-மகாத்மா காந்தி

11. ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு
வெளிப் புயல்களையும் உட்புயல்களையும் ஆரம்பத்திலேயே சமாளிக்க வேண்டியதாயிருந்த ஆசிரமத்தின் கதையை இப்போதைக்கு நிறுத்திவிட்டு அப்பொழுது என் கவனத்தைக் கவர்ந்திருந்த மற்றொரு விஷயத்தைக் கொஞ்சம் கவனிப்போம்.
ஐந்து ஆண்டுகளுக்கும், அதற்குக் குறைவான காலத்திற்கும் வேலை செய்வது என ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன்பேரில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களே ஒப்பந்தத் தொழிலாளர்கள். நேட்டாலுக்கு ஒப்பந்தப்படி சென்றிருந்தவர்களுக்கு விதித்திருந்த மூன்று பவுன் வரி, 1914-இல் ஏற்பட்ட ஸ்மட்ஸ்- காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்தாயிற்று. என்றாலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விஷயமே கவனிக்க வேண்டியதாக இருந்தது.
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்துச் செய்துவிட வேண்டும் என்று 1916 மார்ச்சில் பண்டித மதன்மோகன மாளவியா இம்பீரியல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை லார்டு ஹார்டிஞ்சு ஏற்றுக் கொண்டார். அதோடு, அம்முறையை, “உரிய காலத்தில் ரத்துச் செய்து விடுவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடமிருந்து வாக்குறுதி கிடைத்திருக்கிறது” என்றும் அறிவித்தார். ஆயினும் இவ்விதமான திட்டமில்லாத ஒரு வாக்குறுதியைக் கொண்டு இந்தியா திருப்தி அடைந்துவிட முடியாது என்றும், அம்முறையை உடனே ரத்துச் செய்துவிட வேண்டுமெனக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும் கருதினேன். அசிரத்தையினாலேயே அம்முறையை இந்தியா சகித்து வந்திருக்கிறது; அதற்குப் பரிகாரம் வேண்டும் என்று மக்கள் வெற்றிகரமாகக் கிளர்ச்சி செய்ய வேண்டிய சமயம் வந்துவிட்டது என்றும் கருதினேன். தலைவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசினேன்; பத்திரிகைகளுக்கும் எழுதினேன். அம்முறையை உடனே ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகவே பொதுஜன அபிப்பிராயம் இருக்கிறது என்பதையும் கண்டேன். சத்தியாக்கிரகம் செய்வதற்கு இது ஏற்ற விசயமா? ஏற்ற விசயமே என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அதை எம் முறையில் நடத்துவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.
இதற்கிடையில் வைசிராய், “முடிவாக ரத்துச் செய்வது” என்பதன் பொருள் இன்னதென்பதைக் குறித்து எந்த ஒளிவு மறைவும் செய்யவில்லை. “இதற்கு மாறானதொரு ஏற்பாட்டைக் கொண்டு வருவதற்கு நியாயமாக வேண்டிய காலத்திற்குப் பிறகு அம்முறை ரத்துச் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
ஆகவே, அம்முறையை உடனே ரத்து செய்வதற்கு ஒரு மசோதாவைக் கொண்டுவர பண்டித மாளவியாஜி 1917 பிப்ரவரியில் அனுமதி கோரினார். அனுமதி கொடுக்க லார்டு செம்ஸ்போர்டு மறுத்து விட்டார். இந்தியா முழுவதிலும் இதைக் குறித்துக் கிளர்ச்சி செய்வதற்காக நான் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டியதாயிற்று.
கிளர்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்னால் வைசிராயைக் கண்டு பேசுவதே முறை என்று கருதினேன். கண்டு பேச விரும்புவதாக எழுதினேன். வைசிராயும் உடனே அனுமதி கொடுத்தார். ஸ்ரீ மேபி (இப்பொழுது ஸர் ஜான் மேபி) அப்பொழுது வைசிராயின் அந்தரங்கக் காரியதரிசி. அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டேன். லார்டு செம்ஸ்போர்டுடன் நான் பேசியது திருப்திகரமாகவே இருந்தது. திட்டமாகச் சொல்லாமல், தாம் உதவியாக இருப்பதாக அவர் வாக்களித்தார்.
என் சுற்றுப் பிரயாணத்தை பம்பாயிலிருந்து ஆரம்பித்தேன். ஏகாதிபத்தியப் பிரஜாவுரிமைச் சங்கத்தின் ஆதரவில் அங்கே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த ஜஹாங்கீர் பெடிட் ஒப்புக்கொண்டார். அக்கூட்டத்தில் கொண்டுவர வேண்டிய தீர்மானத்தைத் தயாரிப்பதற்காக அச்சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி முதலில் கூடியது. டாக்டர் ஸ்டான்லி ரீட், (இப்பொழுது ஸர்) ஸ்ரீ லல்லுபாய் சாமளதாஸ், ஸ்ரீ நடராஜன், பெடிட் ஆகியவர்கள் கமிட்டிக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எந்தக் காலத்திற்குள் நீக்கிவிட வேண்டும் என்று சர்க்காரைக் கேட்பது என்பதை நிர்ணயிப்பதைப் பற்றியே விவாதம் நடந்தது. மூன்று யோசனைகள் கூறப்பட்டன. ‘முடிந்த வரையில் சீக்கிரமாக ரத்துச் செய்வது’, ‘ஜூலை 31-ஆம் தேதிக்குள் ரத்துச் செய்வது’, ‘உடனே ரத்துச் செய்வது’ என்பவையே அந்த மூன்று யோசனைகள்.
குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் அரசாங்கம் நமது கோரிக்கைக்கு இணங்கத் தவறிவிட்டால் அதன் பிறகு என்ன செய்வது என்பதை நாங்கள் அப்போது முடிவு செய்ய இயலும் என்ற நிலையில், திட்டமான தேதி ஒன்றைக் குறிப்பிட்டுவிட வேண்டும் என்று கூறினேன். ‘உடனே ரத்துச் செய்துவிட வேண்டும்’ என்பதை ஸ்ரீ லல்லுபாய் கூறினார். ஜூலை 31-ஆம் தேதியைவிட மிகக் குறைந்த காலத்தையே ‘உடனே’ என்ற சொல் குறிக்கிறது என்றார் அவர். ‘உடனே’ என்ற சொல்லை மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் விளக்கினேன். அவர்கள் ஏதாவது செய்யும்படி பார்க்க வேண்டும் என்று நாம் விரும்பினால், இன்னும் திட்டவட்டமான சொல் அவர்களுக்கு வேண்டும் என்றேன். ‘உடனே’ என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் இஷ்டம்போல வியாக்கியானம் செய்து கொள்ளுவார்கள். அரசாங்கம் ஒரு வழியிலும், மக்கள் மற்றொரு வழியிலும் பொருள் கொள்ளுவர். ‘ஜூலை 31-ஆம் தேதிக்குள்’ என்பதை யாரும் தவறாகப் புரிந்துகொண்டு விடுவதற்கில்லை. அதே தேதிக்குள் ஒன்றும் செய்யப்படவில்லை யென்றால், நாம் மேற்கொண்டும் செய்ய வேண்டியதைக் கவனிக்க முடியும்.
என்னுடைய வாதத்தில் நியாயம் இருப்பதை டாக்டர் ரீட் கண்டுகொண்டார். முடிவாக ஸ்ரீ லல்லுபாயும் சம்மதித்தார். அம்முறையை ரத்துச் செய்வதை அறிவித்துவிட வேண்டும் என்பதற்கு ஜூலை 31-ஆம் தேதியை இறுதியாக நிர்ணயித்தோம். அதேமாதிரி பொதுக்கூட்டத்திலும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இந்தியா முழுவதிலும் நடந்த பொதுக்கூட்டங்களும் இதேபோன்று தீர்மானம் செய்தன.
