எனது நினைவுகள்

-கோவை அ.அய்யாமுத்து

சுய மரியாதையை தமிழருக்குக் கற்றுக் கொடுத்தவர் என்று தமிழகத்தில் ஒரு பெரியவரை வியந்தோதும் கூட்டம் இன்றும் உண்டு. அந்தப் பெரியவருக்கே சுய மரியாதை என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தின் குறிப்பிடத் தக்க அரசியலாளருமான திரு. கோவை அ.அய்யாமுத்து. அவரது சுயசரிதையான ‘எனது நினைவுகள்’ முக்கியமான சமகால அரசியல் வரலாறு நூல். இதோ அந்நூலில் இருந்து, அவரது நினைவுகள் இங்கே வரலாற்று ஆவணமாக...
கோவை அ.அய்யாமுத்து

பெரியார் நாயக்கருடன் சில மாதங்கள்

1929-ஆம் ஆண்டில் ஒருநாள் ஈ.வே.ராமசாமிப் பெரியார் என்னைத் தேடிக்கொண்டு புஞ்சை புளியம்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அவர் ஈரோட்டிலிருந்து  ‘குடியரசு’ எனும் வாரப்பத்திரிகை யொன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதனை 1926-ஆம் ஆண்டில் அவர் ஆரம்பித்தார். அதன் ஆரம்ப விழாவை நடத்தியவர் திருப்பாதிரிப்புலியூர் சிவமடத் தலைவராகிய ஞானியார் சுவாமிகள். ஈ.வே.ரா. அதன் ஆசிரியர்.

ஈரோடு, கருங்கல்பாளையம், வ.மு.தங்கப்பெருமாள் பிள்ளையெனும் பழுத்த வைஷ்ணவரும் எம்.ஏ.,பி.எல்., படித்தவருமான அவர் அதன் துணை ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். நாயக்கரின் பாஷையும் கொள்கையும் அவருக்குப் பிடிக்காததால் அவர் விலகிக் கொண்டார்.

 ‘குடியரசு’ பத்திரிகைக்கு நான் பிரதி வாரமும் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிற்சில சமயம் நான் எழுதாத கட்டுரைகளையும், என் பெயரைப் போட்டு நாயக்கர் பிரசுரித்து விடுவார். நாயக்கர் மேடைகளில் ஏறிச் சரமாரியாகப் பேசுவாரேயொழிய எழுதுவதில் அவர் வல்லவரல்ல. அவர் பேசுவதைப் பிறர் குறிப்பெடுத்து எழுதச் சொல்லி  ‘குடியரசில்’ பதிப்பதுதான் அவர் வேலையாக இருந்தது.  ‘குடியரசு’க்குச் சொந்தமான அச்சாபீஸ் ஈரோட்டில் நாயக்கருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் இருந்தது.

நாயக்கர் அங்குமிங்குமாகப் போய்க் கொண்டிருந்தபடியால் அவரால் பத்திரிகை காரியாலயத்தில் அமர்ந்திருந்து எதையும் கவனிக்க முடியவில்லை. பொன்னம்பலனார், குருசாமி, ஈஸ்வரன், சிதம்பரனார், லிங்கம், நடராசன், வெங்கடாசலம் போன்ற ‘கெளரவ’த் தொண்டர்களிடம் எதையும் நம்பி ஒப்புவிக்க அவர் மனம் இசையவில்லை. அவரது சாதிக்காரரான கரிவரதசாமி நாயக்கர் என்பவரிடம்  ‘குடியரசு’ காரியாலயப் பொறுப்பையும் பணப் பொறுப்பையும் ஒப்புவித்திருந்தார்.

நாயக்கர்  ‘குடியரசு’ காரியாலயத்தின் கணக்கு வழக்கு ஒன்றையும் கவனித்துப் பார்க்க மாட்டார். வாரம் எட்டாயிரம் பிரதிகள் அச்சாகிக் கொண்டிருந்தது. நாயக்கர் ஒரு குத்து மதிப்பாக மாதம் எவ்வளவு ஆதாயம் வரும் என்பதை மனதில் கணக்கிட்டுக் கொண்டு கரிவரதசாமியை மாதாமாதம் பணம் கேட்பார். அவரும் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னை நாயக்கர் தேடிவந்த சமயம் அந்த வருவாய் நின்று போயிருந்தது.

