இலக்கிய தீபம்- 14

-எஸ்.வையாபுரிப் பிள்ளை

14. தொண்டி நகரம்.

தமிழ்நாட்டுப் பண்டை நகரங்களுள் ஒன்றாகிய தொண்டியின் வரலாறு தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கு ஓர் அறிகுறி. இந்தப் பெயரை அறியாதவர்கள் மிகச் சிலரே. இராமநாதபுரம் ஜில்லாவில் இராமநாதபுரத்திற்குச் சில மைல் தூரத்தில் தொண்டி என்னும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. அதைத்தான் நம்மவர் சிலர் கேட்டிருக்கலாம். அதற்கு மிக மிக முற்பட்டு, சுமார் 2000 வருஷங்களுக்கு முன், சிறந்து விளங்கிய தொண்டி என்ற நகரம் ஒன்று மேல்கடற்கரையிலே இருந்தது. சேரனுக்குரிய ஒரு கடற்கரை பட்டினமாக இது விளங்கியது. இந்தப் பட்டினம் தமிழுலகில் மட்டும் பெருமை பெற்றிருந்தது அன்று. எகிப்திய கிரேக்கனொருவன் எழுதிய பெரிப்ளூஸ் என்ற பிரயாண நூலில் இந்நகரத்தைக் குறித்திருக்கிறான். இந்நூல் தோன்றிய காலம் சுமார் கி.பி.60. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று டாக்டர் ஷாவ் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், தொண்டி கேரளபுத்திர ராஜ்யத்தைச் சார்ந்த மிகப் பிரசித்தி பெற்ற பட்டினம் என்றும், முசிறிப் பட்டினத்திற்கு 500 ஸ்டேடியா (சுமார் 57 1/2 மைல்) தூரத்தில் கடற்கு அருகில் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நின்றது என்றும், இரண்டு பட்டினங்களையும் இணைத்து ஓர் ஆறு ஓடியதென்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.

பெரிப்ளூஸுக்குப் பின், சுமார் கி.பி.150-ல் வாழ்ந்த டாலமி என்பவன், தான் எழுதிய பூமி சாஸ்திரத்தில், இத்தொண்டியைப் பற்றிக் கூறியுள்ளான். இவன் கணித சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் பூமி சாஸ்திரத்திலும் சங்கீதத்திலும் வல்லவனாயிருந்தவன், இவன் வாழ்ந்த இடம் அலெக்ஸாண்டிரியா நகரமாகும். இவன் காலத்து அரசன் ஆண்டோநைனஸ் பயஸ்.

மேற்குறித்த இரண்டு கிரேக்க ஆசிரியர்களும் இப்பட்டினத்தின் பெயரை திண்டிஸ் எனக் குறித்தனர். இக் கிரேக்கப் பெயருக்கு மூலமான நகரப் பெயர் ‘தனுர்’ ஆகலாம் என்று டாக்டர் யூல் கூறினர். இவருக்குப் பின் டாக்டர் பர்ணல் கடலுண்டி என்று இப்போது வழங்கும் ஊர் தான் தொண்டி என்றும் இதனைக் கடல்-துண்டி என்று கூறுவதும் உண்டென்றும் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் ‘கானலந் தொண்டி’ என்று பல இடங்களில் வந்துள்ளது. கடல்-துண்டி என்று கொண்ட முடிவை வற்புறுத்துகிறது. ஆனால் டாக்டர் ஷாவ் ‘பொன்னானி’ என்பது தொண்டியாகலாம் என்பர்.

தொண்டி என்பது கடலின் கழிக்கு ஒரு பெயராகத் தஞ்சைப் பிரதேசத்திலும் ஈழப் பிரதேசத்திலும் வழங்குகிறது. கடலினின்றும் உட்பாய்ந்த கழியை அடுத்து இப்பழைய பட்டினம் இருந்ததுபற்றி இப்பெயர் தோன்றியது என்று எண்ண இடமுண்டு.