வைசிராயிடம் பெண்கள் தூதுகோஷ்டி ஒன்று போவதற்கு ஏற்பாடு செய்வதில் முழுச் சிரத்தையையும் ஸ்ரீமதி ஜெய்ஜி பெடிட் எடுத்துக்கொண்டார். பம்பாயிலிருந்து தூது சென்ற பெண்களில் லேடி டாட்டா, காலஞ்சென்ற தில்ஷாத் பீகம் ஆகியோரின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அத் தூது கோஷ்டி சென்றதால் அதிக நன்மை ஏற்பட்டது. நம்பிக்கை ஏற்படும் வகையில் வைசிராய் அத் தூது கோஷ்டிக்குப் பதில் சொன்னார்.
கராச்சி, கல்கத்தா முதலிய அநேக இடங்களுக்கு நான் சென்றேன். அங்கெல்லாம் சிறப்பான பொதுக்கூட்டங்கள் நடந்தன. எங்கும் எல்லையற்ற உற்சாகம் இருந்தது. இது போலெல்லாம் இருக்கும் என்று, கிளர்ச்சியை ஆரம்பித்தபோது நான் எதிர் பார்க்கவில்லை.
அந்த நாளில் நான் தனியாகவே பிரயாணம் செய்தேன். ஆகையால், அற்புதமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. ரகசிய போலீஸார் என் பின்னால் வந்துகொண்டே இருந்தனர். ஆனால், ஒளிப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லாததால், அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. அவர்களுக்கும் நான் எந்த விதமான கஷ்டமும் கொடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் அப்போது ‘மகாத்மா’ பட்ட முத்திரையைப் பெற்றுவிட வில்லை. ஆனால், என்னைத் தெரிந்த இடங்களில் மக்கள் அப்பெயர் சொல்லிக் கோஷிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.
ஒரு சமயம் ரகசிய போலீஸார் பல ஸ்டேஷன்களிலும் என்னைத் தொந்தரவு செய்துவிட்டார்கள். என்னிடமிருந்த டிக்கெட்டைக் காட்டச் சொல்லி, அதன் நம்பரைக் குறித்துக் கொண்டனர். நானோ, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் சொல்லி வந்தேன். என்னுடன் அந்த வண்டியில் இருந்த பிரயாணிகள், நான் யாரோ ‘சாது’ அல்லது ‘பக்கிரி’ என்று எண்ணிக்கொண்டு விட்டனர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான் தொந்தரவு செய்யப்படுகிறேன் என்பதைக் கண்டதும் அவர்கள் ஆத்திரமடைந்து ரகசியப் போலீஸாரைத் திட்டினார்கள்: “அனாவசியமாக அந்தச் சாதுவை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்றும் கேட்டனர். “இந்தப் பாதகர்களிடம் உங்கள் டிக்கெட்டைக் காட்டாதீர்கள்” என்றும் அவர்கள் எனக்குக் கூறினர்.
“என்னுடைய டிக்கெட்டை அவர்களிடம் காட்டுவதில் எனக்குக் கஷ்டம் எதுவும் இல்லை. அவர்கள், அவர்களுடைய கடமையைச் செய்கிறார்கள்” என்று நான் சாந்தமாக அவர்களுக்குச் சமாதானம் கூறினேன். ஆனால், பிரயாணிகள் சமாதானம் அடையவில்லை. என்னிடம் மேலும் மேலும் அனுதாபம் கொண்டார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் இவ்விதம் தொந்தரவு செய்யப்படுவதைப் பலமாகக் கண்டித்தார்கள்.
ஆனால், ரகசிய போலீஸாரின் தொல்லை பெரிய தொல்லை அல்ல. உண்மையான கஷ்டமெல்லாம் மூன்றாம் வகுப்புப் பிரயாணந்தான். லாகூரிலிருந்து டில்லிக்குப் போன போதுதான் எனக்கு மிகுந்த கஷ்டமான அனுபவம் ஏற்பட்டது. கராச்சியிலிருந்து லாகூர் வழியாக கல்கத்தாவுக்குப் போய்க் கொண்டிருந்தேன். லாகூரில் வண்டி மாறி ஏற வேண்டும். வண்டியில் கொஞ்சமும் இடம் கிடைக்கவில்லை. வண்டி நிறையக் கூட்டம் இருந்தது. வண்டிக்குள் ஏற முடிந்தவர்கள், இடித்துத் தள்ளிக்கொண்டு பலவந்தமாக ஏறியவர்களே. கதவுகள் பூட்டப்பட்டிருந்த வண்டிகளில் ஜன்னல் வழியாகச் சிலர் ஏறிக் குதித்தனர். பொதுக் கூட்டத்திற்குக் குறிப்பிட்டிருந்த தேதியில் நான் கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டும். இந்த வண்டியை நான் விட்டுவிட்டால் உரிய காலத்தில் நான் கல்கத்தா போய்ச் சேர முடியாது. உள்ளே புகுந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை யெல்லாம் விட்டுவிட்டேன். நான் ஏறிக்கொள்ளுவதை அனுமதிக்க யாரும் தயாராயில்லை. நான் இவ்விதம் திண்டாடுவதைக் கண்ட ஒரு போர்ட்டர், என்னிடம் வந்து, “எனக்குப் பன்னிரெண்டு அணாக் கொடுங்கள். நான் உங்களுக்கு ஓர் இடம் தேடித் தருகிறேன்” என்றார். “சரி; எனக்கு இடம் தேடிக் கொடுத்து விட்டால் உமக்கு பன்னிரண்டு அணா தருகிறேன்” என்றேன். அந்த வாலிபர், வண்டி வண்டியாகப் போனார். பிரயாணிகளைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால், ஒருவர்கூட அவர் கெஞ்சலுக்குச் செவி சாய்க்கவில்லை. ரெயில் புறப்படவிருந்த சமயத்தில் சில பிரயாணிகள், “இங்கே இடம் கிடையாது; வேண்டுமானால், அவரை உள்ளே தள்ளு; அவர் நின்று கொண்டுதான் வர வேண்டும்” என்றார்கள். “என்ன சொல்லுகிறீர்கள்?” என்று வாலிப போர்ட்டர் என்னைக் கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். என்னை அவர் அப்படியே தூக்கி ஜன்னல் வழியாக உள்ளே தள்ளினார். இவ்வாறு உள்ளே புகுந்தேன்; போர்ட்டரும் பன்னிரெண்டு அணா சம்பாதித்துவிட்டார்.
இரவு பெரும் சோதனையாகிவிட்டது. மற்ற பிரயாணிகள் எப்படியோ சமாளித்து உட்கார்ந்திருந்தார்கள். மேல் தட்டின் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு இரண்டு மணி நேரம் நின்றுகொண்டே இருந்தேன். இதன் நடுவில் சில பிரயாணிகள் இடைவிடாமல் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். “கீழே உட்காருகிறது தானே?” என்று என்னைக் கேட்டனர். உட்காருவதற்கு இடமே இல்லை என்று அவர்களுக்குச் சமாதானம் கூற முயன்றேன். அவர்கள் மேல் தட்டுகளில் நன்றாகக் காலை நீட்டிக்கொண்டு படுத்திருந்த போதிலும், நான் நின்று கொண்டிருப்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை. என்னை ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். நானும் சளைக்காமல் சாந்தமாக அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். கடைசியில் ஒருவாறு சமாதானம் அடைந்தார்கள். அவர்களில் சிலர், என் பெயர் என்ன என்று விசாரித்தனர். நான் அதைச் சொன்னதும் வெட்கமடைந்தனர். என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு எனக்கு இடமும் ஒளித்துத் தந்தார்கள். இவ்விதம் பொறுமைக்குப் பலன் கிடைத்தது. நான் அதிகக் களைப்படைந்து விட்டேன். தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. உதவி மிகவும் தேவையாக இருந்த நேரத்தில் கடவுள் உதவியை அனுப்பினார்.
இவ்விதமாக ஒருவாறு டில்லி சேர்ந்தேன்; பின்னர் கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்தேன். கல்கத்தாப் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த காஸிம்பஜார் மகாராஜாவின் விருந்தினனாகத் தங்கியிருந்தேன். கராச்சியில் இருந்ததைப் போன்றே இங்கும் மக்கள் அளவில்லாத உற்சாகம் கொண்டு இருந்தனர். அக்கூட்டத்திற்கு அநேக ஆங்கிலேயர்களும் வந்திருந்தார்கள்.
