-தஞ்சை வெ.கோபாலன்
- பகுதி- 2.26

பாகம்-2 :பகுதி 27
சுதந்திரம் வந்தது! தேசம் உடைந்தது!
இரண்டாம் உலக யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1945 மே மாதம் 7-ஆம் தேதி நேச நாடுகளிடம் ஜெர்மனி நிபந்தனையின்றி சரணடைந்து விட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சில சலுகைகளை அறிவித்தது. சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்தது. அதே ஆண்டில் ஜூலை 26-இல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்று, தொழிற்கட்சி ஆட்சியைப் பிடித்தது. கிளெமண்ட் ஆட்லி இங்கிலாந்தின் பிரதமரானார். இந்தியாவிடம் அனுதாபம் காட்டும் பிரிட்டிஷ் தலைவர்களுள் இவரும் ஒருவர்.
ஆகஸ்ட்டில் ஜப்பான் அமெரிக்கர்களிடம் சரணடைந்தது. இந்திய தேசிய ராணுவமும் பிரிட்டிஷ் இந்திய சர்க்காரிடம் சரணடைந்தது. அப்போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்கு பார்ப்போம்.
ஐ.என்.ஏ. என்பது சுயேச்சையான படை, ஜப்பானுக்கு அடங்கியது அல்ல என்பதை அறிவித்துவிட்டார்கள். அந்த சமயம் இந்திய ராணுவத்திலிருந்து கர்னல் திம்மையா (பின்னாளில் இந்திய தலைமை படைத் தளபதியாக இருந்தவர்) ரங்கூன் சென்று ஐ.என்.ஏ.யின் தலைமையகத்துக்குப் போனார். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.என்.ஏ. கர்னல் ஒருவர் அவருக்கு ‘ஜெய் ஹிந்த்’ என்று சல்யூட் அடித்து வரவேற்று உட்கார வைத்தார். திம்மையா வந்த காரணத்தைக் கேட்டதற்கு அவர் ஐ.என்.ஏ.யின் சரணாகதி பற்றி மேஜர் ஜெனரல் லோகநாதனிடம் விவாதிக்க வந்ததாகச் சொன்னார்.
உடனே ஐ.என்.ஏ.வின் கர்னல், திம்மையாவிடம் “எங்கள் மேஜர் ஜெனரலிடம் பேச இந்திய படையிலிருந்து ஒரு மேஜர் ஜெனரல்தான் வர வேண்டும், கர்னலிடம் எங்கள் மேஜர் ஜெனரல் லோகநாதன் பேச மாட்டார்” என்றார். திம்மையா சிரித்துக் கொண்டே, “ஆமாம் அதுதான் ராணுவத்தின் நடைமுறை” என்று சொல்லிவிட்டு வேறொரு மேஜர் ஜெனரல் வந்து பேசுவார் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அதோடு ஐ.என்.ஏ. ராணுவம் விதிகளை எத்தனை உண்மையாகப் பின்பற்றுகிறது என்பதறிந்து மகிழ்ச்சியடைந்து பாராட்டினார். இப்படி பிரிட்டிஷ் இந்தியாவின் கர்னலைத் திருப்பி அனுப்பிய ஐ.என்.ஏ.வின் கர்னல் யார் தெரியுமா?
பிரிட்டிஷ் தளபதி திம்மையாவின் சொந்தத் தம்பி தான் அவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் அண்ணன்- தம்பிக்குள் நடந்த உரையாடல் பெருமையளிக்கிறது.
