விவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை

-சுவாமி விமூர்த்தானந்தர்

தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜின் சுவாமி விவேகானந்தர் குறித்த நான்காவது கட்டுரை இது…

மேன்மக்கள் அனைவருமே பெண்மையை மதிப்பவர்கள். பெண்மையை மதிப்பவர்கள் அனைவரும் மேன்மக்களே.

மேன்மக்கள் அன்பு காட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக,  பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் முன்னேறுவதையே விரும்புவார்கள்.

உண்மையிலேயே பெண்மைக்கு மரியாதை செய்தல் என்பது என்ன?

பெண்மைக்கு ஆதாரமாய் உள்ள தெய்வீக சக்தியைப் புரிந்துகொண்டு அதை வணங்குதலே அல்லவா அதற்கு சரியான மரியாதை?

இதோ இந்த சம்பவம், அதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இந்துமதப் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலகட்டம்.

எந்நேரமும் அவரைச் சுற்றி ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஆண்,  பெண் இளைஞர் கூட்டம் கூடியிருக்கும்.

அவர்களுடைய ஆன்மிக ஆற்றலை உணர்த்தவே சமயத்தில் சுவாமிஜி அவர்களுடன் ஒரு தாயின் அன்போடும் இருப்பார்.சமயத்தில் தந்தையின் கண்டிப்போடும், சில நேரங்களில் நண்பனின் குதூகலத்தோடும் அந்த வெளிநாட்டுச் சீடர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார்.

சுவாமிஜி சில நேரங்களில் தம் சீடர்களுடன் சேர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நாடிச் செல்லத் தொடங்குவார்.

அன்றும் அதேபோல சுவாமிஜி தனது சிஷ்யைகளான சகோதரி கிறிஸ்டைன் மற்றும் வேறு சிலருடன் ஒரு மலை மீது ஏறிக்கொண்டிருந்தார்.

சுற்றிலும் லேசாக பனி படர்ந்திருந்தது. சுவாமிஜி செங்குத்தான பாறைகளைத் தாண்டி மின்னல் வேகத்தில் மலையுச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய சிஷ்யைகளுக்கு மலையேறுவது அவ்வளவு எளிதாக இல்லை.

மலையின் ஈரத்தில் அவர்களின் பாதங்கள் வழுக்கின. அங்கிருந்து விழுந்தால் அதோகதி தான். ஆதலால் அவர்கள் தைரியமில்லாமல், மிகவும் சிரமப்பட்டு மலையேறினார்கள்.

சுவாமிஜி இவற்றையெல்லாம் பார்த்தாலும் அந்தப் பெண்களுக்கு அவர் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.

அது அந்த பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. சுவாமிஜி என்ன ஈவிரக்கம் அற்றவரா?

மலையுச்சியை அடைந்தவுடன் அந்த சிஷ்யைகள் தங்கள் மனத்தாங்கலை குருவிடம் வெளியிட்டார்கள்.

பெண்கள் பலவீனர்களா?

பெண்களைப் பொதுவாக பலவீனமானவர்கள் என்று ஆண்கள் சொல்கிறார்கள்.

பெண்களை “Better Half “ என்று கூறுவதெல்லாம் “Better” மக்கள் மட்டுமே.

ஆனால் சுவாமி விவேகானந்தர் பெண்களின் பலத்தையும், அதனால் அவர்கள் அடையும் சுதந்திரம் பற்றியும் கூறுவதைப் பாருங்கள்.

தமது குழந்தைகளின் மன வருத்தத்தை உணர்ந்துகொண்ட ஒரு தந்தையைப் போல சுவாமி விவேகானந்தர் அவர்களிடம், “குழந்தைகளே நீங்கள் வயதானவர்களாகவோ, பலவீனர்களாகவோ, ஆதரவற்றவர்களாகவோ இருந்தால் நான் உங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும். ஆனால், யாருடைய உதவியும் இல்லாமலேயே உங்களால் இந்தக் கடினமான பாதையில் தாண்டிக் குதித்து ஏற முடியும். அதற்கான வல்லமை உங்களிடம் உள்ளது.

“என்னைப் போன்றே நீங்களும் பலமுள்ளவர்கள். பின் எதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டும்? நீங்கள் பெண்கள் என்பதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டுமா, என்ன?”

ஆண்கள், பெண்களுக்கு உதவ முற்படுவதெல்லாம், ஆசைகளை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் பெண்களிடம் காட்டும் வெற்று வீரம் தான் (Chivalry) என்பது உங்களுக்கு தெரியாதா?” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் வித்தியாசமான இந்த உபதேசத்தைக் கேட்ட அந்தப் பெண்களுக்கு சில உண்மைகள் தெளிவாயின.

பொதுவாக, பெண்களுக்குப் பரிந்து பேசுபவர்கள், பெண்களை பலவீனர்கள் என்றே சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பெண்களின் உடலையோ மனதையோ மட்டும் தான் காண்கிறார்கள்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் பெண்களிடம் மட்டுமல்ல, அனைத்து மக்களிடமும் உடல்,  உள்ளம் பலங்களோடு ஆன்ம பலத்தையும் கண்டவர். அவர் அன்று அந்தப் பெண்களுக்கு ஆன்ம ஆற்றலை உணர்த்தவே, மலையில் உதவவில்லை போலும்!

