-எஸ்.வைத்யசுப்பிரமணியம்
தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான முனைவர் திரு. எஸ்.வைத்யசுப்ரமணியம் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இங்கே…

நரேந்திரன் என்ற வாமன நிலையிலிருந்து விவேகானந்தர் எனும் திரிவிக்ரம நிலைக்கு உயர்ந்த அம்மாமனிதர், இந்தியா சோர்வுற்றபோது அதனை நிமிர்ந்து நிற்கச் செய்த பாங்கினை இன்று நாம் கட்டாயம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
1893-ல் சர்வ சமயப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரை குறித்து அதிகமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த உரைக்குத் தான், பேசிய கால அளவைவிடக் கைதட்டலுக்குக் கிடைத்த நேரம் அதிகம்.
ஒரு கல்வியாளன் என்ற முறையில் நான் இந்த உரையினை நோக்குகிறேன். சுவாமிஜியின் விண்ணகத் தொடர்பின் ஆன்மிகக் குறியீடாகவே இதைக் கருதுகிறேன். இருள் கவ்விய இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரப் போகிறது என்பதையே அவரது உரை கோடிட்டுக் காட்டியது.
உலகச் சமயங்களின் சங்கமத்திற்காக அவர் புறப்பட்டபோது இந்தியாவின் நிலை கவலை தரும்படியாகத் தான் இருந்தது. காலனி ஆட்சி எனும் பகற்கொள்ளையாலும் கடும் பஞ்சத்தாலும் நாடு அல்லல்பட்டது. கங்கை சமவெளி, தக்காண பீடபூமி, தென்னகம் மற்றும் மத்திய இந்தியாவில் பஞ்சம் கோர தாண்டவமாடியது.
இம்மாதிரியான சூழலில் புதிய அண்மைக்கால ஆங்கில முறைக்கல்வி பயின்ற பேரறிவாளர்கள் மற்றும் தன்னலம் சார்ந்த, ஆனால் அரசு சாரா அமைப்பினர் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நேயக்கரம் நீட்டும் முகமைகளுக்கு ஒரு சோகக் காட்சியை எடுத்துக்காட்டி இருப்பார்கள்.
தங்களது எண்ணங்களை விளக்கும் வகையில் புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டு அவர்களிடமிருந்து நிதியைக் கறக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பர்.
இந்த அரசு சாரா அமைப்புகளில் தீவிரம் காட்டுபவர்கள் நல்ல முறையில் மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் நிதியைப் பயன்படுத்தினார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
ஆனால் சுவாமி விவேகானந்தர் கல்வியால் இக் கஷ்டங்களை முறியடிக்க முயன்றார்; முழங்கினார்.
அவரது உரையில் கல்விச் சிந்தனையே அதிகம்.
கசக்கும் காயாக உள்ள இந்தியா இனிக்கும் கனியாக உருமாற்றம் பெறப் போகிறது என்பதை உணர, அளவற்ற ஆன்மபலம் தேவை. சுவாமிஜியின் பேச்சில் இந்த ஞானஒளி பளிச்சிடுகிறது. அவரது இந்தத் தீர்க்க தரிசனம் தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறது.
இந்தியா கல்வியில் சிறந்த நாடாகவும் மக்கள் மாட்சிமை பெற்றவர்களாகவும் அவர் பார்வையில் படுகிறது. நுண்ணறிவு பெற்ற சான்றோர்கள் உள்ள பாரினில் நல்ல நாடாக பாரதம் தெரிகிறது. மக்களும் கொள்கைச் சான்றோர்களாகத் திகழ்கின்றனர். ஆன்ம நிவேதனமான இவரது பேச்சு இந்தியாவின் வரம்பு கடந்த ஆற்றலையும் அதன் நாகரிக முதலீடுகளையும் உலகம் உணர்ந்து கொள்ளும் வகையில் கம்பீரமாக எடுத்து விளக்கியது.

இந்தியாவில் அரும்பிவரும் அறிவுஜீவிகள் பொன்னொளிர் பாரதத்தின் உண்மையான வலிமையை எடுத்துரைக்கும் சிந்தனையற்றவர்களாக இருக்கிறார்கள். இயற்கை வளம், மனித வளம், பொருள் வளம் போன்றவற்றின் செறிவை உணர்த்த முடியாமல் திக்குமுக்காடுகின்றனர்.
கொள்கை உருவாக்கத்தில் உள்ள கைகட்டி வாய் பொத்தி நிற்கும் நிலையிலிருந்து மீண்டும் எழுச்சிமிகு பாரதத்தை எடுத்துரைக்கும் போக்கை அறிவாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மார்தட்டிப் பேசப்படும் உலகமயமாக்கல் எனும் மாயையின் தீங்குகளிலிருந்து இந்தியாவைக் காக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக உலகமயமாக்கல் சித்தரிக்கப்படுகிறது. நிமிர்ந்து நிற்கும் இன்றைய சூழலில் குழப்பமும் பிறரை அண்டி நிற்கும் போக்குமுள்ள மனித மனங்களை என்னென்பது?
கல்வியாளன் என்ற முறையில் என்னை மிகுதியாகக் கவலைக்குள்ளாக்குவது இந்த மனப்போக்கு தான்! சுவாமிஜியால் சிந்திக்கப்பட்ட புதுமையான பாரதத்தை உருவாக்குவதில் கல்வி நிலையங்களுக்கு அதிக பொறுப்புண்டு. மனித உணர்வோடு மனவளம் உள்ளவர்களை உருவாக்கும் கடமையில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொண்டால் தான் வலிமையான பாரதம் உருவாகப் பாதை பிறக்கும்.
- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 2014)
$$$