன். ஆனால், அங்கிருந்தவர்கள் என் பிரசங்கத்தை அதிகக் கவனமாகக் கேட்டதோடு, மேடையில் இருந்தவர்கள் அதற்கு முழு ஆதரவையும் அளித்தது எனக்கு வியப்பும் ஆச்சரியமுமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராகப் பலர் எழுந்து என் கருத்தை ஆதரித்துப் பேசினார்கள். பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரம் பகிஷ்கரிப்பது என்றால், அந்த நோக்கம் நிறைவேறாது போவதோடு, தாங்கள் நகைப்புக்கு இடமானவர்களாகவும் ஆகி விட நேரும் என்பதைத் தலைவர்கள் காண முடிந்தது. பிரிட்டிஷ் சாமான் ஏதாவது ஒன்றேனும் தம் உடம்பில் இல்லாதவர் ஒருவர்கூட அம் மகாநாட்டில் இல்லை. ஆகையால், தாங்களே அனுசரிக்க முடியாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதால், தீமையைத் தவிர வேறு எதுவும் இராது என்பதைக் கூட்டத்திலிருந்த அநேகர் உணர்ந்து கொண்டனர்.
“அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பது என்பது மாத்திரம் நமக்குத் திருப்தி அளித்துவிட முடியாது. ஏனெனில், அந்நியத் துணியை நாம் சரியானபடி பகிஷ்கரிப்பதற்கு, நமக்குத் தேவையான சுதேசித் துணிகளை நாமே தயாரித்துக்கொள்ள இவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை யாரால் சொல்ல முடியும்? பிரிட்டிஷாரை உடனே பாதிக்கக்கூடிய ஏதாவது ஒன்று நமக்கு வேண்டும். உங்கள் அந்நியத் துணிப் பகிஷ்காரம் வேண்டுமானால், அப்படியே இருக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், அதோடு அதைவிடத் துரிதமான, வேகமான ஒன்றையும் எங்களுக்குக் கொடுங்கள்” என்று மௌலானா ஹஸரத் மோகானி பேசினார்.
அவர் பேச்சை நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பது என்பதற்கு மேலாக மற்றொரு புதிய திட்டமும் அவசியம் வேண்டும் என்பதை உணர்ந்தேன். அந்நியத் துணியை உடனே பகிஷ்கரித்து விடுவது என்பது அச்சமயம் அசாத்தியமானது என்றும் எனக்குத் தோன்றியது. நான் விரும்பினால், நமது துணித் தேவைக்குப் போதுமான துணி முழுவதற்கும் வேண்டிய கதரை நாம் உற்பத்தி செய்ய முடியும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. இதைப் பின்னால் தான் கண்டுபிடித்தேன். மேலும், அந்நியத் துணிப் பகிஷ்காரத்திற்கு ஆலைகளை மாத்திரம் நம்பி இருப்போமாயின், நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதை அப்பொழுதே நான் அறிவேன். மௌலானா தமது பிரசங்கத்தை முடித்த சமயத்தில் நான் இன்னும் இந்த மனக்குழப்பத்திலேயே இருந்து வந்தேன்.
பேசுவதற்கு எனக்கு ஹிந்தி அல்லது உருதுமொழியில் தக்க சொற்கள் அகப்படாமல் இருந்தது, பெரிய இடையூறாக இருந்தது. முக்கியமாக வடநாட்டு முஸ்லிம்களைக் கொண்ட ஒரு கூட்டத்தின் முன்பு, விவாதங்களோடு கூடிய பிரசங்கத்தை நான் செய்ய நேர்ந்தது இதுவே முதல் தடவையாகும். கல்கத்தாவில் முஸ்லிம் லீக் கூட்டத்தில் நான் உருதுவில் பேசியிருக்கிறேன். ஆனால், அங்கே பேசியது சில நிமிடங்களே. அதோடு உணர்ச்சியோடு கூடிய ஒரு கோரிக்கையை அங்கே கூடி இருந்தோருக்கு வெளியிடுவதே அப்பேச்சின் நோக்கம். அதற்கு நேர்மாறாக இங்கே, விரோதமான கூட்டத்தினரல்லவாயினும் குற்றங்குறை கண்டுபிடிக்கக் கூடியதான ஒரு கூட்டத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு என் கருத்தை விளக்கிக் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டியும் இருந்தது. ஆனால், எனக்கு இருந்து வந்த சங்கோஜத்தை எல்லாம் முன்பே விட்டுவிட்டேன். குற்றமற்ற நாசுக்கான டில்லி உருதுவில் பிரசங்கம் செய்வதற்காக நான் – அங்கே போனவன் அல்ல. ஆனால், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் என் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவே அங்கே சென்றேன். இதில் நான் வெற்றியும் பெற்றேன். ஹிந்தி- உருது மாத்திரமே இந்தியாவின் பொது மொழியாக இருக்க முடியும் என்ற உண்மைக்கு இக்கூட்டம் எனக்கு நேரடியான ருசுவாக இருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களின் மனத்தை நான் எவ்வளவு தூரம் கவர்ந்தேனோ அதேபோல நான் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் கவர்ந்திருக்க முடியாது. மௌலானா தமது சவாலை வெளியிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கவும் மாட்டார். அப்படியே அவர் வெளியிட்டிருந்தாலும், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொண்டும் இருக்க மாட்டேன்.
புதிய கருத்தை எடுத்துச் சொல்லுவதற்கு வேண்டிய ஹிந்தி அல்லது உருதுச் சொற்கள் எனக்கு அகப்படவில்லை. இது ஓரளவுக்கு எனக்குக் கஷ்டமாகவே இருந்தது. கடைசியாக, அக்கருத்தை ‘நான் கோவாப்பரேஷன்’ (ஒத்துழையாமை) என்ற ஆங்கிலச் சொல்லால் விவரித்தேன். முதன்முதலாக இக்கூட்டத்திலேயே இச்சொல்லை நான் உபயோகித்தேன். மௌலானா பேசிக்கொண்டிருக்கும் போதே எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அரசாங்கத்தை ஆயுதங்களைக் கொண்டு எதிர்ப்பதென்பது அசாத்தியமானது; விரும்பத்தக்கதல்ல என்றால், அநேக காரியங்களில் அந்த அரசாங்கத்துடன் அவர் ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் போது, சரியானபடி அதை எதிர்ப்பது என்று அவர் பேசிக்கொண்டிருப்பது வீண் காரியம் என்று எண்ணினேன். ஆகையால், அந்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்காமல் இருந்து விடுவது ஒன்றே அதற்கு உண்மையான எதிர்ப்பாகும் என்றும் எனக்குத் தோன்றியது. இவ்விதம் ஒத்துழையாமை என்ற சொல்லைப் பிரயோகித்தேன். ஆனால், அச்சொல்லில் அடங்கியுள்ள அநேக விளைவுகளைக் குறித்து அப்பொழுது எனக்குத் தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆகையால், நான் விவரங்களைப் பற்றிக் கவனிக்கவே இல்லை. பின்வருமாறு மாத்திரம் சொன்னேன்:
“முஸ்லிம்கள் மிக முக்கியமானதோர் தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கிறார்கள். யுத்த சமாதான ஷரத்துக்கள் அவர்களுக்குச் சாதகமில்லாதவைகளாக இருக்குமாயின் – ஆண்டவன் அதைத் தவிர்ப்பாராக – அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். இவ்விதம் ஒத்துழைப்பை நிறுத்தி விடுவது மக்களுக்குள்ள பறிக்க முடியாத ஓர் உரிமை ஆகும். அரசாங்கம் அளித்திருக்கும் பட்டங்களையும் கௌரவங்களையும் தொடர்ந்து வைத்து கொண்டிருக்கவோ, அரசாங்க உத்தியோகத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கவோ நாம் கடமைப் பட்டிருக்கவில்லை. கிலாபத் போன்ற மிகப் பெரியதோர் லட்சியத்தில் அரசாங்கம் நமக்குத் துரோகம் செய்யுமாயின், அதனுடன் நாம் ஒத்துழையாமை செய்யாமல் இருப்பதற்கில்லை. ஆகையால், நமக்கு அரசாங்கம் துரோகம் செய்யுமானால், அதனுடன் ஒத்துழைக்காமல் இருக்க நமக்கு உரிமை உண்டு.”