 ‘குடியரசு’ பத்திரிகை நஷ்டத்தில் வேலை செய்கிறது. அதை என்னால் நீடித்து நடத்த முடியாது. நீங்கள் வந்து அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அதைத் தொடர்ந்து நடத்துவேன். இல்லையானால், அடுத்த மாசமே அதை நிறுத்திவிடப் போகிறேன். என்ன சொல்கிறீர்கள்? என்றொரு வெடிகுண்டை நாயக்கர் வீசினார். அது என்னைத் தூக்கி வாரிப் போட்டது.….

….. எனது கட்டுரைகள் வாரந்தோறும்  ‘குடியரசு’ (ஈ.வே.ரா நடத்தியது) பத்திரிகையில் பிரசுரமாயிற்று. பின்னர் அதனைப் புத்தக ரூபத்தில் காஞ்சிபுரம் குமரன் அச்சகத்தார் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து  ‘குடியரசு’ பதிப்பகம் பல பதிப்புகள் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டுப் பிரதியொன்று நான்கணாவுக்கு விற்றுக் கொண்டிருந்தது. எனவே நாயக்கர் (ஈ.வே.ராமசாமி நாயக்கர்) என்னைத் தேடி வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

“கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நான் தீர யோசித்துப் பதில் சொல்கிறேன்” என்றேன்.

“யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் வராவிட்டால் நான் ‘குடியரசு’ப் பதிப்பகத்தை இழுத்துச் சாத்திவிடுவேன். இரண்டிலொன்று பதில் இப்போது சொல்லியாக வேண்டும்” என்றார். நாயக்கருக்கு என் மீது எத்தனை பிரியம்! எத்தனை நம்பிக்கை!!

“சரி வருகிறேன்! ஆனால் ஒரு நிபந்தனை. ‘குடியரசு’ அச்சகத்தை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றிவிட நீங்கள் சம்மதிக்க வேண்டும். குடியரசின் நிர்வாகத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. உங்களுக்கு மாதம் ஐநூறு ரூபாய் கொடுத்து வருவேன். நீங்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே பிரசுரிப்பேன். நான் மாதம் என் செலவுக்கு அறுபது ரூபாய்க்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு இஷ்டமான பேர்களை நான் சேர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு என் இஷ்டம்போல் பணம் கொடுப்பேன். அதையெல்லாம் நீங்கள் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. சென்னைக்கு அச்சாபீசை மாற்றுவதற்கும் அங்கு சென்றபின் ஏற்படும் உடனடிச் செலவுகட்கும் நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் என்னிடம் முன்பணமாக மொத்தமாகக் கொடுத்துவிட வேண்டும். சம்மதமா?” என்றேன்.

நாயக்கர் திருதிருவென்று விழித்தார். சென்னைக்குச் சென்றால் தனது கண்காணிப்பே இல்லாது போய்விடுமே என்று மலைத்தார்.

“உங்கள் கண்காணிப்புக் கூடாதென்பதற்காகத் தான் சென்னைக்கு மாற்ற வேண்டுமென்று சொல்கிறேன்” என்றேன் நான் அழுத்தம் திருத்தமாக.

“சரி” என்று சம்மதம் கூறிவிட்டு ஈரோடு சென்றார். அவருடன் யார் யார் வந்திருந்தார்களென்று எனக்கு இப்போது நினைவில் இல்லை.

சர்க்கா சங்கத்திலிருந்து ஆறுமாத காலம் ரஜா எடுத்துக்கொண்டு நானும் என் மனைவியும் புஞ்சை புளியம்பட்டியிலிருந்து ஈரோடு சென்றோம்.

 ‘குடியரசு’  பத்திரிகைக் காரியாலயம் சென்னைக்கு மாற்றப்படுவதாகவும், அதன் முழுப் பொறுப்பும் கோவை அ.அய்யாமுத்து ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் எனவே இரண்டு வாரங்கட்கு பத்திரிகை வெளிவராதென்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டு மெஷினரி சாமான்களையெல்லாம் கட்டிப் பந்தோபஸ்தாக ரயிலேற்றிவிட்டு நானும் என் மனைவியும் சென்னைக்குக் கிளம்பினோம்.

