கரூர் கோவில் இனாம் நிலங்கள்: என்னதான் பிரச்சினை?

-நைனார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், காடேஸ்வரா சுப்பிரமணியம், ராஜசங்கர் விஸ்வநாதன், கே.அண்ணாமலை, ஆர்.ஆர்.கோபால்ஜி, உமா ஆனந்தன், எஸ்.கே.கார்வேந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா

கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம்  நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026)  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...

அ. கோவில் நிலங்களை தாரைவார்க்க ஏன் இந்த அவசரம்?

-நைனார் நாகேந்திரன்

-1-

ரூ. 25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா?  ஜோசப் விஜய் அரசுக்குக் கண்டனம்!

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில், அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத் துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குறிப்பாக,  ஜூலை 9ஆம் தேதியன்று காலையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன?

திருக்கோவில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?

ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் திரு. ரமேஷ். முந்தைய திமுக ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை,  திரு. ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் திரு. விஜய் அவர்கள் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

  • (10.07.26 தேதியிட்டஅறிக்கை)

***

-2-

அரசியல் ஆதாயங்களுக்காக கோவில் நிலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நோக்கம்!

கரூர் மாவட்டத்தில் உள்ள  ரூ. 25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் கோயில் நிலங்கள் விஷயத்தில், தவெக அரசு தனது அரசியல் லாபத்திற்காக போதிய ஆய்வுகளும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோமெனச் செயல்படுகிறது என்பதே எங்களின் குற்றச்சாட்டு.

குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களில் வசிக்கும் 10,000 குடும்பங்களை வெளியேற்றுங்கள் என்றோ, அவர்களை அகதிகளாக்குங்கள் என்றோ பாஜக எங்கேயும் கூறவில்லை. இந்நிலையில், எங்கள் கருத்தை அமைச்சர் திரு. நிர்மல் குமார்  திரித்துக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, அவசர கதியில் நடந்த இந்த ஏற்பாடுகள் எல்லாம், ‘இனாம் ஒழிப்புச் சட்டத்தின்’ (Inam Abolition Act) கீழ் தான் நடைபெற்றனவா? என்ற தார்மிகக் கேள்வியில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை.

இனாம் சொத்துக்களில் முறையான பட்டா பெற்றவை மட்டுமே தற்போது நீக்கப்பட்டுள்ளது என்று தவெக அரசு சொல்கிறது. அதை சரி என்று ஏற்றுக் கொண்டாலும், இந்தச் சொத்துக்களை பத்திரப்பதிவுத் துறையும், இந்து அறநிலையத் துறையும், இதே மாவட்ட நிர்வாகமும் தடை செய்து வைத்திருந்தது ஏன்? இந்தக் காரணத்தை விளக்காமல் தவெக அரசு செயல்படும் விதம் சந்ததேகத்துக்குரியதாகவும், வேறேதோ அரசியல் நோக்கமிருப்பதாகவும் மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.

குறிப்பாக, மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரை, இணை ஆணையரின் குறிப்பு, ஆணையரின் இறுதி உத்தரவு, முதல்வரின் கரூர் வருகை, தவெக நிர்வாகி திரு. எம்.ஆர். விஜயபாஸ்கரின் பேச்சு என அனைத்தும் ஒரே நாளில் நடந்தது எப்படி? ஏன் இந்த அவசரம்? இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

  • (11.07.2026 தேதியிட்ட அறிக்கை)

$$$

ஆ. கடமை தவறும் இந்து அறநிலையத் துறை

-ஹெச்.ராஜா

கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடல்  விருத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி, ரூ. 25,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்யும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, இந்து சமய அறநிலையத் துறையின் திருப்பூர் இணை ஆணையருக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்துள்ள அறிவிப்பாணை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த விஷயத்தில் சட்டவிரோதமாகவும், அறத்திற்குப் புறம்பாகவும் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் செயல்பட அனுமதித்த தவெக அரசின் இந்து விரோதச் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தவெகவைச் சேர்ந்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.ரமேஷ்    ‘கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம், பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாது’ என்று உறுதிமொழி அளித்திருந்தார்.

கரூரில் 3,084 ஏக்கர் திருக்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்து தர கரூர் மாவட்ட ஆட்சியரும், திருப்பூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரும் பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள செயலுக்கு எதிராக அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

மதச்சார்பற்ற சமூகநீதி என சொல்லிக்கொண்டே, இந்து விரோத செயல்களை தனது ஆட்சியில் அனுமதிப்பதன் மூலமாகவும், இந்து விரோதச் செயல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மூலமாகவும், தவெக இன்னொரு திமுக என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நிரூபித்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்சிதான் மாறி இருக்கிறதே தவிர, இந்துக்களுக்கு எதிராகவும், இந்து கோயில்களுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் இந்து விரோதச் செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோயில்களின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்  ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் – 1959’ உருவாக்கப்பட்டது.

எந்த நோக்கத்திற்காக  ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959’ உருவாக்கப்பட்டதோ,  அதற்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகமே செயல்படுவது காலக்கொடுமை.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில், ‘திருக்கோயில் சொத்துகளைப் பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரசின் சட்டப்பூர்வ கடமை; கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு உட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, கரூர் மாவட்டத்திலுள்ள மேற்குறிப்பிட்டுள்ள நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,084 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க தமிழக முதல்வர் திரு. விஜய், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. ரமேஷ்  ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.

  • (10.07.2026 தேதியிட்ட அறிக்கை)

$$$

இ. கோவில் நிலங்களை அரசு காக்க வேண்டும்!

-வானதி சீனிவாசன்

கோவில் நிலங்கள் எந்த விதத்திலும் தனி நபர்களுக்கு சென்று விடாமல் இருப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். தி.மு.க.,வின் இந்து விரோதப் பாதையில் த.வெ.க. அரசு சென்றுவிடக் கூடாது.

கரூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் உள்ள, ரூ. 25,000 கோடி  மதிப்புள்ள, 3,084 ஏக்கர் 95 சென்ட் திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில் பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில், பதிவுத் தடையை நீக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

இது தமிழகத்தில் இந்து கோவில் சொத்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருக்கும் பட்டா மாறுதல் செய்யக் கூடாது.

ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வ கடமையாகும்.

எனவே, ரூ. 25,000 கோடி  மதிப்புள்ள கோவில் நிலங்களை, தனி நபர்களின் பெயரில் பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க எந்த அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் கோவில் நிலங்கள், தனி நபர்களுக்கு சென்று.விடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்ச ரமேஷ் அவர்களும் உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க.,வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.

  • (10.07.2026 தேதியிட்ட அறிக்கை)

$$$

ஈ. தவெக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

-காடேஸ்வரா சுப்பிரமணியம்

கரூர் கோயில்களின் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கத் துணியும் தவெக அரசை கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோயிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கி பக்தியை, பண்பாட்டை வளர்த்தார்கள் அந்தக் கால ஆட்சியாளர்கள். கோயில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அள்ளிக் கொடுத்து கோயிலை அழிக்கத் துணிகிறார்கள் இந்தக் கால சுயநலவாத ஆட்சியாளர்கள்.

கரூரில் நான்கு பிரதானக் கோயில்களின் 3,084 ஏக்கர் நிலங்கள், கோயிலின் பொருளாதாரம் மற்றும் கோயிலுக்கு சேவை செய்யும் மக்கள் வாழ்வதற்கு தரப்பட்டவை ஆகும். ஆனால் காலப்போக்கில் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி, பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். கோயிலுக்கு தொண்டு செய்தவர்களுக்கு உதவியாகக் கொடுத்த கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அனுபவிப்பவர்களுக்கும் கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே ஆக்கிரமிப்புகள் தர்மத்திற்கு எதிரானவை.

ஆனால் ஆக்கிரமித்தவர்கள் சொத்துக்களை சொந்தம் கொண்டாட விதித்த தடையை இந்து சமய அறநிலையத் துறை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அரசின் நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது என்று 200-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்த மாநில அரசுக்கு, கோயில் நிலங்களை கூறுபோட்டு தாரை வார்க்க என்ன அருகதை உள்ளது?

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா? இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாநில அரசின் இந்த அநியாயச் செயலை உரிய முறையில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து கோயில் சொத்துகளைப் பாதுகாக்க இந்து முன்னணி தொடர்ந்து போராடும்.

கோயில் சொத்துகள் பறிபோவதற்கு துணைபோகும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில் சொத்துகளை தாரைவார்க்கும் அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆதாரம்: இந்து தமிழ் திசை (11.07.2026)

$$$

உ. குழப்பியவர்களின் நோக்கம் கொள்ளை தான்!

-ராஜசங்கர் விஸ்வநாதன்

இந்தக் கோவில் நிலம், இனாம் நிலம் என்றால் என்ன என கொஞ்சம் தேடிப் பார்த்தேன்

இதுல என்ன பிரச்சினை என்றால்,  நேரடியாக கோவிலுக்கு இருந்த நிலம் என தனியாக இருந்திருக்கிறது. கோவிலிலே வேலை செய்தவர்களுக்கு அல்லது கோவிலுக்கு ஏதேனும் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கு என தனியாக நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டுமே கோவிலுக்கான நிலங்கள் தான். ஆனால் ஒன்று நேரடியாக சொத்து, இன்னொன்று மறைமுகமான சொத்து.

