-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
6 ஆ. திருவாவடுதுறை வாஸம் -ஆ
பட்டீச்சுரப் புராணம்
பட்டீச்சுரத்திற்கு ஆறுமுகத்தா பிள்ளையின் வேண்டுகோளின்படி முன்னமே ஒரு புராணம் இவராற் செய்யத் தொடங்கப்பெற்று நாட்டுப் படலத்திற் சில பாகம் வரையில் ஆகியிருந்தது. அந்தப் புத்தகம் எப்படியோ கைதவறிப் போய்விட்டது. மீட்டும் முதலிலிருந்து புராணத்தைச் செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டமையால் இவர் நல்லவேளையில் ஆரம்பித்துச் செய்து வருவாராயினர். அப்போது அத்தலத்துள்ள மதவாரணப் பிள்ளையார் மீது ஒரு துதிகவி செய்யத் தொடங்கி, ‘மதவாரணப் பிள்ளையார் துதி’ என்ற தலைப்பை எழுதுவித்துப் பாடலியற்ற யோசித்த பொழுது அதனையறிந்து, “முன்னமே அப்பிள்ளையார் மீது யமகமாக ஐயாவவர்கள் *9 ஒரு பாடல் செய்திருப்பதுண்டு” என்றேன்; உடனே அதைச் சொல்லச் சொன்னார்; நான் சொன்னவுடன் அதனையே எழுதிக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அடுத்த பாடலைச் செய்யத் தொடங்கி விட்டார்.
என்பால் உண்டான கோபம்
யாரோ ஒருவருடைய கோளினால் ஒரு தினம் இவர் என் மீது கோபங்கொண்டு என்னுடன் பேசாமலே இருந்துவிட்டார். யார் மீது கோபம் வந்தாலும் சிலதினம் அவரோடு பேசாமலே இருந்து விடுவது இவருக்கு இயல்பு; எந்தச் சமயத்தும் யாரையும் கடிந்து பேசுவதேயில்லை.
அன்று மாலை அநுஷ்டானஞ் செய்துவிட்டு வந்து தம் வீட்டுத் திண்ணையில் இவர் சயனித்துக் கொண்டார். ஏடுகளுடன் சென்று இவரது தலைப்பக்கத்திலிருந்த தீபஸ்தம்பத்தின் அருகில் வழக்கப்படியே காத்திருந்தேன். சில நேரம் சென்ற பின்பு *10 “இறவி தபுத் தலையுணர்த்த” என்பது இவர் வாக்கினின்றும் எழுந்தது. உடனே அதனை எழுதிவிட்டு அச்செய்யுளின் மேற்பாகத்தையும் இவர் சொல்லச் சொல்ல எழுதி முடித்தேன். வழக்கம் போலவே படித்துக் காட்டினேன். அப்பால், ‘சரி’ என்று ஒரு சப்தம் இவர் வாக்கிலிருந்து உண்டாகவே அச்சொல்லுக்கு ஆகாரம் பண்ணிக்கொண்டு வரலாமென்பது பொருளென்றறிந்து சென்று போஜனம் செய்து வந்து வழக்கம் போலவேயிருந்து வந்தேன்.
பாடம் நடக்கும்போது சென்று படிப்பதும் சொல்லுவனவற்றை எழுதுவதுமே அக்காலத்து என்னால் செய்யப்பெற்று வந்தன. அந்த நிலை என் மனத்துக்கு மிகுந்த சங்கடத்தை உண்டு பண்ணிக்கொண்டேயிருந்தது; அதைப்பற்றி யாரிடத்தும் நானும் சொல்லவில்லை; இவரும் சொல்லவில்லை.
கோப மாறியது
இங்ஙனம் சில தினங்கள் சென்றன. அப்பால் மாயூரம் வஸந்தோத்ஸவ தரிசனத்தின் பொருட்டுச் சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் மாயூரத்திற்கு விஜயம் செய்தார். அவருடைய கட்டளையின்படி இவர் சென்றார்; நானும் மற்ற மாணாக்கர்களும் இவருடன் சென்றோம். செல்லும்பொழுது இவர் ஸ்ரீ சிவஞான முனிவரும் ஸ்ரீ கச்சியப்ப முனிவரும் காஞ்சிப் புராணமியற்றிய வரலாற்றையும் இடையிடையே நிகழ்ந்த செய்திகளையும் அந்த நூலின் சிறப்பியல்புகளையும் உடன் சென்றோரிடம் சொல்லிக் கொண்டே சென்றார். ஒன்றையும் விடாமல் நான் கேட்டுக்கொண்டே சென்றேன்.
