-டி.எஸ்.தியாகராசன்

அண்மையில் நமது நாடு தனது 75ஆவது ஆண்டு சுதந்திர நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது. ஒரு வெள்ளைத்தாளில் ஒரு இடத்தில் கரும்புள்ளி இருந்தால் பளிச்சென்று தெரிவது போல நாட்டில் நடந்த இரு நிகழ்ச்சிகள் நாளிதழ்களில் கருப்புச் செய்தியாக வந்தன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமையாசிரியை தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செய்திட மறுத்துள்ளார். அதற்கு அவர் கூறிய பதில்தான் எத்தகைய விபரீத விநோதமானது என்பதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை. “என் மத போதனைப்படி என் கடவுளைத் தவிர வேறு எதனையும் வணங்கக் கூடாது” என்பது அவர் வாதம்.
உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது வீட்டின் உச்சியில் பாகிஸ்தான் நாட்டுக் கொடியை ஆகஸ்டு 15-இல் ஏற்றி மகிழ்ந்தார். இந்த இருவரின் மனமும் அவரவர்தம் சார்ந்த மதத்தை முன்னிறுத்தியதால், தாம் வாழும் தாய்நாட்டை மறந்துள்ளனர்; அல்லது மறுத்துள்ளனர்.
மகாகவி பாரதி பாடுவான் “எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்ததும் சிறந்ததும் இந்நாடே, இதை வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? இதை வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?” என்று. ஆனால் இவர்கள், நாமிருக்கும் நாடு நமது என்பதை அறியாமல் இது நமக்கே உரிமையாம் என்பதைப் புரியாமல் தத்தம் மத உணர்வை முதன்மையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
“பாரத பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்” என்றான் அதே கவி. இந்நினைவகற்றி வதியும் சிலரைத்தான் “செம்மைதீர் மிலேச்சர் தேசமும் பிரிதாம் பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர், சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்” என்று கடிந்தார் போலும்!
“தாயின் மணிக்கொடி பாரீர்! அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” என்று அழைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தலைமையாசிரியரே “நான் வணங்கேன்” என்றால் எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை என்பதை உரக்கச் சொல்லத் தோன்றுகிறது.
பொதுவாக ஒரு நாட்டின் கடந்த காலப் புகழை நிகழ்கால, வருங்கால சந்ததிகட்குச் சொன்னால் சொல்லுபவர்கட்கும், கேட்பவர்கட்கும் பெருமிதம் உண்டாகும். ‘சிக்மென் பிராய்டு’ சொல்லியது போல, இளம்பிள்ளைகளின் மனதில் பதிய பாடங்களை கதை போல, காட்சிகளை அவர்கள் கண்முன் நிறுத்தினால் என்றும் பசுமையாக இருக்கும் என்பது உண்மைதான். நாட்டின் வீர புருஷர்களின் கடந்த கால வீரதீரச் செயல்களை, தியாகங்களை, வெற்றிகளை பாடப்புத்தகங்களில் இணைத்து படிக்கவும், பயிற்சி பெறவும் பழக்கியிருந்தால் தாய்நாட்டுப் பற்றும் பாசமும் மேலோங்கி இருக்கும்.
இந்நாளைய அரும்புகள் மொட்டிலே கருகிடாமல், மலர்ந்து மணம் பரப்பும் என்பதும் உண்மைதான். உலகின் பல நாடுகளில் – குறிப்பாக நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் – தமது நாட்டை ஒரு காலத்தில் ரோமானியப் பேரரசன் ஜூலியஸ் சீசர் அடிமைப்படுத்தியதை அவர் தம் பாட நூல்களில் குறிப்பிடுவது இல்லை. மாறாக ஆங்கிலேயர்கள் உலகில் வென்ற நாடுகளின் பட்டியலை பெருமையோடு பாடம் நடத்துவார்கள். சூரியன் அஸ்தமிக்காத நாடு இங்கிலாந்து என்பதை பாடமாக வைத்திருப்பார்கள்.
‘லாங் மார்ச்’ நடத்தி சீனாவின் மன்னர் ஆட்சியை அகற்றிய மா சே துங் சீனாவில் பொதுவுடமை ஆட்சியை அமைத்த பிறகும், அதற்கு முன்னரும் கூட மங்கோலியர்கள் சீனாவை வென்றதையும், செங்கிஸ்கானுக்குப் பயந்து பெருஞ்சுவரை கட்டிய வரலாற்றையும் போதிக்காமல் அமெரிக்க வல்லரசை மிரள வைக்கும் அணு ஆயுத உற்பத்தியை, வல்லமை மிகு இராணுவ பலத்தை பாடமாகப் புகட்டுகின்றனர்.