இதிலே வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து இந்த மறைமுகமான சொத்தை, அதுவும் மடங்கள் தர்ம பரிபாலனங்கள் போன்றவற்றிலே இருந்த சொத்தை, ‘இனாம் செட்டில்மென்ட்’ என ஒரு வகையான சட்டப் பிரிவை வைத்து, அதை அந்தந்த நபர்களிடம் விட்டிருக்கிறார்கள்.

இதிலே இன்னொன்று நடந்திருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலே கோவிலுக்கு என்று இருந்த பல லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுக்கிறோம் என அப்பொழுது இருந்த காங்கிரஸ் கட்சி எல்லா மாநிலங்களிலும் எடுத்துக் கொடுத்திருக்கிறது.

கவனியுங்கள் –  எல்லா பொதுமக்களுக்கும்… அதேபோல தமிழகத்திலும் நடந்திருக்கிறது. தமிழகத்திலே இது 1960க்கு முன்பே நடந்து அதற்கு பட்டா வழங்கப்பட்டு அதை விற்று வாங்கி இருக்கிறார்கள்.  

சரி அந்தப் பிரச்சினை ஏன் இப்பொழுது வருகிறது?  1960-iல் முடிந்துபோன பிரச்சினை திரும்ப ஏன் 60 வருடம் கழித்து வருகிறது என்றால், இங்கேதான் போன திமுக ஆட்சியினுடைய சூழ்ச்சி இருக்கிறது.

பல இடங்களிலேயே பார்த்தால், கோவில் நிலங்களை பலர் கடந்த 10,  20 வருடங்களிலே 30 வருடங்களிலே ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்துகொண்டு காலி செய்ய மாட்டேன் என பிரச்சினை செய்கிறார்கள். அந்தப் பிரச்சினை, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கிறது

குறிப்பிட்ட பேர் வைக்கப்படாத நபர்கள் மர்மமான நபர்களும், ‘இங்கே நாங்கள் 30 வருடம் குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை எங்களுக்கே கொடுத்து விட வேண்டும்’ என பிரச்சினை செய்கிறார்கள்.  

அதுமட்டுமல்லாது, கோவில் நிலங்களிலே அதாவது சென்னை போன்ற நகரங்களிலே கோவில் நிலங்களிலே கடைகள் கட்டி வாடகைக்கு விட்டவர்கள் இப்பொழுது அந்த நிலங்கள் அவர்களுக்கு வேண்டுமென அரசியல் ரீதியாக இந்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பிடித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

இந்த பிரச்சினைகள் அதாவது இது இப்பொழுது நடக்கின்ற பிரச்சினை, இந்த பிரச்சினையைப் பெரிதுபடுத்தி, பழைய பிரச்சினையையும் இழுத்து விட்டால், கோவில் நிலங்களை தங்களுக்கே கொடுக்க வேண்டும் என சொல்பவர்களுடைய எண்ணிக்கை பெரிதாகும்.

எனவே ஒட்டுமொத்த நிலங்களையும் அதாவது 60 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட நிலங்களை இப்பொழுது இழுத்து விட்டால், அந்த நிலங்களையும் இப்பொழுது இந்த 10 வருடங்கள் 20 வருடங்களிலே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலங்களையும் இணைத்து ஒரே அடியாகக் கொடுத்து விடலாம் என திட்டம் போட்ட சூழ்ச்சி தான் இந்த பிரச்சினை.

எப்படி இந்த ஆட்கள் கணக்கு போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

அப்படியானால் இனாம் நிலங்கள் அனைத்துமே கோவிலுக்கு சொந்தம் இல்லையா, அந்தந்த நபர்களுக்கு தான் சொந்தமா என்றால், அது சிக்கலான பிரச்சினை. ஒவ்வொரு கோவிலும் எப்படி நடந்தது, எப்படி இருந்தது என பார்க்க வேண்டும்.

பல ஊர்களிலே இது கிராம மக்களுடைய முடிவாலேயே நடந்திருக்கிறது. அதாவது ஏதேனும் ஒரு இடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்… அதாவது ஒரு நந்தவனமோ அல்லது ஒரு விவசாய இடமோ அல்லது  இந்த மாதிரியான ஏதோ ஒரு கோவிலின் பூஜைப் பயன்பாட்டுக்கு இருக்கின்ற நிலம் இருக்கிறது அல்லது இடம் இருக்கிறது என இருந்தால், அதை அந்த பூஜை செய்பவரோ அல்லது அந்த நிலத்தைப் பயன்படுத்தி கோவிலுக்கு ஏதேனும் தருபவரோ இருந்தால், சரி அதை அவருடைய நிலத்திலிருந்து கொடுத்தால் என்ன, வெளியே வாங்கிக் கொடுத்தால் என்ன என முடிவு செய்து, அந்த நிலத்தை அவர்களுக்கே சமீப காலங்களில் அதாவது ஒரு 10,  20 வருடங்களிலே கொடுத்துவிட்டார்கள்.

நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டது ஒன்றுதான். கோவில் பூஜை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்கான விஷயங்களை அந்த நபர்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அப்படி இருக்க, இதையும் நேரடியான கோவில் நிலத்தையும் ஒப்பிடுவது தவறு.

இந்தக் கோவில் நிலப் பிரச்சினை என்பது, ஒரு நெறிப்படுத்தப்படாத- என்ன நடக்கிறது என்று தெரியாத பிரச்சினையாக இருக்கிறது.  

அதாவது நமக்கு இப்பொழுது வரைக்கும், கோவில் நிலங்களுக்கான சட்டம் என்ன? எந்தெந்தக் கோவில்களுக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது? அது யார், யாரிடம் இருக்கிறது?  அதாவது நேரடியாகவே கோயிலிடம் இருக்கிறதா, அல்லது யாரேனும் மொத்த குத்தகை கொடுத்து பரம்பரையாக கோவிலுக்கு பணம் கட்டிக்கொண்டு வருகிறார்களா? எனத் தெரியவில்லை

தஞ்சாவூர் போன்ற இடங்களிலே பார்த்தீர்கள் என்றால், அதாவது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் – பண்டைய சோழ நாட்டு இடங்களில் பார்த்தீர்கள் என்றால், மடத்தினுடைய இடங்கள் எதாவது திருப்பனந்தாள், தருமபுரம், திருவாவடுதுறை மடங்களின் இடங்கள் அந்தந்த ஊர் விவசாயிகளிடம் தான் இருக்கும். அந்த விவசாயிகள் மடத்திற்கு வருடத்திற்கு இவ்வளவு நெல் இந்த மாதிரி என கொடுப்பார்கள், அவ்வளவுதான்.

மடத்தினுடைய இடம்தான், ஆனால் நேரடியாக மடத்தின் கையில் இருப்பதில்லை.  முழுமையாக அந்தந்த விவசாயிகளே தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதை விற்று, வாங்க முடியுமா என எனக்கு தெரியவில்லை. மடத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

இந்த மாதிரியான சிக்கலான பிரச்சினைகளை, சட்டப்படியான பிரச்சினைகளை நாம் தொடர்ந்து கண்டுகொள்ளாமலேயே இருக்கிறோம்.  யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, சட்டத்தின் படியாக இந்தச் சிக்கலை தீர்த்துக் கொள்வது என்பது நமக்கு வரவே மாட்டேன் என்கிறது.

பழைய முறை போலவே எல்லாவற்றையும் சட்டத்திற்குப் போகாமலே நமக்குள்ளேயே பேசி செய்து கொள்ளலாம் என்பது இனிமேல் நடக்காது. அதுதான் இந்த கோவில் இனாம்  – கோவில் நிலங்கள் பிரச்சினையில் வெளிவருகிறது.

1960 களிலேயே பட்டா கொடுக்கப்பட்டு, சொத்து மாற்றி கொடுக்கப்பட்டு, பின்பு பலமுறை விற்கப்பட்டு –  வாங்கப்பட்டு இருந்த இடத்தையும், கோவிலுக்கு என்று நேரடியாக இருக்கின்ற இடத்தையும் நாம் ஏன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டும்?

அப்படியானால் 1960இல் பட்டா கொடுத்தது தவறா என்றால் தவறுதான். அதை செய்திருக்கக் கூடாது.  ஆனால் அப்பொழுது இருந்த பிரச்சினையில், அரசியல் செய்வதற்காக மக்களை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் அரசு அதை செய்து விட்டுப் போனது.

விவசாயிகளை உணர்ச்சிவசமாகத் தூண்டி விடுவது என்பது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, காங்கிரஸ் அரசு வந்ததிலிருந்து அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.  இன்றைக்கும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

ஆனால் 60 வருடமாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு, திருப்பியும் போய் அதை மீட்டு வருவது என்பது சட்டப்படி சாத்தியம் இல்லாத ஒன்று. ஏனென்றால் 60 வருடங்களுக்கு முன்பு வாங்கியவர் ஒருவராக இருப்பார்;  இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருப்பவர் வேறு ஒருவராக இருப்பார்; நடுவிலே பல பேரிடம் அந்த நிலம் கை மாறி இருக்கும்.

