சிவகளிப் பேரலை- 83

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

83. எல்லாம்வல்ல எம்பிரான்

.

ஜனன ம்ருதி-யுதானாம் ஸேவயா தேவதானாம்

வதி ஸுகலேச’ஸ்- ஸம்ச’யோ நாஸ்தி தத்ர/

அஜனி- மம்ருதரூபம் ஸாம்மீச’ம் ஜந்தே

ய இஹ பரமஸௌக்யம் தே ஹி ன்யா லந்தே//

.

பிறப்பிறப் புழலும் தெய்வங்கள் தொழுதலால்

சிறுமகிழ் வுமில்லை சந்தேக மதிலில்லை

பிறப்பில்லான் மரணமில்லான் தாயிணையன் தாள்பணிந்தார்

பிறவிப்பயன் எய்திடுவர் பேரின்பம் பெற்றாரே!

.

     ஒற்றைக் கடவுளைத்தான் நாம் பல்வேறு நாமரூபங்களில் அழைத்தாலும், அவற்றில் எல்லாம் சிறப்பானதாகவும், அனைத்திற்கும் மேலான தத்துவமாகவும் விளங்குவது சிவபரம்பொருள்தான். சிவ தத்துவத்தில்தான் இறைத்தன்மை முழுவதுமாக வெளிப்பட்டு நிற்கிறது. அதனால்தான் சிவபெருமான் மகாதேவர், பரமேஸ்வரர், சர்வேஸ்வரர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இதே காரணத்தால்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பழையோன், பிறவா யாக்கைப் பெரியோன், முக்கண் முதலோன் என்றெல்லாம் எந்தை சிவபிரானை ஏற்றித் துதிக்கின்றன.

     இவற்றை உணர்த்தும் வகையில் இந்தச் செய்யுளை அருளியுள்ள ஸ்ரீஆதிசங்கரர், இப்பேர்ப்பட்ட சிவபெருமானை பூஜிப்பதால்தான் பிறவிப்பயன் கிட்டும் என்பதையும் அறுதியிட்டு மொழிகிறார்.

.மற்ற தெய்வங்கள் எல்லாம் பிறப்பு இறப்புச் சுழலில் உழல்கின்றன. சிவபெருமான் மாத்திரமே அயோனிஜர் (பிறவா யாக்கையன்), அவர் பிறப்பதுமில்லை, அழிவதுமில்லை. அவர் சுயம்பு (தான்தோன்றி). தான் தோற்றுவாயாக இருந்து அனைத்தின் பிறப்புக்கும் ஆதாரமாய் ஆதியாய் விளங்குபவர். மண்ணில் தோன்றி அழிகின்ற அனைத்தும் அவரிடமே ஒடுங்குகின்றன. அவர் அழியாதவர். ஆகையால் சாஸ்வதமானவர் (நிலையானவர்). ஆகையினால், குறிப்பிட்ட காலத்தில் தோன்றி, மறைகின்ற பிற தெய்வங்களை வணங்குவதால், முக்தியை நாடுகின்ற உண்மையான பக்தனுக்கு சிறு மகிழ்வும் ஏற்படுவதில்லை. இந்தக் கருத்தில் சந்தேகம் ஏதுமில்லை என்று அடித்துக்கூறுகிறார் ஆதிசங்கரர்.

.பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபெருமான் அனைத்து உயிர்கள் மீதும் பாரபட்சமின்றி தாயைப் போல் அன்பு பாராட்டி, அரவணைக்கின்றார். அந்தத் தாயுமானவராகிய சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்குவோர், இந்தப் பிறவி எடுத்ததன் பயனை அடைகின்றனர். எல்லா இன்பங்களுக்கும் மேலான, எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலை அளிக்கின்ற, பேரின்ப நிலையை அவர்கள் அடைகின்றனர் என்கிறார்.

$$$

Leave a comment