ஆனால், ஒத்துழையாமை என்ற சொல் எங்கும் புழக்கத்துக்கு வரச் சில மாதங்களாயின. அப்போதைக்கு அது அம்மகாநாட்டின் நடவடிக்கைகளில் மறைந்து போயிற்று. உண்மையில் ஒரு மாதத்திற்குப் பின்னால், அமிர்தசரஸில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் ஒத்துழைப்புத் தீர்மானத்தை நான் ஆதரித்தபோது, துரோகம் செய்யவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவ்வாறு செய்தேன்.
$$$
37. அமிர்தசரஸ் காங்கிரஸ்
ராணுவ ஆட்சிக் காலத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நூற்றுக் கணக்கான பஞ்சாபிகளை பாஞ்சால அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருந்து விட முடியாது. இவர்களெல்லாம், பெயரளவிலேயே கோர்ட்டுகளாக இருந்த மன்றங்களில் அரைகுறையான சாட்சியங்களைக் கொண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இப் பெரிய அநீதியைக் குறித்து எங்கே பார்த்தாலும் கண்டனங்கள் எழுந்ததால், அவர்களை மேற்கொண்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது அசாத்தியம் என்று ஆகிவிட்டது. காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு முன்னாலேயே சிறையில் இருந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலை செய்யப் பட்டுவிட்டனர். காங்கிரஸ் மகாநாடு நடந்துகொண்டிருந்த போதே லாலா ஹரி கிருஷ்ணலாலும் மற்ற தலைவர்களும் விடுதலையாயினர். அலி சகோதரர்களும் சிறையிலிருந்து நேரே காங்கிரஸுக்கு வந்தார்கள். மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பண்டித மோதிலால் நேரு தமக்கு ஏராளமான வருமானத்தை அளித்து வந்த வக்கீல் தொழிலைத் தியாகம் செய்துவிட்டு பாஞ்சாலத்தையே தமது தலைமை ஸ்தானமாகக் கொண்டு மகத்தான சேவை செய்திருந்தார். காங்கிரஸ் மகாநாட்டுக்கு அவரே தலைவர். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி வரவேற்பு கமிட்டித் தலைவராக இருந்தார்.
இந்தச் சமயம் வரையில் காங்கிரஸின் வருடாந்திர நடவடிக்கையில் நான் கொண்ட பங்கு, தேசீய மொழியில் என் பிரசங்கத்தைச் செய்து ஹிந்தியை அனுசரிக்கும்படி வற்புறுத்தி வந்ததே ஆகும். அந்தப் பிரசங்கங்களில் வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர் குறைகளைக் குறித்தும் எடுத்துக் கூறி வந்தேன். இந்த ஆண்டு அதைவிட நான் அதிகமாக எதுவும் செய்ய வேண்டி இருக்கும் என்றும் நான் எதிர் பார்க்கவில்லை. ஆனால், இதற்கு முன்னால் அநேக சமயங்களில் நேர்ந்திருப்பதைப் போன்றே இச்சமயமும் பொறுப்பான வேலை எனக்கு வந்து சேர்ந்தது.
புதிய அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து மன்னரின் அறிவிப்பு அப்பொழுதுதான் வெளியாயிற்று. எனக்குக் கூட அது முற்றும் திருப்தியளிப்பதாக இல்லை. மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அது திருப்தியை அளித்தது. அளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறைபாடுடையவைகளே யாயினும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே என்று அச்சமயம் நான் எண்ணினேன். மன்னரின் அறிக்கையிலும், அதன் பாஷையிலும் லார்டு சின்ஹாவின் கைத்திறன் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இது எனக்குச் சிறிதளவு நம்பிக்கையையும் அளித்தது. ஆனால், காலஞ்சென்ற லோகமான்யர், தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் போன்ற அனுபவமுள்ள தீரர்களோ, அந்தச் சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்று தலையை அசைத்து விட்டார்கள். பண்டித மாளவியாஜி நடுநிலைமை வகித்தார்.
பண்டித மாளவியாஜி, தமது சொந்த அறையிலேயே நான் தங்கும்படி செய்தார். ஹிந்து சர்வகலாசாலை அஸ்திவார விழாச்சமயம் அவருடைய எளிய வாழ்க்கையைக் குறித்து நான் கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தேன். ஆனால், இச்சமயம் அவருடைய அறையிலேயே அவருடன் இருந்து வந்ததால், அவருடைய அன்றாட வாழ்க்கை முறையை மிக நுட்பமாகக் கவனிக்க என்னால் முடிந்தது. நான் கண்டவை, எனக்கு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் அளித்தன. ஏழைகள் எல்லோரும் தாராளமாக வந்து இருக்கக்கூடிய தரும சத்திரத்தைப் போன்றே அவரது அறை காட்சி அளித்தது. அந்த அறையில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய் விட முடியாது. உள்ளே அவ்வளவு கூட்டம். எந்த நேரத்திலும் யாவரும் அவர் அறைக்குள் போகலாம். விரும்பும் வரையில் அவருடன் தாராளமாக பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகலாம். இந்த அறையின் ஒரு மூலையில் என்னுடைய சார்ப்பாய் (நார்க் கட்டில்) மிகவும் கம்பீரமாகக் கிடந்தது. ஆனால், மாளவியாஜியின் வாழ்க்கை முறையை இந்த அத்தியாயத்தில் நான் வர்ணித்துக்கொண்டு இருப்பதற்கில்லை. நான் கூற வந்த விஷயத்திற்கே நான் திரும்ப வேண்டும்.