அப்படி என்றால், எப்படி இதைத் தடுத்து நிறுத்தினார்கள்? அதாவது எப்படி பத்திரப் பதிவு செய்யக் கூடாது என தடுத்து நிறுத்தினார்கள் என்றால்…

இந்து அறநிலையத் துறை சட்டத்திலேயே கோவில் நிலம் என்றால் அதை எவ்வளவு வருடங்களுக்கு பின்பும் மீட்கலாம் என்ற நிலை இருக்கிறது. அதாவது,  

மற்ற சொத்து என்றால் மட்டுமே 12 வருடங்கள் என நேரம் உள்ளது. அதாவது ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் 12 வருடங்களுக்குள்ளே வழக்கு போட வேண்டும். ஆனால் இந்து அறநிலைத்துறை சொத்துக்கு அந்த நேரக் கட்டுப்பாடு கிடையாது.  எப்பொழுது வேண்டுமானாலும் வழக்கு போடலாம்.

இந்த சட்டப்பிரிவை சாதகமாக்கிக் கொண்டு சூழ்ச்சி செய்த திமுக அரசு, இப்பொழுது 10 வருடங்கள், 20 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்தவர்களினுடைய நிலத்தையும் 60 வருடங்களுக்கு முன்பு அரசே பட்டா கொடுத்த நிலத்தையும் இணைத்துவிட்டு, இதை ஊதிப் பெரிதாக்கி விட்டால் எல்லாக் கோவில் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்து விடலாம் என (அதுவும் குறிப்பிட்ட பெயர் வைக்கப்படாத மர்ம நபர் அவர்களுக்கும் சேர்த்து பட்டா போட்டு கொடுத்து விடலாம் என) முடிவு செய்து, இந்தப் பிரச்சினையைக் கிளப்பி விட்டு பெரிய பிரச்சினையாக்கி விட்டிருக்கிறது.

கரூரிலே நேற்று நடந்ததாக வந்த அரசாணை அதுதான்.  

அதாவது அந்த நிலங்கள் கோவில் இடம் இல்லை; கோவிலுக்கு அவர்கள் பணம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஒரு காலத்திலே அந்த நிலங்கள் கோவிலுக்கு ஏதேனும் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட நிலங்கள்.

இந்த நிலங்களை மீட்க வேண்டுமென்றால், கோவில் நிலத்தை எடுத்து அரசு அலுவலகங்கள் கட்டியிருக்கிறார்கள், பேருந்து நிலையம் போன்ற அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள், அந்த நிலத்தையும் எடுக்க வேண்டியதுதானே என கேட்டால், அதற்கு பதில் வருவதில்லை.

இந்த பிரச்சினை எப்பொழுதெல்லாம் நீதிமன்றத்திற்குப் போனாலும்  ‘தர்ம காரியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தை எடுத்து மக்களுக்குப் பயன்படும் வகையிலே அரசு கட்டிடங்கள் கட்டுவதில்  தவறில்லை’ என நீதிமன்றங்கள் தொடர்ந்து தீர்ப்பு சொல்லிக் கொண்டு வருகின்றன.

முன்பு கோவிலுக்கு இருந்த நிலங்கள் அனைத்தையும் மீட்கிறோம் என்றால், அதை எல்லா இடத்திலும் செய்ய வேண்டும். அரசே நிலத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, தனியாருக்குக் கொடுத்திருந்தாலும் சரி, இரண்டையும் மீட்க வேண்டும் அல்லவா?

ஆனால், எப்பொழுதோ முடிவு செய்யப்பட்டு முடிந்து போன விஷயத்தையும், இப்பொழுது சமீபத்திலே நடக்கின்ற ஆக்கிரமிப்பையும் முடிச்சுப் போட்டு மக்களிடத்திலே பிரச்சினையைப் பெரிதாக்கி எல்லாக் கோவில் நிலங்களிலுமே ஆக்கிரமிப்பு செய்தோருக்கு அந்த நிலத்தைக் கொடுத்து விடலாம் என ஒரு சட்டத்தையும் அதற்கான நீதிமன்றத் தீர்ப்பையும் பெற முயற்சிக்கும் சூழ்ச்சிதான் இந்த பிரச்சினை.

சமீபத்திலே இந்து அறநிலையத் துறை அமைச்சர்  ‘ஓரிரு வாரங்களுக்கு முன்பு 10 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்கள் இருக்கின்றன. அதை மீட்போம்’ என சொல்லியிருப்பதாகப் படித்தேன்.

இது யார் சொல்லிக் கொடுத்தார்கள் என தெரியவில்லை.  இந்த 10 லட்சம் ஏக்கர் கணக்கையும் எப்படி கணக்கிட்டார்கள் என தெரியவில்லை.

