-ரேடியோ அண்ணா ஆர்.அய்யாசாமி
ரேடியோ அண்ணா என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்ட அமரர் திரு. ஆர்.அய்யாசாமி சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் (1963), வானொலியில் ஒலிபரப்பான சிறுவர் பாடல் இது.

நின்ற மக்கள் அஞ்சவும்
நிலம் அதிர்ச்சி கொள்ளவும்
குன்றுபோல வீதியில்
குதிரைவண்டி வந்ததே.
.
வண்டி வந்த வேகமும்
மண் பறந்த வேகமும்
கண்டு மக்கள் அஞ்சினர்
கதிலங்கிப் போயினர்.
.
உயரமான குதிரையும்
உறுதியான வண்டியாம்
பாய்ந்துவந்து மக்களை
பதறவைத்து வந்ததாம்.
.
குழந்தை ஒன்று தெருவிலே
கூச்சமின்றி இருந்ததாம்
எழுந்துபோகவில்லையாம்
இன்னல் அறியவில்லையாம்.
.
பாவம் என்றார், ஐயோ என்றார்
பார்த்து நின்ற மக்களே
தாவி எடுக்கத் துணிவில்லாத
சாரமற்ற மக்களே.
.
கடகடவென்றே குதிரை வண்டி
கடுகிப் பாய்ந்து வந்ததே
வெடவெடவென்றே நடுங்கி நின்றார்
வீரமற்ற மக்களே.
.
ஆசைபொங்க நாள் முழுதும்
அலைந்து வாங்கி வைத்திருந்த
ஈசன் சிலையைத் தரைமீதில்
எறிந்தான், களத்தில் வந்தானே.
.
குதிரை வண்டி வருமுன்னே
குறுக்கே பாய்ந்தான்; சிறுபிள்ளை
அதிராவண்ணம் கைப்பற்றி
அணைத்தான், அழைத்துச் சென்றானே.
.
நின்றார் கண்ணில் நீர் பாய
நெஞ்சம் வெட்கித் தலைசாய,
குன்றா வீரச் செயல் செய்த
குமரன் யாரென அறிவீரோ?
.
ஏழு வயது நிரம்பாத
இந்திய நாட்டின் பெருமகனாம்-
வாழும் வகையைப் பின்னாளில்
வையகம் எங்கும் சொன்னவனாம்.
.
வீரம் பேசி, அருள் பேசி,
மெய்யாய் ஞானச்சுடர் வீசி
யாரும் காணா நிலை கண்ட
ஐயன் விவேக ஆனந்தன்!
ஐயன் விவேக ஆனந்தன்!!
.
நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் வெளியிட்ட சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி மலர் – 2013
$$$