திராவிட இயக்க வரலாறு: பகுதி -4

-தஞ்சை வெ.கோபாலன்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 4…

4. அரசியலை மாற்றிய காலவரிசை நிகழ்வுகள்

அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை காலவரிசையில் சிறிது காண்போம்…

1920–26

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி  1920 ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்தது. இந்தியா முழுவதும் பெரிதும் பரவியிருந்த காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணித்து விட்ட படியால், போட்டியிட்ட நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இல் வென்றது. அக்கட்சியின் ஏ.சுப்பராயுலு ரெட்டியார் சென்னையின் முதல் முதலமைச்சரானார். ஆனால் விரைவில் உடல்நிலைக் குறைவினால் அவர்  பதவி விலகி, பனகர் அரசர் முதல்வரானார். இரட்டை ஆட்சி முறை நீதிக்கட்சிக்கு முழுமையாக ஏற்புடையதாக இல்லை .

தியாகராய செட்டியின் அதிகாரப்போக்காலும் தமிழ் உறுப்பினர்களைக் கண்டுகொள்ளாமல் தெலுங்கு உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததாலும், நீதிக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1923 இல் சி. ஆர். ரெட்டி விலகி தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சுயராஜ்யக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. 

1923இல் நடந்த இரண்டாவது தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றாலும், அதன் பெரும்பான்மை குறைந்து போனது. இரண்டாவது சட்டமன்றத்தின் முதல் நாளன்றே எதிர்க்கட்சிகள் பனகல் அரசர் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. 65-44 என்ற வாக்கு கணக்கில் அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பனகல் அரசர் நவம்பர் 1926 வரை முதல்வராக நீடித்தார். 

1926 தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்யக் கட்சியிடம் தோல்வியடைந்தது. ஆனால் வெற்றி பெற்ற சுயராஜ்யக் கட்சியினர் ஆட்சியமைக்க மறுத்து விட்டதால் ப.சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகளைக் கொண்டு சென்னை ஆளுனர் ஒரு அரசினை உருவாக்கினார்.

1926–30:

1926 சட்டமன்றத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையை அது எதிர்த்ததால் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. சென்னை ஆளுனர் நீதிக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசமைக்க விருப்பமில்லாததாலும் ஆளுனருடன் கருத்து வேறுபாடு நிலவியதாலும் பனகல் அரசர் ஆட்சியமைக்க மறுத்து விட்டார்.

இதனால் கவர்னர் தேசியவாத சுயேட்சை உறுப்பினர்களைக் கொண்டு ப.சுப்பராயன் தலைமையில் ஒரு சுயேச்சை அரசினை உருவாக்கினார். இவ்வரசுக்கு ஆதரவளிக்க 34 உறுப்பினர்களை  சட்டமன்றத்துக்கு நியமித்தார். இவ்வரசை ஆளுனரின் கைப்பாவை என்று வர்ணித்த நீதிக்கட்சி அதற்கு ஆதரவளிக்க மறுத்து விட்டது.

சுயராஜ்யக் கட்சியும் நீதிக்கட்சியும் எதிர்க்கட்சிகளாகச் செயல்பட்டன. 1927இல் இவை இணைந்து சுப்பராயனுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணையால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் சுப்பராயன் அரசு பாதிப் பதவிக்காலத்தைத் தாண்டும் முன்னர், சுப்பாராயன் அரசுக்கு நீதிக்கட்சியின் எதிர்ப்பு ஆதரவாக மாறி விட்டது. 

சைமன் குழு சென்னைக்கு வருகை தந்தபோது அதனை எதிர்ப்பது குறித்து எழுந்த அரசியல் மாற்றங்களால் நீதிக்கட்சியின் அரசு எதிர்ப்பு, அரசு ஆதரவாக மாறியது. பனகல் அரசர் டிசம்பர் 1928 இல் மரணமடைந்த பின்னர்  நீதிக்கட்சி இரு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களில் என்.ஜி.ரங்கா (இவர் பின்னாளில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி என்று ஒன்றைத் தோற்றுவித்தவர், தில்லி நாடாளுமன்ற உறுப்பினர்)   தலைமையிலான அமைச்சர் ஆதரவாளர்கள் (Ministerialists), பிராமணர்கள் கட்சியில் உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையினை நீக்கக் கோரினர். கட்சியின் பதினோராவது வருடாந்திர  மாநாட்டில் இரு குழுக்களிடையே உடன்படிக்கை ஏற்பட்டு முனுசாமி நாயுடு கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1930–37:

நான்கு ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட பின்னர் 1930 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது நீதிக்கட்சி. முனுசாமி நாயுடு முதல்வரானார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் கட்சியில் உட்பூசலும் சர்ச்சைகளும் மலிந்தன.