சென்னை, பெரும்பூரில் இருந்த எனது பாக்தாத் தோழன் (இளம் வயதில் அய்யாமுத்து ஈராக் பாக்தாதில் இருந்தார்) டி.வி.சிவக்கொழுந்து விட்டில் போய்த் தங்கினேன். சென்னை காஸ்மாபலிடன் கிளபுக்கு அடுத்தாற்போல் வடபுறம் இப்போது ‘பிளாசா’ தியேட்டர் உள்ள காம்பவுண்டில் ஜஸ்டிஸ் கட்சியின் பிரதான காரியாலயம் இருந்தது. அந்த சர் தியாகராயர் மெமோரியல் பில்டிங்ஸ் கட்டடத்தின் ஒரு புறம் ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கில தினசரி ஏடு சர் ஏ.ராமசாமி முதலியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

கட்டடத்தின் மறுபுறம்  ‘திராவிடன்’ எனும் தமிழ் தினசரி ஜே.எஸ்.கண்ணப்பரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. இதே காம்பவுண்டின் மேல்புறம் சுமார் ஐம்பதடி நீளத்தில் ஒரு குதிரை லாயம் இருந்தது. அதில்  ‘குடியரசு’ அச்சகத்தை ஸ்தாபித்துக் கொள்ள திரு. ராமசாமி முதலியார் சம்மதம் தந்தார். லாயத்தின் முன்புறத்தில் மூன்றடி உயரச் சுவர் எழுப்பி, அதன் மீது டைமண்ட் வலையடித்துக் கதவு நிலைகள் அமைத்துத் தளம் போட்டு, அச்சு இயந்திரங்களை மாட்டி, பழைய டைப்புகளையெல்லாம் நெல்சன் கம்பெனியில் கொடுத்துப் புதுப்பித்துத் தேவையான தளவாடங்களும் வாங்கி, அச்சகத்தை மாற்றுவதற்குச் சம்பிரதாய உத்தரவுகள் கிடைத்ததும்  ‘குடியரசு’ சென்னைப் பதிப்பு வெளிவரச் செய்தேன்.

கண்ணப்பர் எனக்குப் பேருதவியாக இருந்தார். கோமளேஸ்வரன்பேட்டையில் ஒரு வீட்டின் முன் பாகத்தில் பாதியை மாதம் பதினைந்து ரூபாய் குடிக்கூலிக்குப் பிடித்துக் குடியேறினேன். ஈரோடு கரிவரதசாமியின் மகன் கிருஷ்ணசாமியை காஷியராக நியமித்தேன். உடுமலை வி.ராமசாமி, உதவி ஆசிரியர். அவருக்கு மாதம் நாற்பத்தைந்து ரூபாய் சம்பளம். நாஞ்சில்நாடு பண்டிதர் முத்துச்சாமிப் பிள்ளையை ஆங்கில ஏடுகளையும் புத்தகங்களையும் மொழிபெயர்ப்பாளராகச் சேர்த்துக் கொண்டேன். அவருக்கு என்ன சம்பளம் வேண்டுமென்று கேட்டேன். இரண்டு விரல்களைக் காட்டினார். அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். மாதம் இருபது ரூபாயா என்றேன். இல்லை! தினம் இரண்டு ரூபாய் வேண்டுமென்றார். சரியென்று வைத்துக் கொண்டேன். உள்ளூரில் விளம்பரங்கள் சேகரிக்க ஒரு ஆளை நியமித்தேன். ப்ரூஃப் ரீடர், ஃபோர்மேன், கம்பாசிடர்கள், காரியாலயப் பையன், மேஜை நாற்காலி, மின் விளக்குகள், மின் விசிறிகள் ஏக தடபுடல்! நாயக்கரின் வயிறு நன்றாய் எரிந்திருக்கும்.

 ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையிடமிருந்து விளம்பர பாக்கி நூற்று நாற்பது ரூபாய் வர வேண்டியிருந்தது. பாக்கிப் பணம் தரும் வரையில் விளம்பரம் போடுவதை நிறுத்தி வைப்பதாகக் கடிதம் எழுதினேன். இன்று கோடி கோடியாய்ப் பணத்தில் புரண்ட ஜெமினி வாசனால் அன்று அத்தொகையைக் கேட்டவுடன் கொடுக்க முடியாத ஒரு நிலை. நாற்பது ரூபாயை – அவருடைய தம்பியென்று நினைக்கிறேன் – ஒருவர் கொண்டு வந்து செலுத்தி விளம்பரத்தை நிறுத்தாது போடுமாறு கேட்டுக் கொண்டார்.

பத்திரிகை வெளியான அடுத்த மாதம் நாயக்கருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அவருடைய அண்ணன் திரு ஈ.வே.கிருஷ்ணசாமி நாயக்கர் தம் மகன் சம்பத்துக்குத் திருப்பதியில் முடியெடுக்கப் போவதாகவும், அதற்கு ரூபாய் முன்னூறு அனுப்பித் தரும்படியும் நாயக்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நூறு ரூபாய் அனுப்பித் தொலையென்றார் நாயக்கர். அனுப்பி வைத்தேன்.