இனி, சங்க இலக்கியங்களில் இத்தொண்டியைப் பற்றி வருவனவற்றை நோக்குவோம். மேல் கடற்கரையில் வெகுதொலைவில் இந்நகரம் இருந்தது என்பதை ஒரு புலவர் தற்காலத்தாருக்கு ஒவ்வாத ஒரு முறையிலே கூறுகிறார். ஒரு காதலன் தன் காதலி அருமையானவள் என்பதையும், அடைதற்கு முடியாதபடி அத்தனை தூரத்தில் (உயர்வில்) அவள் உள்ளவள் என்பதையும், ஓர் உவமானத்தால் குறித்தார்.  ‘கொரமண்டல் கோஸ்ட்’ (சோழ மண்டலக் கரை) என்னும் கீழ் கடற்கரையிலேயுள்ள சிறகு அற்ற நாரை ‘மலபார் கோஸ்ட்’ என்னும் மேல் கடற்கரையிலேயுள்ள தொண்டிப் பட்டினத்தின் கடற்கழியிலேயுள்ள அயிரை மீனை உண்ணுவதற்கு விரும்புவது போலுள்ளது தனது நெஞ்சு காதலியைக் காதலித்தது என்பது உவமானம். அச்செய்யுள் வருமாறு:

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே (சங்க- 1564)

மேற் கடற்கரையிலுள்ள இத்தொண்டியின் நில அமைப்பு ஒரு செய்யுளில் அழகுறச் சொல்லப்பட்டிருக்கிறது. குலை இறைஞ்சிய கோட்டாழை அகல்வயல் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் தெகழிமிசைச் சுடர்ப்பூவின் தண் தொண்டியோர் அடுபொருந (சங்க- 1151) என்பது அச்செய்யுட் பகுதி. இங்கே மிகுதியாய்க் காய்த்துக் குலைகள் தாழ்ந்து கிடக்கிற தெங்கின் தோட்டங்களும், அகன்ற வயலிடங்களும், மலையாகிய வேலியும், நிலவுபோல ஒளி விடுகின்ற மணல் நிரம்பிய அகன்ற கானலும், தீத்தோன்றுவதுபோலப் பூக்கள் நிரம்பியிருக்கின்ற கழிநீருமுடைய தொண்டி என்பது இதன் பொருள்.

ஆகவே குளிர்ந்த தோட்டங்களும், மருத நிலமும், குறிஞ்சி நிலமும் நெய்தல் நிலமும் கலந்து கிடக்கின்ற பிரதேசத்தின் நடுவிலே இப்பழைய நகரம் இருந்தது என்பது விளங்குகிறது. மலர் நிரம்பிய சோலைகள் இந்நகரத்திற்கு அணியாய் இருந்தன. ‘தொண்டித் தண்கமழ் புதுமலர்’ (சங்க- 97) ‘முண்டக நறுமலர் கமழுந் தொண்டி’ (சங்க- 98) என்று வரும் செய்யுளடிகள் இதற்குச் சான்று. இம்மலர்ச் செறிவால் இங்கே இனிய தேனின் நறிய வாசனை எப்பொழுதும் கமழ்ந்து கொண்டிருக்கும். ‘கள் நாறும்மே கானலந்தொண்டி’ (சங்க- 1930) என்பது ஒரு சங்கச் செய்யுளடி.

கடலையடுத்துள்ள ஒரு துறைமுகமாக இது விளங்கிற்று என்பது ‘பனித்துறைத் தொண்டி’ (சங்க- 93), ‘துறைகெழு தொண்டி’ (சங்க- 101) என்ற அடிகளால் புலனாகிறது. கடல் அலைகள் கரையிலே மெல்லென மோதி, முழவு ஒலிப்பது போல ஒலித்துக் கொண்டிருக்கும் என்று அலையின் ஓசையைப் புலவர்கள் அனுபவித்துக் கூறியிருக்கிறார்கள். ‘வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந’ (சங்க- 1744) ‘திரைஇமிழ் இன்னிசை அளைஇ…..இசைக்குந் தொண்டி’ (சங்க- 92) என்பன அவர்கள் கூறிய இனிய நன்மொழிகள். இக் கடற்கரையிலே உப்பு விளைத்தலும் மீன் பிடித்தலும் மக்கள் தொழில்கள்.

