ஸ்வதந்திர கர்ஜனை- 2(29)

-தஞ்சை வெ.கோபாலன்

பகுதி: 2.28

முதல் பிரதமர் நேருவின் சுதந்திர தின நள்ளிரவு உரை (15.08.1947)

பாகம்-2:  பகுதி 29

ஜவஹர்லால் நேருவின் சுதந்திர உரை 

 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது.

அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர்  உரையாற்றுகிறார்.   மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்.

(தில்லியில், இந்திய அரசியல் சட்டத்தை  வகுப்பதற்கான  அரசியல்  நிர்ணய  சபையில்  1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரை).

அநேக ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம், இப்போது அந்த லட்சியம் கைகூடுவதற்கான நேரம் வந்துள்ளது; நாம் அன்று ஏற்றுக்கொண்ட சபதத்தை முழுமையாக மட்டுமல்ல, செறிவாகவும் நிறைவேற்ற வேண்டும்.

இரவு மணி 12 அடிக்கும்போது உலகம் தூங்கிக் கொண்டிருக்கும், இந்தியா உறக்கத்திலிருந்து விழிக்கும், சுதந்திரம் பெறும். அற்புதமான ஒரு தருணம் வாய்த்துள்ளது. வரலாற்றில் இப்படி எப்போதாவது ஒருமுறைதான் அபூர்வமான தருணம் வாய்க்கிறது; நாம் பழையனவற்றிலிருந்து புதியனவற்றுக்குள் அடியெடுத்து வைக்கிறோம்; ஒரு காலகட்டம் முடிந்து தேசத்தின் ஆன்மா விடுதலை பெறுகிறது. நீ்ண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டு தனது உள்ளத்திலிருக்கும் விருப்பத்தை அது தெரிவிக்கிறது.

இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மனித குலத்தின் எண்ணற்ற பிறருக்கும் சேவையாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள பொருத்தமான, புனிதமான தருணம் இதுவே.

வரலாற்றின் உதயத்தின்போது இந்தியத் தாய் தன்னுடைய முடிவில்லாத தேடலைத் தொடங்கியிருக்கிறாள்; பல நூற்றாண்டுகள் நெடுகிலும் அவளுடைய போராட்டங்களும், அவளுடைய மகோன்னதங்களும், அவளுடைய வெற்றிகளும் அவளுடைய தோல்விகளும் விரவிக் கிடக்கின்றன. நன்மைகள் ஏற்பட்டபோதும் தீமைகள் அண்டியபோதும் அவள் தன்னுடைய இலக்கிலிருந்து பார்வையை அகற்றவில்லை, லட்சியங்களையும் மறந்தாளில்லை; அவை தான் அவளுக்கு வலிமையைத் தந்த அருமருந்து. துரதிர்ஷ்டமான அடிமைக் காலகட்டத்தை நாம் இன்று முடிவுக்குக் கொண்டுவருகிறோம்; இந்தியத் தாய், தான் உண்மையில் யாரென்பதை இனி உணரத் தலைப்படுவாள்.

இன்று நாம் கொண்டாடும் வெற்றிகள் ஒரு படிக்கல் தான், வாய்ப்புகளுக்கான ஒரு திறவுகோல் தான், மிகப் பெரிய வெற்றிகளும் சாதனைகளும் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளவும், எதிர்காலம் நமக்கு அளிக்கவிருக்கும் சவால்களைச் சந்திக்கவும் நாம் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறோமா, புத்திசாலிகளாக இருக்கிறோமா?

சுதந்திரமும் அதிகாரமும் நமக்குப் பொறுப்பைக் கொண்டு வருகின்றன. இறையாண்மையுள்ள இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இறையாண்மை மிக்க இந்தச் சபைக்கு அந்தப் பொறுப்பு வந்து சேர்கிறது.

இந்த சுதந்திரத்தை அடைவதற்கு முன்னால் நாம் எல்லாவிதத் துயரங்களையும் அனுபவித்தோம், அந்த சோகமான நினைவுகளால் நம்முடைய இதயங்கள் கனத்து நிற்கின்றன. அந்தத் துயரங்களில் சில இப்போதும் தொடர்கின்றன. எது எப்படியிருந்தாலும் கடந்த காலம் முடிந்துவிட்டது, இப்போது எதிர்காலம் நம்மை இருகரம் நீட்டி அழைக்கின்றது.

எதிர்காலம் என்பது சுகமாக இருப்பதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ அல்ல; இதுவரை நாம் எடுத்த உறுதிமொழிகளையும் இன்று எடுக்கப்போகும் உறுதிமொழிகளையும் இடையறாது பாடுபட்டு நிறைவேற்றுவதற்குத் தான் எதிர்காலம் என்பது. இந்தியாவுக்கு சேவை செய்வது என்பது துயரத்தில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவை செய்வதுதான். அந்த சேவை என்பது வறுமையை ஒழிப்பது, அறியாமை இருளை அகற்றுவது, நோயற்ற வாழ்வை அளிப்பது, ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டின் வளங்களில் அனைவருக்கும் சமவாய்ப்பை அளிப்பது.

நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரிய மகானின் லட்சியமே ஒவ்வொரு கண்ணிலிருந்தும் வழியும் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதே. அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் - கண்ணீர் இருக்கும் வரை, துயரங்கள் தொடரும் வரை நம்முடைய பணிகள் முற்றுப் பெறாது.

எனவே கடினமாக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும், நம்முடைய கனவுகள் நனவுகளாக வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்காக மட்டுமல்ல, அவை உலகத்துக்காகவும் கூட; எல்லா நாடுகளும் எல்லா மக்களும் நெருக்கமாகப் பின்னி பிணைக்கப் பட்டுள்ளனர்; யாராவது ஒரு தேசத்தவரை விட்டுவிட்டு உலகை நினைத்துப் பார்க்க முடியாது. சமாதானம் என்பதை உடைக்க முடியாது என்பார்கள்; அதைப் போலத்தான் சுதந்திரமும், அதைப் போலத்தான் வளமும், அதைப் போலத்தான் பேரிடர்களும்! இந்த ஒரே உலகைப் பல துண்டுகளாக இனி உடைக்க முடியாது.

இந்தப் பெரிய சாகசத்தில் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்று, இந்திய மக்களுக்கு, அவர்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த அவை மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அற்பமான விமர்சனங்களுக்கோ, அழித்துவிடுவது போன்ற சாடல்களுக்கோ இது நேரமல்ல; பகைமை பாராட்டுவதற்கும் அடுத்தவரைப் பழிப்பதற்கும் இது சமயமல்ல. இந்தியத் தாயின் எல்லா குழந்தைகளும் வளமாகவும் வலிமையாகவும் வாழ, புதிய இந்தியா என்ற மேன்மைமிகு மாளிகையைக் கட்டி எழுப்புவதற்கான நேரம் இது.

எதிர்பார்த்த அந்த நாள் வந்துவி்ட்டது காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள் இது. நீண்ட கால உறக்கத்துக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகு, விழிப்புற்று, வலுவேறி, சுதந்திரமாக, தளைகளை அறுத்துக்கொண்டு இந்தியா நிமிர்ந்து நிற்கிறது.

கடந்த காலம் நம்மை ஏதோ ஒரு வகையில் இன்னும் பற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் நாம், கடந்த காலத்தில் அடிக்கடி எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தாக வேண்டும். வரலாறு நமக்குப் புதிதாகத் தொடங்குகிறது; இனி நாம் வாழ்ந்து செயல்படப்போவது தான் வரலாறு, அதை வருங்காலத்தில் மற்றவர்கள் எழுதப் போகிறார்கள்.

இது காலம் நிர்ணயித்த தருணம் -  இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன், உலகத்துக்கே கூட. புதிய நட்சத்திரம் வானில் உதயமாகிறது, கீழை நாட்டின் சுதந்திரம் என்ற நட்சத்திரம் அது. ஒரு புதிய நம்பிக்கை நிறைவேறத் தொடங்குகிறது, நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த காட்சி கண் எதிரே விரிகிறது. இந்த நட்சத்திரம் என்றைக்கும் ஒளிவீசி வாழட்டும்! இது ஏற்படுத்தும் நம்பிக்கை என்றைக்கும் பொய்க்காமல் வலிமையோடு விளங்கட்டும்.

கவலை மேகங்கள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நம்மில் பலர் துயரில் ஆழ்ந்திருந்தாலும், கடினமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், இந்தச் சுதந்திரத்தில் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம், கொண்டாடுகிறோம். ஆனால், இந்த சுதந்திரமானது பொறுப்புகளையும் சுமைகளையும் உடன் கொண்டுவருகிறது; சுதந்திர நாட்டின் கட்டுப்பாடான குடிமக்களாக இந்தச் சவால்களை எதிர்கொள்வோம்.

இந்த நன்னாளில் நம்முடைய சிந்தனையெல்லாம், இந்தச் சுதந்திரத்தை நமக்கு வாங்கித்தந்த தேசப்பிதாவை நோக்கித் தான் முதலில் செல்கிறது. இந்தியாவின் தொன்மையான உணர்வுகளுக்கு இலக்கணமாகத் திகழும் அவர் சுதந்திர தீபத்தையேற்றி, நம்மைச் சுற்றியிருந்த அடிமை இருளைப் போக்கினார்.