மாயூரம் சென்ற ஆதீனகர்த்தர் ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு அடியார்களோடு மடத்திற்குத் திரும்பிச் செல்லுகையில் ஒரு காரியஸ்தரை யழைத்து எனக்கு ஆகாரம் பண்ணுவித்து அனுப்பும்படி உத்தரவிட்டனர்; அப்படியே அவர் செய்வித்தனுப்பினர். நான் சென்று பிள்ளையவர்கள் வீட்டுத் திண்ணையில் ஒரு புறத்திலிருந்தேன். ஆதீனகர்த்தர் மடத்திற்குச் சென்றபின் *11 அத்தாளம் நடைபெற்றது. அது, “படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும், உடைப்பெருஞ் செல்வர்” என்றபடி நூற்றுக்கணக்கானவர்கள் அறுசுவையுள்ள நால்வகை யுணவுகளையும் முறையேயிருந்து மெல்ல உண்ணும் பெருமை வாய்ந்தது.
*12 அங்கே இல்லறத்தாருடைய வரிசையில் முதல் ஸ்தானம் பிள்ளையவர்களுக்குரிய இடம். அங்கே சென்று இருந்த இவர் உண்ணத் தொடங்குவதற்கு முன்பு திடீரென்று எழுந்து புறத்தே செல்லுங் குறிப்போடு சிறிது தூரம் வந்துவிட்டார். யாரும் பந்தியில் அங்ஙனம் செய்வதில்லை; செய்யவும் கூடாது; வழக்கமே கிடையாதென்பர். அதனைக் கண்ட தேசிகர், ‘ஏதோ கவலைக்கிடமான செய்தி இவர்களுக்குக் கிடைத்தது போலும்’ என்று நினைத்துக் கேட்பித்தபொழுது, “சாமிநாதையரை வெளியே விட்டுவிட்டு வந்தேன். அவர் ஆகாரம் செய்தாரோ இல்லையோ தெரியவில்லை. விசாரித்துவரப் போகிறேன் ” என்றார்.
தேசிகர், “அவருக்கு ஆகாரம் செய்விக்கும்படி முன்பே ஒருவரிடம் சொல்லியாய் விட்டது. அவர் இதற்குள் ஆகாரஞ் செய்துவிட்டு வந்திருக்கலாம். நீங்கள் கவலைப்படவேண்டாம். இங்கேயிருந்து மெல்ல ஆகாரம் பண்ணிக்கொண்டு செல்லலாம்” என்று வற்புறுத்திச் சொல்லவே இவர் திரும்பிப் போய் அமர்ந்து ஏதோ ஆகாரம் பண்ணுபவர் போலவே பாவனை பண்ணிவிட்டு எல்லாரும் எழுவதற்கு முன்னரே எழுந்து கையையுஞ் சுத்திசெய்யாமல் வேகமாக அம் மடத்தின் மேல்பாலுள்ள தம்முடைய விடுதிக்கு வந்தார்.
இவர் வருவதைக் கண்டு எழுந்து நின்றேன். நான் நின்ற இடம் தீபம் இல்லாத இடம்; ஆகையால் என் சமீபத்தில் வந்து முகத்தை உற்று நோக்கி, நிற்பவன் நானென்று தெரிந்து கொண்டு, “ஆகாரம் செய்தாயிற்றா?” என்று கேட்டார். “ஆயிற்று” என்று சொன்னேன். உடனே இவர் கையைச் சுத்திசெய்து கொண்டு, தீபத்தைக்கொணர்ந்து வைக்கும்படி சொல்லி என்னோடு அன்புடன் முன்போலவே பேசத்தொடங்கினார். *13 “முனிவினு முளைக்கும் அன்பினர்” ஆகிய இவருடைய இயல்பை அறிந்து, முந்திய நிமிஷத்திற் கவலைக் கடலில் அழுந்திக்கிடந்த நான் அடுத்த நிமிஷத்தில் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன்.
அப்பொழுது மடத்திலிருந்து சிலர் வந்து என்னைப்பார்த்து, “உங்களிடத்தில் ஐயாவவர்களுக்கு இருக்கிற பிரியம் இன்று பந்தயில் நன்றாக வெளிப்பட்டுவிட்டது. இவ்வளவு பிரியத்தை யாரிடத்தும் இவர்கள் வைத்திருந்ததாக நாங்கள் அறிந்துகொண்டதில்லை. மடத்தில் இப்போது ஸந்நிதானம் இதைப்பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது” என்றார்கள்.
அந்தச் சமயத்திற் பிள்ளையவர்களை நோக்கி,
*14 “எளிய ரெங்குளா ரென்று தேர்ந்துதேர்ந்
தளியை யாவதுன் னருளின் வண்ணமே”
என்பதைச் சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமலிருந்தேன். அது முதல் பிறர் கோள் சொல்லுவதற்கு இடமில்லாதபடி கூடிய அளவு ஜாக்கிரதையாக நடந்து வருவேனாயினேன். அப்பால் இவர்கள் பிரீதியும் அதிகரித்துவிட்டது.
