-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

கோடைக்காலக்
குளிராடைக்கடை போல
யாருமற்ற கிராமக் கோவில்.
திருமண் தீட்டியும்
திருத்துழாய்ச் சாற்றியும்
திருவடி காட்டியும்
வா வா என்றார் பெருமாள்.
பிராட்டிக்கு பயந்தென்னவோ
சில பெண் வண்டுகள்
சங்கபாணியின் இதழ் நீங்கி
அவனின் திருவாய் ஊதிய
சங்கின் வாயில் குடித்திருந்தன.
பெருமாள்
பட்டர்
நான்.
அவசர அவசரமாய்
ஆராதனை.
சிந்தச் சிந்தத்
தீர்த்தம்.
சட்டுச் சட்டென
சடாரி வைத்து
செல்லுடன் வெளியோடுகிறார்
பட்டர்.
வேறென்னயென்றபடி
ஒருவரையொருவர் தரிசித்தபடி
பெருமாளும் நானும்.
ஏதாவது கேளேனென்றார்
ஏதாவது எதுயென்றேன்.
திருமுடி சூடிய மலரொன்று
திருவடி பட்டுத் தெறித்தது.
$$$