-தஞ்சை வெ.கோபாலன்
- பகுதி: 2.27

பாகம்-2: பகுதி 28
ரத்தச் சேற்றில் பூத்த சுதந்திரத் தாமரை
பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி இங்கிலாந்து காமன்ஸ் சபையில் இந்தியாவுக்கு 1948 ஜூன் மாதத்தில் சுயாட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாரல்லவா? அந்த அறிவிப்பை ஓரளவு துணிச்சலான அறிக்கைதான் என்றார் ஜவஹர்லால் நேரு. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது.
மதக் கலவரங்கள் நடந்த இடங்களுக்கெல்லாம் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு காந்திஜி 1947 மார்ச் மாதம் பிகாரிலுள்ள பாட்னாவுக்கு வந்தார். அங்கு பிகார் மாநிலத்தில் முந்தைய மாதத்தில் நடந்த கலவரங்களில் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட இடங்களைச் சென்று பார்த்துவிட்டு, ‘இவற்றோடு ஒப்பிடுகையில் நவகாளியில் நடைபெற்ற அக்கிரமங்கள் குறைவுதான் என்று எண்ணத் தோன்றுகிறது’ என்றார். பாதிக்கப்பட்ட பிகார் மக்களுக்கு உதவும் நிவாரணப் பணிகளுக்காக மக்கள் தாரளமாக நிதியுதவி தர வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
1947 ஏப்ரல் முதல் தேதி தில்லி, புராணாகிலா மைதானத்தில் ஆசிய நாடுகளின் மகாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக காந்திஜி பிகாரிலிருந்து தில்லி திரும்பினார். இந்த மாநாட்டில் சுமார் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். இங்கு பேசுகையில் காந்திஜி, “உண்மையான இந்தியாவை நகரங்களில் காணமுடியாது; அதை கிராமங்களுக்குச் சென்று பார்க்கவேண்டும்” என்றார். மாநாடு முடிந்து மீண்டும் காந்திஜி பிகார் திரும்பினார்.
லண்டன் காமன்ஸ் சபையில் பிரதமர் ஆட்லி அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் இந்தியாவில் முஸ்லிம் லீக் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்து வந்தது. தொடர்ந்து எந்தெந்த மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தந்தப் பகுதிகளையெல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டனர்.
அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

மேற்கே பஞ்சாப் இந்த இனவாத கொள்கையினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியது. கல்கத்தா, நவகாளி, பிகார் ஆகிய இடங்களில் நடந்த மதக் கலவரத்தினால் பஞ்சாப் மக்கள் பெரிதும் ஆத்திரமடைந்தனர். அப்போது பஞ்சாபில் ஆட்சி புரிந்து வந்த மாலிக் ஹயத்கான் மந்திரிசபை மார்ச் மாதம் ராஜிநாமா செய்துவிட்டது. அப்போதைய பஞ்சாப் கவர்னர் முஸ்லிம் லீக் கட்சியை அழைத்து அமைச்சரவை அமைக்கச் சொன்னார். உடனே பஞ்சாபில் அகாலி தலைவர் மாஸ்டர் தாராசிங் அங்குள்ள இந்துக்களும் சீக்கியர்களும் எதற்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் சொன்னார்:
“நாம் பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமானால், முஸ்லிம்களிடமிருந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இனியும் பஞ்சாபில் முஸ்லிம் லீக் கட்சியை நம்ப முடியாது, அவர்கள் ஆட்சி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது”.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் கலவரம் உச்ச கட்டத்தை அடைந்தது. நிலைமையை சமாளிக்க கவர்னரே நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீடுகளுக்குத் தீயிடல். குலைநடுங்கும் பயங்கரங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. உலகில் எந்த நாட்டிலும் எந்த சமயத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு மக்கள் கொத்து கொத்தாகக் கொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் தப்பவில்லை.
ஊரைக் காலிசெய்து கொண்டு மக்கள் எறும்பு வரிசை போல வேறிடம் நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினர். ராவல்பிண்டியில் தான் கண்ட காட்சிகள் பற்றி நேரு சொன்னார்: “என் வாழ்நாளில் நான் பார்த்திராத பயங்கரக் காட்சிகளை அங்கு கண்டேன். மக்கள் மக்களாகக் காட்சியளிக்கவில்லை, மிருகங்களாக மாறியிருந்தனர்”.