"தீயனெனும் பாம்பு செவியிலொரு வற்கவ்வ
மாயுமே மற்றைய வன்"
என்பது பெரியோர் கருத்தாக இருக்கவும் ஒருவருடைய கோள் எனக்கு அனுகூலத்தைப் பின்பு விளைவித்தமையால்,
(விருத்தம்) *15 "பொன்னகரான் காலந்தாழ்த் துனையருச்சித் தயர்ச்சியோடும் போன வாறும் என்னெனயான் வினவியதும் வலாரியிறை கொடுத்ததுமவ் விறைக்கு நேர்யான் பின்னைவினா யதுமவன்சொல் வழியுன்னைச் சோதித்த பெற்றி தானும் முன்னவனே யுன்னருளா லென்பிணிக்கு மருந்தாகி முடிந்த வாறே "
என்னும் அருமைச் செய்யுள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.
குமாரருக்கு விவாகம் நடைபெற்றது
அப்பால் இவர் திருவாவடுதுறை சென்று செய்யவேண்டியவற்றைச் செய்துஞ் செய்வித்தும் வந்தார். அப்படியிருக்கையில் இவருடைய குமாரர் சிதம்பரம் பிள்ளைக்கு விவாகஞ் செய்விக்க வேண்டுமென்ற முயற்சி நடைபெற்றது. சீகாழியிலிருந்தவரும் சிறந்த கல்விமானுமாகிய *16 குருசாமி பிள்ளை யென்பவருடைய குமாரி மீனாட்சியம்மையை அவருக்கு மணஞ் செய்விக்க இவர் நிச்சயித்தார். அதனை ஆதீனகர்த்தரிடம் விண்ணப்பஞ் செய்தார். சுப்பிரமணிய தேசிகர் இச்செய்தியைச் சொல்லிக் குருசாமி பிள்ளையை அழைத்து வரும்படி சில முதியோரை அனுப்பினார். அவர்கள் சென்று சொல்ல மனமுவந்து குருசாமி பிள்ளை வந்து இவரைக் கண்டபொழுது இருவரும் சம்பந்தம் செய்து கொள்ளுதலைக் குறித்து நெடுநேரம் ஸம்பாஷணை செய்து களிப்புற்றார்கள். பின்பு அவர் தரிசனஞ் செய்யப் போனபொழுது தேசிகர் பலவாற்றாலும் அவருக்கு மகிழ்வுண்டாகும்படி செய்ததன்றி அவரை நோக்கி, “ஐயா நீங்களும் குருஸாமி; நாமும் குருஸாமியே” என்று சொன்னார்; சிறந்த கல்விமானாதலால் அந்த அருமையான வார்த்தை அவருக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. முகூர்த்தம் வைத்துவிட்டு அவர் சீகாழி சென்றார்.
தேசிகர் அந்த விவாகச் செலவிற்கு ரூபாய் ஆயிரம் அளித்ததல்லாமல், கல்லிடைக்குறிச்சியில் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கும் ஆதீனத்தைச் சார்ந்த பெரியகாறுபாறுதம்பிரான் முதலியோர்களுக்கும் கலியாணச் செய்தியைத் தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டார். அப்படியே எல்லோருக்கும் இவர் விண்ணப்பஞ் செய்து கொண்டார். அங்ஙனஞ் செய்துகொண்ட கடிதங்களில் வழக்கம் போலவே முதலில் அவரவர்கள் தகுதிக்கு ஏற்பப் பாடல்கள் வரையப்பெற்றன. அவற்றுள் ஏனையோர் விஷயமாகச் செய்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை ; ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கு எழுதிய ஐந்து பாடல்கள் மட்டும் என் கைவசமிருந்தன. அவை வருமாறு:
(விருத்தம்) 1. "சீர்பூத்த கயிலாய பரம்பரையில் உமாபதிதே சிகப்பி ரான்றன் ஏர்பூத்த கண்மணியிற் சிவப்பிரகா சப்பெரியோன் என்பாற் குற்ற பார்பூத்த கண்மணியிற் றுறைசையிற்சுப் பிரமணிய பரமற் குற்ற வார்பூத்த கண்மணியாங் குருநமச்சி வாயனையென் மனஞ்சார்ந் தன்றே." (ஏர்பூத்த கண்மணி - அருணமச்சிவாய தேசிகர். சிவப்பிரகாசப் பெரியோன் - சித்தர் சிவப்பிரகாசர். பார்பூத்த கண்மணி - திருவாவடுதுறை ஆதீனஸ்தாபகராகிய நமச்சிவாயமூர்த்தி.] 