இவ்வாறு தினமும் மாளவியாஜியுடன் நான் பழக முடிந்தது. ஒரு மூத்த சகோதரரைப் போன்று அவர், பலதரப்பட்ட கட்சியினரின் கருத்துக்களையும் அன்போடு எனக்கு விளக்கிச் சொல்லி வந்தார். அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றிய தீர்மானத்தின் மீது மகாநாட்டின் நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டாக வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதைக் கண்டேன். பாஞ்சால அட்டூழியங்களைக் குறித்த காங்கிரஸின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பில் நானும் பங்கு கொண்டிருந்ததால், அதன் சம்பந்தமாக இனி மேல் செய்ய வேண்டியவைகளையும் நான் கவனித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். அது சம்பந்தமாக அரசாங்கத்துடன் விவகாரம் நடத்தியாக வேண்டும். அதேபோல கிலாபத் பிரச்னையும் இருந்தது. மேலும் ஸ்ரீ மாண்டேகு, இந்தியாவின் லட்சியத்திற்குத் துரோகம் செய்ய மாட்டார். துரோகம் செய்யப்படுவதற்கு அனுமதிக்க மாட்டார் என்றும் அச்சமயம் நான் நம்பியிருந்தேன். அலி சகோதரர்களும் மற்ற கைதிகளும் விடுதலை செய்யப்பட்டது நல்ல சகுனம் என்றும் எனக்குத் தோன்றியது. இந்த நிலைமையில் அரசியல் சீர்திருத்தங்களை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தைச் செய்வதே சரியான காரியம் என்றும் எண்ணினேன். ஆனால், தேசபந்து சித்தரஞ்சன் தாஸோ, அரசியல் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல, திருப்திகரமானவை அல்ல என்று, அடியோடு நிராகரித்து விடவேண்டியதே என்ற கருத்தில் உறுதியுடன் இருந்தார். காலஞ்சென்ற லோகமான்யரோ, அநேகமாக நடுநிலைமையே வகித்தார். ஆனால், தேசபந்து அங்கீகரிக்கும் எந்தத் தீர்மானத்திற்கும் சாதகமாகத் தமது ஆதரவை அளித்து விடுவதென்றும் தீர்மானித்திருந்தார்.
இத்தகைய அனுபவமுள்ள, நீண்ட காலம் சிறந்த தேசத் தொண்டாற்றி மக்களின் மதிப்பைப் பெற்றிருந்த தலைவர்களின் கருத்துக்கு மாறான கருத்தை நான் கொள்ளுவது என்ற எண்ணமே என்னால் சகிக்க முடியாததாக இருந்தது. ஆனால், அதே சமயத்தில் என்னுடைய மனச்சாட்சியின் குரலும் எனக்குத் தெளிவாக ஒலித்தது. காங்கிரஸிலிருந்து ஓடிப் போய்விடவே நான் முயன்றேன். காங்கிரஸில் இனி நடக்கவிருக்கும் நடவடிக்கைகளில் நான் கலந்துகொள்ளாது இருந்து விடுவதே எல்லோருக்கும் நன்மையாக இருக்கும் என்று பண்டித மாளவியாஜியிடமும் மோதிலால்ஜியிடமும் சொன்னேன். அவ்வாறு நான் செய்தால், மதிப்பிற்குரிய தலைவர்களுக்கு மாறான கருத்தை நான் காட்டிக் கொள்ளுவதிலிருந்து நான் காப்பாற்றப்பட்டவனும் ஆவேன் என்றேன்.
ஆனால், என் யோசனையை இவ்விரு தலைவர்களும் அங்கீகரிக்கவில்லை. என்னுடைய இந்த யோசனை எப்படியோ லாலா ஹரிகிருஷ்ண லாலின் காதுகளுக்கும் எட்டிவிட்டது. “அப்படிச் செய்யவே கூடாது. பாஞ்சாலத்தினரின் உணர்ச்சிகளை அது மிகவும் புண்படுத்தும்” என்றார் அவர். இவ் விஷயத்தைக் குறித்து லோகமான்யர், தேசபந்து, ஸ்ரீ ஜின்னா ஆகியவர்களுடன் விவாதித்தேன். ஆனால், எந்த வழியையும் காண முடியவில்லை. முடிவாக என் துயர நிலைமையை மாளவியாஜியிடம் எடுத்துக் கூறினேன். “சமரசம் ஏற்படும் என்பதற்கான எதையும் நான் காணவில்லை. என் தீர்மானத்தை நான் கொண்டு வருவதாயின், அதன்மீது வாக்கெடுக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு வேண்டிய ஏற்பாடு எதுவும் அங்கிருப்பதாக நான் காணவில்லை. காங்கிரஸ் மகாநாட்டில் இதுவரையில் கை தூக்கச் சொல்லி வாக்கெடுக்கும் முறையே அனுசரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பிரதிநிதிகளுக்கும், மகாநாட்டை வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களெல்லாம் அப்பொழுது போய்விடுவதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இத்தகைய பெரிய கூட்டங்களில் வாக்குகளை எண்ணுவதற்கான சாதனங்களும் நம்மிடம் இல்லை. வோட்டு எடுக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், அதற்கு வேண்டிய வசதியும் நம்மிடம் இல்லை, அதில் அர்த்தமும் இல்லை” என்று சொன்னேன். லாலா ஹரிகிருஷ்ண லாலே இதில் கை கொடுக்க முன்வந்தார். வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாக ஒப்புக் கொண்டார். “வாக்கெடுக்கும் தினத்தன்று, வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களைக் காங்கிரஸ் பந்தலில் அனுமதிக்க மாட்டோம். வாக்குகளை எண்ணிக் கணக்கிடுவதைப் பொறுத்த வரையில் நான் கவனித்துக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் மாத்திரம் காங்கிரஸுக்கு வராமல் இருந்து விடக் கூடாது” என்றார், அவர்.
நான் உடன்பட்டேன். என் தீர்மானத்தைத் தயாரித்தேன். உள்ளத்தில் நடுங்கிக்கொண்டே அதைப் பிரேரிக்கவும் முற்பட்டேன். பண்டித மாளவியாஜியும் ஸ்ரீ ஜின்னாவும் அதை ஆதரிக்க இருந்தனர். எங்களுடைய கருத்து வேற்றுமையில் மனக்கசப்பு என்பது ஒரு சிறிதேனும் இல்லாமல் இருந்த போதிலும், நியாயத்தை எடுத்துக் கூறியதைத் தவிர எங்கள் பிரசங்கங்களில் வேறு எதுவுமே இல்லையென்றாலும், அபிப்பிராய பேதம் இருக்கிறது என்பதை மக்கள் சகிக்கவே இல்லை. அது அவர்களுக்கு வேதனையை அளித்தது என்பதைக் கண்டேன். பூரணமான ஒற்றுமையையே அவர்கள் விரும்பினார்கள்.
