ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்

-மகாகவி பாரதி

இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் இங்கிலாந்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசம். எனவே அந்நாட்டின் சுதந்திர முயற்சிகளையும், அவற்றை நசுக்கும் பிரிட்டீஷ் அரசையும் இக்கட்டுரையில் தோலுரிக்கிறார் மகாகவி பாரதி.  “உலகமெங்கும் ஸமத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்றொரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப்படும்?” என்ற கேள்வி அயர்லாந்துக்கு மட்டுமானதல்ல என்பதை மகாகவி பாரதியை அறிந்தோர் உணர்வார்கள்....

(19 நவம்பர் 1920)

இந்த மாதிரி தர்ம ஸமாசாரங்களைக் கொஞ்சம் மறை பொருளாக மூடின பாஷையில் சற்றே இரண்டர்த்தம் தோன்றும்படியாகப் பேசுவது இதுவரை மிஸ்டர் வாய்ட் ஜயார்ஜ் போன்ற “ராடிகல்” (வேர்த்திருந்த) ராஜ தந்திரிகளின் வழக்கமாக இருந்தது. அதிலும், அமெரிக்காவிடம் யுத்த மையத்தில் ஏராளமாகப் பணம் கடன் வாங்க வேண்டியிருந்த படியாலும், மற்றபடி ஆஹார வஸ்துக்கள், ஸேனைக்கு வேண்டிய பண்டங்கள், மனித பலம் முதலிய வேறு பல உதவிகளும் அவசியமாக இருந்த படியாலும், விடுதலை விஷயத்தில் ஏராளமான பக்தி, ஆவேசம் காட்டுவதும், விடுதலை மறுப்புக் கொள்கைகளை மிகவும் ஜாக்கிரதையான, இரண்டு பொருளுடைய மொழிகளில் மறைத்துச் சொல்வதும் ஆங்கில மந்திரிகளுக்கு அவஸரமாகவும் இன்றியமையாதன ஆகவும் ஏற்பட்டன. இப்போது சண்டை முடிந்துவிட்டது, அமெரிக்கா மேலே கடன் கொடுக்கக்கூடிய மனமில்லாது போய் விட்டதுமல்லாமல் ஜெர்மானியருக்காக ஒதப்பட்ட தர்ம ஸூத்ரங்களையெல்லாம் இங்கிலாந்தும் அனுஸரித்து ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று பல அமெரிக்கத் தலைவர் வற்புறுத்துகிறார்கள். கடன் கொடுக்கவும் மாட்டோம். நம் கீழேயிருக்கும் தேசத்தை வேறு வெட்டிட வேண்டுமென்று வற்புறுத்த வருவானாம். தர்ம ஸூத்ரங்களாம்! தர்ம ஸூத்ரங்கள் நம்முடைய எதிரிகளிடமுள்ள குற்றங்களை உலகத்தாருக் கெடுத்துக் காட்டுவதற்கு உதவியாகப் பாதிரிகளாலும் பண்டிதர்களாலும் அமைக்கப்பட்டன. நாம் செய்யும் அநியாயங்கள் நம்முடைய ஸெளகர்யத்துக்கு அவசியமானவை. ஸௌகர்யத்தைக் குறைத்துக் கொண்டு தர்ம ஸூத்ரங்களைக் கவனிப்பது நமக்குப் பொருந்தாது. இங்ஙனம் பர்யாலோசனை செய்து ஆங்கிலேய மந்திரிகள் விடுதலை மறுப்பு விஷயத்தை முன்போல் இன்பமான பாஷையால் மறைத்து வைக்கும் சடங்கைக்கூடக் கைவிட்டு முரட்டு பாஷையில் கெட்டியாக ஐர்லாந்துக்கு விடுதலை கிடையாதென்று ஸாதிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐர்லாந்து விஷயமான ரஸமிகுந்த லண்டன் ராய்ட்டர் தந்தியொன்று நேற்று வந்தது. அதன் விவரமான வடிவத்தை நேற்றைய மித்திரன் தந்திப் பக்கங்களிலே காணலாம். மிஸ்டர் ஆஸ்க் வித் (மாஜி ப்ரதம மந்திரி) இங்கிலாந்துக்கு ராணுவ விபத்துக்கள் ஏற்படாதபடி தடைகளேற்படுத்திக் கொண்டு மற்றப்படி ஸம்பூர்ணமான ஸ்வராஜ்யம் கொடுக்கவேண்டு மென்று பார்லிமெண்ட் ஸபையில் சொன்னார்.

