-கோவை ராதாகிருஷ்ணன்
கோவையைச் சார்ந்த இளைஞர் திரு. ராதாகிருஷ்ணன், 'கொழும்பு முதல் அல்மோரா வரை' நூலைப் படித்ததன் பின்புலத்தில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார். வேற்றுமைகளை ஒழிப்பது வேதாந்தம் என்கிறார்....

சமகாலத்தின் முக்கிய பிரச்னை மற்றும் எதிர்காலத்திலும் கடும் சிக்கல் ஏற்படுத்தப் போகிற பிரச்னை என நான் கருதுவது மக்களிடையே இருக்கும் பிரிவு மனப்பான்மைகள்தான்.
மொழி, மதம், சாதி, இனம், நாடு என பல்வேறு வேறுபாடுகள் சார்ந்து மக்கள் பிரிந்து நிற்பதன் வழியாக வரும் வெறுப்புகள், மோதல் போக்குகள் மக்களிடையே அமைதியை இல்லாமல் ஆக்கும் அல்லது மக்களிடையே இருக்கும் அமைதியான வாழ்வை இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டுவதன் இல்லாமல் ஆக்க முடியும்!
இந்த விஷயம் தனிப்பட்டு மனதினை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒன்று. இதற்கான தீர்வு என்னாவாக இருக்கும் என்பதையொட்டி என் தேடல் இருந்தது. உண்மையில் இதற்கான விடையினை தொடர்ந்து கவனித்து வந்து கொண்டிருந்தேன் என்றாலும் இதுதான் அதற்கான தீர்வு என்பது இந்த இரு தினங்களில்தான் தெரிந்தது.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் ஆற்றிய உரைத் தொகுப்பான ‘கொழும்பு முதல் அல்மோரா வரை’ நூலில்தான் இந்தத் தீர்வினை, இதுதான் தீர்வாக இருக்க முடியும் என்பதனை உணர்ந்தேன்.
தமிழ்த் தேசியம் என்பது தமிழ், தமிழர் நலன், தமிழகத்தை மட்டுமே முன்வைக்கும் ஒன்று; இந்திய தேசியம் என்பது இந்தியர்களுக்கானது; இந்துத்துவம் என்பதும் செயல்தளத்தில் இந்தியர்கள், இந்தியப் பண்பாடு என்பதை முன்னிறுத்துறது, இதற்குள் அடங்காதவர்கள் அந்நியர்களாக ஆகி விடுகிறார்கள். இதை தாண்டி மார்க்சியம் போன்றவை கூட எதிர்த்தரப்பு என்பதை கொண்டிருப்பதுதான். இது இல்லாமல் மதங்கள் என பார்க்கும் போது அவை நம்பிக்கை வழியாக அன்பை, ஒற்றுமையை முன்வைப்பவை, அல்லது நல்வழிகள் என சொல்லி இதன் வழியாக சென்றால் நலன்கள் கிட்டும், அருள் கிடைக்கும், சொர்க்கம் அமையும் என்று சொல்பவை. இதிலும் இஸ்லாம் மதம் முஸ்லிம் அல்லாதவர்களை காபிர்கள் என்று வெளியே நிறுத்துகிறது. நான் தேடியது நம்பிக்கை அல்லது நல்வழி அல்லது கடவுள் அச்சம் (நரகம் மாதிரியான ) அல்லாமல் உண்மையான, உணர கூடிய ஒன்றாக, நம்பிக்கை அல்லாமல் ஆராய்ந்து சரியானது என்று ஏற்றுக் கொள்ள கூடிய இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஜெயமோகன் எழுதிய ‘உலகம் யாவையும்’ என்ற ஒரு சிறுகதை உண்டு, தன்னை உலகக் குடிமகன் என்று அறிவித்து, நாடுகளாகப் பிரிந்து நிற்கும் பிரிவினைக்கு எதிராகச் செயல்படும் ‘காரி டேவிஸ்’ என்பவரின் வாழ்வினை சிறுகதையாகச் சொல்லி இருப்பார்.