2. "அருண்மலிநின் பெயரேநின் னுருவுருவம் அருவுருவம் அருவ மென்னப் பொருண்மலிமூன் றாமதுவந் தடைந்தார்தந் தரநோக்கிப் புகன்ற வாறே இருண்மலிபெய் தாதவிதம் விரித்துணர்த்தி யவற்றடக்கி எல்லா மின்பத் தெருண்மலியச் செயுந்துறைசைக் குருநமச்சி வாயாநிற் சேர்ந்து ளோமே." 3. "திருச்சமயத் துடனெமையும் விளக்கியநின் றிருப்பெயரே சிந்தை யுட்கொண் டருச்சனைசெய் யினுஞ்செபித்தல் செய்யினுஞ்சொற் றிடவருளி அளவி லாத கருச்சரிய வின்பநிலை காட்டுநினக் கியற்றுமொரு கைம்மா றுண்டோ குருச்சமையும் புகழ்த்துறைசை வளர்நமச்சி வாயாமெய்க் குரவ ரேறே." 4. "தந்தைபெய ரெடுப்பானிம் மைந்தனென வொருவனைமண் சாற்றல் பொய்யே நிந்தையிலாத் தந்தைபெயர் தோற்றும்போ தேயெடுத்தோன் நீயே நீயே அந்தையிலா நினைப்போல்வார் நினைப்பணியு மெமைப்போல்வார் அகிலத் தியாரே சிந்தைகளிப் புறத்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவே." (இங்கே பெரிய பட்டத்தில் இருப்பவர்களுக்குரிய பொதுப் பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதைத் துறவு பூண்டவுடன் இவர் தீட்சா நாமமாகவே பெற்றமையின், 'தந்தை பெயர் தோற்றும்போதே எடுத்தோன் நீயே” என்றார். அந்தை - அகந்தை.) 5. "ஒன்றுடையோன் நீயேமற் றிரண்டுடையோன் யானெனினும் உயர்ந்தோ னீயே என்றுநினக் கடிமையா தலினிரண்டு மசித்தெனப்பட் டிடலி னொன்றை நன்றுபெற விரும்பிநினைப் புணர்தலினிப் பொருட்கிடநின் நாம மன்றோ குன்றுபுரை மாடக்கோ முத்திநமச் சிவாயாமெய்க் குரவ ரேறே." (ஒன்று - வகாரம்; அதற்குப் பொருள் அருள். இரண்டு - நகார மகாரம்; அவற்றிற்குப் பொருள் முறையே திரோதாயியும் ஆணவமும். அசித்து - சடம்.)
இவருடைய விண்ணப்பத்தைப் பெற்ற நமச்சிவாய தேசிகர் மகிழ்ச்சியடைந்து விடையனுப்பினார். அதில், ” நீங்கள் ஐம்பதத்தால் ஆக்கிய ஐந்து பாடல்களையும் பார்த்து மகிழ்ச்சி யடைந்தோம்” என்ற வாக்கியம் வரையப்பெற்றிருந்தது. ஏனையோர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். சோழ நாட்டுப் பிரபுக்களும் அயல்நாட்டுப் பிரபுக்களும் வந்து தங்கள் தங்களாலியன்ற பொருளுதவியைச் செய்து உடனிருந்து விவாகத்தை நடத்திச் சிறப்பித்தார்கள். கலியாணம் சிறப்புடன் ஆங்கிரஸ ஆண்டு (1872) ஆனி மாதம் 7 – ஆம் தேதி புதன்கிழமை மாயூரத்தில் நடைபெற்றது.
உள்ளூர்க் கனவான்களும் அயலூரார் பலரும் வந்து வந்து விசாரித்துச் சென்றார்கள். அவரவர்களுக்குத் தக்கபடி முகமன்கள் மாணாக்கர்களாலும் திருவாவடுதுறை மடத்திலிருந்து வந்த காரியஸ்தர்களாலும் நடத்தப்பெற்றன. சிறந்த ஸங்கீத வித்துவான்களுடைய இசைப்பாட்டும் நாகசுரக்காரர்களுடைய கானமும் ஒவ்வொரு நாளும் நடந்தன.
விகடகவியும் வேதநாயகம் பிள்ளையும்
நல்ல திறமையுள்ள விகடகவியொருவர் அப்பொழுது பல வகைப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்களைப் பேசி யாவரையும் சிரிக்கும்படி செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்திருந்த வேதநாயகம் பிள்ளை இப்புலவர்கோமானை நோக்கி, “விகடகவிகள் வித்துவான்களுக்கு நேர் விரோதிகள்; வித்துவான்கள் இழிந்தவற்றையும் உயர்ந்தனவாகக் கூறுபவர்கள்; விகடகவிகள் உயர்ந்தவற்றை இழிந்தனவாக நினைக்கும்படி பேசுபவர்கள்” என்றார். புத்திமான்கள் பேசும் எந்தப் பேச்சும் நயமாக இருக்குமென்பதை அவருடைய வார்த்தை புலப்படுத்தியது.