1946 ஜனவரியில் காந்திஜி சென்னைக்கு விஜயம் செய்தார். அங்கிருந்து மதுரைக்கும் பழனிக்கும் போனார். அந்த ஆண்டு பம்பாயில் கடற்படையினருக்குள் கலகம் ஏற்பட்டு ஆட்சியாளர்களைக் கவலையுற வைத்தது. ராணுவத்தில் இதுபோன்ற கலகங்கள் நடப்பது பிரிட்டிஷாருக்கு நல்லதல்ல என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
புதிய சீர்திருத்தங்களின் அடிப்படையில் மாகாண சட்டசபைகளுக்கு 1946-இல் தேர்தல் நடந்தது. சென்னை, பம்பாய், மத்திய பிரதேசம், வடமேற்கு எல்லை மாகாணம், உத்தர பிரதேசம், பிகார், ஒரிசா, அசாம் ஆகிய எட்டு மாகாணங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் வங்காளம், சிந்து ஆகிய இரு மாகாணங்களில் முஸ்லிம் லீகும் மற்ற இடங்களில் காங்கிரசும் வென்று ஆட்சி அமைத்தன. சென்னையில் காங்கிரஸ் அமைச்சரவை உருவானது; ஆந்திரகேசரி டி.பிரகாசம் முதன்மை அமைச்சராக ஆனார். அவர் ஆட்சிக்கு வந்ததும் அத்தனை அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
1946 ஆகஸ்ட் 16 அன்று முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளாக அனுசரித்தது. அப்போது முகம்மது அலி ஜின்னா சொன்னார், “இன்று முதல் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு விடைகொடுத்து விட்டோம்”.
இதனால், நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை பெரிதாக உருவெடுத்ததோடு, இரு சாராரும் வன்முறைக்கு ஆளாக நேர்ந்தது. இந்தக் கலவரங்களைத் தூண்டிய தலைவர்கள் பாதிக்கப்படவில்லை. மிக ஏழை சாதாரண உழைப்பாளிகள் தான் பாதிக்கப்பட்டார்கள். கல்கத்தா நகரம் மதக் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. அங்கு முஸ்லிம் லீக் ஆட்சியில் இருந்ததால் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த முஸ்லிம்கள் இரக்கமற்ற முறையில் இந்துக்களைத் தாக்கி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கினர்.

முஸ்லிம் லீக் ‘நேரடி நடவடிக்கை நாள்’ என அனுசரித்த ஆகஸ்ட் 16-ஐ கல்கத்தா அரசு விடுமுறை அறிவித்ததால் கலவரம் உச்ச கட்டத்தை எட்டியது. கலவரத்தை போலீஸ் வேடிக்கை பார்த்தது. முதன்மை அமைச்சர் ஷுஹ்ரவர்த்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததோடு பாரபட்சமாகவும் நடந்து கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களும் எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கல்கத்தா தெருக்களில் ரத்த ஆறு ஓடியது. வங்காளத்தின் தலைநகர் கல்கத்தாவில் நடைபெற்று வந்த வன்முறை கலவரம் பீகாருக்கும் பரவியது. வங்காளத்தின் நவகாளி முதலான பகுதிகளுக்கும் பரவியது. அங்கெல்லாம் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்து அகதிகளாக ஓடும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இப்படி நிலைமை கட்டுக்கடங்காமல் போன பின்புதான் முதல்வராக இருந்த ஷுஹ்ரவர்த்திக்கு நடப்பது என்ன என்பதே புரிந்தது. போலீசுக்கு அதற்குப் பிறகுதான் கலவரத்தை அடக்க அதிகாரம் கொடுத்தனர். பின்னர் இரு நாட்களில் கலவரம் அடக்கப்பட்டது. கல்கத்தாவில் ஆகஸ்டில் நடந்த வெறிச் செயல்கள் அக்டோபரில் நவகாளியில் தொடங்கியது.
அங்கு நடந்த அக்கிரமங்களைப் பட்டியலிட்டால் அதுவே பல நூறு பக்கங்கள் எழுதலாம். கொடுமை, கொடுமை, அத்தனை கொடுமை அங்கு அரங்கேறியது.
நாலாபுறமும் கலவரம் கட்டுக்கடங்காமல் போனதும், அதனைத் தொடங்கியவர்களாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் தலைவர்கள் திணறினார்கள். மத்தியில் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முதலில் மறுத்த முகம்மது அலி ஜின்னா பின்னர் ஒப்புக் கொண்டார்.
அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சர்கள் ஆட்சியில் சேர்ந்தார்கள். அப்படிச் சேர்ந்ததும் அமைச்சரவையில் மிக முக்கியமான துறைகள் தங்கள் வசம் இருக்க வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஜவஹர்லால் நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்கள். இந்த நிலையில் முஸ்லிம் லீக் உள்துறை அமைச்சகம் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்றனர்.
ஆனால் சர்தார் வல்லபபாய் படேல் உள்துறையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். பதவி ஆசையினால் அன்று; உள்துறை இந்திய நாட்டின் மக்களின் பாதுகாப்பு நல்வாழ்வு இவற்றுக்கு உறுதி அளிக்க வேண்டிய துறை. அதுவரை மதக் கலவரங்கள் நடந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீள்குடியமர்த்தும் பணிகளைத் துரிதமாக நடத்த வேண்டிய முக்கியமான பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வல்லபபாய் படேல், அந்த பணிகள் மக்கள் நலன்காக்க முழுமையாக நிறைவேறும்வரை எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
ஜவஹர்லால் நேருவும் அப்படி இடையில் துறைகளைப் பிரித்துப் புதிதாக சேர்ந்துகொண்ட முஸ்லிம் லீக் அமைச்சர்களிடம் அளிக்க மறுத்துவிட்டார். விஷயம் வைஸ்ராயிடம் சென்றது, அவரும் லீக்கின் கோரிக்கையை ஆதரித்து சர்தார் வல்லபாய் படேலிடம் இருந்த உள்துறையை கைவிடும்படி கோரினார்.
தன் இலாகாவை இழப்பதினும் பதவியையே இழப்பேன் என்று உறுதியாக இருந்தார் படேல். இவருடைய உறுதியைப் பார்த்து வைஸ்ராய் தன் கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். லீக் அமைச்சர் நிதிஅமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
படேலின் இந்த செயல் உயர் மட்டத்தில் விவாதத்திற்கு வந்தது. உள்துறையை விட மிக முக்கியமான துறையான நிதித்துறையை படேல் ஏற்றுக் கொண்டு உள்துறையை விட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள்கூட அபிப்பிராயம் தெரிவித்தனர். மிகவும் நெருக்கடியான நேரத்தில் சட்டம் அமைதியைப் பாதுகாத்து மக்கள் அமைதியாக வாழ வழிவகை செய்துகொடுக்க வேண்டிய உள்துறையே தனக்கு முக்கியம் என்றார் படேல்.
படேல் இப்படிப்பட்ட உறுதியான நிலையை எடுத்தது மிகவும் சரியென்பது, நாட்டில் பின்னர் நடந்த செயல்கள் உறுதிப்படுத்திவிட்டன. அதுநாள் வரை பாரத தேசத்தை இந்தியா- பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கவேண்டுமென்கிற ‘இருதேசக் கொள்கையில்’ உறுதியாக இருந்த முஸ்லிம் லீக், அந்தக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இந்திய மத்திய அரசாங்க நிர்வாகத்தினுள் புகுந்துகொண்டு, அதை செயல்படாமல் செய்யவும், இரு சமூகத்தாரும் சுமுகமாக அமைதியோடு வாழ முடியாது என்பதை உலகுக்கு மெய்ப்பித்துக் காட்டமுமே அவர்கள் அரசாங்கத்தில் பங்குபெற வருகிறார்கள் என படேல் கருதினார்.
படேல் அவர்களின் கருத்து மெய்ப்படும்படியாக காரியங்கள் நடந்தேறின. போக்குவரத்து துறையையும், வர்த்தகத் துறையையும், நிதி இலகாவையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, லீக் அமைச்சர்கள் அந்தத் துறையில் பாகுபாடு காட்டி மக்களைப் பிரிவினைக்குத் தூண்டி துன்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். இடைக்கால சர்க்கார் பூசலுக்கிடையில் தான் நடந்து வந்தது.

