-பி.ஆர்.மகாதேவன்
இந்த தேசத்தில் இந்துக்கள் ஏன் இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்களின் அரசியல் விழிப்புணர்வின்மையே காரணம். இதற்குத் தீர்வு என்ன? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் வழிகாட்டுகிறார்…

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நடத்தப்படும் ஆய்வுகள் எல்லாமே மூன்று காரணங்களினால் பிழையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
முதலாவதாக, பெரும்பாலானவர்கள் நடுநிலையாக ஆய்வு செய்வதில்லை.
இரண்டாவதாக, (நடுநிலையாக ஆய்வு செய்பவர்களுமே கூட) பெருவாரியான நபர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில்லை.
மூன்றாவதாக, மக்கள் முழு உண்மையைச் சொல்வதில்லை; அல்லது சொல்பவர்களில் அனைவரும் வாக்களிப்பதில்லை.
முந்தைய தேர்தல்களில் வாக்குகள் பதிவாகியிருக்கும் விதம், உருவாகியிருக்கும் கூட்டணிகள், அந்தத் தேர்தலுக்கான ‘எக்ஸ் ஃபேக்டர்’ எனச் சிலவற்றின் அடிப்படையில் இஷ்ட புள்ளி விவரங்களை மனதுக்குள் கும்பிட்டுக்கொண்டு யூகச் சோழிகளை சயின்டிஃபிக்காக உருட்டிவிடுவார்கள்.
ஏதாவது ஒன்று நடந்துதானே தீரும்?
இந்த முறை உன் கணிப்பு ஜெயித்திருக்கிறது. போன முறை என் கணிப்பு ஜெயித்தது. இந்த முறை உனக்கு லாட்டரி விழுந்திருக்கிறது; போன முறை எனக்கு விழுந்தது என்று தட்டிக் கொடுத்துக்கொண்டு, அடுத்த தேர்தலுக்கான ஆய்வுகளை சற்றும் மனம் தளராமல் முன்னெடுப்பார்கள்.
எத்தனை முறை தோற்றாலும், நாட்காட்டியில் அன்றைய பலன் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்ப்பது இயல்புதானே?
*
2026 தமிழகத் தேர்தலில் பல நிறுவனங்கள் வெளியிட்ட ஆய்வுகளில் அதிமுக கூட்டணியே முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திமுக அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று சொல்லும் கணிப்புகளும் ஒரு சில வெளியாகியிருக்கின்றன.
ஆனால், எல்லாருமே ஒரு விஷயத்தில் பெரிதும் ஒத்துப் போகிறார்கள். தவெக கணிசமான வாக்குகளைப் பெறும். 15 % – 20 % வரை என மதிப்பிடுகிறார்கள்.
இது திமுகவின் எதிர்ப்பு வாக்குகளாக இருந்தால், அதிமுக கூட்டணிக்குப் பின்னடைவாக தேர்தலில் எதிரொலிக்கும்; சிறுபான்மை வாக்குகளாக இருந்தால் திமுக கூட்டணிக்குப் பின்னடைவாக அமையும்.
எது நடக்கும் என்பது தெரியாததால், முதல் முறையாக தமிழகத் தேர்தலில் ஒருவித சஸ்பென்ஸ் உருவாகியிருக்கிறது.
கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலெல்லாம் இப்படியான சம வாய்ப்பு இருந்திருக்கவில்லை. 2021 தேர்தலில்கூட ஒருவகையில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பது போன்ற தோற்றமே இருந்தது. அதிமுக 60க்கு மேல் இடங்கள் பெற்றதே ஆச்சரியம் என்பதாகவே இருந்தது.
இம்முறை அப்படி இல்லை.
எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் நிச்சயம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதே (ஓரிரு விதி விலக்குகள் நீங்கலாக) தமிழகத்தின் வரலாறு. அதே வழியில் இம்முறையும் ஏதேனும் ஒரு திராவிடக் கட்சிக் கூட்டணியே வெற்றி பெறக்கூடும். ஆனால் எது என்பது புரியாத புதிராக இருப்பது இதுவே முதல் முறை.
இதில் ஒருவர் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரே ஒரு விஷயம் : இப்படி இந்தத் தேர்தலை சுவாரசியமான, அல்லது சம பலமுள்ள போட்டியாக ஆக்கியிருக்கும் அம்சம்: அதிமுக + பாஜக கூட்டணியே.
ஒருவேளை அந்தக் கூட்டணி அமைந்திருக்காவிட்டால்…
பாஜக, அதிமுக, தவெக என திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறிப் போய் திமுக எளிதில் வெற்றி பெற்றிருக்கும். நாம் தமிழர் கட்சியும் தன் பங்குக்கு வாக்குகளைப் பிரித்திருக்கும்.
ஆக, பாஜக + அதிமுக கூட்டணி அமையக் கூடாது என்று விரும்பியவர்களே பாஜகவின் திமுக கிளையாக ஆகியிருக்கும் விபரீதம் நடந்திருக்கும்.
*
ஒருவேளை அதிமுக + தவெக கூட்டணி அமைந்திருந்தால்…
நிச்சயம் திமுக மீதான அதிருப்தி வாக்குகள் எல்லாம் மிக எளிதில் இந்தக் கூட்டணி பக்கம் குவிந்திருக்கும். ஒருவேளை விசிக, கம்யூனிஸ்ட் போன்றவையும் ஜோசஃப் பக்கம் நகர்ந்திருந்தால் அவர், பனையூரில் இருந்தபடியே தமிழகத்தைப் புரட்டிப் போட்டிருப்பார்.