*17 சவராயலு நாயகர் மாலை
எல்லோருக்கும் கலியாணபத்திரிகை அனுப்பியது போல இவர், தம் மாணவராகிய புதுவைச் சவராயலு நாயகருக்கும் அனுப்பியிருந்தார். அவர் இவரிடத்தில் அளவற்ற அன்புடையவர். புதுவையில் நல்ல நிலையில் இருந்தமையால் அவர் தக்க தொகையொன்றை இவருக்கு அனுப்பினார். தாம் விரும்பாமலிருந்தும் வலிய அவர் செய்த அந்தப் பொருளுதவியை நினைந்து மனங்கனிந்து தம் செய்ந்நன்றியறிவிற்கு அறிகுறியாக அவர் மீது இவர் ஒரு மாலை இயற்றி அனுப்பினார். அது பின்பு அவராலேயே பதிப்பிக்கப் பெற்றது.
சமாசாரப் பத்திரிகையில் வந்த செய்தி
கலியாணத்திற்குப் பின்பு சிலதினம் இவர் மாயூரத்தில் இருந்தார். அக்காலத்தில் ஒருநாள் இவர் வேதநாயகம் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்; நானும் உடன் சென்றேன். அவர் ஏதோ ஒரு சமாசார பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். இவரைக்கண்டவுடன் அவர், “இப்பத்திரிகையில் இப்போது படித்துக்கொண்டிருப்பது உங்கள் விஷயந்தான்; ‘இக்காலத்தில் தமிழ்நாட்டிற்கு இரண்டு கண்களாக விளங்குகிறவர் இருவர். அவருள் ஒருவர் வசனம் எழுதுவதில் ஆற்றலுடையவர்; மற்றொருவர் செய்யுளியற்றுவதில் ஆற்றலுடையவர். வசனம் எழுதுபவர் ஆறுமுக நாவலர்; செய்யுள் செய்பவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நாவலர் சிதம்பரத்தில் பாடசாலை வைத்துத் தமிழைப் பரிபாலித்து வருகிறார்; மற்றொருவர் தாமே நடையாடு புத்தக சாலையாக இருந்து தம்முடைய செலவிலேயே பிள்ளைகளைப் படிப்பித்து வருகிறார்’ என்பது இதிலுள்ள விஷயம்” என்றார். கேட்ட நான் ஆனந்தமடைந்தேன்.
தமிழ் மருந்து
அப்போது தஞ்சைவாணன்கோவையைப் பாடங் கேட்டு வந்தேன். ஒருநாள் 10 மணிக்கு மேலே இவர் பூஜை செய்வதற்குச் சென்றார். பூஜை செய்து கொண்டிருக்கையிற் கடுமையான ஜ்வரம் வந்துவிட்டமையால் விரைவில் அதனை முடித்துக்கொண்டு ஆகாரம் பண்ணாமலே வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; என்னைப் பார்த்து, “கையிலுள்ளது என்ன புத்தகம்?” என்றார்; “தஞ்சைவாணன்கோவை” என்றேன். படிக்கும்படி சொன்னார்; படித்துக்கொண்டு வந்தேன்; மிகுந்த அயர்ச்சி உள்ளவராக இருக்கிறாரென்று நான் நினைந்து நிறுத்தினால் இவர் கண்ணைத் திறந்து பார்த்துப் படிக்கச் சொல்வார்.
இவர் இப்படி யிருக்கும்போது பிற்பகலில் ஐந்து மணி ஆயிற்று. இவரைப் பார்க்கவந்த அன்பர்களிற் சிலர் என்னைக் கோபத்தோடு நோக்கி, ” இப்போது கூடவா பாடங்கேட்டு இவர்களுக்குத் துன்பத்தை உண்டுபண்ண வேண்டும்? நிறுத்திக்கொள்ளக் கூடாதா? பாடம் எங்கே ஓடிப்போகிறது? இதனை நீர் தெரிந்துகொள்ளவில்லையே” என்று கடுமையாகச் சொன்னார்கள். கேட்ட இவர், “நிறுத்தச் சொல்ல வேண்டாம்; அதுதான் இப்பொழுது எனக்கு மருந்தாக இருக்கிறது; சுரநோயின் துன்பத்தை மறந்து என் மனம் அந்நூலிலேயே ஈடுபட்டுவிட்டது” என்று சொல்லிவிட்டு அந்த நூலாசிரியருடைய பெருமையையும் வாக்கு விசேடத்தையும் அவர் முருகக்கடவுள் அருள் பெற்றவரென்பதையும் எடுத்துக் கூறினார்.
தமிழ்ச்செய்யுளில் இவருக்கு இருந்த ஈடுபாடும் அதனை இவர் நோய்க்கு மருந்தாக எண்ணிய இயல்பும் என் மனத்தை உருக்கின.
பலபட்டடைச் சொக்கநாதப்புலவருடைய செய்யுட்களைப் பாராட்டியது
மற்றொரு நாள் இவர் ஆகாரம் செய்துவிட்டு வந்தபொழுது நான் தனிப்பாடற்றிரட்டைப் படித்துக்கொண்டிருந்தேன். “கையிலுள்ள து என்ன புத்தகம்?” என்று கேட்க, “தனிப்பாடற்றிரட்டு ” என்றேன்; “அதில் இப்போது படிக்கும் பாடம் யார் வாக்கு?” என்று வினவினார். “பலபட்டடைச் சொக்கநாதப் புலவரியற்றிய பாடல்கள் ” என்றேன். “அவற்றைப் படியும்” எனவே நான்,
(கட்டளைக் கலித்துறை) *18 "வான்பணிந் தாலதன் என்பே யுரைக்கும் மலரிலயன் தான்பணிந் தாலவன் றன்றலை யேசொலுந் தாரணியுண் பான்பணிந் தாலவன் கண்ணே பரிந்து பரிந்துரைக்கும் நான்பணிந் தாலெனக் கார்சொல்லு வார்சொக்க நாயகர்க்கே" "மெய்க்கே யணியும் பணியேயென் பேமுடி மேற்கிடந்த கொக்கேவெண் கூன்பிறை யேயரை சேர்ந்த கொடும்புலியே அக்கே யுமக்குக் கிடைத்த வுபாயங்க ளாவெனக்கும் சொக்கேசர் பாதத்தைக் கிட்டு முபாயத்தைச் சொல்லுங்களே"
என்பவற்றைப் படித்துக் காட்டினேன். கேட்ட இவர், “செய்யுளென்பவை இவையே; பக்திரஸம் இவற்றில் ததும்புகின்றது” என்று பாராட்டி மனமுருகினார். தாம் மகாகவியாக இருந்தும் பிறகவிஞருடைய வாக்கைக் கேட்டு அவற்றின் நடையை அறிந்து ஸந்தோஷிக்கும் அரியகுணம் இவர்பால் அமைந்திருந்தமை இதனால் வெளியாயிற்று.
என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பியது
ஒரு தினம் நாங்கள் பாடங்கேட்டு முடித்த பொழுது இரவில் மணி 9 ஆயிற்று. இவர் எங்களை ஆகாரம் செய்துகொண்டு வரும்படி அனுப்பிவிட்டுத் தாம் உண்ணச் சென்றார்; அப்போது மழை வந்து விட்டமையாலும் மிகவும் சிரமமாக இருந்தமையாலும் நான் படுத்து அயர்ந்து நித்திரை செய்தேன். உடன் படித்தவர்கள் தத்தம் இடங்களுக்குச் சென்றார்கள்.
ஆகாரம் செய்துவிட்டு வந்த இவர் எல்லோரும் ஆகாரம் செய்துகொண்டு வந்து விட்டார்களாவென்று கவனிக்கையில் நான் தூங்குவதைக் கண்டார். இவர் தூங்கச் செல்லும் வரையில் நான் தூங்கச் செல்வது வழக்கமில்லை. அதனால் ஏதோ அஸெளக்கியம் ஏற்பட்டிருக்கலாமென்று எண்ணி என்னை எழுப்பச் சொன்னார்; நான் எழுந்தவுடன் “ஆகாரம் பண்ணிவிட்டீரா?” என்று இவர் கேட்டார்; இல்லையென்று நான் சொல்லவே ஆகாரம் பண்ணிவிட்டு வரும்படி என்னை யனுப்பினார். போய்ப் பார்த்தபொழுது வழக்கமாக நான் உண்ணுமிடத்திலும் பிற இடங்களிலும் கதவுகள் மூடப்பட்டுவிட்டன; சும்மா திரும்பிவந்தேன். அதுவரையில் விழித்துக்கொண்டே இருந்த இவர் நான் உண்ணாமையை அறிந்து அதிக வருத்தமடைந்து பாலும் பழமும் வருவித்துக் கொடுத்து உண்ணச் செய்தனர். மறுநாட் காலையில், “திருவாவடுதுறைக்குப் போய் மற்றவர்களுடன் பழைய பாடங்களைப் படித்துக்கொண்டிரும்; சீக்கிரத்தில் நான் வந்து விடுவேன்” என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். அப்படியே திருவாவடுதுறை சென்று படித்து வந்தேன்.