இந்தியாவிலிருந்து ஒப்பந்தத்தின் பேரில் தொழிலாளரை அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னாலேயே அரசாங்கம் அறிவித்துவிட்டது.
இம் முறையை ஆட்சேபித்து நான் முதல் மனுவைத் தயாரித்தது 1894-ஆம் ஆண்டில்; இம்முறையைக் குறித்து ஸர் ஹன்டர் கூறி வந்ததுபோல் ‘பாதி அடிமைத்தனமான’ இது ஒரு நாளைக்கு ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று நான் அப்பொழுதே நம்பினேன்.
1894-இல் ஆரம்பமான கிளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள் அநேகர். ஆனால், இம்முறையை ஒழிப்பதற்குச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பது என்ற உறுதியே அது சீக்கிரத்தில் ஒழியும்படி செய்துவிட்டது என்பதை நான் சொல்லாமல் இருப்பதற்கில்லை.
இக்கிளர்ச்சியைப் பற்றிய விவரங்களையும் அதில் யார் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்பது பற்றியும் அறிவதற்கு நான் எழுதிய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் என்ற நூலை வாசகர்கள் படிக்கவும்.
$$$
12. அவுரிச் சாகுபடி அநீதி
ஜனக மகாராஜன் ஆண்ட நாடு, சம்பாரண். அங்கே மாந்தோப்புக்கள் ஏராளமாக இருப்பதைப் போலவே, 1917ஆம் ஆண்டு வரையில், அவுரித் தோட்டங்களும் நிறைய இருந்து வந்தன. சம்பாரண் குடியானவர் ஒவ்வொருவரும், தாம் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில் மூன்று பாகத்தில் தமது நிலச்சுவான்தாருக்காக அவுரியைக் கட்டாயம் பயிர் செய்தாக வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதற்கு ‘தீன் கதியா’ முறை என்று பெயர். இருபது ‘கதியா’க்கள் கொண்டது ஒரு ஏக்கர். அதில் மூன்று ‘கதியா’வில் அவுரிச் சாகுபடி செய்யவேண்டும் என்று இருந்ததால் அம்முறைக்குத் ‘தீன் கதியா’ என்று பெயர்.
சம்பாரண் இருக்கும் இடம் மாத்திரம் அல்ல, அப்பெயர் கூட எனக்கு அப்பொழுது தெரியாது என்பதை நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவுரித் தோட்டங்களைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அவுரிப் பொட்டணங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சம்பாரணில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பெருந்துன்பங்களை விளைவித்து அவுரியைப் பயிரிட்டுத் தயாரிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
இத்துன்பங்களை அனுபவித்து வந்த விவசாயிகளில் ஒருவர் ராஜ்குமார் சுக்லா. தம்மைப்போல மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அனுபவித்து வரும் அநீதியை எப்படியும் போக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர் அவர்.
1916-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகாநாட்டிற்கு நான் லட்சுமணபுரி போயிருந்தபோது அவர் என்னைப் பிடித்துக் கொண்டார். “எங்கள் துயரங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் வக்கீல் பாபு உங்களுக்குக் கூறுவார்” என்று அவர் சொன்னார். சம்பாரணுக்கு வருமாறும் என்னை வற்புறுத்தினார். ‘வக்கீல் பாபு’ என்று அவர் சொன்னது, பாபு பிரஜ்கிஷோர் பிரசாத்தையே. அவர் சம்பாரணில் எனக்கு மிகச் சிறந்த சக ஊழியரானார். பீகாரில் பொதுஜன சேவைக்கு உயிராகவும் அவர் இருந்தார். ராஜ்குமார் சுக்லா, அவரை என் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர் கால் சட்டை அணிந்து, கறுப்பு மேல் சட்டையும் போட்டிருந்தார். அப்பொழுது பிரஜ்கிஷோர் பாபு எனக்கு அவ்வளவாக ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கவில்லை. ஒன்றும் தெரியாத விவசாயிகளை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு வக்கீலாக அவர் இருக்கக்கூடும் என்றே நான் எண்ணினேன். சம்பாரணைப் பற்றி அவர் வாய்மொழி மூலம் கேட்டறிந்ததும், என் வழக்கத்தை ஒட்டி, “நிலைமையை நேரில் பார்ப்பதற்கு முன்னால் நான் எந்தவித அபிப்பிராயமும் கூறுவதற்கில்லை. காங்கிரஸில் தயவு செய்து நீங்களே தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள். இப்போதைக்கு என்னைச் சும்மா விட்டு விடுங்கள்” என்றேன். காங்கிரஸிடமிருந்தும் கொஞ்சம் உதவியைப் பெற ராஜ்குமார் சுக்லா விரும்பினார். சம்பாரண் மக்களிடம் அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை பாபு பிரஜ்கிஷோர் பிரசாத் கொண்டு வந்தார். அத்தீர்மானம் காங்கிரஸில் ஏகமனதாக நிறைவேறியது.
ராஜ்குமார் சுக்லா மகிழ்ச்சியடைந்தாரெனினும் திருப்தி அடைந்து விடவில்லை. நானே நேரில் சம்பாரணுக்கு வந்து விவசாயிகளின் துயரங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். நான் செய்யவிருந்த சுற்றுப் பிரயாணத்தில் சம்பாரணையும் சேர்த்துக் கொள்ளுவதாகவும், இரண்டொரு நாள் அங்கே இருப்பதாகவும் சொன்னேன். “ஒரு நாளே போதும். அங்கே நடப்பதையெல்லாம் உங்கள் கண்ணாலேயே நீங்கள் காணலாம்” என்றார், அவர்.
லட்சுமணபுரியிலிருந்து கான்பூருக்குப் போனேன். ராஜ்குமார் சுக்லா அங்கும் என்னுடன் வந்தார். “இங்கிருந்து சம்பாரண் அருகிலேயே இருக்கிறது. அங்கே வருவதற்கென்று ஒரு நாள் ஒதுக்குங்கள்” என்று அவர் வற்புறுத்தினார். “தயவுசெய்து இந்தத் தடவை மன்னித்துவிடுங்கள். ஆனால், நான் பிறகு நிச்சயமாக வருகிறேன்” என்று கூறி மேற்கொண்டும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
பிறகு ஆசிரமத்திற்குத் திரும்பினேன். விடாக்கண்டரான ராஜ்குமார் அங்கேயும் வந்துவிட்டார். “நீங்கள் வரும் நாளைத் தயவுசெய்து இப்பொழுதே குறிப்பிட்டு விடுங்கள்” என்றார். “சரி, இன்ன தேதியில் நான் கல்கத்தாவில் இருக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது வந்து என்னைச் சந்தித்து, அங்கே அழைத்துப் போங்கள்” என்றேன். நான் போக வேண்டியது எங்கே, செய்ய வேண்டியது என்ன, பார்க்க வேண்டியது எது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
கல்கத்தாவில் பூபேன் பாபுவின் வீட்டிற்கு நான் போய்ச் சேருவதற்கு முன்னாலேயே ராஜ்குமார் சுக்லா அங்கே போய் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். இவ்விதம் கள்ளங்கபடமற்ற, எளிய ஆனால், மிக்க உறுதியுடைய இந்த விவசாயி என்னைப் பிடித்துக்கொண்டு விட்டார்.
ஆகவே, 1917-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நாங்கள் கல்கத்தாவிலிருந்து சம்பாரணுக்குப் புறப்பட்டோம். நாங்கள் இருவரும் நாட்டுப்புற ஆசாமிகளாகவே தோற்றம் அளித்தோம். அங்கே போக எந்த ரெயிலில் ஏறுவது என்பது கூட எனக்குத் தெரியாது. அவர் தான் என்னை வண்டிக்கு அழைத்துப் போனார். இருவரும் சேர்ந்தாற் போலப் பிரயாணம் செய்து காலையில் பாட்னா போய்ச் சேர்ந்தோம்.