புதிய வைஸ்ராய் லார்டு மவுண்ட்பேட்டன் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி ராவல்பிண்டியில் நடப்பனவற்றைப் பார்த்து வரப் பணித்தார். அவர் சொன்னார்: “இந்தப் பிரதேசம் அக்னி குண்டுகள் வீசப்பட்ட இடம் போல அனைத்தும் அழிந்து எங்கும் சூன்யமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கண்டு ஒரு பகுதியினர் (லீகினர்) மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்”.
ராவல்பிண்டி கலவரத்தில் 15 நாட்களில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 2,049. கடுமையான காயம் அடைந்தவர்கள் நூற்றுக்கும் அதிகம் என்று பஞ்சாப் அரசு அறிக்கை வெளியிட்டது. அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கலகத்தை அடக்கும் அதிகாரமும், பலமும் இருந்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தியாவின் தற்காலிக அரசுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது. அரசு இரண்டுபட்டுக் கிடக்கும்போது அதிகாரிகள் மட்டத்திலும் இங்கும் அங்குமாகத் தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர். இந்த நிலைமை இப்படியே போய்க்கொண்டிருக்குமானால் சுடுகாடாகிவிடும் என்பதால், பஞ்சாபை ‘முஸ்லிம் பஞ்சாப்’ என்றும், ‘இந்துக்கள் சீக்கியர்கள் பஞ்சாப்’ என்றும் இரு பகுதிகளாகப் பிரிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது.
இந்த செய்திகள் எல்லாவற்றையும் கேட்டு காந்தியடிகள் துயரமடைந்தார். உடனே ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபபாய் படேலுக்கும், அதாவது தற்காலிக அரசின் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தன்னுடைய கவலையைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதற்கு வல்லபபாய் படேல் எழுதிய பதிலில் கூறுகிறார்:
“உங்களிடம் பஞ்சாபை இரண்டாகப் பிரிப்பது பற்றிய தீர்மானம் பற்றி விளக்குவது அத்தனை சுலபமல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும், அவசர கதியில் அல்லாமல், நன்றாகப் பல நாட்கள் சிந்தித்து அங்கு நிலவுகின்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற முடிவினை எடுக்க வேண்டியிருந்தது என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்”
-என்றார் படேல்.
இதுமாதிரியான நேரத்தில் இந்தியாவின் நல்ல காலம் இந்தியர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்ட மவுண்ட் பேட்டன் பிரபு வைஸ்ராயாக வேவல் பிரபுவுக்குப் பதிலாக வந்திருந்தார். இந்தியாவுக்கு வந்த வைஸ்ராய்கள் வரிசையில் 24ஆவதும் கடைசி வைசிராயுமாவார் இவர்.
22 மார்ச் 1947-இல் இவர் இந்தியாவில் வைஸ்ராயாக ஆனார். இவரும் பஞ்சாப் பிரச்னையை நன்கு ஆராய்ந்து சிந்தித்து அங்கு நடக்கும் விவகாரங்களுக்கு பஞ்சாபை இரண்டாகப் பிரிப்பதே சரியான தீர்வு என்பதை ஒப்புக் கொண்டார்.
ஜனாப் முகம்மதலி ஜின்னா, பஞ்சாபை இரண்டாகப் பிரித்து அதில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியையும், அதேபோல வங்காளத்தை இரண்டாகப் பிரித்து அதில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியையும் துண்டாடி உருவாகும் பாகிஸ்தானை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கும் காலகெடுவை நீட்டித்துக் கொண்டு போவது சரியாக இருக்காது என்பதால், காமன்ஸ் சபையில் பிரதமர் ஆட்லி அறிவித்ததைப் போல 1948 ஜூன் மாதத்தில் இல்லாமல் முன்கூட்டியே 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கிவிடுவது எனும் தீர்மானத்தை லார்ட் மவுண்ட் பேட்டன் பிரிட்டிஷ் அரசுக்குச் சிபாரிசு செய்தார். அதன்படி இந்தியா அன்றைய தினம் பிரிந்து இருவேறு குடியரசுகளாக அறிவிக்கப்படும் என்றார்.
‘நடந்த நிகழ்ச்சிகள் நாட்டின் பிரிவினையை ஒப்புக்கொள்ளும்படி செய்துவிட்டன’ என்றார் ஜவஹர்லால். ‘உடலில் அழுகிப் போன பகுதியை வெட்டி எடுத்துவிட்டோம்’ என்றார் வல்லபபாய் படேல்.
