-எஸ்.எஸ்.மகாதேவன்


32. உக்காரை – தெரியுமா?
நண்பர் சங்க பிரசாரக்காக இருந்தவர். அவருடைய போன் பெங்களூர் பதிவு. அவர் சென்னையில் இருக்கிறார். என்னுடைய போன் சென்னை பதிவு. நான் பெங்களூரில் இருக்கிறேன். இன்று காலை இருவரும் தொலைபேசிக் கொண்டோம். அதன் சாரம் அனைவர் பார்வைக்காக:
சென்னைக்காரர் பிரசாரகாக இருந்தவர் என்று சொன்னேன் அல்லவா? இன்றும் அவர் தன் உறவினர் வீட்டுக்கு போனால் சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் இதம் தரும் விஷயங்களை எடுத்துச் சொல்லாமல் விடுவதில்லை. இப்படித்தான் ஒரு வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டிருந்த போது அந்த வீட்டம்மா ‘பேக்கரி படிப்பு படிக்க ஆசை’ என்று தெரிவித்தார்.
“அமோகமாகப் படியுங்கள்; ஆனால் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள்; நம்முடைய கலாச்சாரத்தில் இருந்து விலகுவது தெரியாமல் நாம் விலகிக் கொண்டிருக்கிறோம்…” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் இவர். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அம்மையார் வினவ, இந்த ஆர் எஸ் எஸ் காரர் ஆரம்பித்தார்:
“ஐரோப்பியர்களுக்கு எதற்கெடுத்தாலும் கேக் ஒன்றுதான் தெரியும். நம்மூரில் தங்களை நாகரீகம் அடைந்தவர்கள் என்று கருதிக் கொண்டவர்களின் வீடுகளில் கேக் படையெடுப்பு தீவிரமடைந்து வருவதைப் பார்க்கிறோம். பர்த்டேயா, கேக் வெட்டு! நிச்சய தாம்பூலமா, கேக் வெட்டு! கல்யாண ரிசப்ஷனா, கேக் வெட்டு! 60க்கு 60 கல்யாணமா, கேக் வெட்டு! அலுவலக இடமாற்றல் பிரிவுபச்சார விழாவா, கேக் வெட்டு!

“ஆனால், நம்மூரில் பழக்கம் இப்படியா? இங்கே சாப்பாடு என்றால் சும்மாவா? ஒரு கல்யாணத்தையே எடுத்துக் கொள்வோம்; மாப்பிள்ளை அழைப்பு விருந்து ஐட்டங்கள் தனி; கல்யாணத்தன்று காலை சிற்றுண்டி ஐட்டங்கள் தனி; கல்யாண விருந்து அட்டகாசமாக தனி (கட்டு சாதக் கூடையையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்). செட்டிநாட்டு அன்பர்கள் 21 வகை காய்கறிக் கூட்டு பரிமாறி பெருமை கொள்கிறார்கள் என்றால், ராஜஸ்தானத்து அன்பர்கள் பரிமாறி பெருமிதப்படும் விருந்துக்கு பெயரே சப்பன் போஜ் (சப்பன் என்றால் 56 வகை பலகாரங்கள்).
விவசாயி மனம் குளிரும் வகையில் நதியில் ஆடி 18 அன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்தால் அதை தரிசிக்க ஏழு விதமான கலந்த சாதம் கையோடு கொண்டு போய் படையல் இடுவது அநேகமாக எல்லோருக்கும் பழக்கம் தான். சொல்ல வந்தது என்னவென்றால், பாரத நாடு, அதன் சாப்பாடு என்றாலே போரடிக்கிற ஒற்றை கேக் அல்ல; வெரைட்டி, வெரைட்டி, வெரைட்டி தான். வெரைட்டி என்றால் சும்மா அல்ல- மெனு ஊருக்கு ஊர் மாவட்டத்துக்கு மாவட்டம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல தலைமுறைகளாக வீட்டில் சுடும் தீபாவளி பலகாரம் உக்காரை. இது தெரியுமா என்று வேறு மாவட்டக் காரர்களைக் கேட்டுப் பாருங்கள்; தெரியாது என்று தான் சொல்வார்கள். வேண்டுமானால் ஒரு பரிசோதனை செய்து பார்ப்போம் 50 பேர் வேலை செய்யக்கூடிய ஒரு அலுவலகம் அல்லது தொழிலகத்தில் அத்தனை பேரும் ஒரு வெட்டு வெட்டக் கூடிய அல்லது கட்டு கட்டக் கூடிய அளவுக்கு ஒரு அண்டாவில் உக்காரை சுட்டு ஏதாவது ஒரு நல்ல நாளில் (சோபகிருது புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று பிறக்கிறது) பிடியுங்கள் ஸ்வீட் என்று விநியோகித்துப் பார்ப்போமே. பிறகு எவனாவது கேக்கை நாடுவான் என்கிறீர்கள்? நம்ம வீடுகளில் வெரைட்டி கொடிகட்டிப் பறப்பதை சற்று எட்டிப் பார்ப்போமா?
“வீட்டில் தவழும் குழந்தை நடக்கத் தொடங்கினால் என்ன பட்சணம் செய்து வீட்டார் கொண்டாடுவார்கள்? ‘பிள்ளை படி தாண்டினால் படி கொழுக்கட்டை’! பூப்புனித நீராடல் வைபவமா, புட்டு சமைப்போம், ஞாபகம் இருக்கிறதா? வளைகாப்பு சீமந்தமா, நிச்சயம் வரகரிசி உண்டு (எண்ணெய் சேர்க்காமல் முளைகட்டிய சிறுதானியங்களின் கூட்டணி தான் வரகரிசி; என்ன சத்து, என்ன தெம்பு!).
‘நான் சுட்டுத் தாரேன், நீ பெற்றுத் தா’ என்று மாமியார் சீமந்தம் காணும் தன் மருமகள் சேலை முந்தானையில் பொதிந்து கொடுத்து பிறந்தகம் அனுப்புவாரே, அமிர்த கலசம், அதுவாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா?