பாட்னாவுக்கு அப்பொழுதுதான் முதல்முறையாக நான் சென்றேன். அங்கே தங்கலாம் என்றால், எனக்கு நண்பர்களோ, தெரிந்தவர்களோ யாரும் இல்லை. ராஜ்குமார் சுக்லா சாதாரணக் குடியானவரேயாயினும் பாட்னாவில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருக்கக்கூடும் என்று எண்ணினேன். பிரயாணத்தின் போது அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்து கொண்டேன். ஆனால், பாட்னா போய்ச் சேர்ந்ததும் அவரைப்பற்றி எனக்கு எந்தவிதமான மயக்கமும் இல்லாது போய்விட்டது. அவருக்கு எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. தம் நண்பர்கள் என்று அவர் எண்ணியிருந்த வக்கீல்கள், அப்படி ஒன்றும் அவர் நண்பர்கள் அல்ல. ஏழை ராஜ்குமார், அநேகமாக அவர்களுக்குக் குற்றேவல் செய்பவராகவே இருந்தார். இத்தகைய விவசாயிகளான குடியானவர்களுக்கும் அவர்களுடைய வக்கீல்களுக்குமிடையே, பிரவாக சமயத்தில் கங்கை இருப்பதைப் போன்று, அகலமான அகழ் இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும்.
ராஜ்குமார் சுக்லா, பாட்னாவில் ராஜேந்திர பாபு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அச்சமயம் ராஜேந்திர பாபு பூரிக்கோ வேறு எங்கோ போய்விட்டார். எங்கே என்பது எனக்கு நினைவு இல்லை. பங்களாவில் இரண்டொரு வேலைக்காரர்களே இருந்தார்கள். அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. சாப்பிட என் வசம் கொஞ்சம் ஆகாரம் இருந்தது. பேரீச்சம் பழம் வேண்டும் என்றேன். அவர் கடைக்குப் போய் அதை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார்.
தீண்டாமை, பீகாரில் மிகக் கடுமையாக அனுசரிக்கப்பட்டு வந்தது. கிணற்றிலிருந்து வேலைக்காரர்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும்போது நான் தண்ணீர் எடுக்கக் கூடாது என்றனர். அப்படி எடுத்தால் என் வாளியிலிருந்து நீர்த் துளிகள் சிதறி, தாங்கள் தீட்டாகி விடுவார்கள் என்றனர். ஏனெனில், நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்பது அவர்களுக்குத் தெரியாது. வீட்டிற்குள்ளிருந்த கக்கூசுக்குப் போகும்படி குமார் எனக்குக் காட்டினார். ஆனால், வேலைக்காரர்களோ, வெளியிலிருந்த கக்கூசுக்குப் போகும்படி கூறிவிட்டனர். இத்தகைய அனுபவங்கள் எனக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்டதால், இவைகளைக் கண்டு நான் ஆச்சரியப்படவுமில்லை, கோபமடையவுமில்லை. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ராஜேந்திரப் பிரசாத் விரும்புவார் என்று அவ்வேலைக்காரர்கள் எண்ணினார்களோ, அந்தக் கடமையை அவர்கள் செய்தனர்.
அந்தச் சுவாரஸ்யமான அனுபவங்களினால் ராஜ்குமார் சுக்லாவைக் குறித்துச் சரியாக நான் தெரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயத்தில் அவர்மீது எனக்கிருந்த மதிப்பும் அதிகமாயிற்று. ராஜ்குமாரினால் எனக்கு வழிகாட்ட முடியாது; லகானை நானே கையில் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதை இப்பொழுது கண்டுகொண்டேன்.
$$$
13 . சாதுவான பீகாரி
மௌலானா மஜ்ருல் ஹக் லண்டனில் வக்கீல் தொழிலுக்குப் படித்துக் கொண்டிருந்தபோது அவரை எனக்குத் தெரியும். பிறகு 1915-இல் காங்கிரஸில் அவரைச் சந்தித்தேன். அந்த ஆண்டு அவர் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தார். அப்பொழுது மீண்டும் பழக்கம் ஏற்பட்டபோது, நான் பாட்னாவுக்கு எப்பொழுதாவது வந்தால் தம்முடன் தங்குமாறு அவர் அழைத்திருந்தார். இப்பொழுது அது எனக்கு ஞாபகம் வந்தது. நான் வந்திருக்கும் நோக்கத்தை அறிவித்து அவருக்கு ஒரு சீட்டு அனுப்பினேன். உடனே அவர் தமது மோட்டாரில் வந்து, தம்முடன் வந்து தங்குமாறு வற்புறுத்தினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு நான் போக வேண்டிய இடத்திற்குப் புறப்படும் முதல் வண்டியிலேயே என்னை அனுப்பும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன். அவ்விடத்திற்கு என்னைப் போன்று முற்றும் புதிதான ஒருவரால் ரெயில்வே வழிகாட்டியைக் கொண்டு எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, ராஜ்குமார் சுக்லாவுடன் பேசினார். நான் முஜாபர்பூருக்கு முதலில் போக வேண்டுமென்று யோசனை கூறினார். அங்கே போக அன்று மாலையிலேயே ஒரு வண்டி இருந்தது. அதில் அவர் என்னை ஏற்றி அனுப்பினார்.
பிரின்ஸிபால் கிருபளானி அப்பொழுது முஜாபர்பூரில் இருந்தார். ஹைதராபாத்திற்கு (சிந்து) நான் போயிருந்த போதிலிருந்து அவரை நான் அறிவேன். அவருடைய பெரும் தியாகங்களைக் குறித்தும் எளிய வாழ்க்கையைப் பற்றியும், பேராசிரியர் கிருபளானி அளித்து வரும் நிதியைக்கொண்டு தாம் ஆசிரமம் நடத்தி வருவதைப் பற்றியும் டாக்டர் சோயித்ராம் என்னிடம் கூறியிருந்தார். கிருபளானி, முஜாபர்பூர் அரசாங்கக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். நான் அங்கே போவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் அவர் அந்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்து விட்டார். நான் அங்கே வருவது குறித்து அவருக்குத் தந்தி மூலம் அறிவித்திருந்தேன். ரெயில், நடுநிசியில் அங்கு போனபோதிலும் ஒரு மாணவர் கூட்டத்துடன் வந்து அவர் என்னை ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தார். அவருக்குச் சொந்த ஜாகை எதுவும் இல்லை. பேராசிரியர் மல்கானியுடன் அவர் வசித்து வந்தார். ஆகையால் நானும் மல்கானியின் விருந்தினன் ஆனேன். என்னைப் போன்ற ஒருவனுக்கு, அரசாங்கத்தில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர் இடம் கொடுத்து உபசரிப்பது என்பது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வமான விஷயமாகும்.
பீகாரில் முக்கியமாக திர்ஹூத் பகுதியில் இருந்துவந்த சகிக்க முடியாத மோசமான நிலைமையைக் குறித்து பேராசிரியர் கிருபளானி எனக்கு விவரமாகக் கூறினார். நான் மேற்கொண்டிருக்கும் வேலை எவ்வளவு கஷ்டமானது என்பதையும் தெரிவித்தார். அவர் பீகாரிகளுடன் நெருங்கிப் பழகி நல்ல தொடர்பு வைத்திருந்தார். நான் பீகாருக்கு வந்திருக்கும் வேலையைக் குறித்து முன்னாடியே அவர்களுடன் பேசியும் இருந்தார்.
காலையில் சில வக்கீல்கள் சேர்ந்து என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் ஒருவரான ராமநவமி பிரசாத்தை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. முக்கியமாக அவர் கொண்டிருந்த சிரத்தை என் மனத்தைக் கவர்ந்தது. “நீங்கள் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதை நீங்கள் இங்கே (பேராசிரியர் மல்கானியின் வீட்டில்) தங்கினால் செய்யவே முடியாது. நீங்கள் எங்களில் யாராவது ஒருவருடன் வந்து தங்க வேண்டும். கயா பாபு இங்கே பிரபலமான வக்கீல். அவருடன் நீங்கள் வந்து தங்க வேண்டும் என்று அவர் சார்பாக உங்களை அழைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும் அரசாங்கத்திடம் பயப்படுகிறவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். என்றாலும், எங்களாலான உதவியை நாங்கள் செய்வோம். ராஜ்குமார் சுக்லா உங்களிடம் கூறியவை பெரும்பாலும் உண்மையே. எங்கள் தலைவர்கள் இன்று இங்கே இல்லாது போனது வருந்தத்தக்கது. ஆயினும், பாபு பிரஸ்கிஷோர் பிரசாத், பாபு ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவருக்கும் தந்தி கொடுத்திருக்கிறேன். அவர்கள் சீக்கிரத்திலேயே இங்கே வந்து உங்களுக்குத் தேவையான தகவல்களையெல்லாம் கூறுவதோடு அதிக அளவு உதவியும் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். தயவு செய்து கயா பாபுவின் வீட்டிற்கு வாருங்கள்” என்று கூறி ராமநவமி பிரசாத் அழைத்தார்.