ஒரு பக்கம் பிரசங்கங்கள் செய்யப்பட்டு வந்த அதே சமயத்தில் மற்றொரு பக்கத்தில், அபிப்பிராய பேதத்தில் சமரசம் செய்து வைப்பதற்கு மேடையில் முயற்சிகள் நடந்துகொண்டு வந்தன. அதற்காக, தலைவர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டு வந்தனர். ஒற்றுமையை உண்டாக்குவதற்கு மாளவியாஜி எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். அச்சமயத்தில் ஜெயராம்தாஸ், தீர்மானத்திற்குத் தமது திருத்தத்தை என்னிடம் கொடுத்தார். தமக்குள்ள இனிய சுபாவத்துடன், பிளவு ஏற்படும் இப்பெரிய தொல்லையிலிருந்து பிரதிநிதிகளைக் காப்பாற்றும் படியும் என்னைக் கேட்டுக்கொண்டார். அவருடைய திருத்தம் எனக்குப் பிடித்திருந்தது. இதற்கிடையில் நம்பிக்கைக்கு எங்காவது இடம் இருக்கிறதா என்று மாளவியாஜியின் கண் தேடிக்கொண்டே இருந்தது. ஜெயராம்தாஸின் திருத்தம் இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக எனக்குத் தோன்றுகிறது என்று அவரிடம் நான் கூறினேன்.
அடுத்தபடியாக அத்திருத்தம் லோகமான்யரிடம் காட்டப்பட்டது. “ஸி.ஆர்.தாஸ் ஒப்புக்கொள்ளுவதாக இருந்தால், எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை” என்றார் அவர். முடிவாக தேசபந்து தாஸும் தமது பிடியைத் தளர்த்தி அங்கீகாரத்திற்காக ஸ்ரீ விபினசந்திரபாலை நோக்கினார். மாளவியாஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. திருத்தத்தைக் கொண்ட காகிதச் சீட்டை அவர் பிடுங்கிக்கொண்டு, “சரி” என்று தேசபந்து திட்டமாகத் தமது ஆதரவை அறிவிப்பதற்கு முன்னாலேயே, “சகோதரப் பிரதிநிதிகளே! சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிய நீங்கள் ஆனந்த மடைவீர்கள்” என்று கோஷித்தார். பிறகு அங்கே கண்ட காட்சி வர்ணிக்க முடியாததாகும். கூடியிருந்தவர்களின் கரகோஷம் பந்தலையே பிளந்துவிடும் போல் எழுந்தது. இதுகாறும் கவலை தேங்கியிருந்த முகங்கள் ஆனந்தத்தால் பிரகாசமடைந்தன.
திருத்தத் தீர்மானத்தைக் குறித்து இங்கே கூறிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அத்தியாயங்களில் நான் விவரித்து வரும் என்னுடைய சத்தியசோதனையின் ஒரு பகுதியாக மேற்கண்ட தீர்மானத்தை எவ்வாறு நான் கொண்டுவர நேர்ந்தது என்பதை விவரிப்பதே இங்கே என்னுடைய நோக்கமாகும். இந்தச் சமரசம் என்னுடைய பொறுப்பை மேலும் அதிகரித்தது.
$$$
38. காங்கிரஸ் பணி ஆரம்பம்
அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டது, காங்கிரஸின் ராஜீய காரியங்களில் என்னுடைய உண்மையான பிரவேசம் என்றே நான் கொள்ள வேண்டும். இதற்கு முந்திய காங்கிரஸ் மகாநாடுகளுக்கு நான் போனதெல்லாம், காங்கிரஸினிடம் எனக்குள்ள பக்தியை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போன்றதே அன்றி வேறல்ல. அந்தச் சமயங்களில் காங்கிரஸின் சாதாரணப் போர் வீரன் என்று தான் நான் இருந்தேனேயல்லாமல் எனக்கென்று குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. சாதாரணச் சிப்பாய் என்பதற்கு அதிகமாக எதையும் நான் விரும்பியதும் இல்லை. இரண்டொரு காரியங்களைச் செய்யும் தன்மை என்னிடம் இருக்கக்கூடும். அது காங்கிரஸுக்குப் பயன்படும் என்று அமிர்தசரஸ் அனுபவம் காட்டியது. பாஞ்சால விசாரணை சம்பந்தமாக நான் செய்த வேலை, காலஞ்சென்ற லோகமான்யர், தேசபந்து, பண்டித மாளவியாஜி ஆகியவர்களுக்குத் திருப்தியளித்தது என்பதை, அதற்கு முன்னாலேயே என்னால் காண முடிந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டிக்கு அனுப்பும் தீர்மானங்களைக் குறித்து ஆலோசித்த தலைவர்களின் தனிக் கூட்டங்களுக்கு வழக்கமாக என்னையும் அழைப்பார்கள். தலைவர்களின் விசேட நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களையும், யாருடைய சேவை தங்களுக்குத் தேவைப் படுகின்றதோ அவர்களையும் மாத்திரமே அத்தகைய கூட்டங்களுக்கு அழைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்படாதவர்கள் சிலரும் சில சமயங்களில் இக்கூட்டங்களுக்கு வந்து விடுவதும் உண்டு.
அடுத்த ஆண்டில் ஒரு காரியங்களைச் செய்வதில் நான் சிரத்தை கொண்டேன். அவற்றைச் செய்வதில் எனக்கு விருப்பமும் ஆற்றலும் இருந்தன. அவற்றில் ஒன்று, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஞாபகார்த்தச் சின்னம். இதைச் செய்வதென்று காங்கிரஸில் மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த நிதிக்கு என்னையும் ஒரு தருமகர்த்தாவாக நியமித்தார்கள்.
பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர் என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் அவருக்கு நான் அதிகம் பின்வாங்கியவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு இருந்த ஆற்றலைக் கண்டுபிடித்தேன். என்றாலும், சுதேச மன்னர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்துவிடுவது மாளவியாஜிக்கு இருந்த இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்திற்கு ராஜாக்களிடத்திலும் மகாராஜாக்களிடமும் பணம் கேட்பதற்கில்லை என்பதை நான் அறிவேன். ஆகவே, இதற்கு நிதி திரட்டும் முக்கியப் பொறுப்பு, நான் எதிர்பார்த்ததைப் போலவே என் பேரில் தான் விழுந்தது. தாராள குணமுள்ள பம்பாயின் மக்கள் ஏராளமாகப் பணம் கொடுத்தார்கள். ஆகையால், இந்த ஞாபகார்த்தச் சின்னத்தின் டிரஸ்ட்டிடம் பாங்கில் இப்பொழுது பெருந்தொகை இருக்கிறது. ஆனால், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்களின் ரத்தங்கள் கலந்தோடிய அந்த இடத்தில் எந்த விதமான புனித ஞாபகச் சின்னத்தை எழுப்புவது என்பதே இன்று நாட்டின் முன்பிருக்கும் பிரச்னை. இந்த மூன்று சமூகங்களும் ஒற்றுமையினாலும் அன்பினாலும் பிணைக்கப் பட்டிருப்பதற்கு பதிலாக ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, நினைவுச் சின்ன நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது நாட்டு மக்களுக்கு இப்பொழுது புரியாமல் இருந்து வருகிறது.