மோட்டு மண லடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி (சங்க- 16)

... ... .... ... .தந்தைக்கு
உப்புநொடை நெல்லின் மூரல்வெண்சோறு
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி (சங்க- 1108)

உப்பை விற்று அதற்கு மாறாகக் கொண்ட நெல்லினாலாகிய வெண்சோற்றினை மீன் வேட்டைமேற் சென்ற தந்தைக்கு அவனது செல்வச் சிறுமி கொடுத்தாள் என்று பொருள்.

பெரிப்ளூஸ் முதலியவற்றிலுள்ள குறிப்புக்களால் தொண்டியில் மரக்கலத்தின் மூலமாக வியாபாரம் நடந்துவந்த செய்தி நமக்குத் தெரிகிறது. இவ்வகை வியாபாரத்தைப் பற்றிய குறிப்பு யாதொன்றும் சங்க இலக்கியத்தில் வெளிப்படையாக காணப்படவில்லை. துறை என்ற பொதுப் பெயரிலிருந்து இவற்றைக் கருதிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இதனை அடுத்துள்ள பிறிதொரு பழைய பட்டினமாகிய முசிறி இவ்வகையான ஒரு வணிக ஸ்தலமாக இருந்தது என்பதற்குத் தக்க இலக்கியச் சான்று உள்ளது:

சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சுலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி (சங்க-1305)

இங்கே நன்கலம் என்பது மரக்கலம். கறி என்பது மிளகு. முற்காலத்து மிளகு மேலை நாட்டினரால் அரிய வியாபாரப் பொருளாகக் கொள்ளப்பட்டிருந்தது.

இங்ஙனமாகவும், தொண்டியைப் பற்றி இவ்வகைக் குறிப்பு இலக்கியங்களிற் காணப் பெறாதது சிறிது வியப்பாகவே இருக்கிறது.

இனி, தொண்டியில் வயற் பரப்பு மிக்குள்ள சிறப்பும் பலப் படியாகச் சங்க இலக்கியங்களிலே விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது. உப்புக்கு மாறாக நெல்லைப் பெற்று அமுதாக்கும் செய்தி முன்னரே குறிப்பிடப்பட்டது (சங்க-1108).  பிறிதொரு செய்யுளில் ‘கானலந் தொண்டி நெல்லரி தொழுவர்’ (சங்க-2341) என அங்கேயுள்ள அறுவடைச் செய்தி கூறப்படுகிறது. இத் தொண்டியில் விளைந்தது வெண்ணெல். ஒரு செய்யுள் இத் தொண்டி வெண்ணெல் தமிழகம் முழுவதும் பெரும்புகழ் பெற்றிருந்தது என்பதை உணர்த்துகிறது.

பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (சங்க- 1040)

என்பது அச் செய்யுள். சிறந்த நறு நெய்யும், தொண்டியில் விளைந்த அரிய வெண்ணெல் வெண்சோறும், ஏழு கலத்திலே கலந்து இட்டு கொடுத்தாலும் அது, தலைவன் வருவதைத் தெரிவித்துக் கரைந்த காக்கை செய்துள்ள பேருதவிக்குச் சிறிதும் ஈடாகாது என்பது கருத்து. இதனால் தொண்டி வெண்ணெல் கிடைத்தற்கரிய இனிய உணவுப் பொருள் என்பது நன்கு புலப்படும். வயற்பரப்புக்களில் நிகழும் செய்திகளை ஒரு செய்யுள் அழகாக உணர்த்துகிறது. அங்குள்ள சிறு பெண்கள் வயிரம் பாய்ந்த கரிய உலக்கையைக் குழந்தையாகக் கொண்டு, உயர்தரமான நெல் விளைந்திருக்கும் வயல்களின் வரம்பணையிலே அதனைத் துயிலச் செய்து, விளையாடுகிற தொண்டி என்று மருத நிலச் சித்திரம் ஒன்று வரையப்பட்டுள்ளது:

பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி (சங்க- 1161)

என்பது சங்க இலக்கியம்.