கயா பாபுவுக்குத் தொந்தரவு கொடுப்பானேன் என்று அஞ்சி நான் தயங்கிய போதிலும் இந்த வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், அப்படி ஒன்றும் தொந்தரவு இல்லை என்று அவர் கூறியதன் பேரில் அவருடன் இருக்கப் போனேன். அவரும் அவருடைய வீட்டினரும் என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டினர்.
தர்பங்காவிலிருந்து பிரஜ்கிஷோர் பாபுவும், பூரியிலிருந்து ராஜேந்திர பாபுவும் இதற்குள் வந்து சேர்ந்துவிட்டனர். லட்சுமணபுரியில் நான் சந்தித்த பாபு பிரஜ்கிஷோர் பிரசாத் அல்ல, இந்த பிரஜ்கிஷோர் பாபு. இத் தடவை பீகாரிகளுக்கு இயற்கையாக உள்ள அடக்கம், எளிமை, நல்ல தன்மை, அளவு கடந்த நம்பிக்கை ஆகியவைகளை அவரிடம் கண்டேன். இவை என்னைக் கவர்ந்ததால், என் உள்ளம் அதிக ஆனந்தமடைந்தது. பீகார் வக்கீல்கள் அவரிடம் கொண்டிருந்த மதிப்பு, எனக்கு ஓரளவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
இந்த நண்பர்களின் கூட்டத்தோடு ஆயுள் முழுவதற்கும் நட்புத்தளையில் நான் பிணைக்கப்பட்டு வருவதாகச் சீக்கிரத்திலேயே நான் உணர்ந்தேன். அங்கிருந்த நிலைமையைக் குறித்து எல்லா விவரங்களையும் பிரஜ்கிஷோர் பாபு எனக்குக் கூறினார். ஏழை விவசாயிகளின் வழக்குகளை அவர் நடத்துவது வழக்கம் என்றும் அறிந்தேன். நான் அங்கே சென்றபோது, அத்தகைய வழக்குகளில் இரண்டு கோர்ட்டில் விசாரணையில் இருந்தன. அப்படிப்பட்ட வழக்குகளில் அவர் வெற்றி பெற்றுவிட்டால், அந்த ஏழை மக்களுக்குத் தாம் ஏதோ கொஞ்சம் உதவி செய்ததாக எண்ணி அவர் ஆறுதல் அடைவாராம். ஒன்றும் தெரியாத அந்த விவசாயிகளிடம் அவர் கட்டணம் வாங்காமல் இல்லை. வழக்குகளுக்குப் பணம் வாங்காவிட்டால், தாங்கள் குடும்பத்தை நடத்த முடியாது என்றும், அதனால் ஏழைகளுக்குச் சரியானபடி தாங்கள் உதவி செய்ய முடியாது போகும் என்றும் பொதுவாக வக்கீல்கள் எண்ணி வந்தனர். வழக்குகளுக்கு இவர்கள் வாங்கி வந்த கட்டணத் தொகையும், வங்காளத்திலும் பீகாரிலும் பாரிஸ்டர்கள் வாங்கி வந்த கட்டணங்களும் என்னைத் திகைக்கும்படி செய்துவிட்டன.
“இன்னாரின் அபிப்பிராயத்தைக் கேட்பதற்காக அவருக்கு ரூ.10,000 கொடுத்தோம்” என்று என்னிடம் சொன்னார்கள். யாருக்கும் ஆயிரத்திற்குக் குறைவான தொகையே இல்லை. இதைக் குறித்து நான் அன்புடன் கண்டித்துப் பேசியதை அந்நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். என்னைத் தவறாக அவர்கள் எண்ணிக் கொண்டு விடவில்லை.
அவர்களிடம் நான் கூறியதாவது: “நிலைமையை நான் அறிந்து கொண்டதிலிருந்து கோர்ட்டுகளுக்குப் போவது என்பதை நாம் நிறுத்திக் கொண்டு விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இத்தகைய வழக்குகளை கோர்ட்டுக்குக் கொண்டு போவதால், எந்தவிதமான நன்மையும் இல்லை. விவசாயிகள் இவ்விதம் நசுக்கப்பட்டுப் பயமடைந்திருக்கும் போது, கோர்ட்டுகள் பயனற்றவை. அவர்களுக்கு உண்மையான பரிகாரம், பயத்திலிருந்து அவர்களை விடுவிப்பதே. ‘தீன் கதியா’ முறையைப் பீகாரிலிருந்து விரட்டியடித்து விடும் வரையில் நாம் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. இரண்டு நாட்களில் இங்கிருந்து புறப்பட்டுவிட முடியும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், இந்த வேலையை முடிக்க இரண்டு ஆண்டுகளும் ஆகக்கூடும் என்பதை இப்பொழுது நான் அறிகிறேன். அவசியமானால், அவ்வளவு காலம் இருக்கவும் நான் தயாராயிருக்கிறேன். நான் செய்ய வேண்டியிருக்கும் வேலை இன்னதென்பதை இப்பொழுது உணருகிறேன். ஆனால், உங்கள் உதவி எனக்கு வேண்டும்.”
பிரஜ்கிஷோர் பாபு, இணையற்ற வகையில் நிதானத்துடன் இருந்ததைக் கண்டேன். அவர் அமைதியோடு, “எங்களால் முடிந்த உதவிகளையெல்லாம் நாங்கள் செய்கிறோம். ஆனால், உங்களுக்கு எந்தவிதமான உதவி தேவை என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்” என்றார்.
இவ்வாறு நடுநிசி வரையில் உட்கார்ந்து பேசினோம். நான் அவர்களிடம் கூறியதாவது: “உங்களுடைய சட்ட ஞானத்தால் எனக்கு ஒருவிதப் பிரயோசனமும் இல்லை. எழுத்து வேலைக்கும், மொழிபெயர்க்கும் வேலைக்குமே எனக்கு உதவி தேவை; சிறை செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அந்த அபாயத்திற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புவேன். ஆனால், எவ்வளவு தூரம் போக முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அந்த அளவுக்கு மாத்திரம் நீங்கள் போகலாம். நீங்கள் குமாஸ்தாக்கள் ஆகிவிடுவதும், நிச்சயமற்ற காலம் வரையில் தொழிலை விட்டுவிட வருவதும் சாமான்யமான விஷயமே அல்ல. இப் பகுதியில் பேசப்படும் ஹிந்தியைப் புரிந்து கொள்வது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. செய்தி அல்லது உருது மொழிப் பத்திரிகைகளையும் என்னால் படிக்க முடியாது. இவற்றை மொழிபெயர்த்து எனக்குச் சொல்ல உங்கள் உதவி வேண்டியிருக்கும். இந்த வேலைக்குச் சம்பளம் கொடுத்து ஆள் வைக்க நம்மால் ஆகாது. அன்பிற்காகவும், சேவை உணர்ச்சியின் பேரிலுமே இவைகளெல்லாம் செய்யப்பட வேண்டும்.”
பிரஜ்கிஷோர் பாபு நான் கூறியதை உடனே நன்கு அறிந்து கொண்டார். இப்பொழுது அவர் என்னையும் தமது சகாக்களையும் முறையாகக் கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். தங்கள் சேவை எவ்வளவு காலத்திற்கு வேண்டியிருக்கும், தங்களில் எத்தனை பேர் வேலைக்கு வேண்டும். தாங்கள் முறை போட்டுக் கொண்டு வந்து சேவை செய்யலாமா என்பன போன்ற கேள்விகளையெல்லாம் அவர் கேட்டார். அவற்றின் மூலம் நான் கேட்ட உதவியின் தன்மையைத் தெளிவாக்கிக் கொள்ள முயன்றார். பிறகு தியாகத்திற்குத் தங்களுக்குள்ள சக்தியைக் குறித்து வக்கீல்களைக் கேட்டார்.