தீர்மானங்களைத் தயாரிப்பதில் எனக்கு இருந்த ஆற்றல், காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மற்றொன்று ஆகும். எதையும் சுருக்கமாகக் கூறும் ஆற்றலை, நீண்ட கால அனுபவத்தினால் நான் பெற்றிருந்தேன். இதை காங்கிரஸ் தலைவர்கள் கண்டுகொண்டார்கள். அப்பொழுது இருந்த காங்கிரஸ் அமைப்பு விதிகள், கோகலே தயாரித்து வைத்துவிட்டுப் போன ஆஸ்தியாகும். காங்கிரஸ் இயந்திரம் நடந்துகொண்டு போவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சில விதிகளை அவர் அமைத்திருந்தார். இந்த விதிகளைத் தயாரித்ததைப் பற்றிய ருசிகரமான சரித்திரத்தைக் கோகலேயின் வாய்மொழியாலேயே நான் கேட்டிருக்கிறேன். காங்கிரஸின் வேலைகள் மிக அதிகமாகி விட்ட இக்காலத்திற்கு இந்த விதிகள் போதுமானவைகளே அன்று என்பதை இப்பொழுது ஒவ்வொருவரும் உணர ஆரம்பித்து விட்டனர். இவ்விஷயம் ஆண்டுதோறும் காங்கிரஸின் ஆலோசனைக்கு வந்து கொண்டும் இருந்தது.
காங்கிரஸின் ஒரு மகாநாட்டிற்கும் மற்றொரு மகாநாட்டிற்கும் இடையிலும், ஓர் ஆண்டில் புதிதாக ஏற்படக்கூடிய நிலைமைகளிலும், வேலை செய்வதற்கு அச்சமயம் காங்கிரஸில் எந்தவிதமான ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. அப்பொழுதிருந்த விதிகளின்படி, காரியதரிசிகள் மூவர் உண்டு. ஆனால், அவர்களில் ஒருவர் தான் காங்கிரஸின் வேலைகளைக் கவனிப்பார். அவரும் முழு நேரமும் அவ்வேலையைக் கவனிப்பவரல்ல. அவர் ஒருவரே எவ்விதம் காங்கிரஸ் காரியாலயத்தை நடத்தி, எதிர்காலத்தைக் குறித்துச் சிந்தித்து, காங்கிரஸ் ஏற்றுக் கொண்டிருக்கும் பழைய பொறுப்புக்களை நிறைவேற்றி வைப்பதும் சாத்தியமாகும்? ஆகையால், அந்த ஆண்டில் இந்த விஷயம் மிக முக்கியமானது என்று எல்லோரும் கருதினார்கள். பொது விஷயங்களை யெல்லாம் காங்கிரஸ் மகாநாடே விவாதிப்பதென்றால், அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிப்பது கஷ்டம். காங்கிரஸுக்கு வரும் பிரதிநிதிகள் தொகை இவ்வளவுதான் என்பதற்கோ, ஒவ்வொரு மாகாணமும் இத்தனை பிரதிநிதிகளைத்தான் அனுப்பலாம் என்பதற்கோ எந்த வரையறையும் விதிக்கப்படவில்லை. இவ்விதம் அப்பொழுதிலிருந்த குழப்பமான நிலைமையில் ஏதாவது அபிவிருத்தி செய்தாக வேண்டியது அவசியம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். காங்கிரஸின் விதிகளை அமைக்கும் பொறுப்பை, ஒரு நிபந்தனையின் பேரில், நான் ஏற்றுக் கொண்டேன்.
பொதுமக்களிடையே அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்த இரு தலைவர்கள் லோகமான்யரும், தேசபந்துவும் என்பதைக் கண்டேன். காங்கிரஸ் விதிகளை அமைக்கும் கமிட்டியில் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் இருவரும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், விதிகள் அமைப்பு வேலையில் நேரடியாகக் கலந்து கொள்ளுவதற்கு அவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பது தெரிந்ததே. ஆகையால், விதிகள் கமிட்டியில் என்னுடன் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் இருவர் இருக்க செய்து விடவேண்டும் என்றும் யோசனை கூறினேன். இந்த யோசனையைக் காலஞ்சென்ற லோகமான்யரும், காலஞ்சென்ற தேசபந்துவும் ஏற்றுக் கொண்டார்கள். முறையே தங்கள் பிரதிநிதிகளாக ஸ்ரீமான்கள் கேல்கர், ஐ.பி. ஸென் ஆகிய இரு பெயர்களையும் கூறினர். விதிகள் அமைப்புக் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு தடவையேனும் ஒன்றுசேர முடியவில்லை. ஆனால், கடிதப் போக்குவரத்தின் மூலமே ஆலோசித்துக் கொண்டோம். முடிவாக ஒருமனதான அறிக்கையையும் சமர்ப்பித்தோம். இந்த காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் குறித்து நான் ஓரளவுக்குப் பெருமை அடைகிறேன். இந்த விதிகள் முழுவதையும் நாம் நிறைவேற்றி வைக்க முடிந்தால், இவற்றை நிறைவேற்றுவது ஒன்றின் மூலமே நாம் சுயராஜ்யத்தை அடைந்துவிட முடியும் என்று நான் கருதுகிறேன். இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் காங்கிரஸின் ராஜீய காரியங்களில் உண்மையில் நான் பிரவேசித்து விட்டேன் என்றே சொல்லலாம்.
$$$
39. கதரின் பிறப்பு
1908-இல் நான் எழுதிய இந்திய சுயராஜ்யம் (*ஹிந்த் ஸ்வராஜ்) என்ற நூலில், இந்தியாவில் வளர்ந்துகொண்டு வரும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து, கைத்தறி அல்லது கைராட்டினமே என்று எழுதினேன். அந்தச் சமயம் வரையில் கைத்தறியையோ ராட்டினத்தையோ நான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. இந்திய மக்களை வாட்டிவரும் வறுமையைப் போக்குவதற்கு உதவியாக இருக்கும் எக்காரியமும் அதே சமயத்தில் சுயராஜ்யம் ஏற்படும்படி செய்யும் என்ற கருத்தை வைத்துக்கொண்டு அப்புத்தகத்தில் இப்படி எழுதினேன்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-இல் நான் இந்தியாவுக்குத் திரும்பிய போதும்கூட கைராட்டினத்தை நான் நேராகப் பார்த்ததில்லை. சபர்மதியில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்தபோது அங்கே சில கைத்தறிகளை வைத்தோம். அவற்றை அமைத்தவுடனே ஒரு பெரிய கஷ்டமும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆசிரமத்திலிருந்த நாங்கள் எல்லோரும் உத்தியோகம், வியாபாரம் முதலியவைகளில் ஈடுபட்டிருந்தவர்களே அன்றி எங்களில் யாரும் கைத்தொழில் தெரிந்தவர்கள் அல்ல. தறிகளில் நாங்கள் வேலை செய்வதற்கு முன்னால் நெசவு வேலையை எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால், திகைத்துப் போய் எடுத்த காரியத்தை இலகுவில் விட்டு விடுகிறவரல்ல மகன்லால் காந்தி. இயந்திர விஷயங்களில் இயற்கையாகவே அவருக்கு ஆற்றல் இருந்ததால், சீக்கிரத்திலேயே அக்கலையில் அவர் முற்றும் தேர்ச்சி பெற்று விட்டார். ஒருவர் பின் ஒருவராகக் கைத்தறியில் நெய்பவர்கள் பலரை ஆசிரமத்தில் புதிதாகப் பழக்கி விட்டோம்.
