-பத்மன்
கடந்த ஜூலை 28ஆம் தேதி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா, தேசியப் பாடலான ’வந்தேமாதரம்’ கீதத்துடன் தொடங்கியதை தமிழகத்தில் சில அறிவிலிகள் எதிர்த்துள்ளனர். அவர்களுக்கான பதில் இது…

தேசத்துக்கு எதிரான திரிபுவாதங்களை, வரலாற்றை மழுங்கடிக்கும் புளுகுமூட்டைகளை திராவிட இயக்கங்களும் அவர்களுக்கு பக்கவாத்தியமாக கம்யூனிஸ இயக்கங்களும் தீவிரமாகக் கட்டவிழ்த்து விடுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பு.
வந்தே மாதரம் என்பதன் பொருள் ‘தாயை வணங்குகிறேன்’. நாட்டை, மொழியை, நதியை தாய்த் தெய்வமாக வணங்குதல் தமிழகம் உட்பட பாரதம் முழுவதிலுமான பண்பாடு. அதுவே இந்தியப் பண்பாடு எனப்படும் ஹிந்துப் பண்பாடு. இந்தப் பண்பாட்டு ஒற்றுமைதான் பாரத மாதா வந்தனம், தமிழ்த் தாய் வாழ்த்து என நம் முன்னோர்களைச் சிந்திக்க வைத்தது.
ஆனால் தமிழ் என்பதையே சிதைத்து, இல்லாத திராவிட இனவாதத்தை முன்னிறுத்தும் பிரிவினைவாத அரசியல் அயோக்கியர்களும், தேசியத்தை மதிக்காமல் சர்வதேசியம் என்ற போர்வையில் அன்னியர்களுக்கு கால்பிடிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் இதர பிற சதிகாரர்களும் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அது முஸ்லிம்களுக்கு எதிரானதாம்.
அடே மூடர்களே! தேச விடுதலை வேள்வியில் தியாக தீபங்களை உருவாக்கிய தெய்வீகப் பாடல், முழக்கமடா வந்தே மாதரம்!
நீங்கள் அடிக்கடி புரட்டும் வரலாற்றின் பக்கங்களை வழக்கமான புரட்டு இல்லாமல், உண்மையாகவும் நேர்மையாகவும் புரட்டிப் பாருங்கள். அந்தப் புரட்சியின் வீரியம் புலப்படும்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதி, கடந்த 1882-இல் வெளியான ஆனந்த மடம் புதினத்தில் இடம்பெற்ற பாடல் இந்த வந்தே மாதரம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தை ஆண்ட அன்னிய நவாப் கொடூர ஆட்சிக்கு எதிராக இந்த மண்ணின் மைந்தர்களான ஹிந்து சன்யாசிகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட நாவல் ‘ஆனந்த மடம்’.
அதேநேரத்தில் மதம் மாற்றப்பட்ட வங்காள முஸ்லிம்களிடையேயும் செல்வாக்குப் பெற்ற பாடல் வந்தே மாதரம். அன்னிய ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களின்போது முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தரப்பினராலும் உணர்ச்சி பொங்கப் பாடப்பட்டது, முழங்கப்பட்டது வந்தே மாதரம்.
கடந்த 1905-இல் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் வைஸ்ராய் கர்ஸான் மத அடிப்படையில் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது, அதற்கு எதிராக ஹிந்துக்களோடு முஸ்லிம்களும் ஒற்றுமையாகத் திரண்டு எழுப்பிய கோஷம் ‘வந்தே மாதரம்’. இந்தக் கடும் எதிர்ப்பின் விளைவாக, பிரிட்டன் மன்னர் ஜார்ஜால் கடந்த 1911-இல் வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்டது. அத்தகைய சக்தி வாய்ந்த இந்த வந்தே மாதரம் பாடல்.
இப்பாடலுக்கு ஜாதுநாத் பட்டாசார்யா என்பவர் மெட்டமைக்க, கடந்த 1896-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாகவி ரவீந்திர நாத் தாகூரால் முதன்முதலில் பாடப்பட்டு பொது வாழ்வில் அறிமுகமானது. அப்போது முதல் வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அதற்குச் சில காலம் பின்பு வரையில் முஸ்லிம்களும் பாசத்தோடு முழங்கிய கீதம் வந்தே மாதரம். பாரத மக்களை ஒன்றிணைக்கும் வீரிய மந்திரம் வந்தே மாதரம் என்பதால்தான், நமது மகாகவி சுப்ரமண்ய பாரதியார், இலக்கணச் சுத்தமாக ஒரு முறையும், பின்னர் பாமரர்களுக்கான எளிய நடையில் ஒரு முறையும் என இரு முறை அதனை தமிழில் மொழிபெயர்த்தார்.
ஆனால் 1921-இல் கிலாபத் இயக்கத்துக்கு காந்தியடிகள் அளித்த ஆதரவைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரலாற்றில் அறிமுகமான ‘முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல்’ அதாவது அப்பீஸ்மென்ட் கொள்கைக் கோளாறு காரணமாக முஸ்லிம்களிடையே வந்தே மாதரம் செல்வாக்கு இழந்தது.
அந்தக் கோளாறைச் சரிசெய்ய முயலாமல், அரசியல் சுயநலத்துக்காக கொம்புசீவ முயல்வது நாட்டுக்கு நல்லதல்ல. அதேநேரத்தில் – சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில் செல்வதை இந்த எதிர்ப்பு விரைவுபடுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
$$$