இன்றைய இந்தியாவை உருவாக்கியவர் விவேகானந்தர்

– நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

விடுதலைப் போராட்ட வீரர் ஸ்ரீ  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டவர். சுவாமிஜி பற்றிய நேதாஜியின் கட்டுரை இது…

சுவாமி விவேகானந்தரைப் பற்றி நான் நினைத்தாலும், எழுதினாலும் என் மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது. அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பும், உரையாடல்களின் தொகுப்பும், அவர் எழுதிய மற்ற நூல்களையும் சொற்பொழிவுகளையும் விடச் சுவையானதாக இருக்கின்றன.  அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பலருக்குக் கிடைத்தபோதிலும், அவரை உண்மையில் ஒரு சிலர் தான் அறிந்துகொள்ள முடியும்.

அவரது குணங்களும் அறிவாற்றலும் அவரது அறிவுரைகளைக் காட்டிலும், எழுத்துக்களைக் காட்டிலும் இந்திய மக்களை மிகவும் கவர்ந்தன என்றால் மிகையாகாது. சுவாமிஜி வேகம் உடையவர். அவர் சுயநலமற்ற தியாகமும், தளராத ஊக்கமும், கரை காண இயலாத அன்பும் உடையவர். பரந்த அறிவும் ஆழ்ந்த எண்ணங்களும் கொண்டவர். எதிர்த்துப் போராடுவதில் மனஉறுதி உடையவர். என்றாலும் அவர் குழந்தை உள்ளம் கொண்டிருந்தார். அவர் நமது நாட்டின் அரும்பெரும் செல்வமாக இருக்கிறார்

“அவர் நம் பாரத மாதாவையே தெய்வமாகத் தொழுதவர்” என்று சகோதரி நிவேதிதை, தான் எழுதிய சுவாமி விவேகானந்தர் பற்றிய, ‘Master As I Saw Him’ என்ற நூலில் குறிப்பட்டிருக்கிறார்.

தொண்டருக்குத் தொண்டன்:

சுவாமி விவேகானந்தர் போலி வேதாந்தத்தை அறவே வெறுத்தவர். “எனது இளம் நண்பர்களே, வலிமை உடையவர்களாக இருங்கள். இதுவே நான் உங்களுக்கு வழங்கும் அறிவுரை. கீதை படிப்பதை விடக் கால்பந்தாடுவதன் மூலம் நீங்கள்  சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.

அவர் வேதாந்தியாக இருந்தாலும், புத்தரிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், “சுவாமிஜி! நீங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவரா?” என்று கேட்டார். அதற்கு உடனே சுவாமிஜி இதயம் நெகிழ்ந்து, “நான் புத்தரின் தொண்டருக்கும் தொண்டன்” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.

“சங்கரரின் அறிவையும், புத்தரின் அன்பையும் ஒன்றாகப் பெறுவது தான் என் லட்சியம்” என்று, அடிக்கடி சுவாமிஜி சொல்வது வழக்கம்.

மற்றொரு சமயம் சுவாமி விவேகானந்தர், இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர், இயேசுவைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். அதற்கு உடனே சுவாமி விவேகானந்தர், “நாசரேத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் நான் இருந்திருந்தால், அவரது திருவடிகளை என்னுடைய கண்ணீரால் அல்ல, என் இதய ரத்தத்தால் கழுவியிருப்பேன்” என்று பரவசத்துடன் கூறினார்.

உண்மை மனிதன்:

ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். பின்வரும் அவருடைய அறிவுரைகளை, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்:

“தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அறியாமை மிக்கவர்கள், ஏழைகள், கல்வியறிவற்றவர்கள், சக்கிலியர், தோட்டிகள் ஆகியவர்கள் அனைவருமே உன்னுடன் ரத்தத் தொடர்புடைய நெருங்கிய உறவினர்களே, உன் உடன்பிறந்த சகோதரர்களே என்பதை நீ மறந்துவிடாதே.”

 “இந்தியாவின் ஏழை மக்களே நாம் வணங்கும் தெய்வங்கள்.”

“இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன் என்று சொல்.”

 “கௌரி நாயகனே! ஓ உலக நாயகியே! என் பலவீனத்தைப் போக்கி எனக்கு ஆண்மை யைக் கொடு. என்னை உண்மை மனிதனாக்கு என்று இரவும் பகலும் திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய். ”

வலிமை:

சுவாமிஜி வீரமும் ஆண்மையும் கொண்டவர். எதையும் ஆராய்ந்து பார்ப்பதும், தீமையை எதிர்ப்பதும் அவரது நிறைவான குணங்கள். அவர் சக்தி உபாசகரும் கூட. நமது நாட்டு மக்களின் கௌரவத்தை உயர்த்தும் வகையில், அவர் வேதாந்தத்திற்கு நடைமுறைக்கு ஏற்ற விளக்கம் கொடுத்தார். அவர் நல்லொழுக்கப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். “வலிமை, வலிமை…. உபநிஷதங்கள் இதைத் தான் கூறுகின்றன” என்று, அவர் சொல்வது வழக்கம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

சிறந்த மக்கள்:

ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களும், சுவாமி தயானந்தரும் கையாண்ட செயல்முறைகளை சுவாமிஜி விரும்பியதில்லை. “மனிதனை மனிதனாக்குவதே என் நோக்கம்” என்று, சுவாமி விவேகானந்தர் சொல்வது வழக்கம்.

‘நாடு சிறந்த மக்களை ஊக்குவித்து வளர்த்தால் அது இந்தியாவை உருவாக்கும் பணிகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு உதவும்’ என்று அவர் உணர்ந்திருந்தார். தன்னுடைய சீடர்களைச் சிறந்த முறையில் உருவாக்குவதற்கு, அயராமல் உழைத்தார். சீடர்களின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதும் இல்லை; அவர்களின் தனித்தன்மைகளை ஒடுக்குவதையும் அவர் செய்ததில்லை. “ஒரு பெரிய மரத்தின் நிழலில் மற்றொரு பெரிய மரம் வளராது” என்று அவர் சொல்வது வழக்கம்.

மிகவும் உயர்ந்தவர்:

அவருடைய உயர்ந்த குணங்களைப் பற்றி எவ்வளவோ எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் எத்தனை எழுதினாலும், அந்த மகானின் உயர்வைப் பற்றி முழுமையாக எழுத முடியாது. அதை அளந்து கூறுவது எளிதல்ல. சுவாமி விவேகானந்தர் உயர்ந்தவர், ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவர், சுலபத்தில் நம்மால் எடைபோட முடியாதவர்.

ஆன்மிகத் துறையின் உச்சியை அடைந்திருந்த அவர், தனது வாழ்நாட்களை இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் அர்ப்பணித்தார். அவர் இப்போது உயிருடன் இருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையில் இன்றைய இந்தியா அவரால் உருவாக்கப்பட்டதாகும்.

.

  • நன்றி: மீனாட்சி மலர் – 2010

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s