ஒரு கோடி ரூபாய்

-மகாகவி பாரதி

நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்றால் மக்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று இந்திய மக்கள் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளி வழங்கினர். ஆனால், அந்தத் தொகையை காங்கிரஸ் என்ன செய்கிறது? என்று இச்செய்தியில் கேட்கிறார் மகாகவி பாரதி. “ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார்...

11 ஆகஸ்டு 1921                          துன்மதி ஆடி 27

ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்ராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்தியா தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஸ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். 

ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள். அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலா, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளேயோ, ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமாயின், அந்தத் தொகை ஏற்கெனவே செலவு தொடங்கியிருக்க வேண்டுமன்றோ?

“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்தான் ஸ்வராஜ்யம் வரும்” என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கு ஒரு பொருள் தான் உண்டு. அதாவது, அந்தப் பணம் ப்ரசாரத் தொழிலிலே செலவிடப்பட வேண்டும். நாமோ பலாத்கார முறையை அனுஸரிக்கவில்லை. எனவே, அந்தக் கோடி ரூபாயை ஸைந்யச் செலவுக்கு உபயோகப்படுத்துவதென்ற ஆலோசனைக்கு இடமில்லை. எனவே, ப்ரசாரத் தொழில் ஒன்றுதான் கதி. மேற்படி தொகையில் ஒரு பகுதிக்கு ராட்டினங்கள் வாங்கி ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதினால் அங்ஙனம் தாராளமாகச் செய்யலாம். வேறு எத்தனை வகைகளில் செலவு செய்ய விரும்பினாலும் செய்யலாம். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமான மூலவழி ப்ரசாரந்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஏற்கெனவே, ப்ரசாரத்தில் இத்தொகையை எங்ஙனம் செலவு செய்யலாமென்பதைக் குறித்துச் சில வழிகள் இப்பத்திரிகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜில்லாவுக்கு 4 பேருக்குக் குறையாமல் மஹா நிபுணராக ஸ்வதேசீய ப்ரசாரகர் ஏற்பட வேண்டும். 

ஆனால், ப்ரசாரத் தொழில் இதுவரை தொடக்கமுறாமல் இருப்பதன் காரணம் யாதென்பது துலங்கவில்லை. 

இந்த விஷயத்தைக் குறித்துச் சென்னை மாகாணத்தில் வசூல் தொழிலை முக்கியஸ்தராக இருந்து நடத்திய என் நண்பர் சேலம் ஸ்ரீ ராஜகோபாலாசார்யரும் பிறரும் ஸ்ரீமான் மஹாத்மா காந்திக் கெழுதி வேண்டியன செய்வார்களென்று நம்புகிறேன்.

மற்றப்படியுள்ள காங்க்ரஸ் ஸங்கங்களில் அங்கத்தினராலும் அனுதாபிகளாலும் மிகவும் சிரமப்பட்டு வசூல்செய்யப்பட்ட மேற்படி தொகை வீணாய்விடாதபடி கவனிக்க வேண்டும். உலக சரித்திரத்தில் இந்த சந்தர்ப்பம்  மிக முக்கியமானது. இதில் உலக முழுமையிலும் பல அற்புதமான மாறுதல்கள் தோன்றி வருவது மாத்திரமேயன்றி, உலகத்திலுள்ள தேசங்களுக்கெல்லாம் விடுதலை பொதுவாகி விடுமென்றும் புலப்படுகிறது. இத்தருணத்தில் விரைவிலே இந்தியா எங்ஙனமேனும் தன் ஸ்வதந்த்ரத்தை உறுதி செய்து கொள்ளுதல் அதன் கடமையாம். இதுவே, நமது தேசத்தில் பொதுஜனங்களின் மனதில் எப்போதும் விடாமற் பற்றியிருக்கும் பேராவலாகிவிட்டது. அது பற்றியே, மஹாத்மா காந்தி கேட்டபோது, ஜனங்கள் சிறிதேனும் லோபத்தன்மையின்றித் தங்கள் அளவிறந்த வறுமையையும் பாராட்டாமல், பணத்தை யதேஷ்டமாகவும் விரைவாகவும் கொடுத்துத் தங்கள்மீது பழிச் சொல்லுக்குச் சிறிதேனும் இடமின்றிச் செய்து கொண்டார்கள்.

ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை. 

நாம் இங்ஙனம் எழுதிக்கொண்டு வருகையிலே, ஸ்ரீமான் ராஜகோபாலாசார்யர் ஒரு கணக்கு ப்ரசுரம் செய்திருக்கிறார். அதில் சென்னை மாகாணத்து வசூல் எவ்வளவென்பதையும் அதில் செலவம்சங்கள் எவையென்பதையும் விவரித்துக் கணக்குகள் தெரிவிக்கிறார். அதில் மிகவும் சொற்பமான தொகையொன்று சுமார் (50,000 ரூபாயென்று நினைக்கிறேன்) ப்ரசாரச் செலவுக்காகப் போடப்பட்டிருக்கிறது. இந்த ரூபாய் போதாதென்பது என்னுடைய அபிப்ராயம். ப்ரசார விஷயத்தில் இந்தியா முழுதையும் ஒன்றாகப் பாராட்ட வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே திட்டம். ஒரே முறைமை, ஒரே ப்ரசார ஸங்கம் தலைமையாக இருந்து இந்த ஸ்வராஜ்ய ப்ரசாரத்தை நடத்தில் வராவிட்டால் நமக்கு எண்ணிறந்த ஸங்கடங்கள் விளையும். “கர்மம் உனக்குரியது; நீ பயனைக் கருதுதல் வேண்டா” என்று கண்ணபெருமான் பகவத் கீதையில் சொல்லியிருப்பதற்கு இக்காலத்தில் பலர் பொருளுணர்ந்து கொள்ள மாட்டாதவர்களாக இருக்கின்றனர். 

பயனே மனிதருக்குக் கிடைக்காத நிலைமையில் தொழில் புரிய வேண்டுமென்பது கீதையில் சொல்லப்பட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். அந்த அர்த்தத்தில் பகவான் அந்த வசனத்தை வழங்கவில்லை என்பது கீதை முற்றிலும் வாசித்துப் பார்த்தவர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.

தொழில் புரிந்துவிட்டு வெற்றி அகப்படுமோ அகப்படாதோ என்று எவரும் மனம் புழுங்குதல் வேண்டா. பயனுடைய தொழிலென்று புத்தியாலே நிச்சயிக்கப்பட்ட தொழிலை, ஒருவேளை அது பயன் தராதோ என்ற பேதை ஸம்சயத்தால் நாம் நிறுத்தி வைத்தல் தகாது. தொழிலுக்குப் பயன் நிச்சயமாக உண்டு. கடவுள் பின்னொரு பகுதியிலே சொல்லுகிறார்:- “பார்த்தா, தொழிலுக்கு வெற்றி இந்த உலகத்தில் மிகவும் விரைவாகவே எய்தப்படும்” என்று. தவிரவும், “மகனே, நற்றொழில் புரிந்த எவனும் இவ்வுலகத்தில் தீ நெறி எய்துவதில்லை” என்று பின்னே கடவுள் மற்றோரிடத்தில் விளக்கியிருக்கிறார். 

எனவே, வெற்றியைக் கடவுளின் ஆணையாகக் கண்டு, பயனைப்பற்றி யோசனையே புரியாமல், நம்மவர் ஸ்வராஜ்யத்துக்குரிய தொழில்களை இடைவிடாமல் செய்துகொண்டு வரக் கடவர். அதனை உடனே தொடங்கவும் கடவர். அதில் திரிகரணங்களை மீட்சியின்றி வீழ்த்திவிடவும் கடவர்.

-காளிதாஸன்

  • சுதேசமித்திரன் (11.08.1921)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s