எழுந்தார் லாய்ட் ஜ்யார்ஜ் மந்திரி. கத்தியைச் சுற்றத் தொடங்கிவிட்டார். மெய்யான உருக்குக் கத்தி யன்று; பாஷைக் கத்தி; வாக்கு வாள். ஐர்லாந்துக்கு ஸ்வாதீனம் கொடுத்த பிறகும்கூட பழைய புண்களை மறந்து ஐர்லாந்து இங்கிலாந்திடம் நட்புச் செலுத்துமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் நம்பவில்லை. அவரால் நம்ப முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறு குறு குறு குறு என்னுமாம். அவருடைய இனத்தார் பண்ணிய பிழைகளெல்லாம் அவருக்குத் தெரியாதா? எனினும், ஆங்கிலேயர் தம்மைப் போலே பிறரையும் நினைத்து ஸித்தாந்தங்கள் ஏற்படுத்துவது தவறென்றும் ஐரிஷ் ஜாதியாருடைய சரித்திரத்தை நோக்குமிடத்தே, அவர்கள் நெடுங்காலமாகக் கஷ்டப்பட்டு பரிசுத்தமடைந்த கூட்டத்தாராதலால், அவர்களுடைய மனம் கல்மனதாக இராமல் நன்றாகக் குழைந்து, பக்குவப் பட்டு, தெய்வபக்திக்கு வசப்படுவதாகச் சமைந்திருத்தல் விளங்குகிறதென்றும், ஆதலால், ஐர்லாந்து தனக்கு ஸ்வாதீனம் கிடைத்தால், விரைவிலே இங்கிலாந்தின் பழைய பிழைகளை மறந்து, இங்கிலாந்துடன் உண்மையான நட்புப் பாராட்டியே வருமென்றும் நான் நினைக்கிறேன். ஐர்லாந்துக்கு ஸ்வாதீனம் கொடுத்தால், அந்நாட்டிற்கும், இங்கிலாந்துக்கும் கேடு சூழும். பிற நாடுகளுக்கும் அஃதோர் தூண்டுதலாகுமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுகிறார். ஐரிஷ் துறைமுகங்களின் பரிபாலனம் இங்கிலாந்தின் கையின்றும் நழுவுமாயின் அதனால் இங்கிலாந்தின் ராணுவ சக்திக்கு பங்கம் நேருமென்றார். அங்ஙனம் நேரும்படி செய்யக்கூடிய எந்த ஏற்பாட்டையும் இங்கிலாந்து அங்கீகிரிக்க முடியாதென்கிறார்.

மற்ற குடியரசு நாடுகளுக்குள்ள ஸ்தாபனம் ஐர்லாந்துக்குக் கொடுக்க வேண்டுமென்று மிஸ்டர் ஆஸ்க்வித் வாயினால் சொல்லிய போதிலும், அவருடைய உட்கருத்து அப்படியில்லையென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் எடுத்துக் காட்டுகிறார். ஏனென்றால், ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுப்பதில் கடற் சண்டைத் தயாரிப்புக்களுக்கு ஸ்தலங்களாகக் கூடிய துறைமுகங்களின் மேற் பார்வை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரிடம் வைத்துக் கொள்ளலாமென்று மிஸ்டர் ஆஸ்க்வித் சொல்லுகிறார். அப்படியானால், கானடா, ஆஸ்திரேலியா முதலிய குடியேற்ற அரசுகளின் ஸ்தானத்தை ஐர்லாந்துக்குக் கொடுப்பதாக மாட்டாது ஏனென்றால், கானடா, ஆஸ்திரேலியா முதலிய குடியேற்ற நாடுகள் தம் துறைமுகங்களின்மீது பரிபூர்ணமான, வகுக்கப்படாத, தனியதிகராம் செலுத்தி வருகின்றன.

மேலும், 1918-ஆம் வருஷத்தில் ஐர்லாந்து தேசத்து “ஸின் பீன்” கக்ஷியார் ஜெர்மனியுடன் கலந்து ப்ரிட்டிஷ் அரசாட்சிக்கு விரோதமாக நடத்திய சூழ்ச்சியைப்பற்றிய அறிக்கை யொன்று சீக்கிரத்தில் ஸர்க்காரால் ப்ரசுரம் செய்யப்படுமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவித்தார்.

ஐர்லாந்து தேசத்துக் கடல் துறைகள் ப்ரிட்டனுக்கு எத்தனை விபத்தாக மாற்றத்தக்கன வென்பதும். ஸின்பீன்கள் அவற்றை எங்ஙனம் பயன்படுத்திச் சதியாலோசனை நடத்தினார்களென்பதும், அவர்கள் அங்ஙனம் பயன்படுத்த முடியாமற்போயினதெப்படி யென்பதும், அவர்கள் இங்கிலாந்து தன் கைக்குள் இறுகப் பிடித்துக் கொண்டிரா விட்டால் இன்னும் அப்படியே வேலை செய்வார்களென்பதும் ஸர்க்கார் ப்ரசுரம் செய்யப் போகிற அறிக்கையில் நன்றாக விளங்குமாம். ஆதலால், ஐர்லாந்தை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கும் கைப்பிடியை நெகிழ விடப் போவதில்லையென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுகிறார்.