மத்தியில் ஆளுகின்ற அரசு ஒரு வலுவான உறுதியான அரசாக இருந்தால் மட்டுமே குழப்பம், கலவரம், அராஜகம் இவற்றைத் தடுத்து மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்க முடியும் எனும் நிலை ஏற்பட்டுவிட்டதால், காங்கிரஸ் தலைவர்களுக்கு சம்மதம் இன்றியே பிரிவினையை ஏற்றுக் கொள்ளும்படி ஆயிற்று’ – இப்படிக் கருத்துச் சொன்னவர் காங்கிரஸ் தலைவர் ஜே.பி.கிருபளானி.
1947 ஜூன் 14 அன்று அகில இந்திய காங்கிரஸ் கூடி நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொண்டது. இதில் 153 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 29 பேர் எதிர்த்தும், 36 பேர் நடுநிலைமை வகித்தும் பிரிவினை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திஜிக்கு பிரிவினையில் சம்மதமில்லை எனினும், ‘சந்தர்ப்ப சூழ்நிலை கருதி அதனை ஏற்றுக் கொள்ளும் கடமை காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது’ என்றார்.
இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவிப்பது என முடிவு செய்தது. இங்கு மக்கள் எந்தவித பேதமின்றி ஜாதி, மத, இன, வகுப்பு வேற்றுமைகள் எதுவுமின்றி அனைவரும் சமம் எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டது. நாட்டில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்கிற உத்தரவாதமும், அரசியல் சாசனப்படியான கடமைகளை மக்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவித்தது.
நாட்டுப் பிரிவினையின்போது இந்தியாவுக்கு இருந்தது போன்ற நிலைமை பாகிஸ்தானுக்கு இல்லை. மதப் பற்று, வகுப்பு வெறி, வன்முறை இவற்றால் பிறந்த தேசமென்பதால் அங்கு மக்கள் மனத்தில் வெறுப்பும், ஆத்திரமும் உருவாக்கப்பட்டு ஒரு வித்தியாசமான நாடாக அது உருவெடுத்தது. அப்படி போராடி, எதிரிகளை அழித்து ரத்த வெள்ளத்தில் புதிய நாடொன்றை உருவாக்க வேண்டியிருந்ததால், அமைதியும் மகிழ்ச்சியும் தாண்டவமாடுகின்ற சூழ்நிலையை அந்த நாட்டில் உருவாக்க முடியாமல் போய்விட்டது.
பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகப் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது அல்லவா> அந்த பிரிவினையில் எல்லைப் பிரச்னை தோன்றி வேறு ஒரு புதிய வன்முறைக்கு வித்திட்டுவிட்டது. பஞ்சாப் பிரிந்த பின்பு மேற்கு பஞ்சாபில் இருந்த சீக்கியர்களும் இந்துக்களும் உயிருக்கு பயந்து இந்தியாவை நோக்கி ஓடத் துவங்கினர். அது போலவே கிழக்கு பஞ்சாபில் மாட்டிக் கொண்ட முஸ்லிம்கள் பாகிஸ்தானை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.
அகதிகளாக இப்படி ரயிலும், வண்டிகளிலும், நடந்தும் மூட்டை முடிச்சுகள், குழந்தைகள், பெண்கள் என்று வரும் அகதிகள் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். அவர்களது பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இப்படி அப்போதைய மேற்குப் பகுதியில் வாழ்ந்த பெரும் பணக்காரர்களும் குடும்ப உறுப்பினர்களை இழந்து, பொருளை இழந்து அநாதைகளாக, அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். ரயிலை மறித்துத் தாக்கியதில் ஒரே ரயிலில் மாண்ட இந்து, சீக்கியர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது. கற்பைக் காப்பாற்றிக் கொள்ள கிணறுகளில் குதித்து உயிர்விட்ட பெண்கள் ஏராளம். ஒரு கிணற்றிலிருந்து மட்டும் 160 பிணங்கள் மீட்கப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி அவர்கள் வைத்த தீ அவர்களையும் திருப்பித் தாக்கத் தொடங்கியது. அதன் வெப்பத்தையும் வேதனையையும் உணரத் தொடங்கிய நிலையில், முஸ்லிம் லீக் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பும் அகதிகளுக்குப் போலீஸ் காவல் கொடுக்க ஒப்புக் கொண்டது. இந்தியாவும் இங்கிருந்து பாகிஸ்தான் செல்வோருக்கு அதுபோன்ற போலீஸ் காவல் கொடுக்க ஒப்புக் கொண்டது. ஒரு அகதிகளின் வரிசை ஒன்றாக சுமார் பத்து, பதினைந்து மைல் நீளம் கூட இருந்தனவாம். ஒரு அணிவகுப்பு மட்டும் 53 மைல் நீளம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு பயந்து உடைமைகளை இழந்து எதிர்கால இருட்டில் வாழ்வின் வெளிச்சத்தை நாடி ஓடிவந்த அந்த அகதிகளின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லையே!