திருப்பெருந்துறைப் புராணம் இயற்றும்படி சுப்பிரமணியத் தம்பிரானவர்கள் விரும்பியது
சில தினங்கள் சென்ற பின்பு ஒருநாள் சுப்பிரமணிய தேசிகர் என்னை வருவித்து, “நாளைக் காலையில் நீர் மாயூரம் போய்வர வேண்டும். திருப்பெருந்துறைக்குப் புராணம் இயற்ற வேண்டியதைப்பற்றி அத்தலத்துக் கட்டளைச் சுப்பிரமணியத் தம்பிரான் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார். அதில் அவரால், ‘திருப்பெருந்துறைப் புராணத்தைச் செய்யுள் நடையாக நாட்டுவருணனை நகரவருணனை முதலிய காப்பிய உறுப்புக்களைச் சிறப்பாக அமைத்துப் புராணம் செய்ய வேண்டுமென்று பிள்ளையவர்களுக்குக் கட்டளையிடும்படி பிரார்த்திக்கிறேன். அப்புராணத்தை அங்ஙனம் பாடிப் பூர்த்திசெய்து அரங்கேற்றி முடித்தால் அவர்களுக்குத் தக்க செளகரியம் செய்விக்கலாம். அங்ஙனம் இயற்றுவிக்கும்படி இங்கே உள்ள அன்பர்கள் பலர் தூண்டுகிறார்கள். இத்தலத்தின் வடமொழிப் புராணத்திலிருந்து மொழிபெயர்த்த தமிழ் வசன நடைப் பிரதியையும் இத்தலத்திற்கு முன்னமே செய்யப்பட்டிருந்த பழைய தமிழ்ப் புராணங்களிரண்டையும் அனுப்பியிருக்கிறேன். இவற்றைத் தழுவிப் புராணம் செய்துவிட்டால் இந்த வருஷத்து மார்கழித் திருவிழாவில் அப்புராணத்தை அரங்கேற்றத் தொடங்கலாம். இங்கே அவர்கள் இருக்கும் வரையில் அவர்களுடைய செலவை அடியேனே ஒப்புக்கொள்ளுகிறேன். புராணம் அரங்கேற்றப்பட்டவுடன் ரூ. 2,000 அடியேனுடைய சம்பளத்திலிருந்து அவர்களுக்குச் சேர்ப்பிக்கிறேன். புராணம் செய்வதற்குத் தொடங்கும்படி ஸந்நிதானம் கட்டளையிடவேண்டும்’ என்று வரையப்பெற்றுள்ளது. இந்த விவரங்களைப் பிள்ளையவர்களிடம் சொல்லி இப்புத்தகங்களையும் கொடுத்து உடன்படச் செய்து அவர்களுடைய உடன்பாட்டை விரைவில் வந்து நமக்குச் சொல்ல வேண்டும்” என்று சொல்லி அப்புத்தகங்களையும் கொடுத்து என்னை அனுப்பினார்.
ஒரு செய்யுளின் ஈற்றடி
நான் மறுநாட் காலையில் மாயூரம் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டு இச்செய்திகளைத் தெரிவித்துப் புத்தகங்களையும் சேர்ப்பித்தேன். அப்பொழுது இவர் சந்தோஷமடைந்து புராணத்தை இயற்ற ஒப்புக்கொண்டு திருப்பெருந்துறையின் ஸ்தலவிநாயகராகிய வெயிலுவந்த பிள்ளையாரைத் தியானித்து, “நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்” என்ற அடியைச் சொன்னார். அதனை உடனிருந்த கும்பகோணம் பேட்டைத் தெருத் தமிழ் வித்துவானாகிய ஸ்ரீ வைத்தியநாத தேசிக ரென்பவர் கேட்டு வியப்புற்றார்.
திருவாவடுதுறை சென்றது
அப்பால் இக்கவிஞர் சிகாமணி மூன்றாவது தினத்தின் காலையில் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார். நானும் உடன் சென்றேன். மாயூரத்திலிருந்து வேறு ஒரு கனவானும் வந்தார். நான் முன்னமே கேட்ட திருவேங்கட வெண்பாவைப் படித்துச் சிந்தனை செய்வதற்குக் கையில் வைத்திருந்தேன். “இப்புத்தகம் என்ன?” என்று இவர் கேட்க, “திருவேங்கடமாலை” என்றேன்; இவர் கட்டளைப்படியே நான் அதனைப் படித்துக்கொண்டே வருகையில் சிலேடையின் வேறுபாடுகளும், அதுவரையில் அறிந்துகொள்ளாத பொருள் விசேடங்களும் எனக்கு அன்றைத் தினம் இவரால் தெரிய வந்தன. திருவாவடுதுறை போவதற்குள் அது முடிந்தது. அக் காலத்திற்கு முன்பே அரியிலூர்ச் சடகோபையங்காரிடம் அந் நூலை நான் கேட்டிருந்தேன். ஆனாலும் இவர் பாடஞ் சொன்ன பொழுதுதான் அதன் உண்மையான பெருமையும் சுவையும் புலப்பட்டன. திருவாவடுதுறை போனதும் வழக்கம்போலப் பெரியவகையில் காந்தம், உபதேச காண்டம், பிரமோத்தர காண்டம், காசி காண்டம் முதலியனவும் சின்ன வகுப்பில் திருவிளையாடல், திரு நாகைக் காரோணப் புராணம், மாயூரப் புராணம் முதலியனவும் முறையே பாடங்கேட்கப்பெற்று வந்தன.