இங்கு,

“மீ தெழும் மொக்குளன்ன யாக்கையை விடுவதல்லால்
சீதையை விடுவதுண்டோ, இருபது திண்தோள் உண்டா(க)?”

(நீர் மீதெழும் குமிழி போன்ற இந்த சரீரத்தை விட்டாலும் விடுவேனேயல்லாமல், என் உறுதியான தோள் இருபது மிருக்கையிலே, நான் ஸீதையை விடுவேனென்று நினைக்கவுஞ் செய்யலாமோ?)

என்று ராவணன் சொல்லியதாகக் கம்பர் எழுதியிருக்கிற வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. ராவணனுடைய கதி மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கும் வரக்கூடா தென்று நான் மனப்பூர்வமாகக் கடவுளை வேண்டுகிறேன். ஐர்லாந்து தன் கடற்படையையும் நிலப்படையையும் தன் இஷ்டப்படி சமைத்து நடத்துவதென்ற அம்சம் சேர்ந்த எந்த ஏற்பாட்டையும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொள்ள முடியாதென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை ஐயந்திரிபற, மிகத் தெளிவாக, எல்லோரும் உணரும்படி அழுத்திச் சொல்ல விரும்புவதாவும் அவர் தெரிவிக்கிறார். எந்தக் காலத்துக்குமா? அதாவது, யுகாந்தம் வரைக்குமா? உலக முடிவு வரை, எப்போதுமே ஐர்லாந்துக்குத் தன் இஷ்டப் படி படை சமைத்துப் பராமரிப்பதாகிய, மற்றக் குடியேற்ற நாடுகளுக்குள்ள உரிமை கிடைக்கக் கூடாதென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுவது எனக்கு ஒரு பக்கத்தில் வருத்தத்தையும் மற்றொரு பக்கத்தில் நகைப்பையும் விளைவிக்கிறது. விரைவில் ஐர்லாந்தின் விஷயத்துக்கு ஒரு முடிவேற்பட வழியில்லாமலிருப்பது பற்றி வருத்தமும், இப்படிப்பட்ட மந்திரிகள் வசம் இங்கிலாந்து அகப்பட்டுக் கொண்டு தாழ்வடைகிற தென்று வருத்தமும், மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் உலக முடிவுவரை ஐர்லாந்தை அடிமைப் படுத்தி ஆள முடியுமென்று நம்புவதை எண்ணுமிடத்தே பெரு நகைப்பும் தோன்றுகின்றன. இரும்புருளையா, நம் இஷ்டமான வரை நமது காலடியிலே போட்டிருப்பதற்கு! மனிதர் கூட்டமன்றோ? உலகமெங்கும் ஸமத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்றொரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப்படும்?

குடியேற்ற நாடுகளைப் போன்ற ஸ்தானம் ஐர்லாந்துக்குக் கொடுத்தால் உடனே மிகவும் எளிதாக, ஆறு லக்ஷத்துக்குக் மேல் ஏழு லக்ஷம் வரை கட்டாய ராணுவ ஸேவகம் விதித்து ஐர்லாந்தியர் பெரிய ஸேனை அமைத்துக் கொள்வார்களென்றும், அதினின்றும் இங்கிலாந்திலும் கட்டாய ராணுவ ஸேவகம் விதிக்க நேருமென்பதைத் தொழிற் கக்ஷியார் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் எச்சரித்தார். இதில், மிகவும் ரஸமான உபகதை யொன்று கிளைக்கிறது. அதாவது, கட்டாய ஸேவகம் வருமென்று பயமுறுத்துவதில் மிஸ்டர் லாயட் ஜ்யார்ஜ் தொழிற்கக்ஷியாரிடையே மட்டும் பெயர் குறிப்பிட்டுப் பேசியதன் நியாயமென்ன?

ஐர்லாந்துக்கு விடுதலை வேண்டுமென்பதில் அனுதாபமுடையோர் இங்கிலாந்தில் தொழிற் கக்ஷியாரிடையே மாத்திரந்தானா இருக்கிறார்கள்? மற்றக் கக்ஷியாரிடையே கிடையாதா? திருஷ்டாந்தமாக, ஸர்க்கார் உத்யோகம் கிடைக்கும் வரை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தாமே, ஐர்லாந்தின் விடுதலைக்காக மனமுருகிக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கவில்லையா? எனவே, தொழிற் கக்ஷியாரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டதன் காரணம் யாதென்றால் கட்டாய ராணுவ ஸேவகம் சட்டமாகும் பக்ஷத்தில் அது மற்ற திரவியவந்தர், வியாபாரிகள், உபாத்தியாயர் மந்திரிகள் முதலிய வகுப்பினரைத் தீண்டுவதைத் காட்டிலும் ஏழைத் தொழிலாளிகளையே அதிகமாகத் தீண்டுமென்ற விஷயம் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் மனதிலிருந்து, அது அவரை மீறியே, வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேசுகையில்: அவர் நாவிற்கு வந்துவிட்டது. இது நிற்க ஐர்லாந்தின் விஷயமாக மந்திரி லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லும் விஷயங்களை மீண்டும் கவனிப்போம்.