பாஜக 100க்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு, தன்னுடைய உண்மையான பலம் என்ன என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும்.
*
இந்த இரண்டுமே நடந்திருந்தாலும், வெற்றி யார் பக்கம் என்ற கேள்வியோ சந்தேகமோ துளியும் இருந்திருக்காது.
முதலாவது என்றால், திமுகவின் அமோக வெற்றி. இரண்டாவது என்றால் அதிமுக + தவெகவின் அமோக வெற்றி.
இரண்டிலுமே பாஜக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் இப்போது அதிமுக + பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்க முடிந்திருக்கிறது. ஒரு தேர்தலைச் சந்திக்க இது அவசியம்.
ஒருவேளை திமுகவின் அதிருப்தி வாக்குகளை மட்டுமே விஜய் தன் பக்கம் இழுத்து, இப்போதும் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு வழிவகுக்கவும் கூடும்.
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் அமைந்து திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய் என மூன்று தரப்புமே சுமார் 70-80 இடங்கள் என்பதாகவும் வரவும் வாய்ப்புண்டு.
எப்படியானாலும், உறுதியான தோல்வி என்ற நிலையில் இருந்து நம்பிக்கையூட்டும் போராட்டம் என்பதாக நிலைமையை மாற்றி அமைத்ததற்கு அமித் ஷாவுக்கு மிகுந்த நன்றி.
அப்புறம் இந்த கூட்டணிக்கு குருமூர்த்தி, நிர்மலா சீதாராமன், பேராசிரியர் சீனிவாசன், எல்.முருகன், தமிழிசை, பொன்னார், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய காரணமென்றால் அவர்களுக்குப் பூங்கொத்துகள்.
இந்தக் கூட்டணி வேண்டாம் என்று பொதுவெளியில் வெளிப்படையாகச் சொல்லி, அதன் பின் தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டு தமிழகம் முழுவதும் துடிப்புடன் பிரசாரம் செய்யும் அண்ணாமலைக்குப் பொன்னாடைகள்.
வியூகங்கள் மாறினாலும் இலக்கு ஒன்று தானே?
பாஜக எப்போதுமே உள்ளதில் ஆகச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அது பெரிதும் கெளரவத் தோல்விகளாகவே ஆகி வந்திருக்கிறது.
இம்முறை அபார வெற்றியாக மாற வேண்டும்.
அது பாஜகவினர் கையில் இல்லை; இந்துக்கள் கையில் இருக்கிறது.
இந்துக்கள் அடையாள அரசியலை முக்கியமாகக் கருத வேண்டும். பிள்ளையார் சதுர்த்திக்கு நாத்திக ரெளடிகளின் வாழ்த்துகள் தேவையில்லைதான். ஆனால், மாநில முதலமைச்சர் எனும்போது பெரும்பான்மையாக இருக்கும் எங்கள் உணர்வுகளை மதிக்காதவன் ஆட்சியில் உட்கார முடியாது என்று சொல்லும் எளிய அரசியல் உணர்வு இருக்க வேண்டும்.
500 ஆண்டுகளுக்குப் பின் ராமர் கோவில் கட்டப்பட்டது. ஆனால், அயோத்தி தொகுதியிலேயே தோல்வி. மேலும், தேசம் முழுவதிலும் கூட தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனது.
விஷயம் ரொம்ப சிம்பிள்: ராமர் கோவில் கட்டியதால் இந்து விரோத சக்திகள் ஓரணியில் திரண்டுவிட்டன. இந்துக்கள் அதைக் கட்டியும் திரளவில்லை.
பாலஸ்தீனத்தில் அவர்கள் புனிதமாக மதிக்கும் மசூதி இடிக்கப்பட்டு அதை ஓர் அரசு மீண்டும் கட்டியெழுப்பியிருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது நடக்கும் தேர்தலில் அந்த அரசு அந்தத் தொகுதியில் தோற்பதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?
பாலஸ்தீனத்தில் இருக்கும் மசூதி இடிக்கப்பட வாய்ப்பு உண்டா? அங்கு தேர்தல் நடக்குமா? என்பதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு யோசித்துப் பாருங்கள். புனித மசூதி மீட்கப்பட்டால் அந்த அரசு அந்தத் தொகுதியில் நிச்சயம் தோற்காது; எதிர்த்து நிற்பவருக்கு ஒரு வாக்கு கூட விழாது.
ஆனால், அயோத்தியில் தோற்றோம்.
இந்துக்கள் வாக்களித்துத்தான் இந்து விரோத மம்தாவும், பினராயி விஜயனும் கேஜ்ரிவாலும் திமுகவினரும் வென்று வருகிறார்கள்.
மத்திய மாநில பாஜக தலைமைகளால் கெளரவத் தோல்விக்கான முயற்சிகளைத்தான் எடுக்க முடிகிறது. தவறு அவர்கள் மீது இல்லை.
இந்துவாய்ப் பார்த்து வாக்களிக்காதவரை, இந்துத்தன்மை கொண்ட அரசு அமைய முடியாது.
$$$