இப்படி இடம் பெயர்ந்து அகதிகளாக ஓடி வந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம் பேர் என்கின்றன அரசு ஆவணங்கள். இதில் கொல்லப்பட்டவர்கள் ஐந்து லட்சம், தூக்கிச் செல்லப்பட்டு, கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர். பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
பல லட்சம் பேர் தில்லியை நோக்கி ஓடிவந்தனர். அப்பொது தில்லி மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு அகதிகள். அப்படி வந்தவர்கள், மனைவியைப் பிரிந்தவர்கள், கணவனைப் பறிகொடுத்த பெண்கள், குழந்தைகளை உறவினர்களை இழந்தவர்கள், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து பரதேசிகளாக வந்து புகுந்தவர்கள் ஏராளமானோர். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல வெறி பிடித்தவர்களைப் போல தொலைந்து போன வாழ்க்கையைத் தேடி நம்பிக்கையோடு தில்லிக்குள் அகதிகளாகப் புகுந்தனர்.
அப்படி வந்தவர்கள் சொன்ன செய்திகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட மிருகத்தனமான கொடுமைகள், கொலை கொள்ளை பற்றிய செய்திகள், தங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஈனச் செயல்கள், பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் ஈட்டியாலும், வாளாலும் குத்திக் கிழித்த நெஞ்சைப் பிளக்கும் செய்திகள் இவை தான். இவர்கள் வரவால் தில்லி சூடாகிப் போயிற்று. அங்கு வகுப்புக் கலவரம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. அப்போது வன்முறையைக் கைவிட வேண்டி வல்லபபாய் படேல் அகதிகள் நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசியதன் சுருக்கம் இதோ:
“ஒரு பாவமும் அறியாத பாதுகாப்பற்ற ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கசாப்புக் கடைக்காரனைப் போல் வெட்டிச் சாய்ப்பது என்பது வீரர்களுக்கான தகுதி அல்ல. கானகத்தில் மிருகங்கள் போடும் சண்டையைப் போன்றது இது. இவை அனைத்துமே மனிதத் தன்மையற்ற அநாகரிகச் செயல்கள்.
முக்கியமான ஒரு வேண்டுகோளை நான் இப்போது உங்கள் முன்பாக வைக்கிறேன். அதாவது முஸ்லிம் அகதிகள் எந்தவித அச்சமும் இல்லாமல், பாதுகாப்பாக நம் நாட்டின் எல்லையைக் கடந்து அவர்கள் போகவேண்டிய இடங்களுக்குச் செல்ல உதவுவது என்று நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட செயல் உங்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் கொடுக்கும்.
மேற்கு பஞ்சாபிலிருந்து வரும் அனைத்து இந்து, சீக்கிய அகதிகளுக்கும், வங்காளத்தில் கிழக்கு வங்காளத்துக்குப் போகும் எல்லா முஸ்லிம் அகதிகளுக்கும் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்க இந்தியா முழு பொறுப்பையும், உறுதியையும் கொண்டுள்ளது. நம் ஒவ்வொருவருடைய நன்மையைக் கருதியும் இந்த மாபெரும் இடப் பெயர்ச்சி அமைதியாகவும், சிரமங்கள் இன்றியும் நடைபெற்றாக வேண்டும். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்”
-என்றார் படேல்.
1947 ஆகஸ்ட் 7-ஆம் தேதி மீண்டும் காந்திஜி கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய நாள் காந்திஜியும் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்து அன்று முழுவதும் நூல் நூற்றனர். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறது. தில்லியில் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். அன்று நள்ளிரவுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக லார்டு மவுண்ட் பேட்டன் இருப்பார் என்ற அறிவிப்பு வெளியானது.
பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக வல்லபபாய் படேலும் பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம் பற்றியும், அப்போது ஜவஹர்லால் நேருவின் உரையையும் அடுத்த பகுதியில் காணலாம்.
(கர்ஜனை தொடர்கிறது)
$$$