ஆக, இவர்கள் முடிவாக என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்,  கோவிலுக்கு எதற்கு நிலம்,  அதுதான் அரசாங்கம் பணம் கொடுத்து விடுகிறது என்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்த முயற்சிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

இந்தப் பிரச்சினையை நாம் சட்டப்படி அணுக வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசிப் பலனில்லை.

அரசு 1947-க்கு பிறகு கோவில்களில் இருந்து எடுக்கப்பட்ட நிலங்களை திரும்பப்பெறும் என்றால், அது எல்லா நிலங்களையும் – அதாவது அரசு எடுத்துக் கொண்ட நிலங்களையும்,   அரசு கட்டிடங்கள் இருக்கின்ற நிலங்களையும், பொதுமக்கள் பயன்படுத்துகின்ற அமைப்புகள் இருக்கின்ற நிலங்களையும் சேர்த்தே கோவிலுக்குக் கொடுக்க வேண்டும்

ஆனால் தனியாருக்குக் கொடுக்கப்பட்டதை மட்டும் அதுவும் 1950 – 60களிலே செய்யப்பட்ட பிரச்சினைகளை திரும்பவும் கிளப்புவோம். ஆனால் அரசாங்கம் எடுத்துக் கொண்டதைக் கேட்க மாட்டோம் என்றால், அது சட்டப்படி சரியல்ல.

அதையடுத்து, கோவிலுக்கு என்று இருந்த நிலங்களிலே ஆக்கிரமிப்பு செய்தவர்களையும் கோவிலுக்கு வேலை செய்ததால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் இரண்டையும் போட்டு குழப்பி அடித்து, எல்லா ஆக்கிரமிப்பும் சரி என சொல்லக் கூடாது.  

எவ்வளவு பேர் வாடகைக்கு இருக்கிறார்கள், என்னென்ன நிலங்கள் இருக்கின்றன என்ற முழு விவரமும் வெளியிடப்பட வேண்டும். இதுபோல போன ஆட்சியிலே  ‘இனாம் செட்டில்மென்ட்’ கொடுக்கப்பட்டு அதை மீட்போம் என சொன்ன நிலங்கள் எவ்வளவு?  அதிலே இருக்கின்ற நபர்களுக்கு எப்பொழுது பட்டா கொடுக்கப்பட்டது? எப்பொழுது அந்த நிலங்களை அவர்கள் சொந்தமாகப் பதிவு செய்து கொண்டார்கள் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

இதை பொத்தாம் பொதுவாக குழப்பி அடித்து, கோவில் நிலங்களிலே வாடகை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நிலங்களைக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இப்படியான ஒரு பிரச்சினையை கடந்த 10 வருடங்களாக  கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.  

ஒரே நேரத்திலேயே கோவில் நிலம் என்றால் தர்ம காரியத்திற்குப் பயன்படுத்தலாம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சொல்லி அரசாங்கத்துக்கு எடுப்பதும், அதே நேரத்திலேயே தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர்களுக்கே கொடுத்து விடலாம் என முடிவெடுப்பதும் எந்த விதத்திலே சரி? எந்த சட்டத்தின்படி சரி?

இந்த  ‘இனாம் செட்டில்மென்ட்’ நிலங்களை எடுக்க வேண்டும் எனச் சொல்லும் நாம்,  அப்படியானால் அரசு கட்டிடங்கள் இருக்கும் நிலங்களையும் கோவில்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என கேட்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை, சிக்கல் ஆக்கப்பட்ட பிரச்சினை. இதை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். கோவில்களை நிர்வகிக்க வெளிப்படையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாக முறைகள், வெளிப்படையான கணக்கு வழக்குகள் வேண்டும்.

இதை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு ‘நிலங்களை எடுத்துக் கொண்டார்கள்’ என்று பேசுவது மட்டும் கூடாது.  

கோவில்களில் உண்டியல் காணிக்கை வருவது எப்படி செலவிடப்படுகிறது? கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள், நகைகள் போன்றவை எப்படி செலவிடப்படுகின்றன என்பதைக் கேட்க வேண்டும்.

உதாரணமாக போன ஆட்சியிலே பல கிலோ தங்க நகைகளை உருக்கி அதை வங்கியில் அடமானம் வைத்தோம் என்று, ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்துச்  செய்தார்கள்.  

எவ்வளவு நகைகளை எந்தெந்தக் கோவில்களில் இருந்து எடுத்து உருக்கினார்கள்? அந்தப் பணம் இப்பொழுது எந்த வங்கியில் இருக்கிறது? எவ்வளவு வட்டி வருகிறது? அதை எதற்கு செலவிடுகிறார்கள் என நாம் கேட்க வேண்டும்.