கிழக்கு வங்காளத்தில் கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. 1946 அக்டோபரில் காந்திஜி கல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து நவம்பர் 6-ஆம் தேதி நவகாளிக்குப் புறப்பட்டார். நவகாளி பகுதியில் இருந்த கிராமங்களுக்கெல்லாம் காந்திஜி சென்று அங்கு ஏற்பட்டிருந்த கலவரத்தின் பின்விளைவுகளைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். குடிசைகள் எரிந்து கிடந்தன; பள்ளிச் சிறுவர்கள் உட்பட ஏராளமான குழந்தைகளும் பெண்களும் வீடிழந்து, வாசலிழந்து, கற்பை இழந்து, வாழ்வாதாரமில்லாமல் தெருவில் நின்ற காட்சிகள் அவர் நெஞ்சைப் பிழிந்தன.
இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்ட காந்திஜி தன்னுடன் வந்துகொண்டிருந்த தொண்டர்களை பாதிக்கப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் வீதம் சென்று அங்கெல்லாம் நிவாரணப் பணிகளைச் செய்யப் பணித்தார். அங்கு அவர்கள் உயிரை இழக்க நேர்ந்தாலும் இறக்கத் தயாராக இருக்க வேண்டும், அப்படி இல்லாதவர்கள் ஊர் திரும்பலாம், தன்னுடன் வரத் தேவையில்லை என அறிவித்தார்.
ஒரு கூட்டத்தில் அவர் சொன்னார் “நமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் ஒன்றும் பெருமையில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே அவனுக்குப் பெருமை. அதைத் தான் நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.
காந்திஜியின் 77-ஆம் வயதில் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைத்தார். ஒவ்வொரு நாளும் காலை நடந்தோ, அல்லது ஆறுகளைப் படகுகள் மூலம் கடந்தோ பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி மறுவாழ்வளிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆங்காங்கே நிறுவப் பட்டிருந்த அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆறுதல் கூறுவார். மக்கள் சிந்தும் கண்ணீரைத் துடைப்பதையே தன் பணியாக மேற்கொண்டார்.”
1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று காந்திஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தற்காலிக அரசின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தம்மை சந்திக்க நவகாளிக்கு வருவதாக அவர் சொன்னார். அவர் அறிவித்தபடி நேருவும், ஆச்சார்ய ஜே.பி.கிருபளானியும் நவகாளிக்குச் சென்று காந்திஜியிடம் கலந்தாலோசித்தனர். அப்போது ஜே.பி.கிருபளானிதான் காங்கிரசின் தலைவராக இருந்தவர்.
காந்திஜியின் நவகாளி யாத்திரையைக் குறிப்பிடும்போதெல்லாம் அவர் ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு நடப்பது போன்ற பின்புறமிருந்து வரையப்பட்ட ஒரு படம் வெளியாகும். அந்த சித்திரத்தை அங்கு நேரில் கண்டு வரைந்தவர் தஞ்சையைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் திரு. அனந்தராமன் என்பார்.
அவரும் எழுத்தாளர் சாவியும் கல்கி பத்திரிகை சார்பில் நவகாளிக்குச் சென்று அங்கு காந்திஜியை சந்தித்து, அங்கு இருந்த நிலைமையை கல்கிக்கு எழுதி வந்தனர். கார்ட்டூனிஸ்ட் அனந்தராமன் அந்தப் படத்தை காந்திஜியிடம் காட்டி அவர் அதில் கையெழுத்திட்டுத் தரவேண்டுமென்று கேட்டபோது காந்திஜி, என்னை ஏன் பின்புறத்திலிருந்து பார்ப்பதுபோல வரைந்திருக்கிறாய் என்றாராம். அதற்கு கார்ட்டூனிஸ்ட் ‘காந்திஜி இந்தியாவின் விடியலை நோக்கி நடக்கிறார்’ என்று தலைப்பு கொடுப்பேன் என்றாராம்.
