-ஆசிரியர் குழு

புதுதில்லி: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே வேளையில், இஸ்லாமியர்கள் ரம்ஜான் தினத்தில் மலை மீது சென்று தொழுகை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
இதை எதிர்த்து, இந்து தர்ம பரிஷத் சார்பில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற இந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு. மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைர்ரு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அபராதத் தொகையை எங்களால் கட்ட முடியாது. எனவே, இனி இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்யமாட்டோம். ஆகையால் அபராதம் விதிக்க வேண்டாம்” என வேண்டுகோள் வைத்தார். ஆனால், அந்த கோரிக்கைக்கு மாநில அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், மனுதாரருக்கு அபராதத்தொகையை 50,000 ரூபாயாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மனுதாரர் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமார், ஶ்ரீசந்திரசேகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
அதாவது, “சூழலை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 50,000 ரூபாய் அபராதத் தொகையை 5,000 ரூபாயாக குறைக்கலாம்; மற்றபடி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- நன்றி: இ-டிவி பாரத் (04.06.2026)
$$$