எங்கள் கையால் நாங்களே நெய்துகொண்ட துணிகளைத் தான் நாங்கள் உடுத்த வேண்டும் என்பதே நாங்கள் கொண்ட லட்சியம். மில் துணியைப் போட்டுக் கொள்ளுவதை உடனே விட்டுவிட்டோம். இந்தியாவில் தயாரான நூலைக் கொண்டு கையினால் நெய்த துணிகளை மாத்திரமே அணிவது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் தீர்மானித்துக் கொண்டோம். இப்பழக்கத்தை மேற்கொண்டதால் எங்களுக்கு எவ்வளவோ அனுபவங்கள் ஏற்பட்டன. நெசவாளர்களின் வாழ்க்கை நிலையையும், எந்த அளவுக்கு அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் அறிந்தோம். தங்களுக்கு வேண்டிய நூல் கிடைப்பதில் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள், எந்தவிதமாகப் பலவிதமான மோசடிகளுக்கும் அவர்கள் இரையாகின்றனர் என்பது, கடைசியாக, அவர்களுக்குச் சதா வளர்ந்துகொண்டே போகும் கடன் நிலைமை ஆகியவைகளையும், அவர்களுடன் நேரடியான தொடர்பு கொண்டதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம்.
எங்களுடைய தேவைக்குப் போதுமான துணி முழுவதையும் உடனே நாங்களே தயாரித்துக் கொண்டுவிடும் நிலையில் நாங்கள் இல்லை. ஆகையால், கைத்தறி நெசவாளர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிக் கொள்ளுவதே நாங்கள் அடுத்தபடியாகச் செய்ய முடிந்தது. இந்திய மில் நூலைக் கொண்டு கைத்தறியில் தயாரான துணிகள், ஜவுளி வியாபாரிகளிடம் இருந்தோ, கைத்தறிக்காரர்களிடம் இருந்தோ சுலபமாகக் கிடைக்கவில்லை. இந்திய மில்கள் நயமான உயர்ந்த ரக நூல்களைத் தயாரிக்காததால், உயர்ந்த ரகத் துணிகளை யெல்லாம் வெளிநாட்டு நூலைக் கொண்டே நெய்து வந்தார்கள். இன்றுகூட, உயர்ந்த ரக நூலை இந்திய ஆலைகள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் தயாரிக்கின்றன. மிக உயர்ந்த ரக நூலை அவர்கள் தயாரிக்கவே முடியாது. எங்களுக்காக சுதேசி நூலை நெய்வதற்கு ஒப்புக் கொள்ளும் நெசவாளரை அதிகச் சிரமத்தின் போரிலேயே நாங்கள் தேடிப் பிடிக்க முடிந்தது. அவர்கள் நெய்யும் துணி முழுவதையும் ஆசிரமம் வாங்கிக் கொண்டு விடுவது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் இசைந்தார்கள். இவ்வாறு நம் ஆலைகளில் தயாரிக்கும் நூலைக் கொண்டு நெய்த துணிகளை மாத்திரமே நாங்கள் உடுத்துவது என்று தீர்மானித்து, நண்பர்களிடையே இதை நாங்கள் பிரச்சாரம் செய்ததன் மூலம், இந்திய நூல் ஆலைகளுக்காக வலிய வேலை செய்யும் ஏஜெண்டுகளாக நாங்கள் ஆனோம். இதனால், எங்களுக்கு ஆலைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர்களுடைய நிர்வாகத்தைப் பற்றிய சில விஷயங்களையும், அவர்களுக்கு இருந்த கஷ்டங்களையும் நாங்கள் அறிய முடிந்தது. தாங்கள் நூற்கும் நூலைக் கொண்டு தாங்களே நெய்து விடவும் வேண்டும் என்பதே ஆலைகளின் நோக்கம் என்பதைக் கண்டோம். கைத்தறி நெசவாளர்களிடம் அவர்களுக்கு இருந்த ஒத்துழைப்பு, விரும்பி அளிக்கும் ஒத்துழைப்பல்ல என்பதையும் தவிர்க்க முடியாத நிலையில், தாற்காலிகமாக அளிப்பதே என்பதையும் கண்டோம். இந்த நிலையில் எங்களுக்கு வேண்டிய நூலை நாங்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டோம். இதை நாங்களே செய்துகொண்டு விட்டாலன்றி, ஆலைகளை நம்பி இருப்பது என்பது இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. நூல் நூற்கும் இந்திய ஆலைகளின் தரகர்களாகத் தொடர்ந்து இருந்துகொண்டு வருவதால், நாட்டிற்கு எந்தச் சேவையையும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தோம்.
நாங்கள் சமாளித்து ஆக வேண்டியிருந்த கஷ்டங்களுக்கு முடிவே இல்லை. எப்படி நூற்பது என்பதை நாங்கள் கற்றுக் கொள்ளுவதற்குக் கைராட்டினமோ, நூற்பவரோ கிடைக்கவே இல்லை. ஆசிரமத்தில் நெய்வதற்கான நூலைக் கண்டுகள் ஆக்குவதற்கு ஒருவகை ராட்டினத்தை உபயோகித்து வந்தோம். ஆனால், இதையே நூற்கும் ராட்டையாகவும் உபயோகிக்கலாம் என்ற விஷயமே எங்களுக்குத் தெரியாது. ஒருநாள் காளிதாஸ் ஜவேரி ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார். நூற்பது எப்படி என்பதை அப்பெண் எங்களுக்குக் காட்டுவார் என்றும் சொன்னார். உடனே ஆசிரமவாசி ஒருவரை அந்தப் பெண்ணிடம் அனுப்பினோம். இவர், புதிய விஷயங்களை வெகு எளிதில் கற்றுக் கொண்டுவிடும் ஆற்றல் படைத்தவர் என்று பெயர் பெற்றவர். ஆனால், இவரும் அக்கலையின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே திரும்பி வந்து விட்டார்.
இவ்விதம் காலம் போய்க்கொண்டே இருந்தது. நாளாக ஆக நானும் பொறுமையை இழந்து வந்தேன். கையினால் நூற்பதைக் குறித்து ஏதாவது தகவலை அறிந்திருக்கக் கூடியவர்களாக ஆசிரமத்திற்கு வருவோர் போவோர்களிடம் எல்லாம் அதை குறித்து விசாரித்துக் கொண்டு வந்தேன். இக்கலை பெண்களிடம் மாத்திரமே இருந்து வந்தாலும், அது அநேகமாய் அழிந்து போய்விட்டதாலும், ஒருவருக்கும் தெரியாத மூலை முடுக்குகளில் நூற்பவர்கள் யாராவது சிலர் இருப்பார்கள். அப்படி இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் இன்னாரென்பதைப் பெண்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும்.