“சாப்பாட்டில் மட்டுமல்ல, சகலத்திலும் வெரைட்டி நமக்கு ஆகி வந்த சமாச்சாரம். பாரதப் பெண்மணிகள் சேலை கட்டும் விதம் மட்டும் டஜன் கணக்கில் உண்டு. தமிழகத்துக்கு உள்ளேயே தமிழ் புடவை, தெலுங்கு புடவை. பெங்களூர் வந்தால் கர்நாடக கட்டு. பக்கத்து மாநிலம் மகாராஷ்டிரா சென்றால் வாளெடுத்து எகிறிக் குதித்து சண்டை போட வசதியாக தார்ப்பாய்ச்சு கட்டு. சுட்டுப் போட்டாலும் முந்தானை முடிச்சில் வீட்டுச் சாவி தொங்கும் வங்கப் பெண்மணி சேலைக் கட்டு மற்றவர்களுக்கு வராது.
நமது கலாச்சாரம் உணவை, மொழியை, உடையை இப்படி விதம் விதமாக வகை வகையாக நம் முன்னே பரப்பி வைத்திருக்கும் போது நாம் ஒற்றைக் கேக்கை நாடி ஓடுவது சரியான பித்துக்கொள்ளித்தனம்…. போதுமா?”
கூலாக சொல்லி முடித்தார் சென்னை நண்பர். கேட்டுக் கொண்டிருந்த அம்மையாருக்கு தான் மூச்சு முட்டியது. ஏதோ பெரியவர் சொல்கிறாரே என்று மறு பேச்சு பேசாமல் இருந்தார்.
இன்று பிற்பகலில் நண்பர் கையில் சிக்கியது ஒரு செய்திக் கட்டுரை. ‘பாரத மக்கள் பன்மைத் தன்மை பொலியும் பாரத கலாச்சாரத்தை மறக்கடிக்கச் செய்து, மால்கள் மூலம் தேசத்தை தங்கள் பண்டங்கள் மட்டும் விற்கும் ஒற்றைச் சந்தை ஆக்கி அடிமைப்படுத்த சர்வதேச சதி!’ என்று அலறியது ஐரோப்பியர் ஒருவர் எழுதிய அந்த செய்திக் கட்டுரையின் தலைப்பு. நண்பர் கர்ம சிரத்தையாக அம்மையாருக்கு அந்தக் கட்டுரையை அனுப்பி வைத்தார். என்ன ஆயிற்று தெரியுமா?
மாலையே நண்பருக்கு அம்மையாரிடம் இருந்து ஒரு போன்: “ஐயா அந்த உக்காரை இனிப்பு மனம் கவர்கிறது. சற்று ரெசிபி அனுப்பி உதவ முடியுமா?”
ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த நண்பர் உக்காரை ரெசிபிக்காக கன்னியாகுமரி தமிழன் ஆன என்னை நாடுகிறார். நான் உங்களை நாடுகிறேன்: உக்காரை சுடும் கலை தெரிந்த யாராவது ரெசிப்பி பதிவிட்டு உதவுங்களேன் இந்தக் குழுவில்? (ஆடியோ கிளிப் ஆனாலும் பரவாயில்லை).
பின்குறிப்பு 1: ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பார்கள். நண்பரை அடையாளம் கண்டு கொள்ள, ஒரு க்ளூ : நண்பர் மனைவிக்கு கன்னடம் தாய்மொழி: பல பத்தாண்டுகளுக்கு முன் சமஸ்கிருத எம்.ஏ. தேறிய அவர் தற்போது கன்னட எம்.ஏ.தேறி, இரு மொழிகளிலும் சென்னையில் இருந்தபடி ஆன்லைன் பயிற்சி அளித்து வருகிறார்.
பின்குறிப்பு 2: பேக்கரி படிப்பு நாட்டம் கொண்ட அம்மையார் மனதில் இருந்து அந்த நாட்டம் மறைந்தது. நாட்டிலிருந்தே அந்த மாதிரி நாட்டங்கள் ஓட்டமெடுக்க பிரார்த்தித்துக் கொள்வோம்.
ஓம் சாந்தி!
$$$