இதில் இருக்கும் மையம் என்பது உலகை ஒன்றாக, நாடுகளாக பிரிந்து அல்லாமல் நாடு எனும் எல்லை கடந்து ஓருலகமாக காணும் நோக்கு (one nation, one world ), நாடுகளாகப் பிரிந்து நிற்கும் போது மோதல், துவேஷம், அந்நியம் என இருக்கும் எண்ணங்கள், நாடுகள் எனும் நிலை கடக்கும் போது இல்லாமல் ஆகிறது என. இந்த சிறுகதை தொடும் விஷயம் நாடு என்பது, அது தவிர்த்து மொழி, இனம், மதம் என நாம் இன்னும் ஏகப்பட்ட பிரிவினை தளங்களை கையில் வைத்திருக்கிறோம். இந்த எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வின் வழியாக சரி செய்யும் விஷயம் இருக்குமா என்று தேடினேன். இந்த எல்லா பிரிவு விஷயங்களைத் தாண்டி, வேற்றுமைகளை அழித்து மக்களை இணைக்கக் கூடிய விஷயம் எது, எதன் மூலம் இந்த மக்களை தத்தமது பிரிவு மனநிலையைத் தாண்டி வெளியே கொண்டு வர வைத்து இணைக்க இயலும் என்பதை அறிய விரும்பினேன்.
தமிழ்த் தேசியம், இந்திய தேசியம் என்பதில் கூட அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள பிரிவினைகளைப் பார்க்கிறேன். தமிழ்த் தேசியத்தை தமிழர்களான தலித்தரசியல் நோக்கு கொண்டவர்கள் ஏற்பதில்லை, இந்திய தேசியத்தை உள்ளே இருக்கும் மொழி அரசியல் கொண்டவர்கள் ஏற்பதில்லை. மார்க்சிய அரசியல் நிலைப்பாட்டிற்கு இந்தியப் பண்பாடு என்பதே விஷம் போல இருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் ஆன்மீகத்தை சமூக பிரச்னைக்கும் தீர்வாக எடுத்து முன்வைத்தார். நான் மேற்குறிப்பிட்ட வேற்றுமைப் பிரச்னைக்கு தீர்வினை ஆன்மீக தளத்தில் இருந்து எடுத்து அளித்தார். அவர் முன்வைத்தது வேதாந்தம். மதமாக அல்லாது மக்களை இணைக்கும் தரிசனமாக.
நான் இந்த நூலை வாசிக்கும் முன்பு தனியாக ஆன்மீக தளத்தில் நின்று அத்வைதம், வேதாந்தம் என கொஞ்சம் வாசித்து இருக்கிறேன். இவை சார்ந்த உரைகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் இந்த வேதாந்த நோக்கை- மக்களை துளி கூட பிரிவினை எண்ணமின்றி, முழு சமத்துவத்துடன், அனைவரையும் ஒரே தளத்தில் வைத்து, ஒரே வளையத்திற்குள் கொண்டு வந்து, ‘எல்லோரும் ஒருவரே, ஒன்றின் துளிகள் நாம்’ என முன்வைத்து பிரிவினையை மொத்தமாக காலி செய்யும் ஒரு மக்கள் ஒற்றுமைக்கான கருவியாக யோசித்தது இல்லை.
சுவாமி விவேகானந்தர் ‘வேதாந்தம்’ என முன்வைத்தது மத நோக்கில் அல்ல; மக்களை சக மனிதன் மீது அன்பு கொள்ள, வேறாளாகப் பார்க்காத, தன்னைச் சேர்ந்தவன், தானும் அவனும் ஒன்றே என்ற எண்ணத்தை சமூகத்தில் கொண்டு வந்து மக்களை ஒன்றாக்க.
இந்த கட்டுரையில் வேதாந்தத்தை கடவுள் மற்றும் ஆன்மீக நோக்கில் காண்பதை அப்படியே விட்டுவிட்டு, வேதாந்தத்தை மக்களை இணைக்கக் கூடிய கருவி அல்லது மக்களை இணைக்கும் தரிசனம் அல்லது மக்களை இணைக்க கூடிய சித்தாந்தம் என்ற அளவில் மட்டுமே அணுகுகிறேன், இப்படி பார்க்கும் போது வேதாந்தம் இந்த சாத்தியத்தை கொண்டிருக்கிறது!
இந்தியாவில் சாதிய நோக்கில் ஒடுக்க பட்டவர்களை விலக்கி இருந்த மனநிலையை சாட சுவாமி விவேகானந்தர் வேதாந்ததை பயன்படுத்தினார், ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம் எனும் போது, ஒவ்வொரு உயிரிலும் கடவுள் இருக்கிறார் எனும் போது, ஒவ்வொரு உயிரும் கடவுள் எனும் போது எப்படி உன்னால் ஒடுக்கப் பட்டவர்களைப் பார்க்காமல் இருக்க முடிகிறது, அவர்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்றார் வேதாந்தத்தை, அனைவரிலும் கடவுள் உறைந்திருக்கிறார் எனும் அம்சத்தை சுவாமி இந்த சாதிய மனநிலைக்கு எதிராக வைத்தார்.
வேதாந்தக் கருத்து ( ஈஸா வைஸ்யம் ) ஒருவர் நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் ஆராய்ந்து ஏற்கக் கூடிய வகையில் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்றே எண்ணுகிறேன், அறிவியல் இன்று பிரபஞ்சத்தை ஒருமை அம்சம் கொண்டதாக அணுகும் இடத்தில் இருக்கிறது. வேதாந்தம் முன்வைப்பதும் அதுதான்.
வேதாந்ததை ஆன்மீகமாக அல்லாமல், மதங்களுக்கு மாற்று என்று இல்லாமல், மக்களை இணைக்கும் மதம், மொழி, இன, வர்க்க வேறுபாடுகள் கடந்த ஒரு கருத்தியலாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு உயிரிலும் உள்ளுறைந்திருப்பது ஒன்றுதான் எனும் போது ஒவ்வொன்றும் இன்னொன்றுக்கு நிகராகி விடுகிறது, மனிதர்களைத் தாண்டி ஒவ்வொரு உயிரினமும் கூட சமம் என்ற இவ்வகை பார்வை எவ்வளவு மகத்தான சமத்துவம் கொண்டிருக்கிறது, இதில் மேல் கீழ் என்பதே இல்லை. கூடவே இன்னொரு தளத்தில் இவையெல்லாம் ஒன்று, ஒன்றின் அம்சங்களை இவையெல்லாம், ஒன்றுதான் இன்னொன்றும் எனும் போது இதில் பிரிவினை என்பதே இல்லாமல் ஆகிறது.
இந்த வேதாந்த நோக்கை சமகால பிரச்னை ஏதாவது ஒன்றிற்க்கு பொருத்தி பரிசோதித்து பார்க்கலாம் என எண்ணி பசு வதை தடை விஷயத்தில் பொருத்தி பார்த்தேன். ஒவ்வொரு உயிரும் சமம் எனும் போது, ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம் எனும்போது பசு மட்டும் புனிதமானது என்ற வாதம் ஏற்க முடியாது, இந்த நோக்கில் பசுவதையை எதிர்க்க முடியாது, மாறாக பசுவின் பயன்பாடு, அது நம் மனித சமூகத்திற்கு அளித்த பங்களிப்பு, அதன் சாத்தியம், அதன் எண்ணிக்கை குறைகிறது – எனவே பாதுகாக்க வேண்டும் என்ற வாதங்களைச் சொல்லி எதிர்க்கலாம், ஆனால் நம்பிக்கையை முன்வைத்து வேதாந்த நோக்கில் நின்று எதிர்க்க முடியாது!!
$$$