வில்லிசை வித்தகர் விண்ணில் கலந்தார்!

-ஆசிரியர் குழு

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்

(1928 – 10 அக்டோபர் 2022)

வில்லுப் பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு (94) காரணமாக, அக். 10, திங்கள் கிழமை காலமானார். மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வந்தவர்; அதன்மூலமாக பாரம்பரியக் கலையைக் காத்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம்.

திருநெல்வேலி மாவட்டம், சத்திர புதுக்குளம் என்ற கிராமத்தில்,  1928 இல் சுப்பையா பிள்ளை – சுப்பம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர், உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீதகிருஷ்ண பிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். சங்கீத அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது.

சுப்பு ஆறுமுகம் தன்னுடைய 14-ஆவது வயதிலே  ‘குமரன் பாட்டு’ என்ற கவிதைதொகுப்பு மூலம் பிரபலமடைந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன்முதலாக வில்லுப்பாட்டாகப் பாடினார்.

மேலும் கலைவாணரது 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் சுமார் 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதி அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களிலும் பங்களிப்பை நல்கியுள்ளார்.

 ‘காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை’ போன்ற ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார். மகாபாரதம், ராமாயணக் கதைகளை வில்லுப்பாட்டின் மூலமாக எளிய முறையில் மக்களுக்கு சொல்லி வந்தார்.  ‘மனிதர்கள் ஜாக்கிரதை’ என்ற நாடகம் இவரால் எழுதப்பெற்று புத்தகமாக வெளியிடப்பட்ட்து; பின்னர் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது.  ‘காப்பு கட்டி சத்திரம்’ என்று ஒரு வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு கணிசமாக உண்டு.

இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேசபக்தி, தெய்வபக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வுத் தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை கவிஞர் சுப்பு ஆறுமுகம் நடத்தியுள்ளார். அதன்மூலமாக தனது சமூகப் பங்களிப்பை நல்கியவர்.

கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்ற இவருக்கு கடந்த 2005-  ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது தரப்பட்டது. மத்திய அரசின் சார்பில் உயரிய விருதுககளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2021- ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

சுமார் 1000- க்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை ஆலயங்கள், வானொலி, தொலைக்காட்சிகளில் அவ்வப்போது இயற்றி தமிழக மக்களின் ரசனையை உயர்த்தியவர்.  திருவையாறு தியாகராஜர் ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத ஒன்றை இவர் செய்து காட்டினார். அங்கு, தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டிலேயே கதை நிகழ்த்தி, இசைக் கலைஞர்களின் மனம் கவர்ந்தார்.

சுப்பு ஆறுமுகத்துக்கு,  மனைவி மகாலட்சுமி, இரு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். மகனும் மகளூம் இவருடன் இணைந்து வில்லுப்பாடு நிகழ்ச்சிகளை உடன் நடத்தியுள்ளனர்.

சென்னை- நெசப்பாக்கம் இடுகாட்டில் சுப்பு ஆறுமுகத்தின் உடல் அக். 10, திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

$$$

பக்கம் நின்று ஆசிதர வேணும்!

-இசைக்கவி ரமணன்

இனி அப்படி ஒருவரை நாம் காண்பதற்கில்லை. கத்தியை மிஞ்சும் புத்திக் கூர்மையும், கடவுளே நாணும் குழந்தைத் தூய்மையும் கலந்திருக்கும் ஒருவரை எங்கே காணப் போகிறோம்? அந்தத் தாமிரபரணி தந்த தங்கத் தமிழ்ச் சொற்கள் அலைபுரளும் லாகவத்தை எவரிடம் பார்க்கப் போகிறோம்? என்ன கவிதை! என்ன நகைச்சுவை! என்ன சரளம்! எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்தப் பேரன்பு!

அத்தனை மேன்மைகளும் இப்படிப்பட்ட பெரியவர்களுடனே போய்விடுகின்றன என்று தோன்றும்போது மனம் அனாதையாக உணர்கிறது.

அவர் காலடியில் அமர்ந்து கேட்டதும், அவர் கை என் தலைமீது ஒரு கவிழ்த்த மலராக அன்புடன் ஆசி கூறியதும் நான் பெற்ற பேறு.

என் தந்தையாரின் நினைவாக நாங்கள் நிறுவிய ‘சேஷன் சம்மான்’ என்னும் விருதினை முதன்முதலில் ஏற்று, எங்களுக்கு நீடித்த பெருமையும், சிறப்பும் அருளியிருக்கும் எங்கள் ஐயாவின் புகழ் நீடூழி வாழும்! நிச்சயம்!

***

(அஞ்சலிக் கவிதை)

வில்லிருக்க சொல்லிருக்க,

வேண்டியவர் இங்கிருக்க,

எல்லைதாண்டி எங்கே ஐயா சென்றாய்? நீ

எந்தசபை தன்னில் ஏறி நின்றாய்? 

.

இந்திர சபையில் நின்றுஉன்

மந்திர வில்லை எடுத்து

செந்தமிழில் பாடிடச் சென்றாயோ! நீ

சேர்ந்த இடம் யாவையும் வென்றாயோ- உன்

சிந்தை விள்ளும் வெள்ளிமணி

சின்னக்குழந்தைச் சிரிப்பால்

சொந்தம்கொண்ட தேவர்களைப் பாரு – அவர்

சொர்க்கத்துக்கு நீயே விலை கூறு! 

.

ஆறுமுகம் வில்லெடுத்து,

ஆற்றங்கரைச் சொல்தொடுக்க,

ஆறுமுகம் தலையசைத்துக் கேட்கும், அதை

அத்தனை தெய்வங்களும் பார்க்கும்- உன்முன்

மாறுமுகம் கொண்டவரும்

மண்டியிட்டு மயங்கி நிற்கும்

ஏறுமுக மானதமிழ்ப் பாட்டு- இனி

ஈசன்ரசிப் பானேதினம் கேட்டு! 

.

தென்பொதிகை தந்த நதி,

உன்மனத்தில் நின்ற சுதி,

செந்தமிழே கொண்டகதி அன்றோ- உன்

சேவையை வையம் உணர்வதென்றோ?

பொன்னில் மனம் பூஞ்சிரிப்பு,

புரண்டுவரும் சொல்விரிப்பு,

பூடகமில் லாத நெல்லைக் குசும்பு- ஐயோ!

போனதையா மொத்தமும் விசும்பு! 

.

நாடு முழுதும் உன் சொந்தம்,

நாங்களெல்லாம் உன் குடும்பம்,

யாருக்கிங்கே ஆறுதல் யார் சொல்ல? உந்தன்

பேருக்கீடாய் எந்தப்பெயர் சொல்ல?

நித்தம் பாடுபட்டு நீவளர்த்த

பண்பும் அன்பும் பைந்தமிழும்

பயிர்போலக் காவல்செய்ய வேணும்- நீயும்

பக்கம்நின்று ஆசிதர வேணும்! எங்கள்

பாடலுக்குச் சொல்லும் தர வேணும்! அதைப்

பாடித்தர வில்லும் தர வேணும்!

திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் இனிய குரலில் பாடலைக் கேட்க:

https://drive.google.com/file/d/1J6j5NzqHFxnXaMyQXicjfLj9jpITJw9n/view?usp=sharing 

.

$$$

Leave a comment