பெரும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் அப்போது உச்சத்தில் இருந்ததால், சென்னை மாகாணத்தின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. தென் மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. வருவாய்க் குறைபாட்டை ஈடுகட்ட அரசு நிலவரியை அதிகரித்தது. இதனாலும், பொப்பிலி அரசர் மற்றும் வெங்கடகிரி குமாரராஜா இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதாலும், நீதிக்கட்சியின் ஜமீன்தார் குழு அதிருப்தி யடைந்தது.

1930 இல் பி.டி.ராஜன் (பி.தியாகராஜ முதலியார்)  மற்றும் முனுசாமி நாயுடு ஆகியோரிடையே கட்சித் தலைவராவதில் போட்டியேற்பட்டது. தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நாயுடு மூன்றாண்டுகளாக  கட்சியின் வருடாந்திர மாநாட்டை நடத்தாமல் தவிர்த்தார்.  

நவம்பர் 1930இல் எம்.ஏ.முத்தையா செட்டியார் தலைமையில் ஜமீன்தார்கள்  ‘ஜிஞ்சர்’ குழு என்ற போட்டிக்குழுவை உருவாக்கினர். 1932 அக்டோபர்  10-11இல் நடைபெற்ற கட்சியின் 12வது வருடாந்திர மாநாட்டில் ஜமீன்தார் குழு நாயுடுவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கி, பொப்பிலி அரசரை அவருக்குப் பதில் தலைவராக்கியது.

சொந்தக் கட்சியினரே தனக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து விடுவார்கள் என்றஞ்சிய நாயுடு,  நவம்பர் 1932 இல் பதவி விலகினார்; பொப்பிலி அரசர் முதல்வரானார்.

நாயுடுவின் ஆதரவாளர்கள்  ‘ஜனநாயக நீதிக்கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். 1935 இல் நாயுடுவின் இறப்புக்குக் பின்னர் மீண்டும் நீதிக்கட்சியில் இணைந்தனர்.  இக்காலகட்டத்தில் நீதிக்கட்சியின் எல்.ஸ்ரீராமுலு  நாயுடு சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார்.

மாகாண மக்களிடையே வேகமாகப் பரவி வந்த காங்கிரஸின் தேசியவாத உணர்வும், பொப்பிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிர்வாகமும் நீதிக்கட்சியின் நற்பெயரை அறவே அழித்து விட்டன. உட்கட்சிப் பூசல்கள் 1930களின் முற்பகுதியில் கட்சியை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. பொப்பிலி அரசர் கட்சிக்காரர்களைக் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டதுடன் கட்சியின் முதுகெலும்பாக இருந்த உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களை ஓரம் கட்ட முயற்சித்தார். பிரிட்டீஷ் அரசின் கடுமையான நடவடிக்கைகளை பொப்பிலி அரசர் ஆதரித்ததால், அவரை மக்கள் பிரிட்டீஷ் காரர்களின் ஏஜென்டாகக் கருதினர். நீதிக்கட்சி அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் மக்களின் கோபத்தை சம்பாதித்தன.

ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களில் நில வரியை 12.5 % குறைக்க பொப்பிலி அரசர் மறுத்தது, இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஜமீன்தாராகிய அவர் கடுமையாக ஒடுக்கியது போன்ற நிகழ்வுகள், நீதிக்கட்சியின் செல்வாக்கு மேலும் சரியக் காரணமாக அமைந்தது.

 1934 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றாலும் வெற்றி பெற்ற சுயராஜ்யக் கட்சி (காங்கிரசின் தேர்தல் பிரிவு) அரசமைக்க மறுத்து விட்டதால், நீதிக்கட்சி சிறுபான்மை அரசமைத்தது.

நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த இறுதி ஆண்டுகளிலும் மக்களிடையே அதன் ஆதரவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. அக்கட்சி அமைச்சர்கள் மாதச் சம்பளமாகப் பெருந்தொகை பெற்று வந்தனர் . இதர மாகாணங்களில் அமைச்சர்கள் ரூ. 2,250 பெற்று வந்த நிலையில், இவர்கள் மாதம் ரூ. 4,333 பெற்றனர். இது சென்னை மாகாண பத்திரிகைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொதுவாக நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆதரவு ‘மெட்ராஸ் மெயில்’ இதழ் கூடப் பொப்பிலி அரசின் ஊழலையும் கையாலாகாத்தனத்தையும் சாடியது.

இந்த மாகாணத்தின் மக்களைப் பீடித்த பிளேக் நோய்போல நீதிக்கட்சி செயல்படுகிறது; அதன்பால் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தர வெறுப்பு உருவாகிவிட்டது. சர்வாதிகார நீதிக்கட்சி அரசு எப்போது ஒழியும் சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசு எப்போது ஆட்சிக்கு வரும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிராமங்களில் வாழும் மக்கள் கூடப் பொப்பிலி அரசரின் ஆட்சி எப்போது முடியும் என்று கேட்கத் தொடங்கினார்கள்.

சென்னையின் ஆளுனர் எர்ஸ்கின் பிரபு (Lord Erskin), இந்தியாவுக்கான செயலர் செட்லாந்து பிரபுவுக்கு பெப்ரவரி 1937 இல் எழுதிய கடிதத்தில் “கடந்த பதினைந்தாண்டுகளில் நடந்துள்ள அனைத்து தவறுகளுக்கும் மக்கள் பொப்பிலி அரசே காரணம் என்று கருதுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

1937 தேர்தலில் புது வேகத்துடன் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியிடம் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. 1937க்குப் பின் சென்னை மாகாண அரசியல் களத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் முற்றிலுமாக அற்றுப்போனது.

நீதிக்கட்சியின் இறுதி வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன:

கட்சி பிரிட்டீஷ் அரசின் ஆதரவாளராகச் செயல்பட்டது, கட்சி உறுப்பினர்களின் உயர்வு மனப்பான்மை, பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆதரவை இழந்தது மற்றும் சமூக சீருத்திருத்தவாதிகள் கட்சியை விட்டு விலகி சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்தது, உட்கட்சிப் பூசல்கள், திறமையற்ற ஒருங்கமைப்பு, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இன்மை மற்றும் செயலிழந்த நிலையே கட்சி அழியக் காரணங்கள்.

1936–44

நீதிக்கட்சி, 1926–30 காலகட்டத்திலும், 1937 முதல் 1944 இல் திராவிடர் கழகமாக மாறும் வரை எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது. 1937 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னால் நீதிக்கட்சி தன் அரசியல் செல்வாக்கை முற்றிலும் இழந்து விட்டது. அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகிய பொப்பிலி அரசர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று விட்டார். 

சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) தலைமையில் அமைந்த புதிய காங்கிரஸ் அரசு பள்ளிகளில் ஹிந்தியைக் கற்க வேண்டுமென்ற நிலையை எடுத்தது,. சர் ஏ.டி. பன்னீர்செல்வம் தலைமையில் நீதிக்கட்சி, பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து இம்முயற்சியை எதிர்த்தது.

பன்னீர்செல்வம், 1937 தேர்தலில் வெற்றிபெற்ற வெகுசில நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். இந்த  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக நீதிக்கட்சி  ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கட்டுப்பாட்டில் வந்தது. பொப்பிலி அரசரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஈ.வே.ராமசாமி நாயக்கர் டிசம்பர் 29, 1938 இல் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த ஈ.வே.ராமசாமி, பல ஆண்டுகளாக நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 1925 இல் காங்கிரஸ் பிராமணர்களுக்கு ஆதரவான கட்சி என்று குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறி  ‘சுயமரியாதை இயக்கம்’ என்று ஒன்றைத் தொடங்கினார்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment