திராவிட இயக்க வரலாறு: பகுதி -3

-தஞ்சை வெ.கோபாலன்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 3…

3. பிராமணல்லாதோருக்கு இட ஒதுக்கீடு

பனகல் அரசர் தலைமையில் ஆகஸ்ட் 19, 1917 இல் கோயம்புத்தூரில்,  ‘முதல் பிராமணரல்லாதோர் மாநாடு’ நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் இதுபோல பல மாநாடுகள் கூட்டப்பட்டன. அக்டோபர் 18 இல் டி.எம்.நாயரால் எழுதப்பட்ட  ‘கட்சிக் குறிக்கோள்கள்’ எனும் அறிக்கை ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகின:

1. தென்னிந்தியாவில் பிராமணரல்லாத அனைத்து சாதியினர்களையும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் மற்றும் அற வழியில் முன்னேற்றுவது.    

2. பிராமணரல்லாத அனைத்து சமூகத்தினரின் நலனைப் பாதுகாக்க  தென்னிந்திய மக்களின்  கோரிக்கைகளையும் கருத்துகளையும் தக்க வகையில் உரிய காலத்தில் அரசின் முன்வைப்பது; பொதுக் கேள்விகளை விவாதிப்பது. 

3. பொதுக் கருத்து தொடர்புடைய கொள்கைகளை கருத்தரங்குகள், அறிக்கைகள், ஆவணங்கள்  மற்றும் பிற வழிகள் மூலமாகப் பரப்புவது.

ஆகஸ்ட் – டிசம்பர் 1917 காலகட்டத்தில் சென்னை மாகாணம் முழுவதும் மாநாடுகள் நடத்தப்பட்டன. பெஜவாடா, சேலம், திருநெல்வேலி, கோவை, புலிவெந்தலா, பிக்கவோல் ஆகியவை மாநாடுகள் நடத்தப்பட்ட ஊர்களுள் சில. இந்த மாநாடுகளும் பிற கூட்டங்களும் அரசியல் களத்தில் நீதிக்கட்சியின் நுழைவைப் பறைசாற்றின.

1916–20 காலகட்டத்தில் நீதிக்கட்சி, காங்கிரசின் இரு வேறு குழுக்களுடன் அரசியல் களத்தில் மோதியது. (அவை: பிராமணர் ஆதிக்கம் மிகுந்த மிதவாத காங்கிரஸ், இன்னொன்று தீவிர அரசியலைப் பின்பற்றிய தீவிரவாத காங்கிரஸ்). பிராமணரல்லாதோருக்கு அரசு அதிகாரத்தில் இட ஒதுக்கீடு தேவையென பிரித்தானிய அரசிடமும் பொது மக்களிடமும் பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசின் மூன்றாவது குழு,  அணி பிரிட்டிஷ்  அரசை எதிர்த்து ஒத்துழையாமைக் கொள்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.

1916ஆம் ஆண்டு பிரம்ம ஞான சங்கத்தின் (தியோசோபிகல் சொஸைட்டி) தலைவியான அன்னி பெசண்ட், ஹோம் ரூல் லீகினை உருவாக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடலானார். அவரது தலைமையகம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.  அவருடைய அரசியல் ஆதரவாளர்களில் பலர் பிராமணர்களாக இருந்தனர், காரணம் அப்போது காங்கிரஸ் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தது.

அன்னிபெசண்டின் இந்தியப் பண்பாடு குறித்து கருத்துக்கள் பிராமணரல்லாதோர்  இயக்கத்துக்கு ஏற்புடையதாக இல்லை.  இவற்றை கல்வி கற்ற பிராமணரல்லாதோர் கேள்விக்குட் படுத்தத் தொடங்கி இருந்தமையால் சென்னை மாகாணத்தில் ஹோம் ரூல் இயக்கத்துக்கும் பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் மோதல் உருவானது.

ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்படும் முன்னரே டி.எம்.நாயருக்கும் அன்னி பெசண்ட்டுக்குமிடையே உரசல் ஏற்பட்டிருந்தது. நாயர் தனது மருத்துவ ஆய்விதழில் பிரம்மஞான சங்கத் தலைவரின் பழக்கங்களைத் தாக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து நாயருக்கு எதிராக  பெசண்ட் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தோல்வியடைந்திருந்தது.

பெசண்ட் பிராமணர்களுடன் கொண்டிருந்த நட்புறவும், அவரது இந்தியா குறித்த பார்வை பிராமணர் கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும் அவருக்கும் நீதிக்கட்சிக்குமிடையே மோதலை உருவாக்கியது. டிசம்பர் 1916 இல் வெளியான நீதிக்கட்சி கொள்கை அறிக்கையில் அன்னிபெசண்டின்  ‘ஹோம் ரூல்’  இயக்கத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. பெசண்டின்  ‘நியூ இந்தியா’ இதழ் அந்த அறிக்கையை விமர்சித்தது.

ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தங்கள் வழக்கப்படி தனக்கெதிரான கொள்கை உடையவர்களைச் சொல்வது போல, தனது இதழ்களில் பெசண்ட்டை  ‘அயர்லாந்து பாப்பாத்தி’  என்று வருணித்தது. தினமும் பெசண்ட்டையும் அவரது இயக்கத்தையும் தாக்கி நீதிக்கட்சி இதழ்கள் செய்திகள் வெளியிட்டன.  ‘திராவிடன்’ இதழில் “ஹோம் ரூல் என்பது பிராமணர்களின் ஆட்சி” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. ஹோம் ரூல் இயக்கமானது அரசின் கெடுபிடிகளின் பாதிப்பில்லாத வெள்ளைப் பெண்மணியால் நடத்தப்படும் அரசியல் இயக்கம் என்றும், அதன் விளைவுகள் பிராமணர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் நாயர் விமர்சித்தார்.

ஆகஸ்ட் 20, 1917 இல் பிரிட்டிஷ் அரசின் இந்தியச் செயலர் எட்வின் மாண்டேகு இந்தியாவின் நிர்வாகத்தில் இந்தியரின் பங்கை அதிகரிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளை வளர்க்கவும் சில அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தார். இவ்வறிவிப்பு சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாத தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் இறுதியில் நீதிக்கட்சி தனது கோரிக்கைகளை முன்வைத்து  பல மாநாடுகளை நடத்தியது.

1909 இல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது போலவே பிராமணரல்லா தோருக்கும் மாகாண சட்டமன்றங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும்படி தியாகராய செட்டி மாண்டேகுவுக்கு தந்தி அனுப்பினார். காங்கிரசின் பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சிக்குப் போட்டியாக  சென்னை மாகாண சங்கம்  ஒன்றை உருவாக்கினர். பெரியார் ஈ.வே.ராமசாமி,  வி.கல்யாணசுந்தரம் முதலியார், பி. வரதராஜுலு  நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் தலைவர்கள். தங்கள் கோரிக்கையினை பலவீனப்படுத்த பிராமணர்களின் சார்பாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது.

டிசம்பர் 14, 1917 இல் மாண்டேகு அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து பலதரப்பினரின் கருத்தறிய சென்னை வந்தார். ஓ.கந்தசாமி செட்டி தலைமையில் நீதிக்கட்சி தூதுக்குழுவும், கேசவ பிள்ளை தலைமையில் சென்னை மாநில சங்க தூதுக்குழுவும் வேறு இரு பிராமணரல்லாதோர் தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்து, தங்கள் தரப்பினை முன்வைத்தன.

இரு தரப்பினரும் பலிஜா நாயுடுகள், பிள்ளைகள், முதலியார்கள், செட்டிகள், பஞ்சமர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வேண்டின. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும்,  ‘மெட்ராஸ் மெயில்’ போன்ற அரசு ஆதரவு இதழ்களும் இந்நிலைப்பாட்டை ஆதரித்தன. ஆனால் மாண்டேகு, ஜாதிகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தி,  சில சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விரும்பவில்லை. ஜூலை 2, 1918 இல் வெளியான அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை அதைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டது.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டி.எம்.நாயரை லண்டனுக்கு அனுப்பி இடஒதுக்கீடு கோர நீதிக்கட்சி முடிவெடுத்தது. ஜூன் 1918இல் லண்டனில் இவர் பல முயற்சிகளில் ஈடுபட்டார். அறிக்கைகள், கட்டுரைகள் எழுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியும் நீதிக்கட்சியின் நிலைபாட்டினை வெளிப்படுத்தினார். ஆனால் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவுடன் ஒத்துழைக்க நீதிக்கட்சி மறுத்து விட்டது. இந்திய ஆட்சிப்பணியின் இரு பிராமண உறுப்பினர்கள் (ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீநிவாச சாஸ்திரி, சுரேந்திரநாத் பானர்ஜி)  இதில் இடம்பெற்றிருந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்தக் குழுவின் இந்தியரல்லா உறுப்பினர்களின் ஆதரவை நீதிக்கட்சி பெற்றிருந்தது.

1919–20 காலகட்டத்தில் இந்திய அரசுச் சட்டம், 1919க்கு இறுதி வடிவம் கொடுக்க  பிரிட்டீஷ் நாடாளுமன்ற குழு, கூட்டங்களைக் கூட்டியது.  ஆற்காடு ஏ.ராமசாமி முதலியார், வெங்கட ரெட்டி நாயுடு, எல்.கே.துளசிராம், கோக்க அப்பராவ் நாயுடு ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு ஐக்கிய மாகாணத்தில் நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்து கொண்டது.  பனகல் அரசர் ராமராய நிங்கார், அனைத்திந்திய நிலச்சுவான்தார்கள் சங்கம் மற்றும் சென்னை ஜமீன்தார் சங்கங்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

ரெட்டி நாயுடு, ராமசாமி முதலியார் மற்றும் ராமராய நிங்கார் ஆகியோர் பெரிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசி, உள்ளூர் இதழ்களில் எழுதி தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டினர்.

