-தென்கச்சி கோ.சுவாமிநாதன்
மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன், புகழ்பெற்ற பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கியவர். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இஅவரது கட்டுரை இங்கே…

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மேல்நாட்டுப் பெண்மணி ஒருவர், “சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்!” என்றார்.
“என்ன, கேளுங்கள்!” என்றார் சுவாமிஜி.
“எங்கள் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று ஏராளமான குற்றங்கள் தினமும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், உங்கள் நாட்டில் இப்படி இல்லையே. அது அமைதியாக இருக்கிறதே!”
“அதற்காக நான் பெருமைப்படவில்லை!”
“ஏன் சுவாமி?”
“உங்கள் மக்கள் உயிரோடு உலவுகிறார்கள். ஆகவே தவறுகளும் செய்கிறார்கள். எனது மக்கள் பிரேதங்களாகிவிட்டார்கள். அதனால் தான் அங்கு பிரச்னைகள் இல்லை. எனது மக்களும் குற்றங்கள் செய்வதை நான் வரவேற்கிறேன். அப்படிச் செய்தால் தான் அவர்கள் பிரேதங்கள் அல்ல.”
இன்றைக்கு இந்தியாவில் இந்திய மக்கள் பிரேதங்களாக இல்லை. எல்லாக் குற்றங்களையும் செய்கிறார்கள். இதற்கு என்ன பொருள்?
தாமச குணத்திலிருந்து ராஜச குணத்தை அடைந்துவிட்டார்கள் என்று பொருள். இந்த ராஜச குணாம்சத்தில் சுரக்கின்ற சக்தியை நெறிப்படுத்தினால், அது மாபெரும் ஆக்க சக்தியாக மாறும். அது ஆன்மநேயமாகும்; மனிதநேயமாகும். அது தான் சாத்விக குணாம்சம் என்பது.
மானுட நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மூன்றும் இருக்கின்றன. அதாவது, தாமச, ராஜச, சாத்விக அம்சங்கள். இந்தியா இப்போது அந்த மூன்றாவது கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது
இன்றைக்கு நாம் பிரேதங்களாக இல்லை; உயிரோட்டத்தோடு உள்ளோம்; உணர்சிகரமானவர்களாக உள்ளோம். நம் ஆற்றல்கள் யாவும் குற்றங்களாக வெளிப்படுகின்றன.
அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆற்றுப்படுத்துவோம்.
நன்றி: விவேகானந்தரைக் கற்போம்! – ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
$$$