இதை ஒரு வெறுமனே நிலப்பிரச்சினையாக மட்டும் நிறுத்திவிடக் கூடாது.

நம்முடைய கோவில்கள் எப்படி நிர்வாகம் செய்யப்படுகின்றன? அதிலே பொதுமக்கள் கொடுக்கின்ற பணம் ஏழை, எளியோருக்குச் செலவிடப்படுகிறதா? கல்வி, மருத்துவத்திற்கு செலவிடப்படுகிறதா? என நாம் கேட்க வேண்டும்.

அதுவே சரியான தீர்வாக இருக்கும்.

$$$

ஊ. தவறான புரிதல் வேண்டாம்!

-கே.அண்ணாமலை

கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் “திருக்கோவில் சொத்துகள்” என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.

எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.

  • (11.07.2026 தேதியிட்ட அறிக்கை)

$$$

எ. கோயில்களின் சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?

-ஆர்.ஆர்.கோபால்ஜி

இந்து மதத்தை அழியாமல் காக்கவும், பூஜைகள் தடையின்றி நடக்க பொருளாதார பாதுகாப்பு வழங்கவும், நம் முன்னோர்கள் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். மன்னர்கள் முதல், சாதாரண குடிமக்கள் வரை இந்து மதத்தை காக்க எழுதிவைத்த சொத்துகளால்தான் இன்று திருக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து வரும் வருவாயில் திருக்கோயில்களில் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் தவெக அரசு 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 84 ஏக்கர் திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க எடுத்துள்ள முடிவு துரதிருஷ்டவசமானது. இந்து சமயத்துக்கு எதிரானது. இந்த முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

  • (11.07.2026 முகநூல் பதிவு)

$$$

ஏ. இது சமூகநீதி அல்ல!

-உமா ஆனந்தன்

பொது கோவில் நிலத்தை தனியார் நபருக்கு மாற்றுவது சமூக நீதி அல்ல, அது ஒரு மோசடி செயல். ஏன் என்று சொல்கிறேன்.

அரசியலுக்குள் போவதற்கு முன், ஒரு அடிப்படைக் குறை இருக்கிறது. இனாம் நிலங்கள் என்பது வரி விதிக்கப்படாத பொது கோவில் நிலங்கள். பொது நிலத்தை தனியார் ஒருவருக்கு மாற்றுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியுமா, அதுவும் சமூக நீதி என்ற பெயரில்?

இதைவிட ஆழமான கேள்வி, இது உண்மையில் யாருக்குப் பயன்பட்டது என்பதுதான். “உழுதவருக்கே நிலம்” என்று சொல்லும்போது, அது உண்மையில் அவர்களை சென்றடைந்ததா? இந்த நிலங்களில் நிஜமாக உழைத்தவர்கள், வியர்வை சிந்தியவர்கள் பெரும்பாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சீர்திருத்தத்தின் பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? 1% கூட கிடைக்கவில்லை. நிலத்தை இழந்த கோவிலுக்கும் இல்லை, உழைத்த தொழிலாளிக்கும் இல்லை. நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே பலன் பெற்றார்கள். கோவிலும் பயனடையவில்லை, உண்மையான உழைப்பாளியும் பயனடையவில்லை என்றால், இது எப்படி சமூக நீதி ஆகும்?

இனி, இது நிர்வாக ரீதியாக எப்படி நடந்தது என்று பாருங்கள். 09.07.2026 அன்று ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். அதே நாளில், சட்டத் துறை இணை ஆணையர் உடனடியாக ஒரு கடிதம் எழுதுகிறார். அதே நாளில் ஆணையர், ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவு கூட இல்லாமல், ஒரு பரிந்துரையை மண்டல இணை ஆணையருக்கு அனுப்புகிறார். மூன்று வெவ்வேறு அலுவலகங்கள், மூன்று வெவ்வேறு நடவடிக்கைகள், எல்லாம் ஒரே நாளில். இது வழக்கமான நிர்வாகம் அல்ல, இது திட்டமிட்ட நாடகம். மேலும், இது நடந்தது முதலமைச்சரின் வருகைக்கு சரியாக ஒரு நாள் முன்பு, அதாவது 10.07.2026 அன்று முதலமைச்சர் வருகை தரவிருந்த நிலையில். இந்த நேரம் தற்செயலானது இல்லை, இதற்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் இருப்பதைக் காட்டுகிறது.