காந்திஜி கையெழுத்திட்ட அந்த ஒரிஜினல் படம் இன்றும் கார்ட்டூனிஸ்ட் அனந்தராமனிடம் இருக்கிறது. வயது முதிர்ந்த நிலையில் கார்ட்டூனிஸ்ட் திரு. அனந்தராமன் இப்போதும் மிக எளிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் கொட்டிக்கிடக்கும் செல்வம் எல்லாம் அவர் வரைந்த உலகத் தலைவர்கள் பற்றிய கார்ட்டூன்கள் தான். அதை உரியவர்களிடம் அளிக்க விரும்பினாலும் இன்னும் அதை கொடுத்து, தனது இறுதி காலத்திலாவது சற்று வசதியாக இருக்கமுடியாமல் இருக்கிறார்.
அவருடைய பெருமையை அறிந்து தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் திரு இரா.குணசேகரன் திருச்சியில் அவருடைய கார்ட்டூன்களை ஒரு காட்சியில் பொது மக்கள் பார்வைக்கு வைத்தார். பூண்டி கல்விக்காவலர் திரு துணசி அய்யா வாண்டையார் திரு. அனந்தராமனை தன் கல்லூரிக்கு அழைத்து மரியாதை செய்தார். தஞ்சை ரோட்டரி சங்கங்களில் ஒன்று அவருக்குப் பாராட்டு விழா நடத்தியது. ஆனால் இன்றும் அவர் குடத்திலிட்ட விளக்காய் தன் முதுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்.
1947 ஜனவர் 2-ஆம் நாள் காந்திஜி, பீகாம்பூர் எனுமிடத்திலிருந்து புறப்பட்டுத் தடியை ஊன்றிக் கொண்டு தன்னுடைய புகழ்பெற்ற ‘நவகாளி யாத்திரையை’த் தொடங்கினார். இது ஒரு புனித யாத்திரை என்பதால் காலில் செருப்பு அணியவில்லை என்றார் அவர்.
அவர் பயணம் செய்த வழிநெடுக போரின் அழிவுபோன்ற மதக் கலவரத்தின் பேரழிவுகளைப் பார்த்துக் கொண்டு கிராமம் கிராமமாக நடந்தார். அப்படி நடந்துபோன போது பல்லா எனும் ஊரில் ஒரு பெண் கேட்டார், “தான் கற்பழிக்கப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் என்ன செய்யவேண்டும்? சரணாகதி அடைய வேண்டுமா?” என்றாள்.
அதற்கு காந்திஜி சொன்னார்: “சரணடைவது என்பதே என் அகராதியில் இல்லை. பலாத்காரத்துக்கு இணங்காத மன உறுதியுடன் தன் உயிரைக்கூட விட்டுவிட அவள் தயாராக இருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய மனோ தைரியம் இருக்கிறது என்பதை அறிந்த மாத்திரத்தில் அவளை அந்த சூழ்நிலைக்கு ஆளாக்கிய ஆண் பலஹீனனாகிவிடுவான்” என்றார் காந்திஜி.
பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் கிளெமண்ட் ஆட்லி, நேரு, ஜின்னா ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்துப் பேசியபின் 1947-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி காமன்ஸ் சபையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் 1948 ஜூன் மாதம் இந்தியாவின் ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்புவித்துவிட்டு பிரிட்டிஷார் அங்கிருந்து வெளியேறி விடுவர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை அடுத்து, அப்போதைய வைஸ்ராய் வேவலுக்குப் பதிலாக விக்டோரியா மகாராணியின் கொள்ளுப் பேரனும், கடற்படை தளபதியுமான லார்ட் மவுண்ட் பேட்டன் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(கர்ஜனை தொடர்கிறது…)
$$$