டி.எம்.நாயர் ஜூலை 17, 1919 இல் மரணமடைந்தார்.  நாயரின் மரணத்துக்குப் பின்னர் ரெட்டி நாயுடு நீதிக்கட்சியின் செய்தித் தொடர்பாளரானார். ஆகஸ்ட் 22 இல் நாடாளுமன்றக்குழு முன் தோன்றி நீதிக்கட்சியின் கருத்தினை முன்வைத்தார். நீதிக்கட்சியின் தரப்புக்கு குழுவில் இடம்பெற்ற கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியது. நவம்பர் 17, 1919 இல் வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரைத்தது. எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டுமென்பதை அந்தந்தப் பகுதியின் அரசும், அரசியல் கட்சிகளும், தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியது.

நீதிக்கட்சி, சென்னை மாகாண சங்கம், மற்றும் பிரிட்டீஷ் அரசுக்கிடையே ஒரு நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் மார்ச் 1920இல் இடங்கள்  குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. மெஸ்டன் உடன்படிக்கை என்றழைக்கப்பட்ட இதன்மூலம் சென்னை சட்டமன்றத்தின் 63 பொது இடங்களில் 28   (3 நகர்ப்புற மற்றும் 25 ஊர்ப்புற இடங்கள்) பிராமணரல்லாதோருக்காக ஒதுக்கப்பட்டன.

மாண்டேகு – கெம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்கள் போதாதென மகாத்மா காந்தி கருதினார்.  காங்கிரஸ் கட்சி  மார்ச் 1919 இல் இயற்றப்பட்ட ரவ்லட் சட்டங்களின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியது. கல்வி நிறுவனங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைப் புறக்கணிக்கும்படி காங்கிரஸ்காரர்களைக் கேட்டுக் கொண்டார்கள். 

ஆனால் நீதிக்கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்கவில்லை. புதிய அரசியல் சூழலில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசின் மூலம் தன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அது விரும்பியது. காந்தியைப் பற்றிய இவர்கள் பார்வை மோசமாக இருந்தது. அவரை சமூக அமைப்பினை சீர்குலைக்க விரும்புகின்ற ஓர்  அரசியல்வாதியெனக் கருதியது. காந்தியின் சுதேசித் தொழில் வளர்ச்சிக் கொள்கை என்பது, தொழில்மயமாக்கலுக்கு எதிரானது என்று அதைக் கண்டித்தது நீதிக்கட்சி . எனவே நீதிக் கட்சி காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியது.

ஒத்துழையாமைக் கொள்கையை பெரும்பாலான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரித்ததால் நீதிக்கட்சி தனிமைப்படுத்தப்பட்டது. காந்தி பிராமணரல்ல என்றாலும், அவர் பிராமணர்களோடு மட்டுமே நட்புறவு கொண்டவர் என்று நீதிக்கட்சி குற்றம் சாட்டியது. மேலும் காந்தியின் சுதேசித் தொழில் கொள்கையை எதிர்த்தது.

ஏப்ரல் 1921 இல் காந்தி சென்னை வந்தபோது இந்தியப் பண்பாட்டுக்கு பிராமணர்களின் பங்களிப்பு குறித்து அவர் பெருமைப்படுத்தி உரையாற்றியது நீதிக்கட்சியின் காந்தி எதிர்ப்பை வலுப்படுத்தியது.  காந்தியின் பேச்சுக்கு ஜஸ்டிஸ் இதழ் கண்டனம் தெரிவித்தது.           

காந்தி நடத்திய  ‘யங் இந்தியா’வுக்கு  எழுதிய கடிதத்தில் கந்தசாமி செட்டி, பிராமணர் -பிராமணரல்லாதோர் விஷயங்களில் தலையிடாமல் இருக்கும்படி காந்திக்கு அறிவுரை கூறியிருந்தார். அதற்கு அளித்த பதிலில், மீண்டும் இந்து சமயத்துக்கு பிராமணர்களின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டிய காந்தி, “வாசகர்கள் தென் திராவிடத்தை, வட நாட்டிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டாமென எச்சரிக்கிறேன்;  இன்றைய இந்தியா இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்ட பல பண்பாடுகளின் கலவையாகும்” என்று கூறியிருந்தார்.

சௌரி சௌரா வன்முறை நிகழ்வின் காரணமாக காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்ட பிறகும், நீதிக்கட்சி அவரை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்தது. அவர் கைது செய்யப்பட்ட பிறகே தனது கடுமையான எதிர்ப்பைச் சற்று தணித்துக் கொண்டது.

மாண்டேகு – கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள், இந்திய அரசுச் சட்டம் 1919இன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1920 முதல்19 37 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. இந்தப் பதினேழு ஆண்டுகளில் 13 இல் (1926–30 தவிர) நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்டது.

(தொடர்கிறது)

$$$

Leave a comment