இப் பழைய நகரம் பல தெருக்களை உடையதாய், விழா இன்னிசை யரங்குகள் முதலியன நிகழ்தலினாலே எப்பொழுதும் இன்னொலியுடையதாய் விளங்கியது. ‘முழவு இமிழ் இன்னிசை மறுகுதோறிசைக்குந் தொண்டி’ (சங்க-92) என்பது ஒரு செய்யுட் பகுதி. அன்றியும் நன்றாக அரண் முதலியவற்றால் பாதுகாக்கப்பட்டது என்பது ‘கதவிற் கானலந் தொண்டி’ (சங்க-1929) என்ற தொடரால் தெரிய வருகிறது, இது சேரனது பெரு நகரங்களில் ஒன்று.

வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தெண்திரைப் பரப்பில் தொண்டி முன்றுறை (சங்க-1359)

எனவும்,

திண்தேர்ப் பொறையன் தொண்டி (சங்க-2293)

எனவும் வரும் அடிகளால் இதனை உணரலாம். இங்ஙனமாக மேற்கடற்கரையிலே பலவகையான நல்ல இயல்புகளோடு பொருந்தி விளங்கியது இந் நகரம். ‘தொண்டியன்னநின் பண்புபல கொண்டே’ (சங்க- 96) என்பது ஒரு செய்யுட் பகுதி.

இந்நகரோடு சார்த்தி இரண்டு வரலாறுகள் காணப்படுகின்றன. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்  ‘பதிற்றுப்பத்து’ என்னும் நூலில் ஆறாம் பத்தில் புகழப்பெற்றுள்ளான். இவன் தண்டகாரண்யத்தில் வருடை என்று பெயர் வழங்கிய ஒருவகையான ஆட்டைப் பிடித்துத் தொண்டி என்ற நகரத்திற்குக் கொணர்ந்து அதனைக் கொடுப்பித்தான் என்றது ஒரு செய்தி. இதனைக் கூறும் அடிகளை அவற்றின் பின்வரும் அடிகளோடு சேர்த்து நோக்குமிடத்து யாகஞ் செய்தற் பொருட்டு ஆடு கொடுக்கப்பட்டது என்று ஊகித்தல் பொருந்தும். இச்செய்தியால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர் இச்சேரனுக்கு வழங்கியது.

வேறொரு வரலாறும் சங்க நூல்களால் புலனாகின்றது. முற்காலத்திலே தோல்வியுற்ற பகைவனுடைய பற்களைப் பிடுங்கி அவற்றை வெற்றி கொண்டவனது நகர வாசலில் வெற்றிக்கு அறிகுறியாகப் பதித்து வைப்பது வழக்கம். இவ்வகை வரலாறு ஒன்றை ஓர் அகநானூற்றுச் செய்யுள் (சங்க-2136) தெரிவிக்கிறது. இதனோடு ஒத்து, மூவன் என்னும் பேராற்றல் வாய்ந்த பகைவன் ஒருவனைத் தொண்டி நகரத்து அரசனாகிய பொறையன் வெற்றிகொண்டு அவன் பல்லினைத் தனது நகரத்தின் வாயிற் கதவிலே தைத்து வைத்தான் என்ற செய்தி

மூவன்...முள்ளெயிறு அழுத்திய கதவின்
கானலந் தொண்டி (சங்க-1929)

என்ற செய்யுளால் உணரலாகும்.

