நாகரீகத்தின் ஊற்று

-மகாகவி பாரதி

(4 பிப்ரவரி 1921)

ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரி ஸ்தானத்திலிருந்தவராகிய ஸ்ரீமான் க்ளெமான்ஸோ சில தினங்களாக இந்தியாவில் ஸஞ்சாரம் பண்ணி வரும் செய்தி நம் நேயர்களுக்குத் தெரிந்ததேயாம். இவருக்குச் சில நாட்களின் முன்னே பம்பாயில் நடந்த விருந்தின்போது இவர் செய்த ப்ரஸங்கத்தில் பின்வரும் ஸார மயமான வாக்யம் காணப்படுகிறது :–

‘’ப்ரான்ஸிற்காக இரத்தம் சிந்திய மக்களைப் பெற்ற தேசத்தை வந்து பார்த்தது எனக்குப் பெருமையுண்டாக்குகிறது. ப்ரெஞ்ச் குடும்பங்களுடன் இந்திய சிப்பாய் களிருந்த போது நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மரியாதையும் அன்பும் ப்ரான்ஸ் தேசத்தாரை மோஹிக்கும்படி செய்தன. கீழ்த்திசையானது நாகரிகத்தில் குறைந்ததன்று. அன்பு மானுஷீகம் என்பவற்றிற்குரிய மஹோந்நத லக்ஷ்யங்களெல்லாம் கீழ்த்திசையிலிருந்து வந்தன. மேற்குத் திசையார் அவற்றை ஸ்வீகரித்துத் தம்முடைய லக்ஷ்யங்களாகச் செய்துகொண்டனர். எனவே, உங்களைக் காட்டிலும் உயர்ந்த நாகரிகத்தின் ப்ரதிநிதியாக என்னை மதித்து நான் உங்களோடு பேசவில்லை. (இந்தியாவாகிய) நாகரிகத்தின் ஊற்றை நோக்கி நீஞ்சி வந்தவனாக என்னை மதிக்கிறேன்’’ என்றார்.

இவர் யார்? ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரியாக இருந்து அதி ஸமீப காலத்தில் விலகியவர். வெறும் இலக்கியப் படிப்பு மட்டும் உடையவரல்லர். மிகவும் பழுத்த லெளகிகத் தேர்ச்சியும், ஐரோப்பிய ராஜ்தந்த்ரத்தில் மஹாகீர்த்தி வாய்ந்த நிபுணத் தன்மையு முடையவர். இவரே பத்து வருஷங்களுக்கு முந்தி இவ்விதமாகப் பேசி யிருக்கமாட்டார். இரண்டு வருஷங்களுக்கு முன் இப்படிப் பேசியிருக்க மாட்டார்; நினைத்துக்கூட இருக்க மாட்டார். ஐரோப்பிய நாகரிகமே மேம்பட்டதென்று நினைத்திருப்பார். இன்றைக்கு இந்தியாவை வந்து கூடியவரை நிஷ்பக்ஷபாதமான, தெளிந்த விழிகளுடன் பார்க்கும் போது, இந்த எண்ணம் இவர்மீது வற்புறுத்தப்படுகிறது. இவருடைய வசனத்தை நன்றாக ஊன்றிப் படிக்கும்படி நம்மவர்களை வேண்டுகிறேன். இவர் என்ன சொல்லுகிறார்? ஐரோப்பிய நாகரிகத்தின் பரம லக்ஷ்யங்கள் அவர்கள் எதிர்காலத்தில் நிறைவேற்றக் கருதும் தர்மங்கள், ஐரோப்பாவுக்கு சொந்தமல்ல வென்றும் அவை கீழ்த்திசை யிலிருந்தே கிடைத்தன வென்றும் சொல்லுகிறார். நாமே ஐரோப்பாவுக்கு லக்ஷ்ய தானம் செய்தோமென்றும் நம்முதவியின்றி அவர்கள் இன்னும் பச்சை குத்திய நிர்வாணமான காட்டு ஜனங்களாகவே யிருந்திருப்பார்களென்றும் அங்கீகரித்துக் கொள்ளுகிறார்.

ஆசியாவிலிருந்து நாகரிகம் ஐரோப்பாவுக்குச் சென்றது. ஆசியாவின் நாகரிகத்துக்கு மூல ஸ்தானம் நமது பாரத வர்ஷம். ஆனால் முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையி லில்லாதிருப்போமானால் நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து ஸ்ரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது. எனினும் நாம் உலகத்திற்குப் புது வழி காட்டத் தகுதியுடையோமென்பதை ருஜுப்படுத்தி யிருக்கிறோமேயன்றி இன்னும் அந்த ஸ்தானத்தில் நாம் உறுதிபெறவில்லை.

“மேற்குத் திசையிலிருப்பதுபோலவே இங்கும் மனிதர், பரஸ்பரம் அன்பு செலுத்தும்படி விதித்த கடவுளின் கட்டளையை மறந்து, ஒருவருக்கொருவர் விரோதிப்பதையும் கொலை புரிவதையும் கண்டு நான் வ்யஸனப் படுகிறேன்’’ என்று ஸ்ரீ க்ளெமான்ஸோவே சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த ஸமயத்தில் இந்தியாவில் பரவிவரும் ஸாத்விக தர்மக் காற்றை சுவாஸியாம லிருப்பாரானால், ஸ்ரீ க்ளெமான்ஸோவின் வாக்கில் இந்த வார்த்தை உதித்தே யிராதென்று நான் நிச்சயமாகக் கூறுவேன். இப்போது ஸ்ரீ க்ளெமான்ஸோ பாரீஸ் நகரத்திலிருந்தால் அங்கு மறுபடி வீசி வரும் ஜெர்மானிய விரோதக் காற்று இவரையும் தாக்கி, இவருடைய புத்தி ஸாத்விக நெறிகளிலே செல்ல இடங் கொடுத்திராது.

எனவே, இந்தியா அன்பு நெறியால் வலிமை யோங்கி உலகை நடத்த வேண்டுமென்ற கொள்கையை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆசாரத்தின் ஆரம்பக் கலைகளே மிகவும் ஆச்சர்யமாக, உலகத்தாரெல்லாருங் கண்டு வியக்கும்படி யிருக்கின்றன. இனி இக் கொள்கை இந்தியாவில் மக்களுக்குள்ளே எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் பூர்ணமாக ஸ்தாபிக்கப்பட்டு விளங்கும் காலத்தைக் கடவுள் விரைவிலே அருள் செய்வாராகுக.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s