இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -4

-சுவாமி சுத்திதானந்தர்

ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டை, நாகரிகத்தை ஒற்றை  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது தர்மம். தர்மம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தர்மம் என்ற வாழ்வியல் விஞ்ஞானமே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கிறது. நாம் இதுவரை இந்தக் கட்டுரையில் பேசிய முக்கிய அம்சங்களும்  ‘தர்மம்’  என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும்.

-4-

பாரதத்தின் பலவண்ணப் பண்பாட்டின் ரகசியம்

இந்திய சமுதாயத்தில் பன்முகத் தன்மையும் பல்வேறு வேறுபாடுகளும் இருப்பதைப் பார்க்கிறோம். அதெல்லாம், இறைவனை பல்வேறு பெயர்களில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு வழிமுறைகளில் மூலம் அனுபவ சாத்தியமாக்கலாம் என்பதன் இயல்பான, தன்னிச்சையான சமூக வெளிப்பாடாகும். இந்திய அல்லது ஹிந்து ஆன்மாவின் தன்னிச்சையான வெளிப்பாடுகள் அவை. இந்த இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு ஹிந்துவும், தாய்ப்பாலுடன் சேர்த்தே இந்தப் புரிதலைப் பருகுகிறார். ஒவ்வொரு ஹிந்துவின், இந்தியரின் நாடி நரம்புகளில் எல்லாம் இது பாய்ந்து ஓடுகிறது. உண்மை பல வழிகளின் மூலமாக நம் முன்பு வருகிறது. நாம் அதை பல்வேறு வடிவங்களில் அணுகலாம் என்ற புரிதல் தான் இந்தியாவை இந்தியாவாக வைத்திருக்கிறது.  ‘உண்மை ஒன்றுதான், அதை மகான்கள் பல்வேறு விதமாக கூறுகிறார்கள்’ என்ற ஹிந்துக்களின் மையக்கருத்தை பற்றி சுவாமிஜி கூறுகிறார்:

“இந்த சில வார்த்தைகளில் இந்தியாவின் வரலாற்றை நீங்கள் முழுமையாகப் படித்து விடலாம். அதன் முழு வரலாற்றிலும் இந்த மையக்கருத்து வெவ்வேறு மொழிகளில் அளவற்ற ஆற்றலுடன் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. இந்த தேசத்தின் ரத்தத்தில், நாடி நரம்புகளில், வாழ்க்கையுடன் ஒன்றி விடுமளவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த தேசத்தைக் கட்டமைக்கும் விஷயமாக இது மாறிவிட்டது. இதனால் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட அற்புதமான தேசமாக இது மாறி உள்ளது. இந்த புராதன அன்னை தேசம் உலகில் உள்ள பல்வேறு மதங்களையும் அதன் உட்பிரிவுகளையும் வரவேற்கும் உரிமை பெற்றதாக ஆகியுள்ளது.”

இது வேறொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை அது ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் சாசனத்தால் வந்ததா? நாம் பல்வேறுபட்டவர்களாக இருப்பதால் அரசியல் சாசனம் பன்முகத் தன்மையை அனுமதிக்கிறதா? இந்த அரசியல் அமைப்பு எப்போது உருவானது?

உலகில் பல்வேறு நாடுகளும் கலாச்சாரங்களும் தோன்றுவதற்கு பற்பல சதாப்தங்களுக்கு முன்னரே இந்தியா என்ற தேசம் ஒரு பண்பாட்டு அடையாளமாக அறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியா அல்லது ஹிந்து சமுதாயம் வெவ்வேறு விதமான இறை வழிபாட்டு முறைகளையும் பழக்க வழக்கங்களையும் கொண்டவர்களை வரவேற்று தங்கள் சமுதாயத்தில் அரவணைக்கக் கூடியதாகவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணமாக, ஆணிவேராக, இருப்பது வேதங்கள் அல்லது ஹிந்து சிந்தனைகளில் இந்த உலகம் தழுவிய பார்வைதான். மேற்கூறிய அம்சங்கள்தான் இந்தியப் பண்பாட்டின் மற்றும் நாகரிகத்தை கட்டமைக்கும் தூண்களாக உள்ளன. இந்திய சமுதாயத்தைப் பற்றிய இந்த விஷயத்தை இன்றுள்ள இளம் தலைமுறையினரிடம் நாம் முன்வைத்துள்ளோமா? எவ்வளவு சீக்கிரம் இதைச் செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