தொண்டியைப் பற்றி அகநானூற்றில் 3-ம் ஐங்குறுநூற்றில் 10-ம், குறுந்தொகையில் 3-ம், நற்றிணையில் 3-ம், பதிற்றுப்பத்தில் 2-ம், புறநானூற்றில் 2-ம், ஆக 23 செய்யுட்கள் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. இவற்றுள் இரண்டு செய்யுட்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிந்தில. மற்றைச் செய்யுட்களை இயற்றிவர்கள் ஒன்பது ஆசிரியர். அவர்கள் அம்மூவனார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், குடவாயிற் கீரத்தனார், குறுங்கோழியூர் கிழார், குன்றியனார், நக்கீரர், பரணர், பெருங்குன்றூர் கிழார், பொய்கையார் என்பவர்கள். இப் புலவர்கள் வாழ்ந்து இச் செய்யுட்களை இயற்றிய காலம் கி.பி. 2, 3-ம் நூற்றாண்டுகளிலாகலாம்.

தொண்டியின் பெருவாழ்வும் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிவடைந்து விட்டது என்று ஒருவாறாக நாம் ஊகித்தல் கூடும். சங்க இலக்கியங்களுக்குப் பின்னுள்ள நூல்களில் சேரர்களுக்குரிய இம்மேல்கரைத் தொண்டியைக் குறித்து யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. யாது காரணத்தாலோ இந்நகரம் தனது பண்டை பெருமையை இழந்து வந்திருக்க வேண்டும். ஆனால் இதன் பெயர் தமிழகத்தில் ஒரு மந்திர சக்தியைப் பெற்றிருந்தது என்று சொல்லலாம்.

ஏனென்றால், சேரர்களோடு பகைமை கொண்டிருந்த பாண்டியர்களும் தங்களுக்குரிய துறைமுகப் பட்டினம் ஒன்றைத் தொண்டி எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இந்த இரண்டாவது தொண்டியைக் குறித்து நாம் முதன்முதலில் அறிவது இறையனார் களவியலுரையிலே வரும் பாண்டிக் கோவையிலே தான்.

மீனவன் தொண்டி (இறைய. 11)  
நறையாற்று......வேல்கொண்ட கோன் தொண்டி (இறைய. 14)  
மன்னன் மதுராகன தொண்டி மரக்கடலே (களவியற்காரிகை, பக். 96)
மாறன்...தொண்டிக்கானல் (இறைய. 147)

என்பன முதலாக வரும் பாண்டிக் கோவைச் செய்யுட் பகுதிகள் மேற்கூறியதற்குச் சான்று. இக்கோவையின் தலைவன் சம்பந்தர் காலத்தவன். எனவே ஏழாவது நூற்றாண்டில் இம்மீனவன் தொண்டி உளதா யிருந்தது. இதற்கு முன்னும் சங்க காலத்திற்குப் பின்னும், சுமார் ஐந்தாம் நூற்றாண்டளவில், இவ்விரண்டாவது தொண்டி தோன்றியிருத்தல் கூடும். ‘வரகுணன் தொண்டியின் வாய்’ (யாப்-காரிகை உரை) என்று வரும் பழஞ்செய்யுள் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வரகுணனைக் குறித்ததாகலாம். நந்திக் கலம்பகம் கொண்ட மூன்றாவது நந்தி வர்மன் பாண்டியனது தொண்டி நகரத்தைக் கைக்கொண்டவன் என்று அந்நூலின் 38-ம் செய்யுள் உணர்த்துகின்றது. ஆகவே ஒன்பதாம் நூற்றாண்டில் இந்நகரம் சிறப்புற்று விளங்கியது.

இதற்குப் பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராஜாதி ராஜன் II காலத்து ஆர்ப்பாக்கம் சாசனத்தில் (20-1899) தொண்டி கூறப்பட்டிருக்கிறது. பாண்டி மண்டலத்தை ஈழ மண்டலப் படைகள் பிடித்துக் கொண்டு குலசேசரபாண்டியனை மதுரையி னின்றும் வெருட்டி விட்டன. குலசேகரனுக்கு அபயமளித்த இராஜாதிராஜனுடைய சாமந்தர்களை எதிர்த்து இப்படைகள் சென்று தொண்டிப் பிரதேசத்தில் கடும்போர் புரிந்து வெற்றி கொண்டன. பின்னர் ஈழத்துப் படை முறியுண்டதனால், பாண்டியர்கள் மீண்டும் வலிமையுற்று விளங்கினார்கள். இக்காலத்தும் இத்தொண்டி சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று.