இது ஒரு சிறிய நிர்வாகக் குறைபாடு அல்ல. நடந்த ஒவ்வொரு இனாம் உத்தரவையும், இதில் ஆணையரின் பங்கையும் நீதித்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பொது நிலத்தை தனியாருக்கு மாற்றுவதை சமூக நீதி என்று அலங்கரிப்பது அதை நீதியாக்கிவிடாது. அது மோசடிக்கு அணிவிக்கப்பட்ட ஒரு சிறந்த உடை மட்டுமே.

  • (11.07.2026 முகநூல் பதிவு)

$$$

ஐ. தவறான புரிதலில் தவறான விமர்சனம்

-எஸ்.கே.கார்வேந்தன்

தமிழக அரசு வெளியிட்ட கரூர் கோயில் இனாம் நிலங்கள் பத்திரப்பதிவு தடை நீக்கம் தொடர்பாக, பாஜக பிறபட்டோர் அணியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான தாராபுரம் திரு. எஸ்.கே.கார்வேந்தன்  அளித்துள்ள விளக்கம்:

ஆலயங்களில் பணியாற்றுபவர்களுக்கு விஜயநகரப் பேரரசாலும் இதர அரசாலும் மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் தான் இனாம் பூமிகள். அவைகள் ஆலயத்திற்கு (நேரடியாக) கொடுத்ததல்ல.

அந்த நிலங்களை ஒழுங்குபடுத்த, முன்னாள் முதல்வர் திரு.காமராஜர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. திரு.சதாசிவம், காங்கயம் எம்.எல்.ஏ. திரு. கே.ஜி.பழனிசாமிக் கவுண்டர் ஆகியோரைக் கொண்ட கமிட்டி அமைத்தார். அந்த கமிட்டியின் சிபாரிசின் பேரில் ‘தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம் 1963’ (Act 30/1963)-ஐ அமல்படுத்தினார். அது 29.01.1964 அன்று ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 5.2.1964 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டது.

மேற்படி சட்டம் பிரிவு 8(2) 1(a) படி, 1.4.1960 க்கு முன் 60 ஆண்டுகாலம் அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி பட்டா பெறலாம்;  1.4.1960க்கு முன் 12 ஆண்டுகாலம் அனுபவித்திருந்தால் நிபந்தனையுடன் பட்டா பெறலாம்.

அதற்காக மண்டல வாரியாக தமிழக அரசு  ‘Special Settlement Thasildar’ நியமித்து முறையான விசாரணை நடத்தி, ரயத்வாரி பட்டா வழங்கியது. அவ்வாறு பட்டா பெற்ற விவசாயிகள் பெரும் பொருட்செலவில் மராமரத்து செய்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சர்வ வில்லங்க சுத்தியாய் அனுபவித்து வருகிறார்கள். அவை கோவில் நிலங்கள் அல்ல.

முந்தைய தி.மு.க. அரசு கோவில் நிலங்களோடு சேர்த்து பட்டா பெற்ற முந்தைய இனாம் நிலங்களையும்  ‘0’ செய்து பத்திரப் பதிவை நிறுத்தியிருந்தது. அதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.

அதை நீக்கி விவசாயிகளின் உரிமையை தற்போதைய அரசு காப்பாற்றியுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரசாணையால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டுகிறேன். இனாம் வழக்குகளை 50 ஆண்டுகளாக நடத்தி வருபவன் என்ற முறையில் உணமையை உலகறியச் செய்ய இந்த பதிவிட்டுள்ளேன்.

$$$

ஒ. அனுபவிக்க மட்டுமே உரிமை

-ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா

திருக்கோவில் நிலங்களாக இன்று விவாதப் பொருளாகி உள்ள நிலங்கள், அடிப்படையில் கோவிலில் கைங்கர்யம் பார்ப்பவர்களின் வாழ்வாதாரத்திற்காகக் கொடுக்கப்பட்டவை. கோவில் பணிகளை அவர்கள் செய்யவில்லை என்றால் அதை திருக்கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலத்தை அனுபவிக்கத் தான் உரிமையே தவிர, விற்க உரிமை இல்லை.

காலப்போக்கில் திராவிட சூழ்ச்சியில் இந்த இடங்களின் பட்டாக்களுக்கு பல பெயர் வைத்து,விற்பனை நிலமாகி இன்று இரண்டு மூன்று நபர்களுக்கு கைமாறி விட்டது.

எங்கள் ஊரில் கூட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இதுபோல சர்ச்சையில் உள்ளன. அதாவது,  தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் இது போல இருக்கும்.

இதை எடுத்தேன், கவிழ்த்தேன் என இடைத்தேர்தலுக்காக தமிழக முதல்வர் விஜய் அரசு தாரை வார்த்துள்ளது தவறான நடவடிக்கை.

  • (முகநூல் பதிவு)

$$$

Leave a comment