ஒரு குழந்தை தத்தித் தத்தி நடந்து வருகிறது. நடை பழகட்டும் என்று நல்ல தாய் ஒருத்தி அதனை அன்போடு, அதே சமயம் கவனத்தோடு கண்காணிப்பாள். குழந்தை நடந்தால் கால் முறித்துக்கொள்ளும் என்று தன் இடுப்பிலேயே வைத்துக்கொண்டு குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்பவள் நடுத்தர,  சாதாரண பெண் ஆவாள்.

ஆண்மை என்பது என்ன?

Manliness எனப்படும் ஆண்மைப் பண்புகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது என்பது சுவாமி விவேகானந்தரின் முழக்கம். ஆண்மை என்பது வீரம் மாத்திரமல்ல; பொறுமை, அன்பு,  தியாகம்,  சேவை,  செயல்வேகம், சிந்தனைத்திறன் போன்றவையும் ஆண்மைப் பண்புகளாகும்.

வள்ளுவர் “பிறன்மனை நோக்காப் பேராண்மை” என்று பகன்றார். இங்கு அவர் ஆண்மை என்பதை ஆண்களின் கற்பு என்று குறிப்பிடுகிறார். இந்த லட்சியத்தின் அடிப்படையில் தான் பாரதியார் “கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்” என்றார்.

கற்பு என்பது ஆண்மைதானே?

நல்ல சூழ்நிலையில் பெண்களின் கற்பு மலர் போல் இருந்து நல்லவர்களின் மனங்களை மேம்படுத்துகிறது. அதேசமயத்தில் சூழ்நிலை பாதகமாகும் போது பெண்களின் கற்பு சுட்டெரிக்கும் நெருப்பாகித் தீயவர்களைச் சுட்டெரிக்கிறது.

அதி பராக்கிரமசாலியாக இருந்தும் ராவணன் சீதையை நெருங்க முடியாததற்கு சீதையின் கற்பு தான் காரணம்.

ராவணனிடமிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும் திறமை; தேவைப்பட்டால் ராவணணையே சபிக்கக்கூடிய சக்தி; இவை இரண்டும் சீதையிடம் இருந்தன. ஆனாலும் ஸ்ரீராமன் தான் தன்னை வந்து மீட்க வேண்டும். தன்னை மீட்ட பெருமை ராமருக்கே கிடைக்க வேண்டும் என்ற சங்கல்பமும் சீதையிடம் இருந்தன. தாய்மையில் செரிந்திருந்த சீதை, ராவணன் காட்டிய சிற்றியல்புகளையும் பெருந்தன்மையுடம் பொருத்திருந்தாள் – இவை சீதையின் சிறப்பியல்புகளில் சில.

இது போன்ற கற்பெனும் சக்தியை எல்லா பெண்களும் பெறவேண்டும் என்பதற்காக ‘இந்தியப் பெண்களின் லட்சியம் சீதை’ என்றும் சுவாமி விவேகானந்தர் கூறினார்.

ஆண் ஆதிக்கமும் பெண் ஆதிக்கமும்

பெண்களை ஆளும் ஆதிக்கங்கள் அநேகம் உள்ளன. கணவன்,  மனைவி போன்ற உறவில் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்கிறார்கள். மாமியார்- மருமகள் போன்ற உறவில் பெண்களைப் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். (அதேபோல ஆண்களை அடக்கி ஆளும் பெண்ணாதிக்கமும் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது).

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் உடல்,  உள்ளத்தின் பலவீனங்களுக்குத் தன்னைத் தானே அடிமையாக்கிக் கொள்கிறாளே, இந்த ஆதிக்கத்தைத் தான் சுவாமி விவேகானந்தர் முதலில் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த ஆதிக்கங்களிலிருந்து பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் விடுபட்டு ஆன்ம சுதந்திரத்தில் திளைக்க வேண்டும் என்பதே சுவாமி விவேகானந்தர் காட்டும் விடுதலை வாழ்க்கை ஆகும்.

ஆம்! ஒவ்வொருவரும் ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதை வெளிப்படுத்தி,  தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டும். இதில் ஆண் என்ன? பெண் என்ன? இருவருக்கும் இதில் சம வாய்ப்பும், உரிமையும் உள்ளன.

அன்று அமெரிக்கப் பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லாப் பெண்களுக்கும்  ‘பெண் விடுதலை’  பற்றிய தெளிவான கருத்துக்களை சுவாமி விவேகானந்தர் கற்றுக் கொடுத்தார்.

மகாகவி பாரதியார் ‘மாதர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அபிப்ராயம்’ என்ற கட்டுரையை 1920-இல் எழுதினார். அதில் அவர் பெண்கள் நிலை, பெண் விடுதலை பற்றிய தமது கருத்துக்களை தமக்கே உரிய பாணியில் ஆராய்ந்திருக்கிறார். கடைசியில் அவர் அந்தக் கட்டுரையை கீழ்க்கண்டவாறு முடித்தது குறிப்பிடத்தக்கது:

”…… இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும்படி தூண்டிய பேரன்பையும் கைக்கொள்வோமாயின், பாரத தேசத்து ஸ்திரீகளுக்கு பரிபூர்ணமான விடுதலை கிடைத்துவிடும்! அதனின்றும் பூ மண்டலத்துக்கு நன்மை உண்டாகும்”.

  $$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s