அமெரிக்கா கூட தான் ஒரு காலத்தில் ஆங்கில அரசின் பிடியில் சிக்குண்டு இருந்ததை அதிகம் சொல்லாமல் சுதந்திரம் வேண்டி போரில் வென்ற ஜார்ஜ் வாஷிங்டன் வீரத்தைக் காட்சிப்படுத்துகிறார்கள்.
ஆனால் பாவம் அன்றைய இந்திரபிரஸ்தம் என்ற பெயர் கொண்ட இன்றைய டில்லியை அடிமை வம்ச அரசன் தான் தந்திரமாகப் பெற்ற வெற்றியைக் கொண்டாட நிறுவிய குதுப்மினார் ஸ்துபியைப் பார்த்து பரவசம் கொள்ளும் வகையில் நம் பாடநூல்கள் இருக்கின்றன. அதே பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகப் பேரரசர் வரிசையில் வைக்கத்தக்க சந்திரகுப்தர் எழுப்பிய இரும்புத் தூண் இன்று வரை துருப்பிடிக்காமல் இருக்கும் விந்தை குறித்தான விரிவான வரலாறு நமது பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது.
தனது சின்னஞ்சிறு நாட்டை வென்று அடிமைப்படுத்த முயன்ற அக்பர் தி கிரேட்டால் போரில் வெல்ல முடியாத ராஜபுத்திர அரசரான மேவார் நாட்டு ராணா பிரதாப் சிங் ஒரு சந்தாப்பத்தில் ஓரிராண்டுகள் தாவர உணவை மட்டுமே உண்டு காட்டில் இருந்தபடியே காட்டிற்கு வெளியே தேசப்பற்று மிகுந்த இளைஞர்களைத் திரட்டிப் போரிட்டவர். தன் வம்சத்தில் பிறந்த ராஜா மான் சிங் அக்பரோடு சேர்ந்து போரிட்டபோதும் வெல்ல முடியாத தாய்நாட்டுப் பற்றாளார்; இவர் தாய் மண்ணை நேசித்த பண்பினை வீரத்தை நம் நாட்டுக் குழந்தைகள் முதல் எல்லோருக்கும் போதித்து இருந்தால் பாரதம் பறங்கியர்க்கு அடிமைபட்டிருக்காது.
அல்ஜீரியா, ஆர்மேனியா, ஜோர்டான், சைப்ரஸ், எகிப்து, ஜார்ஜியா, ஈரான், இராக், இஸ்ரேல், கஜகஸ்தான் போன்ற 36 நாடுகளை தன்வசம் வைத்திருந்த அரசன் முகமது பின் காசிம் ஒரு லட்சம் வீரர்களோடு சிரியாவிலிருந்து பொ.யு. 715-இல் இந்தியாவிற்குள் நுழைந்தான். இவனது படையில் உள்ள ஒவ்வொரு வீரனும் நான்கு காட்டெருமை பலத்திற்கு ஈடானவர்கள் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஆற்றல் வாய்ந்த பெரும் படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பாரத மன்னன் பாப்பா ராவல் தோற்கடித்தார்.
பாப்பா ராவல் கைக்கொண்டிருந்த வாளின் எடை யாரும் எளிதில் நம்ப இயலாத வகையில் 264 கிலோவாக இருந்தது. இவர் தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக ஒரு நகரை உருவாக்கினார். அந்த நகரம் தான் இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி. இவர் தோற்றுவித்த அரச வம்சம் சுமார் 500 ஆண்டுகள் நீடித்து இருந்தது. இவரது பெயரையோ, நடத்திய வெற்றிப் போரையோ பாரத நாட்டு மாணவர்கள் இன்னமும் அறிந்திருக்க இல்லை.
உலகின் முதல் கடற்படையைக் கொண்டிருந்த பேரரசன் ராசேந்திர சோழன் 9 லட்சம் போர் வீரர் படையை தன்வசம் வைத்திருந்த வரலாறு பற்றி நாட்டின் நாற்திசைகட்கும் பரவவில்லையே!
உலகில் முதன்முதலில் ஆற்று நீரைத் தேக்கி அணை கட்டி பாசனம் செய்து நீர் மேலாண்மையை அறிமுகப்படுத்திய கரிகாற் சோழனை இந்தியாவின் எல்லா கல்வி நிலையங்களிலும் பாடமாகப் போதிக்கிறோமா?
