-மகாகவி பாரதி

(19 நவம்பர் 1920)
கிரேக்க தேசத்து ஜனங்கள் சமீபத்தில் நடந்த எலெக்ஷன்’களில் வாக்குக் கொடுத்திருக்கும் மாதிரியைப் பார்க்கையிலே அவர்கள் முன்னிருந்த கான்ஸ்டன்டைன் ராஜாவே திரும்பப் பட்டத்துக்கு வரவேண்டுமென்று விரும்புகிறார்களென்பது நிச்சயமாகத் தெரிகிறது.
இந்தக் கான்ஸ்டன்டைன் ராஜா கெய்ஸர் சக்ரவர்த்தியின் ஸஹோதரிக்குக் கணவரென்பதையும், யுத்த காலத்தில் கெய்ஸருக்கனுகூலமாக இருந்தாரென்பதையும் கருதி, முன்னர் அவரை ராஜ பதவியினின்றும் தள்ளியவர்களாகிய இங்கிலாந்து முதலிய நேசக் கக்ஷியார் அவர் மீளவும் கிரேக்க தேசத்து ராஜாவாகக் கூடாதென்று தீர்மானித்திருக்கிறார்கள்.
கான்ஸ்டன்டைனுக்கப்பால் நேசக் கக்ஷியாரின் கைப்பொம்மையாகிய வெனிஜிலாஸ் என்ற கிரேக்க மந்திரியின் உதவியுடனே, கிரேக்க ஆட்சியைத் தங்களிஷ்டப்படி மாற்றிக் கான்ஸ்டன்டைனுடைய இளைய மகனொருவனைப் பட்டத்தில் வைத்திருந்தார்கள். இந்தப்பிள்ளை ஸமீபத்தில் குரங்கு கடித்ததனால் இறந்து போய்விட்டார். எனவே கிரேக்க தேசம் இப்போது ராஜா இல்லாமல் இருக்கிறது.
கான்ஸ்டன்டைன் அரசரின் மற்றொரு குமாரரைப் பட்டத்துக்கிருக்கச் சொல்லியதில் தமது பிதாவே ராஜா ஆகவேண்டுமென்று கருதி அவர் ராஜ பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். கிரேக்க ஜனங்கள் கான்ஸ்டன்டைன் ராஜாவையே மறுபடி ஸிம்ஹாஸனத்துக்கழைக்கிறார்கள்.
எலெக்ஷனில் வெற்றி பெற்ற கக்ஷிக்குத் தலைவராகிய ஸ்ரீமான் குநாரிஸ் என்பவர் கான்ஸ்டன்டைன் ராஜாவுக்கே மறுபடி பட்டங் கொடுக்க வேண்டுமென்ற நிச்சயத் தோடிருக்கிறார். அந்தந்த தேசத்தாரிஷ்டப்படி அந்தந்த ராஜ்யம் ஆளப்பட வேண்டுமென்று நேசக்ககக்ஷியார் வாயால் ஓயாது சொல்லுகிறார்களேயன்றிக் கார்யத்தில் வரும்போது, உலகத்து ராஜ்யங்களில் பலஹீனத்தோடிருப்பவனவற்றை யெல்லாம், இவர்களுடைய ஸெளகர்யங்களுக் கிசைந்தபடி இந்நேசக் கக்ஷியார்களின் அபிப்பிராயங்களுக்கு, பலாத்காரமாகவேனும் உட்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
கிரேக்க தேசத்து ஜனங்கள் தங்களிஷ்டப்படி ராஜா ஏற்படுத்திக் கொள்வதைக்கூடத் தடுத்துப் பேசத் தங்களுக்கதிகாரமுண்டென்று நேசக் கஷியார் நினைக்கிறார்கள். இதினின்றும் கிரேக்கர் நேசக் கக்ஷியின் கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லவும் விரும்பக் கூடுமென்று கருதுகிறேன்.
- சுதேசமித்திரன் (19.11.1920)
$$$