புரோச் கல்வி மகாநாட்டில் தலைமை வகிப்பதற்காக 1917-இல் என்னுடைய குஜராத்தி நண்பர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றனர். அங்கேதான் கங்காபென் மஜ்முதார் என்னும் அற்புதமான பெண்மணியைக் கண்டுபிடித்தேன். அவர் விதந்து என்றாலும் அவருக்கு எல்லையற்ற ஊக்கமும் முயற்சியும் உண்டு. படிப்பு என்ற வகையில் பார்த்தால் அவர் அதிகம் படித்தவர் அல்ல. ஆனால், தீரத்திலும் பொது அறிவிலும் நமது படித்த பெண்களை அவர் எளிதில் மிஞ்சிவிடக் கூடியவர். தீண்டாமைக் கொடுமையை அவர் முன்னாலேயே விட்டொழித்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களிடையே அவர் தாராளமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய்து வந்தார். அவருக்குச் சொந்தத்தில் சொத்து உண்டு. அவருடைய தேவைகளோ மிகச் சொற்பம். நல்ல திடகாத்திரமான உடல் உள்ளவராகையால் எங்கும் துணையில்லாமலேயே போய் வருவார். சர்வ சாதாரணமாக குதிரைச் சவாரி செய்வார். கோத்ரா மகாநாட்டில் அவரைக் குறித்து இன்னும் நெருக்கமாக அறியலானேன். ராட்டினம் கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருந்த துயரை அவரிடம் முறையிட்டுக் கொண்டேன். ஊக்கத்துடன் விடாமல் தேடி ராட்டினத்தைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்களித்து, என் மனத்திலிருந்த பளுவை அவர் குறைத்தார்.
$$$
40. முடிவில் கண்டுகொண்டேன்!
குஜராத் முழுவதிலும் கங்காபென் தேடியலைந்து விட்டு கடைசியாக பரோடா சமஸ்தானத்தில் வீஜாப்பூர் என்ற இடத்தில் கைராட்டையை அவர் கண்டுபிடித்தார். அங்கே அநேகம் பேர் தங்கள் வீடுகளில் கைராட்டைகளை வைத்திருந்தார்கள். ஆனால், வெகு காலத்திற்கு முன்னாலேயே, அவையெல்லாம் ஒன்றுக்கும் ஆகாதவை என்று கருதி மரக்கட்டைகளோடு மரக்கட்டையாக அவைகளைப் பரண்களில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். ஒழுங்காக யாராவது பட்டை போட்ட பஞ்சு கொண்டுவந்து கொடுத்து, நூற்ற நூலையும் வாங்கிக்கொள்ளுவதாக இருந்தால், தாங்கள் திரும்பவும் ராட்டையில் நூற்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கங்காபென்னிடம் அறிவித்தனர். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கங்காபென் எனக்கு அனுப்பினார். பட்டை போட்ட பஞ்சுக்கு ஏற்பாடு செய்வது கஷ்டமாக இருந்தது. இதைக் குறித்துக் காலஞ்சென்ற உமார் ஸோபானியிடம் கூறினேன். அவர் தம்முடைய மில்லிலிருந்து பட்டை போட்ட பஞ்சைப் போதுமான அளவு கொடுப்பதாக உடனே கூறி, இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிட்டார். உமார் ஸோபானியிடமிருந்து வந்த பட்டை போட்ட பஞ்சை கங்கா பென்னுக்கு அனுப்பினேன். உடனே, நூற்ற நூல் ஏராளமாக வந்து குவியத் தொடங்கிவிட்டது. அந்த நூலை என்ன செய்வது என்பது பிறகு ஒரு பிரச்னையாகி விட்டது.
ஸ்ரீ உமார் ஸோபானி மிகுந்த தாராளமான குணமுடையவர்தான். ஆனால், அவருடைய தாராளத்தை எப்பொழுதுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது என்பது கூடாது. பட்டை போட்ட பஞ்சைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாங்கிக் கொண்டிருப்ப தென்பது என்மனத்திற்குக் கஷ்டமாக இருந்தது. மேலும், மில்லில் தயாரான இப்பஞ்சை உபயோகித்துக் கொள்ளுவது அடிப்படையிலேயே தவறு என்றும் எனக்குத் தோன்றிற்று. மில்லில் பட்டை போட்ட பஞ்சை உபயோகிக்கலா மென்றால் மில் நூலையே ஏன் உபயோகித்துக் கொள்ளக்கூடாது? முன் காலத்திலெல்லாம் கைராட்டையில் நூற்றவர்கள், வேண்டிய பஞ்சை பட்டை போட்டு எவ்வாறு தயாரித்துக் கொண்டு வந்தார்கள்? என் மனத்தில் எழுந்த இத்தகைய எண்ணங்களோடு கங்காபென்னுக்கு ஒரு யோசனை கூறினேன். பஞ்சு அடித்துப் பட்டை போட்டுக் கொடுக்கக் கூடியவர்களைக் கண்டுபிடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் நம்பிக்கையோடு அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். பஞ்சு கொட்டிப் பட்டை போட்டுத் தரக்கூடிய ஒருவரை அவர் அமர்த்தினார். அந்த ஆசாமியோ, தமக்கு அதிகம் கொடுக்காவிட்டாலும் மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். அந்தச் சமயத்தில் அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதிகம் அல்ல என்று எண்ணினேன். கொட்டிய பஞ்சிலிருந்து பட்டை போடுவதற்குச் சில இளைஞர்களையும் கங்கா பென் பழக்கினார். யாராவது பஞ்சு கொடுத்து உதவ வேண்டும் என்று பம்பாயில் வேண்டுகோள் விடுத்தேன். ஸ்ரீ யஷ்வந்த் பிரசாத் தேசாய் கொடுக்க முன்வந்தார். இவ்விதம் கங்கா பென்னின் முயற்சி எதிர்பார்த்ததற்கு மேலாகவே பலன் தந்தது. வீஜாப்பூரில் தயாரான நூலை நெய்வதற்கும் நெசவாளர்களுக்கு அவர் ஏற்பாடு செய்தார். சீக்கிரத்தில் வீஜாப்பூர்க் கதர், புகழ்பெற்று விளங்கியது.
வீஜாப்பூரில் இந்த அபிவிருத்திகளெல்லாம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆசிரமத்திலும் கைராட்டினம் துரிதமாக நிலைபெற்று வந்தது. மகன்லால் காந்தி, தமக்குள்ள யந்திர நுட்ப ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி ராட்டினத்தில் பல அபிவிருத்திகளைச் செய்தார். ராட்டினத்தின் சக்கரத்தையும் மற்ற சாமான்களையும் ஆசிரமத்திலேயே தயாரிக்க ஆரம்பித்தார். ஆசிரமத்தில் தயாரான முதல் கதர், கெஜம் 17 அணா விலையாயிற்று. அதிக முரடாயிருந்த இந்தக் கதரை அந்த விலைக்கு நண்பர்களுக்குச் சிபாரிசு செய்ய நான் தயங்கவே இல்லை. அவர்களும் மனமுவந்து அவ்விலையைக் கொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.