மாபெரும் மொகலாய, சுல்தானியப் படைகளை குறைந்த அளவிலான படையைக் கொண்டு நிர்மூலமாக்கிய மராட்டிய வீர சிவாஜியைப் போற்றும் மக்களின், மாணவர்களின் தொகை அதிகமில்லை.
நமது இளஞர்கட்கு வீரம் ததும்பும் சாகசச் செயல்களைப் போதிக்க மறந்தாலும், இறந்துபட்ட பின்னரும் கையில் பிடித்து இருந்த மூவர்ணக் கொடியை எடுக்க இயலாத நிலையில் சடலமாக இருந்த திருப்பூர் கொடிகாத்த குமரன் பற்றி அறியாத பாரதத்தவர் பல கோடி உண்டே!
இதனால் தான் இந்திய கல்வி முறையை அன்றைக்கே சுவாமி விவேகானந்தர் சென்னையில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் 1897 பிப்ரவரி 14 ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறினாr:
“தற்போதைய கல்வியில் சில நன்மைகள் இருக்கின்றன. ஆனால் இதில் மிக அதிகமான தீமைகள் இருக்கின்றன. மிக அதிகமாக அந்தத் தீமைகள் சிறிது இருக்கும் நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக அது மனிதனை உருவாக்குவதற்குரிய கல்வி அல்ல. இது முழுக்க முழுக்க வெறும் எதிர் மறையான கல்வி. எதிர்மறைக் கல்வியும் சரி, அல்லது எதிர்மறை உணர்ச்சியை உண்டு பண்ணும் எந்தப் பயிற்சியும் சரி, அது மரணத்தை விடக் கொடியது. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆங்கே அவன் முதலில் படிப்பது, தன் தந்தை ஒரு முட்டாள், இரண்டாவது, தன் பாட்டன் ஒரு பைத்தியக்காரன், மூன்றவதாக, தன் ஆசிரியர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள். நான்கவதாக, எல்லா சாஸ்திரங்களும் பொய்… இப்படித்தான் அவனுடைய கல்வி இருக்கிறது. அவனுக்கு பதினாறு வயதாகும் போது அவன் உயிரற்றதும், உணர்வற்றதும், எதிர்மறை உணர்ச்சிகள் கொண்டதுமாகிய ஒரு பிண்டம் போல ஆகிவிடுகிறான். விளைவு? ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி இந்தியாவின் மூன்று முக்கிய மாநிலங்களிலும் சுய சிந்தனையுள்ள ஒருவனைக்கூட உருவாக்கவில்லை. அத்தகைய தனித்தன்மை வாய்ந்தவனாக இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் இந்த நாட்டில் படித்தவனாக இல்லாமல் வேறு எங்கோ கல்வி கற்றவனாக இருக்கிறான்”
-என்று சாடினார் சுவாமி விவேகானந்தர்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது கிறித்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில் தாய் சமய போதனையின்றி அந்நிய நாட்டு மதத்தை எப்படி போதித்தார்கள் என்பதை மகாகவி பாரதி புதுவையில் இருந்தபோது, அவரது மூத்த மகள் தங்கம்மாள் பாரதி கடையத்தில் படித்தபோது கூறியிருக்கிறார்….
“உபதேசத்தில் திறமை கொண்டவர்கள் கிறித்துவ ஆசிரியைகள், சிறுமிகளாகிய எங்களை ஹிந்து மதத்தைப் புறக்கணிக்கவும், இயேசு மதத்தைப் போற்றவும் வேண்டும் என்று கற்பித்தார்கள். பள்ளியில் தினமும், காலை, மாலை ஜபம் நடைபெறும். அப்போது ‘பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று ஆரம்பித்து ‘ஆமென்’ என்று முடிக்கும் வரை எங்களுக்கு ஏதோ தவறு செய்கிறோம் என்ற உணர்ச்சி இருக்கும். ‘உங்கள் சாமி எல்லாம் வெறும் கல்லு, எங்கள் இயேசுதான் நிஜக் கடவுள்’ என்று போதிப்பார்கள். நாங்கள் இதை வீட்டிலே சொன்னால் மறுநாள் பள்ளிக்கூடம் போக விட மாட்டார்களே! என்ற பயத்தினால் அவர்களிடமும் சொல்ல முடியாமல் எந்தத் தெய்வம் உண்மையானது” என்று தீர்மானித்துக் கொள்ளவும் முடியாமல் தவிப்போம்”. (தங்கம்மாள் பாரதி - பிள்ளைப் பிராயத்திலே, ஓம்கார நூலகம், புதுக்கோட்டை).