முடிவாக அவர்கள் எனக்கு இந்த வாக்குறுதியை அளித்தார்கள்: “எங்களில் இத்தனை பேர் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களில் சிலர், நீங்கள் விரும்பும் காலம் வரையில் உங்களுடனேயே இருப்போம். ஆனால், சிறை செல்வதற்குத் தயாராவது என்பது எங்களுக்குப் புதியதொரு விஷயம். அதற்கும் எங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள முயல்கிறோம்.”
$$$
14. அகிம்சையுடன் நேருக்குநேர்
சம்பாரண் விவசாயிகளின் நிலைமையும், அவுரித் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு இருந்த குறைகளையும் விசாரித்து அறிந்து கொள்வதே என்னுடைய நோக்கம். ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் சந்தித்தாக வேண்டியது இக்காரியத்திற்கு அவசியமாயிற்று. ஆனால், என்னுடைய விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இவ்விஷயத்தில் தோட்ட முதலாளிகளின் கட்சி இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளுவதும், அந்த டிவிஷனின் கமிஷனரைக் கண்டு பேசுவதும் மிக முக்கியம் என்று கருதினேன். இவ்விருவரையும் கண்டு பேச அனுமதி கேட்டு அதையும் பெற்றேன்.
தோட்ட முதலாளிகளின் சங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். நான் வெளியான் என்றும், தோட்ட முதலாளிகளுக்கும் அவர்களுடைய சாகுபடியாளருக்கும் இடையே தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் ஒளிவு மறைவு இன்றிச் சொல்லி விட்டார். ஆனால், நான் சொல்லிக்கொள்ள வேண்டியது ஏதாவது இருந்தால், அதை எழுத்து மூலம் தெரிவித்துக் கொள்ளுமாறும் என்னிடம் கூறிவிட்டார். வெளியான் என்று நான் என்னை எண்ணிக் கொள்ளவில்லை என்றும், சாகுபடியாளர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி நான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவார்களாயின் அப்படி விசாரிப்பதற்கு எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது என்றும் அவரிடம் பணிவாகச் சொன்னேன்.
கமிஷனரையும் போய்ப் பார்த்தேன். அவர் என்னை உருட்டி மிரட்டத் தொடங்கினார். திர்ஹுத்திலிருந்து உடனே போய் விடுமாறும் அவர் எனக்குப் புத்திமதி சொன்னார்.
இவையெல்லாவற்றையும் என் சக ஊழியர்களுக்குத் தெரிவித்தேன். மேற்கொண்டும் நான் செல்ல முடியாதபடி அரசாங்கம் என்னைத் தடுத்துவிடக் கூடும் என்றும், ஆகவே நான் எதிர்பார்த்ததற்கும் முன்னாலேயே நான் சிறை சென்றுவிட நேரலாம் என்றும், நான் கைது செய்யப்பட்டால், அப்படிச் செய்யப்படுவது பேதியாவில் சாத்தியமானால் நடக்க வேண்டும்; அல்லது மோதிகாரியில் நடப்பது மிகச் சிறந்தது என்றும் சொன்னேன். ஆகையால் சாத்தியமான வரையில் சீக்கிரத்திலேயே நான் அந்த இடங்களுக்குப் போவதே நல்லது என்றும் கூறினேன்.
திர்ஹுத் டிவிஷனில் சம்பாரண் ஒரு ஜில்லா; மோதிகாரி அதன் தலைநகரம். ராஜ்குமார் சுக்லாவின் ஊர் பேதியாவுக்குப் பக்கத்தில் இருந்தது. அதற்குப் பக்கத்திலிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளே, அந்த ஜில்லாவில் மிகவும் ஏழைகள். அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று ராஜ்குமார் சுக்லா விரும்பினார்; நானும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன்.
ஆகவே, அன்றே என் சக ஊழியர்களுடன் நான் மோதிகாரிக்குப் புறப்பட்டேன். அங்கே பாபு கோரக் பிரசாத் எங்களுக்குத் தம் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். இதனால் அவர் வீடு ஒரு சத்திரம் போல் ஆகிவிட்டது. நாங்கள் எல்லோரும் தங்குவதற்கு அந்த வீட்டில் இடம் போதவில்லை. மோதிகாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு விவசாயி துன்புறுத்தப்பட்டார் என்று அன்றே நாங்கள் கேள்விப்பட்டோம். அடுத்த நாள் காலையில் பாபு தரணீதர் பிரசாத்துடன் நான் அங்கே போய் அந்த விவசாயியைப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி யானை மீது ஏறி நாங்கள் அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். குஜராத்தில் மாட்டு வண்டி எப்படிச் சர்வ சாதாரணமோ அதேபோல சம்பாரணில் யானை சர்வ சாதாரணம். பாதி தூரம்கூடப் போயிருக்க மாட்டோம், அதற்குள் போலீஸ் சூப்பரின்டெண்டென்டிடமிருந்து வந்த ஓர் ஆள் எங்களைப் பிடித்தார். போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் தமது வந்தனத்தை எனக்கு அனுப்பியதாக அந்த ஆள் கூறினார். அவர் கூறியதன் கருத்தை நான் அறிந்துகொண்டேன். போக இருந்த இடத்திற்குத் தரணீதர் பிரசாத்தை மாத்திரம் போகச் சொல்லிவிட்டு, அந்த ஆள் கொண்டு வந்திருந்த வாடகை வண்டியில் நான் ஏறிக் கொண்டேன். சம்பாரணிலிருந்து நான் போய்விட வேண்டும் என்ற உத்தரவைப் பிறகு அந்த ஆள் எனக்குச் சாதரா செய்து, என்னை நான் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டார். உத்தரவைப் பெற்றுக் கொண்டதற்குக் கையெழுத்துப் போட்டுத் தரும்படி அவர் கேட்டார். அந்த உத்தரவுக்கு நான் கீழ்ப்படியப் போவதில்லை என்றும், என் விசாரணை முடியும் வரையில் நான் சம்பாரணிலிருந்து போகப்போவதில்லை என்றும் எழுதிக் கொடுத்தேன். அதன் பேரில் சம்பாரணை விட்டுப் போய்விட வேண்டும் என்ற உத்தரவை மீறிவிட்ட குற்றத்திற்காக விசாரிப்பதற்கு, மறுநாள் கோர்ட்டுக்கு வருமாறு எனக்குச் சம்மன் வந்தது.
அன்று இரவு முழுவதும் விழித்திருந்து கடிதங்கள் எழுதினேன்; பாபு பிரஜ்கிஷோர் பிரசாத்துக்கு அவசியமான யோசனைகளை எல்லாம் கூறினேன்.
எனக்கு உத்தரவிடப்பட்டதும் சம்மன் வந்திருப்பதும் காட்டுத்தீபோல் எங்கும் பரவிவிட்டன. மோதிகாரி, இதற்கு முன்னால் என்றுமே கண்டறியாத காட்சியை அன்று கண்டது என்று சொன்னார்கள். கோரக் பாபுவின் வீட்டிலும், கோர்ட்டிலும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரே ஜனக் கூட்டம். அதிர்ஷ்டவசமாக என் வேலைகளை யெல்லாம் இரவிலேயே செய்து முடித்து விட்டதால் அப்பெரும் கூட்டத்தைச் சமாளிக்க என்னால் முடிந்தது. என் சகாக்கள் எனக்கு அதிக உதவியாக இருந்தார்கள். நான் போன இடத்திற்கெல்லாம் கூட்டம் பின் தொடர்ந்து வந்துகொண்டு இருந்ததால் அக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையில் என் சகாக்கள் ஈடுபட்டிருந்தனர்.