அவருடைய போதனைகளுக்கு ஏற்ப நடக்கும் அருகதையற்ற சீடர்களாக, அவர் போதித்த உண்மைகளிலிருந்து நாம் விலகிச் சென்றோம். ஆனால், நாம் மட்டும் அல்ல. இனி வரும் தலைமுறைகளும் இந்தியாவின் அரும்புதல்வரான அவருடைய போதனைகளைத் தங்களுடைய இதயங்களிலே பொறித்து வைத்துக்கொள்ளும்.

தன்னுடைய நம்பிக்கைகளில் ஆழ்ந்த பற்றும் நெஞ்சுரமும், எதையும் எதிர்கொள்ளும் வலிமையும் எளிமையும் கொண்டவர் அவர். எப்படிப்பட்ட காற்று வீசினாலும் எப்படிப்பட்ட சூறாவளி தாக்கினாலும் அவர் ஏற்றிவைத்த சுதந்திரம் என்ற சுடரை அணையாமல் காப்போம்.

அடுத்து நம்முடைய எண்ணமெல்லாம் பெயர் தெரியாத, லட்சக் கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்கள், வீரர்கள் பக்கம் திரும்புகிறது; ஒரு பாராட்டோ, ஒரு பரிசோ எதிர்பாராமல், இந்த நாட்டின் விடுதலைக்காகத் தங்களுடைய இன்னுயிரைக் கூடப் பலியாகக் கொடுத்திருக்கிறார்கள்.

அரசியல் எல்லைக்கோடுகளால் நம்மிடமிருந்து இன்று பிரிந்து விட்ட, நம்மோடு சுதந்திரத்தைக் கொண்டாட முடியாமல் துயரில் வாடுகின்ற, நம்முடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள்; எது நடந்தாலும் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாகவே இனியும் இருப்பார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியிலும் துக்கங்களிலும் நாம் பங்கேற்போம்.

எதிர்காலம் நம்மை அழைக்கிறது, நாம் எங்கே போவோம், எது நம்முடைய லட்சியமாக இருக்கும்? சுதந்திரத்தையும் வாய்ப்பையும் சாமானிய மனிதர்களுக்கு, இந்திய விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்குக் கொண்டு செல்வோம். வறுமையையும் அறியாமையையும் நோய்களையும் ஒழிக்கப் போராடுவோம். ஜனநாயக உணர்வுமிக்க, வளமான, முற்போக்கான நாட்டை உருவாக்குவோம். அனைவருக்கும் நீதியையும்,  ஆண் - பெண் என்று இருபாலருக்கும் முழுமையான வாழ்க்கையையும் அளிக்கவல்ல சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்துவோம்.

கடுமையான வேலை நமக்குக் காத்திருக்கிறது. நம்முடைய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் வரை, எதிர்காலம் அவர்களை என்னவாகப் பார்க்க விரும்புகிறதோ அதுவாக அவர்களை மாற்றும் வரை, நமக்கு ஓய்வே கிடையாது.

மிகப் பெரிய நாட்டின் குடிமக்கள் நாம். மிகப் பெரிய முன்னேற்றத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை எட்ட வேண்டும். நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உரிமை, சலுகை, கடமை ஆகியவற்றில் சமமான பங்குள்ளவர்கள். மதவாதத்தையோ குறுகிய எண்ணங்களையோ நாம் ஊக்குவிக்க முடியாது. எண்ணங்களிலும் செயல்களிலும் குறுகிய புத்தி உள்ள மக்களைக் கொண்ட எந்த நாடும் வலிமையான நாடாக வளர முடியாது.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் வாழ்த்து தெரிவிப்போம். உலகில் சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் வலுப்பட நாம் ஒத்துழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிப்போம்.

இந்தியாவுக்கு, நம்முடைய பாசம்மிக்க தாய்நாட்டுக்கு, மிகவும் புராதனமான, காலம்காலமாக இளமையோடு திகழும் நாட்டுக்கு நாம் நமது சிரம் தாழ்ந்த வணக்கத்தை இந்த நேரத்தில் செலுத்துவோம். இந்த தேசத்தின் சேவைக்காக நாம் நம்மை மீண்டும் பிணைத்துக்கொள்வோம்.

ஜெய் ஹிந்த்!”

சுதந்திர விடியல் தோன்றியது. புதிய அத்தியாயம் தொடங்கியது. அடிமைப்பட்டு, முதுகு வளைந்து, எல்லா வளங்களையும் இழந்து, புது வாழ்வைத் தொடங்கப் போகும் பாரத தேசம் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுடன்  மக்கள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் இந்த சுதந்திரத்துக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டு சிறைப்பட்டு உண்ணாவிரதங்கள் இருந்து இப்போதும் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நவகாளியில் ஆறுதல் கூறி சுற்றுப் பயணத்தில் இருந்தார் காந்திஜி.

தில்லியின் வண்ணமிகு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில்  அவர் கலந்து கொள்ளவில்லை.

(கர்ஜனை தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s