பாரத நாட்டை மொகலாயர்கள் ஆண்ட பிறகு ஆங்கிலேயர்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆண்டனர். பின்னர் நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு சுவாமி விவேகானந்தரின் உரைகளும் எழுத்துக்களும் முதன்மையாக விளங்கின என்பதை அந்நாளைய தலைவர்கள் மொழிகளாற் அறியலாம்.
மகாத்மா காந்தி “சுவாமி விவேகானந்தர் நூல்களை நான் மிகவும் ஆழ்ந்து படித்து இருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு இந்தியாவின் மீது இருந்த என் தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று”என்றார். நேரு “சுவாமி விவேகானந்தர் சாதரணமாக நாம் நினைக்கும் பொருளில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால் புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் அவர் ஒருவர் என்பதில் ஐயமில்லை” என்றார்.
அம்பேத்கர் “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் சுவாமி விவேகானந்தர் அவரிடமிருந்து புதிய இந்தியா ஆரம்பிக்கிறது”. என்றார். ராஜாஜி “நாம் இந்தியாவின் சமீப கால வரலாற்றை நோக்குவோமானால் நாம் அந்த அளவுக்கு சுவாமி விவேகானந்தருக்குக் கடமை பட்டிருக்கிறோம் என்பது தெளிவாகத் தெரியும். இந்தியாவின் உண்மையான மகத்துவத்தைப் பார்ப்பதற்கு அவர் நமது கண்களைத் திறந்து வைத்தார். அவர் அரசியலை ஆன்மிகப் படுத்தினார். இந்தியாவின் சுதந்திரம், அரசியல் கலாச்சாரம், ஆன்மிகத்தின் தந்தை” என்றார்.
திலகர் தான் நடத்தி வந்த ‘மராட்டா’ என்ற ஆங்கில இதழில் “இந்திய தேசியத்தின் உண்மையான தந்தை சுவாமி விவேகானந்தர்” என்று எழுதினார்.
நாட்டின் விடுதலைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் தொல் சமயத்திற்கும் பாரதத்தின் நீண்ட நெடிய பண்பாட்டு விழுமியங்களுக்கும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால் அரசுப் பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அவரது முழு பிம்பத்தை இன்று வரை காட்டிடவில்லை. இதனால் மாணவர்களிடையே தேசிய உணர்ச்சியோ, நாட்டுப் பற்றோ பீறிட்டு எழுவது இல்லை.
1947-க்குப் பிறகு கல்விச் சாலைகளின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்கா முடியரசர்களை விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்.
இத்தனைக்கும் விடுதலை பெற்ற நாளில் இருந்து மாபெரும் ஜாம்பவான்கள் கல்வி அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். மௌலான அபுல்கலாம் ஆசாத் தான் பிறந்தது மெக்காவில் என்றாலும், நாட்டுப் பிரிவினையின் போது “நான் இந்தியாவை நேசிக்கிறேன். பாகிஸ்தானுக்குப் போக மாட்டேன்” என்று சொன்னவர். அவர்தான் முதல் கல்வியமைச்சர்.
உலகத் தோற்றத்திலிருந்து இன்றளவும் நிலைகொண்டுள்ள பாரத நாட்டின் தொன்மைகளை சரியாக போதிக்க வல்ல பாடதிட்டங்களை அவர்கள் வகுக்கத் தவறி விட்டார்கள் என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது. இதனால் இன்றைய தலைமுறையினர் தாய்நாட்டின்மீது, தாய்நாடு காக்க இன்னுயிர் ஈந்தவர்கள் பற்றியும், விடுதலை நாள் கொண்டாட்டத்தை ஒரு வேள்வியாக நடத்துகின்ற பக்குவத்தையும் எட்டடினார்கள் இல்லை.
மாறாக இனம், மொழி, மதம், சாதி போன்றவற்றை ஏற்றிப் போற்றி உன்னதத்தை இழந்து வருகிறோம் என்று சொன்னவர்தாம் முதல் கல்வி அமைச்சர். இவரைத் தொடர்ந்து அலுமால் ஸ்ரீமாலி, ஹுமாயூன் கபீர், முகமது கரீம் சாக்லா, ஃபக்ருதீன் அலி அகமது, சித்தார்ந்த சங்கர் ரே, சையது நூல் ஹசன், ஷீலா கவுல், வி.பி.சிங் போன்ற பிரபலமான அறிஞர்கள் கல்வி அமைச்சர்களாக இருந்தும், இன்றளவும் நிலை மாறவே இல்லை என்பதே உண்மை.
- நன்றி: தினமணி (15.09.2022)
$$$