அதன் பின்னர் மாதா மாதம் ஐநூறு ரூபாய் நாயக்கருக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தேன். சென்னை நகரில்  ‘குடியரசு’ விற்பனை உயர்ந்தது. வெளியூர் ஆர்டர்களும் பெருகிற்று. மலாய், சிங்கப்பூர், சிலோன் முதலிய நாடுகளிலிருந்து நாடோறும் மணியார்டர்கள் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தது. ஈரோட்டில் எட்டாயிரம் பிரதிகள் அச்சாகியிருந்த  ‘குடியரசு’ சென்னைக்கு மாற்றிய நான்கே மாதங்களில் பதிமூன்றாயிரமாக உயர்ந்தது.

கோமளேஸ்வரன்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டுக்கும் குடியரசு காரியாலயத்துக்கும் சுமார் ஒரு மைல் தூரமிருந்தது. காரியாலயத்துக்கும் வீட்டுக்கும் நடந்து சென்றேன். பகல் சாப்பாடு வீட்டிலிருந்து ஒரு டிபன் காரியரில் காரியாலயப் பையன் கொண்டு வந்தான். கண்ணப்பருக்கு ஓட்டல் சாப்பாடு வந்தது. இருவரும் ஒன்றாக உட்கார்ந்து இரண்டு சாப்பாட்டையும் கலந்து சாப்பிட்டோம்.

நாயக்கர் சென்னைக்கு வந்த போதெல்லாம் யாராவது சாப்பாட்டிற்கு அழைத்தால் அங்கு போவார். இல்லையேல் எங்களுக்கு வரும் சாப்பாட்டில் கலந்து கொள்வார். ஒரு நாள் பகல்  ‘குடியரசு’  காரியாலயத்தில் கண்ணப்பரும், நாயக்கரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். நான் ஏதோ சில அவசரத் தபால்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நாயக்கர் வந்துள்ள செய்தியை ஆபீஸ் பையன் மூலமாகத் தெரிந்து கொண்ட என் மனைவி, எப்போதையும் விடக் கொஞ்சம் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருந்தாள்.

“அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்” என்று கண்ணப்பரிடம் நாயக்கர் கூறியது என் காதில் விழுந்தது. அப்படியென்றால்…………..?

எனது சிந்தனை சிறகடித்துப் பறந்தது. என் மேஜை மீதிருந்த சாவிக் கொத்தையெடுத்து நாயக்கர் மீது வீசியெறிந்துவிட்டு, நில்லாமல் சொல்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்த சாமான்களையெல்லாம் ‘பாக்’ செய்து கொண்டிருந்தேன். நாயக்கரும் கண்ணப்பரும் வந்தார்கள்.

“நான் என்ன சொன்னேன்?” விளையாட்டாக ஏதோ சொன்னதற்கு…..” என்றார் நாயக்கர்.

 “உங்கள்  ‘குடியரசு’ப் பணத்தில் கறியும், மீனும், முட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. புஞ்சைப் புளியம்பட்டிக்குச் சென்று எப்போதும் போல் கம்பங்கூழ் குடிக்கப் போகிறேன்” என்றேன்.

ஊருக்குத் திரும்ப வழிச் செலவுக்குக் கண்ணப்பரிடம் இருபத்தைந்து ரூபாய் கடன் கேட்டு வாங்கினேன். சென்னை செண்ட்ரல் ரயில்வே நிலையத்துக்குக் கோவை சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரைக் கூட்டிக் கொண்டு நாயக்கர் ஓடோடியும் வந்தார்.

எனது ‘சுயமரியாதை’ உணர்ச்சி அவருடன் சேர்ந்து உழைக்க இடந்தரவில்லை. அவருக்குக் ‘குட்பை’ சொல்லிவிட்டு ரயிலேறினேன். பாவம் நாயக்கர்! வாய்க்கொழுப்பு சீலையில் வடிந்த கதைக்கொப்பத் தமது குடியரசுப் பதிப்பகத்தை மீண்டும் ஈரோட்டுக்கு சுமந்து சென்றார்.

  • நன்றி:  எனது நினைவலைகள்– கோவை அ.அய்யாமுத்து. பக்கம் 251 முதல் 260.
  • காண்க: கோவை அய்யாமுத்து (தமிழ் விக்கி)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s