பின்னர் ஒரு காலத்துச் சோழ வம்சத்தைச் சார்ந்தவன் ஒருவன் பாண்டிய நாட்டின்மேல் படை யெடுத்து வந்தான். பாண்டியன் முற்றும் தோல்வியுறும் நிலையில் இருந்தான். அப்பொழுது அவனுக்காக ஆதிவீர ரகுநாத சேதுபதி போர் புரிந்து சோழனை முறியடித்து வெருட்டினார். இந்நன்றியைப் பாராட்டி இத்தொண்டித் துறைமுகத்தைப் பாண்டியன் சேதுபதிக்குக் கொடுத்தான் (நெல்ஸன். 3-115). சேதுபதிகள் தொண்டியைச் சில காலம் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்ததும் உண்டு (நெல்ஸன். 3-144). இதன் பின்னர் விஜயநகரத்து ராயர்களும் மதுரை நாயக்க அரசர்களும் தென்னாட்டை ஆண்டுவந்தனர். அவர்கள் காலத்தும் தொண்டி சேதுபதிகள் கைவசமே இருந்தது. ஆனால் சேதுபதிகளும் சிவகங்கை ஜமீன்தார்களும் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் தொண்டி சிவகங்கை ஜமீன் வசமாயிற்று. ஒரு காலத்து, திண்டுக்கல்லையும் தொண்டியையும் இணைக்கவும், பின் திண்டுக்கல்லையும் மேல்கடற்கரையையும் இணைக்கவும், ஓர் ஆலோசனை கி.பி. 1796-ல் நிகழ்ந்ததுண்டு (நெல்ஸன் 4-24).

சேரர் தொண்டி, பாண்டியர் தொண்டி தோன்றுவதற்குக் காரணமா யிருந்தது போலவே, சோழ குலத்தோர் தொண்டி ஒன்று கீழ்த்திசையிலே கடலுக்கப்பாலுள்ள பிரதேசத்தில் தோன்றுவதற்கும் காரணமாயிருந்தது என்று நினைக்க இடமுண்டு.

ஆங்க நன்றியும் ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமும் சுமத்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு (சிலப். 14, 106-112)

எனச் சிலப்பதிகாரத்திலே ஊர் காண் காதையில் இச்செய்தி கூறப் பட்டுள்ளது. இங்கே ‘கீழ்த்திசையிலே தொண்டி என்னும் பதியிலுள்ள அரசர் என்ற அடியார்க்கு நல்லார் உரையும் ‘தொண்டியோர்- சோழ குலத்தோர்’ என்ற அவரது குறிப்பும் உணரத்தக்கன. இத்தொண்டி பாண்டிநாட்டுத் தொண்டியாக இருத்தல் இயலாது. ஏனென்றால் தொண்டியினின்றும் புறப்பட்ட மரக்கலத் திரள்கள் கீழ் காற்றினாலே கடலில் செலுத்தப்பட்டு மதுரையை வந்து அடைந்தன என்று இவ்வடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வந்த மரக்கலங்கள் வாரோசு என்னும் கற்பூரவகை முதலிய அயல்நாட்டுப் பொருள்களைக் கொண்டுவந்தன என்றும் அறிகிறோம். இத்தொண்டி சுமத்ரா, ஜாவா முதலிய பிரதேசங்களில் சோழ குலத்தோரால் அமைக்கப்பட்ட ஒரு நகரமாதல் வேண்டும். இதனைக் குறித்து இப்பொழுது யாதும் அறிய இயலவில்லை. கீழ் கடலுக்கு அப்பால் இவ்வாறு தொண்டி எனப் பெயர் பெற்ற நகரம் ஒன்று இருந்தது உண்மை யாயின், நாளிதுவரை அறியப்படாத ஓர் அரிய சரித்திரச் செய்தியைச் சிலப்பதிகாரமும் அதன் உரையும் உணர்த்துகின்றன என்று கருத வேண்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s