இதிலிருந்து வந்ததே ஹிந்துக்களின் மற்றொரு முக்கியமான விஷயம். அது இதுதான்: உண்மை ஒன்றுதான் அதை அணுக பல்வேறு வழிகள் உள்ளன என்று ஹிந்துக்கள் ஏற்றுக் கொண்டதனால், யாரும் அன்னியர் அல்ல என்று ஹிந்து ரிஷி கூறுகிறார். அவர் சொல்கிறார்:  ‘வசுதைவ குடும்பகம் – உலகமே ஒரு குடும்பம்’. இதை மகா உபநிஷதம் இவ்வாறு கூறுகிறது:

‘இது என்னுடையது, இது அவனுடையது, என்பார் குறுமதியார், 
உலகமே ஒரு குடும்பம் என்பான் நிறைமதியான்.’

பரந்த மனப்பான்மை கொண்ட மனிதனுக்கு, மகத்தான மனிதனுக்கு அல்லது மகாத்மாவுக்கு உலகமே ஒரு குடும்பம். பரந்த மனம் கொண்ட ஹிந்து இனம், இந்திய சமுதாயம் எல்லோரையும் மதிக்கிறது, யாரையும் மதம் மாற்றுவதில்லை, யாரையும் அச்சுறுத்துவதில்லை, வேற்று நம்பிக்கையைச் சார்ந்தவர்களை வென்று வாகை சூடியதில்லை. இதெல்லாம் ஆப்ரஹாமிய மதங்களின் தனித்த, குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கின்றன. இவை எதையும் ஹிந்து சமூகம் செய்ததில்லை. ஆபிரகாமிய மதங்களின் மீது எந்தவிதமான கெட்ட கருத்துக்களையும் சொல்லாமல் அவற்றை மதித்து, இதை சுட்டிக் காட்டுகிறோம்.

எப்படிச் சொன்னாலும் உண்மை இதுதான்: ஆபிரகாமிய மதங்களின் குறுகிய, வெறித்தனமான மதப்பற்று மற்றும் வாழ்வியல் கண்ணோட்டத்தால் கொடூரமான வெறியாட்டங்களும் ரத்த ஆறுகளும் ஓடியதை கடந்த கால வரலாறு சாட்சியம் கூறுகிறது. அது இன்றும் தொடர்வதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலக நாடுகள் அனைத்தும் சகோதர மனப்பான்மையுடன் ஒரே மேடையில் வர அது உருவாக்கப்பட்டது. அது ஒரு மகத்தான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும், உலகில் தாங்கள் பின்பற்றுவது மட்டுமே சரியானது, மற்றவர்கள் எதிரிகள், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதும் மதங்களும் இனங்களும் இருக்கும் வரையில் மேற்கண்ட முயற்சி வெற்றி பெறுமா?

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வரலாற்றில் நரையேறிய தொன்மையான காலத்திலேயே, வேத ரிஷிகள் இந்த வசுதா – ஒட்டுமொத்த பூவுலகை – ஒரு குடும்பம் என்றார்கள். அது மட்டுமல்ல, ஹிந்துக்கள் மட்டுமே இதன்படி வாழ்ந்தார்கள். மனித வரலாற்றில் இதுபோன்ற வேறு ஒரு முன்னுதாரணம் உண்டா? சுவாமிஜி கூறுகிறார்:

“நான் சென்ற ஒவ்வொரு நாட்டிலும் மிகப் பெரிய அளவில் மதக் கொடூரங்கள் நடந்துள்ளன. இந்த உலகில் கொஞ்சமேனும் சகிப்புத்தன்மை இருந்தால், மத சிந்தனைகளில் கொஞ்சம் பரிவு இருக்கும் என்றால் அது ஆரியர்களின்  வேதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களின்  நாட்டில்தான் நடைமுறையில் உள்ளது. வேறு எங்கும் இல்லை. மற்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள முகமதியர்களிடம் அல்லது வேறு மதத்தைச் சார்ந்த மக்களிடம் கோயில் கட்ட வேண்டுமென கேட்டுப் பாருங்கள், அவர்கள் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்று. அவர்கள் கோயில் கட்ட உதவி செய்வதற்கு மாறாக கோயிலை உடைத்தெறிவார்கள், முடியுமானால் உங்களையும் ஒழித்து விடுவார்கள். எனவே இந்த உலகம் ஒரு மகத்தான பாடத்தை, மிகவும் தேவையான ஒரு பாடத்தை இந்தியாவிடம் (ஹிந்துக்களிடமிருந்து) கற்றுக் கொள்ள வேண்டுமானால் அது சகிப்புத்தன்மை மட்டுமல்ல பரிவு என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.”

“.... எனவே, நம் தாய்நாட்டில் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான உண்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, அது மீண்டும் இந்தியாவிலிருந்து மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட வேண்டும். ஏன்? ஏனெனில் அது நம்முடைய சாஸ்திரங்களில் உள்ளது என்பது மட்டுமல்ல, அது நம்முடைய தேசிய இலக்கியங்களிலும் தேசிய வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு, இங்கு மட்டுமே அது ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. கண் உள்ள எவரும் அது இங்கு மட்டுமே பயிலப்படுவதை பார்ப்பார்கள்.”'

இந்த (வசுதைவ குடும்பகம்) அறிவிப்பு சமுதாயத்தில் ஒரு மேம்போக்கான சமரசத்திற்காகச் செய்யப்பட்ட அறிவிப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும் பின்னே இருப்பது அதே தெய்வீகம் என்பதை அனுபவத்தில் உணர்ந்த பின்னரே  நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றுள்ள உலகம் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வது இருக்கட்டும், புரிந்து கொள்ளவாவது முடியுமா? எனவேதான் மீண்டும் நாம் கேட்கிறோம், இன்றைய மனிதன் முன்னேறியவனா? சுவாமிஜி கூறுகிறார்:  ‘கல்வியும் நாகரிகமும் இந்த உலகிற்கு இனிமேல் தான் வர வேண்டும். நாகரிகம் என்பது எங்கும் இனிமேல் தான் தொடங்க வேண்டும்.’

பாரதம், ஹிந்து, தர்மம்

இவைதான் இந்திய கலாச்சாரத்தை அல்லது பாரதிய சமஸ்கிருதியைக் கட்டமைக்கும் தூண்கள். நாம் இந்திய சமுதாயம் அல்லது  ‘பாரதிய சமாஜம்’ என்று கூறும்போது ஹிந்துக்களே – அதன் அடிப்படை, வேதச் சிந்தனைகளே –  அதன் அடித்தளம்.

ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டை, நாகரிகத்தை ஒற்றை  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது தர்மம். தர்மம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தர்மம் என்ற வாழ்வியல் விஞ்ஞானமே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கிறது. நாம் இதுவரை இந்தக் கட்டுரையில் பேசிய முக்கிய அம்சங்களும்  ‘தர்மம்’  என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும்.

தர்மம் என்பது நம்பிக்கை முறைமை அல்ல. நுட்பமாகச் சொல்லப்போனால்,  அதை  ‘மதம்’ என்று மொழிபெயர்க்க முடியாது. செமிட்டிக் நம்பிக்கை முறைமை தான்  ‘மதம்’.  ஹிந்து அல்லது வேத முறைமையோ  ‘தர்மம்’. இது (மேற்கத்திய, செமிட்டிக் சிந்தனையின்படி பார்த்தால்) மதம் அல்ல. இது வாழ்க்கை அறிவியல். இந்த அம்சங்கள்தான் சிந்திக்க வேண்டியவை. இது பற்றி மேலும் கூறுவது இந்தக் கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகிவிடும்.

(தொடர்கிறது)

  • நன்றி: பிரபுத்த பாரதா
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s