கலெக்டர், மாஜிஸ்டிரேட், போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் ஆகிய அதிகாரிகளுக்கும் எனக்கும் இடையே ஒரு வகையான நட்பு ஏற்பட்டது. எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவைச் சட்ட ரீதியில் நான் ஆட்சேபித்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நான் அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டேன். அதிகாரிகள் விஷயத்தில் நான் தவறில்லாமலும் நடந்து கொண்டேன். இதிலிருந்து தனிப்பட்ட வகையில் தங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்றும், அவர்களுடைய உத்தரவைச் சாத்விகமாக எதிர்க்கவே நான் விரும்புகிறேன் என்றும் அவர்கள் கண்டு கொண்டனர். இந்த வகையில் அவர்கள் கவலை யற்றவர்களாயினர். என்னைத் தொந்தரவு செய்வதற்குப் பதிலாகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு என் ஒத்துழைப்பையும், என் சகாக்களின் ஒத்துழைப்பையும் மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொண்டார்கள். என்றாலும், தங்களுடைய அதிகாரம் ஆட்டம் கண்டு விட்டது என்பதற்கு அது கண்கூடான சாட்சியாக அவர்களுக்கு இருந்தது. அந்த நேரத்தில் மக்கள், தண்டனையைப் பற்றிய பயத்தையெல்லாம் இழந்துவிட்டார்கள். தங்கள் புதிய நண்பர்கள் காட்டிய அன்பின் சக்திக்கே பணிந்தனர்.
சம்பாரணில் யாருக்கும் என்னைத் தெரியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் எல்லோரும் ஒன்றுமே அறியாதவர்கள். சம்பாரண், கங்கைக்கு வடக்கில் வெகு தூரத்திலும், இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திற்குப் பக்கத்திலும் இருப்பதால், இந்தியாவின் மற்றப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. அப் பகுதியில் இருப்பவர்களுக்கு காங்கிரஸைப் பற்றி ஒன்றுமே தெரியாது. காங்கிரஸ் என்ற பெயரைக் கேட்டிருப்பவர்கள் கூட, அதில் சேருவதற்கும், அதன் பெயரைச் சொல்லுவதற்கும் கூடப் பயந்து கொண்டிருந்தனர். இப்பொழுதோ, காங்கிரஸும் அதன் அங்கத்தினர்களும், காங்கிரஸின் பெயரால் இல்லாவிட்டாலும் அதைவிட இன்னும் அதிக உண்மையான வகையில், அப்பகுதியில் பிரவேசித்து விட்டார்கள்.
காங்கிரஸின் பெயரால் எதையும் செய்ய வேண்டாம் என்று என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். நாங்கள் விரும்பியதெல்லாம், வேலையையேயன்றிப் பெயரையல்ல; பொருளையேயல்லாமல் நிழலையல்ல. ஏனெனில், அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கத்தை இஷ்டம்போல் ஆட்டி வந்தவர்களான தோட்ட முதலாளிகளுக்கும், காங்கிரஸ் என்ற பெயரே வேப்பங்காயாக, வெறுப்பாக இருந்தது. காங்கிரஸ் என்பதற்கு, வக்கீல்களின் தந்திரவாதங்கள்; சட்டத்தில் இருக்கும் இடுக்குகளைக் கொண்டு சட்டத்தைப் பின்பற்றாது இருப்பது; வெடிகுண்டுக்கு மற்றொரு பெயர்; அராஜகக் குற்றம், தந்திரம், நய வஞ்சகம் – என்றெல்லாம் அவர்கள் பொருள் கற்பித்துக் கொண்டிருந்தனர். இந்த இரு தரப்பாரிடமிருந்தும் இந்தத் தப்பு அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். ஆகவே, காங்கிரஸின் பெயரையே சொல்லுவதில்லை. காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்து கொண்டோம். காங்கிரஸின் பெயரைவிட அதன் கருத்தை அறிந்து அவர்கள் நடந்து கொண்டாலே போதும் என்று நாங்கள் எண்ணினோம்.
ஆகையால், காங்கிரஸின் சார்பாகப் பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ அங்கே வேலை செய்து, எங்கள் வருகைக்காக முன்னேற்பாடுகளைச் செய்து வைக்க அங்கே தூதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் போய்ப் பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய சக்தியும் ராஜ்குமார் சுக்லாவுக்கு இல்லை. அதுவரையில் அம்மக்கள் இடையே எந்த விதமான ராஜீய வேலையும் நடந்தது கிடையாது. சம்பாரணுக்கு வெளியில் உலகம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாதென்றாலும், ஆயுளெல்லாம் தங்களுக்கு நண்பனாக இருந்தவனைப் போல் அவர்கள் என்னை வரவேற்றார்கள். இவ்விதம் விவசாயிகளை நான் சந்தித்ததில், கடவுளையும், அகிம்சையையும், சத்தியத்தையும் நேருக்கு நேராக நான் தரிசித்தேன் என்று கூறுவது அப்படியே உண்மையேயன்றி எவ்விதத்திலும் மிகைப்படுத்திக் கூறுவது ஆகாது.
இந்தத் தரிசனத்தை நான் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது என்பதை நான் ஆராயும்போது, மக்களிடம் கொண்ட அன்பைத் தவிர வேறு எதுவும் அல்ல என்பதைக் காண்கிறேன். இந்த அன்பு, அகிம்சையில் நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதியின் வெளித் தோற்றமேயன்றி வேறு அன்று.
சம்பாரணில் அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள்; விவசாயிகளுக்கும் எனக்கும் அது மிகவும் முக்கியமான நாளாகும்.
சட்டப்படி விசாரணைக்கு உட்பட வேண்டியவன் நான். ஆனால், உண்மையில், குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றது அரசாங்கமே என்று சொல்ல வேண்டும். என்னைப் பிடிக்க விரித்திருந்த வலையில் அரசாங்கம் சிக்கிக் கொள்ளும்படி செய்வதிலேயே கமிஷனர் வெற்றி பெற்றார்.
$$$
15. வழக்கு வாபசாயிற்று
விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம் திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்திவைத்து விடும்படி மாஜிஸ்டிரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான் குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப் போய்விட வேண்டும் என்ற உத்தரவை மீறிய குற்றத்தை நான் செய்திருப்பதாக ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், வழக்கை ஒத்திவைக்க வேண்டாம் என்று மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். பின்வருமாறு சுருக்கமாக என் வாக்குமூலத்தையும் படித்தேன்:
“கி.பு.கோ. 144-வது பிரிவின் கீழே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நான் மீறிவிட்டதாகத் தோன்றும் இக் கடுமையான நடவடிக்கையை நான் ஏன் மேற்கொண்டேன் என்பதைக் காட்ட, கோர்ட்டாரின் அனுமதியின் பேரில், சுருக்கமான ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகளுக்கும் எனக்கும் உள்ள மாறுபட்ட அபிப்பிராயத்தைப் பற்றிய விஷயமே இது என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். ஜீவ காருண்ய, தேசிய சேவை செய்வது என்ற நோக்கத்தின் பேரில் நான் நாட்டில் பிரவேசித்தேன். அவுரித் தோட்ட முதலாளிகள் தங்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று விவசாயிகள் திடமாகக் கூறுகின்றனர். வந்து உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில் நான் இங்கே வந்தேன். பிரச்னையை ஆராய்ந்து பாராமல் நான் எந்தவிதமான உதவியையும் செய்துவிட முடியாது. ஆகையால், சாத்தியமானால் அரசாங்க நிர்வாகிகள், தோட்ட முதலாளிகள் இவர்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராயவே நான் வந்திருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லை. நான் வந்திருப்பதால் பொது ஜன அமைதிக்குப் பாதகம் ஏற்படும் என்றோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடும் என்றோ நான் நம்ப முடியாது. இத்தகைய விஷயங்களில் எனக்கு அதிக அனுபவம் உண்டு. ஆனால், அதிகாரிகளோ, வேறுவிதமாக எண்ணிவிட்டார்கள். அவர்களுக்குள்ள கஷ்டங்களையும் நான் முற்றும் உணருகிறேன். தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிரஜை நான். ஆகவே, எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனக்கு ஏற்படும் முதல் எண்ணம். ஆனால், நான் யாருக்காக வந்திருக்கிறேனோ அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நான் சட்டத்தை மீறாமல் செய்துவிட முடியாது. அவர்களுக்கு நடுவில் நான் இருப்பதனாலேயே அவர்களுக்கு நான் இப்பொழுது சேவை செய்ய முடியும் என்று உணருகிறேன். ஆகையால், இங்கிருந்து நானாக வலியப் போய்விட முடியாது. இவ்வாறு முரண்பட்ட கடமைகள் ஏற்பட்டிருக்கும்போது, அவர்களிடமிருந்து என்னை அப்புறப்படுத்திவிடும் பொறுப்பை நான் அதிகாரிகளின் மீதே போட முடியும். இந்தியாவின் பொது வாழ்க்கையில் என்னைப் போன்றதோர் நிலையில் இருப்பவன், பிறர் பின்பற்றுவதற்கான காரியத்தைச் செய்வதில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முற்றும் அறிந்தே இருக்கிறேன். நாங்கள் இன்று ஒரு சிக்கலான அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம். இதில் சுயமதிப்புள்ள ஒருவன், எனக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற சந்தர்ப்பத்தில், அனுசரிக்கக் கூடிய பத்திரமான, கௌரவமான முறை, நான் செய்ய முடிவு செய்திருப்பதைப் போன்று தடை உத்தரவை மீறி, அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுவதேயாகும்.