மேலும், ஐர்லாந்திலேயே, (ப்ராட்டஸ்டெண்ட்) வர்க்கத்தாரின் தொகையும் செல்வாக்கும் மிகுதிப்பட்டது இங்கிலீஷ் ஆட்சிக்குச் சார்பாக நின்று பொது ஐரிஷ் விடுதலையை எதிர்ப்பதுவுமாகிய அல்ஸ்டர் மாகாணத்தை அதன் ஸம்மதத்துக்கு மாறாக எந்தப் பார்லிமெண்டுக்கும் (அதாவது, ஐரிஷ் பார்லிமெண்டுக்கு) உட்படுத்துவதாக உத்தேசங் கிடையாதென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் அழுத்திக் கூறினார். அல்ஸ்டர் மாகாணத்துக்குத் தனிப் பார்லிமெண்ட் கொடுப்பதே, ஒற்றுமையை நிலை நிறுத்துவதற்குத் தக்க உபாயமென்று தெரிவித்தார். எந்த ஒற்றுமையை? ஐரிஷ் ஒற்றுமையையா? ஒரு தேசத்துக்கு இரண்டு பார்லிமெண்ட் கொடுத்து, அந்த தேசத்தை ஒற்றுமைப்படுத்துவது விநோதமான வழிதான். லண்டனில் ஒரு பார்லிமெண்ட், மான்செஸ்டரில் ஒரு பார்லிமெண்ட் வைத்து இங்கிலீஸ் ஒற்றுமையை அதிகப் படுத்தலாமென்ற யோசனையை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் அங்கீகாரம் செய்வாரா? ஐரிஷ் சுங்கத் தீர்வையும் வருமான வரியும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரின் ஆதிக்கத்தின் கீழேதான் வைத்துக்கொள்ளப் போகிறார்களாம். அதுவும் இன்றியமையாததுதானென்பதற்கு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஏதேதோ நொண்டி முகாந்தரம் சொல்லுகிறார்.

இந்தக் கொள்கைகளுடனே இவர்கள் செய்யப் போகிற ஸ்வராஜ்யச் சட்டத்தை ஐர்லாந்துவாஸிகள் தடி முனையாலேகூடத் தீண்ட மாட்டார்கள். இதை ஐர்லாந்தில் யாரும் சிறிதேனும் அங்கீகாரம் செய்துகொள்ள மாட்டார்களென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தாமே அங்கீகரிக்கிறார். அங்ஙனம் அவர் அங்கீகாரம் புரிந்தும், அவரும் அவருடைய கூட்டத்தாரும் பார்லிமெண்டில் ஸ்வராஜ்ய மசோதா வொன்றைக் கொண்டு விட்டுக்கொண்டு, முதல் வாதம், இரண்டாம் வாதம் முதலிய விளையாட்டுக்களில் ஏன் வீணாக நேரத்தைச் செலவிடுகிறார்களென்ற விஷயம் எனக்கர்த்தமாகவில்லை. ஒரு வேளை ஒரு நிஷ்ப்ரயோஜனச் சட்டத்தை மிகவும் படாடோபங்களுடன் செய்து முடித்துக் கையில் வைத்துக்கொண்டே– “நாங்களென்ன செய்வோம்? ஜர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கப் போனோம். அவர்கள் வாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள். எனவே, எங்கள் பொறுப்புக் கழிந்தது’’ என்று சொல்லித் தங்கள் மனஸாக்ஷிக்கும் அமெரிக்கர் முதலியவர்களின் கூக்குரலுக்கும் ஒரு கழிப்புக் கழித்துவிடலாமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜும் அவருடைய நண்பர்களும் நினைப்பதாகத் தோன்றுகிறது.

ஆனால், இங்ஙனம் நாடகம் காட்டுவதிலிருந்து ஐர்லாந்து வாஸிகள் ஸமாதான மெய்த மாட்டார்களென்பதையும் ஐர்லாந்தில் ஸமாதான மேற்படும் வரை இங்கிலாந்திற்கு ஸமாதானம் ஏற்பட வழியில்லை யென்பதையும் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒருங்கே மறந்து விட்டது பற்றி வருத்தப்படுகிறேன்.

  • சுதேசமித்திரன் (19.11.1920)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s