இரண்டு வகைப் பாடங்களும் நடவாத சமயங்களில் இவர் சொல்லும் நூல்களை ஏட்டில் எழுதுவதும், நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை இவர் சொல்ல எழுதி முடித்துக் கையொப்பம் வாங்கித் தபாலில் அனுப்புவதும், முன்பு கேட்டிராத எந்த நூலுக்காவது பொருள் கேட்டு வருவதும், நூதனமாக வந்த மாணாக்கர்களுக்கு இவருடைய கட்டளையின்படி பாடம் சொல்லுவதும் எனக்கு அக்காலத்தில் அமைந்த வேலைகள்.
சுப்பிரமணிய தேசிகர்க்கு இவர்பாலுள்ள பேரருள்
காலைப்பாடம் நடந்து முடிவதற்குள் பதினொரு மணி ஆகி விடும்; சில சமயம் 12 மணி ஆகிவிடுவதும் உண்டு. இவர் பூஜையை முடித்துக்கொண்டு வருவதற்கு நேரமானால், பந்திக்கு வரக்கூடிய திருக்கூட்டத்தார் அனைவரோடும் தேசிகர் காத்திருப்பார். அச் செய்தி தமது காதிற்கு எட்டியவுடன் தம் நியமங்களை விரைவில் முடித்துக்கொண்டு இவர் செல்லுவார்.
பந்திக்கட்டின் மேல்பக்கத்திலுள்ள வாயிலின் நிலை குறியதாயிருந்தமையின் அங்கே இவர்போகும்பொழுது சிரமத்தோடு குனிந்து விரைந்து செல்லுதலைக் கண்ட தேசிகர் அந்தப் பாகத்துத் திருப்பணி நடக்கும்பொழுது இவர் செளகரியமாகச் செல்லுதற்குத் தக்க உயரமுள்ளதாக அந்த நிலையை அமைக்கவேண்டுமென்று கட்டளையிட்டார் ; அங்ஙனமே அமைக்கப்பெற்றது. அதைக் கவனித்த பலர் இவரிடம் தேசிகருக்குள்ள பேரருளை மிகவும் பாராட்டினர்.
ஒரு மொழிபெயர்ப்புப் பாடல்
ஒருநாள் திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகளிடம் இவர் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ஒரு சுலோகம் சொல்லிப் பொருளும் சொன்னார். இவர் அதனை உடனே செய்யுளாக எழுதுவித்துப் படிக்கச் செய்தனர். அவர் கேட்டு விரைவில் பொருள் விளங்கும்படி இவர் மொழிபெயர்த்ததை அறிந்து வியந்தார். அச் செய்யுள் வருமாறு:
(விருத்தம்) "நெற்றியி னீறு புனைந்திடப் பராகம் நிமிர்ந்தெழப் பல்செவி தோறும் சுற்றிய வராக்கண் அடைவொழித் திடுவான் துருத்திபோன் மூச்சினை யெறியப் பற்றிய நுதற்றீ யெழமதி யுருகிப் பாயமு துகுத்திடப் புற்றோல் வெற்றியா ருயிர்பெற் றெழவிடை யோட வெண்ணகை புரிபிரான் புரக்க." (பொருள்: சிவபிரான் தமது திருநெற்றியில் திருநீறு புனைந்தனர்; அப்பொழுது அந்த நீறு அவர் திருச்செவியில் குண்டலமாக அணிந்திருந்த நாகங்களின் கண்களில் விழுந்தது; அதை நீக்குவதற்கு அவை பெருமூச்சு விட்டன; அக்காற்றால் நெற்றிக்கண் நெருப்பு எரிந்தது. அந்த ஜ்வாலையினால் திருமுடியிலிருந்த பிறை உருகி அமுதத்தை உகுத்தது; அவ்வமுதத் துளிபட உடையாகிய புலித்தோல் உயிர்பெற்றெழுந்தது; அது கண்டு இடபவாகனம் அஞ்சி ஓடியது; இக்காட்சியைக் கண்டு அவர் நகைத்தார்; அத்தகைய சிவபிரான் காத்தருள்க.)
இவ்வண்ணம் அப்பொழுதப்பொழுது செய்த மொழிபெயர்ப்புப் பாடல்கள் பற்பலவென்று கேள்வி.
.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
9. இந்தப் புத்தகத்தில் 69 – ஆம் பக்கம் பார்க்க.
10. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3344.
11. இச்சொல் அற்றாலம் (அல் தாலம்) என்பதன் மரூஉ. இராப்போசனமென்பது இதற்குப் பொருள்; பகற் போசனம் முற்றாலம் (முன் தாலம்) என வழங்கும். இது மலை நாட்டு வழக்கம்.
12. முதற்பாகம், 204-ஆம் பக்கம் பார்க்க.
13. கம்ப, கிட்கிந்தைப், 61
14. திருவிளை. கரிக்குருவிக்கு. 15.
15. திருவிளை. நான் மாடக். 23.
16. முதற் பாகம், பக்கம், 173.
17. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 5050-82.
18. வானென்றது தேவர்களை; ஆகுபெயர்.
$$$