நான் பம்பாயில் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அங்கேயும் ராட்டினங்களைத் தேடுவதற்கு வேண்டிய சக்தி எனக்கு இருந்தது. கடைசியாக நூல் நூற்கக்கூடியவர்கள் இருவர் தென்பட்டனர். ஒரு சேர், அதாவது 28 தோலா அல்லது சுமார் முக்கால் ராத்தல் நூலுக்கு ஒரு ரூபாய் விலை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். கதரின் பொருளாதாரத் தத்துவத்தைக் குறித்து அப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது. கையினால் நூற்ற நூலுக்கு என்ன விலையும் கொடுக்கலாம் என்று எண்ணினேன். வீஜாப்பூரில் கொடுக்கப்படும் விலையையும் நான் கொடுத்த விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் ஏமாற்றப்பட்டேன் என்பதைக் கண்டேன். நூற்றவர்களோ, விலையில் எதையும் குறைத்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். ஆகையால், அவர்களை அனுப்பிவிட வேண்டியதாயிற்று. என்றாலும், அவர்களை அமர்த்தியிருந்ததால் பயனில்லாது போகவில்லை. ஸ்ரீமதிகள் அவந்திகாபாய், ரமீபாய் காம்தார், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரின் தாயார், ஸ்ரீமதி வசுமதி பென் ஆகியவர்களுக்கு அவர்கள் நூற்கக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். என் அறையில் ராட்டினம் ஆனந்தமாகச் சுழன்று இனிய கீதத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. நான் நோயினின்றும் குணம் அடைவதற்கு அந்தக் கீதம் பெருமளவு துணை செய்தது என்று நான் கூறினால், அது மிகையாகாது. அதனால், உடலுக்கு ஏற்பட்ட நன்மையைவிட மனத்திற்கு ஏற்பட்ட நற்பலன் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார். அப்படியானால், மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நானும் ராட்டையில் நூற்க ஆரம்பித்தேன். ஆனால், அச்சமயம் நான் அதிகமாக எதுவும் நூற்கவில்லை.
கையினால் கொட்டித் தயாரித்த பஞ்சுப் பட்டைகளைச் சம்பாதிக்கும் பிரச்னை மீண்டும் பம்பாயிலும் ஏற்பட்டது. பஞ்சு கொட்டுகிறவர் ஒருவர், பஞ்சு கொட்டும் வில்லுடன், அந்த வில்லின் நாணிலிருந்து ஒலி எழுப்பிக்கொண்டு ஸ்ரீ ரேவா சங்கரின் வீட்டு வழியே தினம் போய்க்கொண்டிருப்பார். அவரைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவரை விசாரித்ததில் அவர் மெத்தைகளுக்குத் திணிக்கும் பஞ்சை கொட்டுகிறவர் என்று தெரிந்தது. நூற்பதற்குப் பஞ்சுப் பட்டைகள் போட்டுத் தர அவர் சம்மதித்தார். ஆனால், அதிகமாகக் கூலி கேட்டார், என்றாலும் நான் கொடுத்தேன். இவ்வாறு நூற்ற நூலை பவித்திர ஏகாதசியன்று சுவாமிக்கு மாலை போடுவதற்காக சில வைஷ்ணவ நண்பர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஸ்ரீ சிவ்ஜி, நூற்கக் கற்றுக் கொடுக்கும் வகுப்பு ஒன்றை பம்பாயில் ஆரம்பித்தார். இந்தப் பரிசோதனைகளுக்கு எல்லாம் அதிகப் பணம் செலவாயிற்று. ஆனால், கதரில் நம்பிக்கையுள்ள, தாய்நாட்டிடம் பக்தியுள்ள தேசாபிமானிகளான நண்பர்கள், இச்செலவையெல்லாம் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார்கள். இவ்விதம் செலவான பணம் வீணாகி விடவில்லை என்பதே என்னுடைய பணிவான கருத்து. இதனால் எங்களுக்கு அதிக அனுபவம் ஏற்பட்டதோடு கைராட்டையின் சாத்தியங்களும் எங்களுக்குத் தெரியலாயின.
நான் கதரை மாத்திரமே உடுத்த வேண்டும் என்ற பேரவா அப்பொழுது எனக்குப் பலமாக ஏற்பட்டது. அப்பொழுது இந்திய ஆலைகளில் தயாரான வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தேன். ஆசிரமத்திலும் வீஜாப்பூரிலும் தயாரான முரட்டுக் கதர்த் துணி, முப்பது அங்குல அகலமே இருக்கும். ஆகையால், கங்கா பென்னுக்கு ஒரு முன்னெச்சரிக்கை செய்தேன். ஒரு மாத காலத்திற்குள் நாற்பத்தைந்து அங்குல அகலத்தில் எனக்குக் கதர் வேட்டி தயாரித்துக் கொடுக்காது போனால், அகலக் கட்டையாக இருக்கும் முரட்டுக் கதரையே கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று அவருக்குத் தெரிவித்தேன். இந்த இறுதி எச்சரிக்கை அவரைத் திடுக்கிடச் செய்துவிட்டது. ஆனால், அவரிடம் கேட்டதை அவர் நிறைவேற்றி விட்டார். ஒரு மாதத்திற்குள்ளேயே 45 அங்குல அகலத்தில் ஒரு ஜதைக் கதர் வேட்டிகளை அவர் எனக்கு அனுப்பினார். இதன்மூலம் எனக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டுவிடாமல் அவர் காப்பாற்றிவிட்டார்.
அதே சமயத்தில் ஸ்ரீ லட்சுமிதாஸ், லாத்தியிலிருந்து ஸ்ரீ ராம்ஜி என்ற நெசவுக்காரரையும் அவர் மனைவி கங்கா பென்னையும் ஆசிரமத்திற்கு அழைத்துவந்து ஆசிரமத்திலேயே கதர் வேட்டி நெசவாகும்படி செய்தார். கதர் பரவுவதில் இத்தம்பதிகள் செய்திருக்கும் சேவை அற்பமானது அன்று. குஜராத்தில் மாத்திரமேயல்லாமல் வெளியிலும் கையால் நூற்ற நூலைக்கொண்டு நெய்வதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கங்கா பென், தறியில் நெய்வதைப் பார்ப்பதே மிகவும் உற்சாகம் ஊட்டும் காட்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் ஆற்றல் மிக்க இச் சகோதரி, கைத்தறியில் வேலை செய்ய உட்கார்ந்துவிட்டால், அவர் மனம் முழுவதும் அதிலேயே ஆழ்ந்துவிடும். பிறகு அவர் மனத்தையும் கண்களையும் தறியிலிருந்து வேறு இடத்திற்குத் திருப்புவதென்பது மிகவும் கஷ்டமான காரியமே.
$$$