“இந்த வாக்குமூலத்தைக் கொடுக்க நான் முற்பட்டிருப்பதன் நோக்கம், எனக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனையை எந்த விதத்திலும் குறைத்துக்கொள்ளும் முயற்சி அன்று. தடை உத்தரவை மதிக்க நான் மறுத்திருப்பது, சட்டப்படி ஏற்பட்டிருக்கும் அதிகாரத்தினிடம் எனக்கு மதிப்பு இல்லாததனால் அல்ல; சட்டங்களுக்கெல்லாம் மேலான சட்டமாகிய மனச்சாட்சியின் குரலுக்குக் கீழ்ப்படிந்தே இவ்விதம் செய்கிறேன் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.”
இவ்விதம் நான் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு விசாரணையை ஒத்தி வைப்பதற்குக் காரணமில்லை. ஆனால் நான் இப்படி வாக்குமூலம் கொடுப்பேன் என்று எதிர்பாராததனால், மாஜிஸ்டிரேட், அரசாங்க வக்கீல் ஆகிய இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். மாஜிஸ்டிரேட், தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைத்தார். இதற்கு மத்தியில் முழு விவரங்களையும் நான் வைசிராய்க்கும், பாட்னா நண்பர்களுக்கும், பண்டித மதன்மோகன மாளவியாவுக்கும், மற்றவர்களுக்கும் தந்தி மூலம் அறிவித்தேன்.
தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு நான் கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்னாலேயே மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம் எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில் அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நடத்தவிருந்த விசாரணையை நான் தாராளமாக நடத்திக்கொண்டு போகலாம் என்றும், எனக்கு வேண்டிய உதவி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வளவு விரைவில், இவ்விஷயம் இப்படி மகிழ்ச்சிகரமான வகையில் தீர்ந்துவிடும் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
கலெக்டர் ஸ்ரீ ஹேகாக்கைப் பார்க்கப் போனேன். அவர் நல்லவராகவும், நியாயத்தைச் செய்ய வேண்டும் என்பதில் ஆவலுள்ளவராகவுமே காணப்பட்டார். பார்க்க விரும்பும் தஸ்தாவேஜுகளை நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும் போதெல்லாம் தம்மை வந்து காணலாம் என்றும் அவர் கூறினார்.
இவ்விதம் சாத்விக சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும் இதைக் குறித்தே பேசினர். பத்திரிகைகளும் தாராளமாக எழுதின. இதனால், நான் மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.
அரசாங்கம் நடுநிலைமை வகிக்க வேண்டியது என் விசாரணைக்கு மிகவும் அவசியமானது. ஆனால், பத்திரிகை நிருபர்களின் உதவியும், பத்திரிகைகளில் தலையங்கம் எழுதி ஆதரிப்பதும் இந்த விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில் சம்பாரணில் இருந்த நிலைமை, மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய கஷ்டமான நிலைமை. ஆகையால், அதிகப்படியாகக் கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான் அடைய முற்பட்டிருந்த லட்சியத்திற்குத் தீமை விளைவித்து விடக்கூடும். எனவே, முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது அவசியம் என்று இருப்பதை நானே எழுதுவதாகவும், நிலைமையை அப்போதைக்கப்போது அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு, நிருபர்களை அனுப்பும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். நான் சம்பாரணில் இருப்பதை அங்கீகரித்துவிட்ட அரசாங்கத்தின் போக்கு, தோட்ட முதலாளிகளுக்கு அதிக அதிருப்தியை உண்டாக்கிவிட்டது என்பதை அறிவேன். அதிகாரிகள், பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், இந்த நிலைமையை அவர்களும் உள்ளூர விரும்ப மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகையால், தவறான, தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கிவிடக் கூடிய செய்திகள் பிரசுரமாவதால், அவர்களுடைய குரோதமே மேலும் அதிகமாகும். அவர்களுடைய ஆத்திரம் என் மீது பாய்வதற்குப் பதிலாக, இப்பொழுதே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் மீதே பாய்ந்துவிடும். அதோடு அங்கிருக்கும் நிலைமையைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள நான் முற்பட்டிருப்பதற்கும் இடையூறு ஏற்படும்.
இவ்வளவு தூரம் முன்னெச்சரிக்கையுடன் நான் நடந்து கொண்டும், தோட்டக்காரர்கள் எனக்கு எதிராக விஷமமான கிளர்ச்சிகளை யெல்லாம் செய்தார்கள். என்னைப் பற்றியும், என் சக ஊழியர்களைக் குறித்தும் எல்லாவிதமான புளுகுகளும் பத்திரிகைகளில் பிரசுரமாயின. ஆனால், நான் மிகவும் தீவிரமான முன்ஜாக்கிரதையுடன் இருந்ததாலும், மிகச் சிறிய விஷயத்தில் கூட உண்மையை நான் வற்புறுத்தி வந்ததாலும், அவர்களுடைய பிரசாரம் அவர்களுக்கே தீமையாக முடிந்துவிட்டது.
பிரஜ்கிஷோர் பாபுவின் பெயரைக் கெடுத்துவிட தோட்ட முதலாளிகள் சகலவிதமான முயற்சிகளையும் செய்தார்கள். ஆனால், அவர் மீது எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அவதூறுகளைக் கூறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மக்களிடையே மதிப்பு அதிகரித்தது.
இப்படி அதிக ஜாக்கிரதையாகக் காரியம் செய்ய வேண்டியிருந்த நிலையில், மற்ற மாகாணங்களிலிருந்த தலைவர்கள் யாரையும் அழைப்பது சரியல்ல என்று எண்ணினேன். தமக்குத் தகவல் அனுப்பியதும், நான் விரும்பும்போது உடனே வரத் தாயாராக இருப்பதாகப் பண்டித மாளவியா எனக்கு வாக்குறுதி அனுப்பி இருந்தார். ஆனால், அவருக்கு நான் தொந்தரவு கொடுக்கவில்லை. இப்போராட்டம் ஒரு ராஜீயப் போராட்டம் ஆகிவிடாதபடி பார்த்துக் கொண்டேன். ஆனால், தலைவர்களுக்கும், முக்கியமான பத்திரிகைகளுக்கும் – பிரசுரிப்பதற்காக அல்ல – அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைக்கப் போது சமாச்சாரத்தை அறிவித்து வந்தேன்.
ராஜீயக் கலப்பில்லாத ஒரு போராட்டத்தின் முடிவு, ராஜீயப் பலனுடையதாகவே இருக்கலாம். ஆயினும், அப்போராட்டத்திற்கு ராஜீயத் தோற்றத்தை அளித்துவிடுவதானால், அதற்குத் தீமையையே உண்டாக்கி விடுகிறோம் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ராஜீயக் கலப்பில்லாமல் வைத்திருப்பதனாலேயே அதற்கு உதவி செய்ய முடியும். மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும். இந்த உண்மைக்கு சம்பாரண் போராட்டம் ஒரு ருசுவாகும்.
$$$