-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
60. துயர் நீக்கும் திருப்பாதம்
.
ரோதஸ்தோயஹ்ருத: ச்ரமேணபதிகச்’சாயாம் தரோர்-வ்ருஷ்டித:
பீத: ஸ்வஸ்தக்ருஹம் க்ருஹஸ்தமதிதிர்தீன: ப்ரபும் தார்மிகம்/
தீபம் ஸந்தமஸாகுலச்’ச சி’கினம் சீ’தாவ்ருதஸ்த்வம் ததா
சேதஸ்ஸர்வபயாபஹம் வ்ரஜஸுகம் ச’ம்போ: பதாம்போருஹம்//
.
நீர்விழுந்தோன் கரைநாட்டம் நெடுநடந்தோன் மரநாட்டம்
மழைபயந்தோன் கட்டிடமே பயணியோம்பல் இலன்தருமன்
இருள்விளக்கு குளிர்நெருப்பு துயர்தீர விரும்பப்படும்
அருளிரண்டு நின்பாதம் எத்துயரும் போக்கிடுமே!
.
இறைவனின் திருப்பாதங்களைச் சரண் புகுவதால் அனைத்துவிதத் துன்பங்களில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். இறைவன் திருவடித் தாமரை மீதான விருப்பம், அதனை எப்படியும் அடைந்தே தீரூவது என்ற விடாப்படியான முயற்சியுடன், உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருந்தால் அது கைவசமாகாது. நினைப்பே நம்மை உந்தித் தள்ளுகிறது, முன்னேயும் பின்னேயும். நல்ல எண்ணங்களும், இறை நினைப்பும் முன்னேற்றப் பாதையில் நம்மைத் தள்ளுகின்றன. ஆகையால், நாம் முன்னேற, வாழ்வில் உய்ய, இந்த வாழ்க்கையைக் கடைத்தேற்ற இறைவன் திருவடிகள் மீதான நாட்டம் மிக அவசியம். அந்த நாட்டம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதையே இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
வெள்ளநீரிலே விழுந்து அடித்துச் செல்லப்படுபவன், எப்படியாவது கரையை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பான். வெகுதூரம் நடந்து களைத்தவன், நிழலில் ஒதுங்கி நின்று இளைப்பாற எங்காவது மரம் இருக்கிறதா என்று தேடுவான். மழை பெய்யும்போது தெருவோரத்திலோ, குடிசையிலோ வசிப்பவன், அதனைக் கண்டு பயந்து, நாம் நிம்மதியாக தங்கியிருக்க ஒரு கெட்டிக் கட்டடம் கிடைக்காதா? என்று ஏங்குவான். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணி, நமக்கு உணவு, இடம் கொடுத்து உபசரிக்க, விருந்தோம்பல் செய்கின்ற இல்லறத்தான் கிடைக்க மாட்டானா என்று அலைந்து திரிவான். பொருள் இல்லாத ஏழை, நமக்கு உதவ ஒரு தர்மவான் கிடைக்க மாட்டானா என்று எதிர்பார்த்திருப்பான். இருளில் துன்பப்படுபவன் ஒளி கொடுக்கும் விளக்கை நாடுவான். குளிரில் நடுங்கித் துயருறுபவன் கதகதப்பைத் தரும் நெருப்பை விரும்புவான். அதேபோல பிறவித் துயரால் கஷ்டப்படுபவன், இறைவன் சிவபெருமானின் திருப்பாதங்களை நாட வேண்டும். ஏனெனில், அனைத்துவிதத் துயரங்களுக்கும் அருமருந்தாக விளங்குவது, “ஈசன் எந்தை இணையடி நீழலே”!
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந் தாற்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்ற திருக்குறளை இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனக்குவமை இல்லாதான் சிவபெருமானே என்பதை இங்கே ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவியுள்ளார்.
$$$