-சுவாமி அனந்தானந்தர்
உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி அனந்தானந்தர், சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது சுவாமிஜி குறித்து எழுதிய கட்டுரை இது...

நமது இளைஞர்களை நாம் எப்பாடுபட்டாவது காப்பாற்றியாக வேண்டும். காப்பாற்றுவது யார், எப்படி என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, திண்ணைப்பேச்சு பேசிக்கொண்டிருக்க இது நேரமில்லை.
சமுதாயப் பொறுப்பு என்பது 50 வருடங்களுக்கு முன் ஒவ்வொருவர் மனதிலும் தனியொரு இடத்தைப் பெற்றிருந்தது. சமுதாயப் பொறுப்பு தனிமனித மனங்களில் மேலோங்கியிருந்த நாள்களில் இளைஞர்களுக்கும், பொது இடங்களில் தகாத செயல்களைச் செய்யத் தடையாக ஒரு தார்மிக பயம் உருவாகி இருந்தது. அதனால் அவலங்கள் அரங்கேறாமல் தடுக்கப்பட்டிருந்தன.
இதுபோன்ற சமுதாயப் பொறுப்புணர்வு இன்று தனிமனிதர்களிடம் முற்றிலும் குறைந்து, யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன, நான் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள் என்ற விரக்தி மனோபாவம் எல்லோர் மனதிலும் அழுத்தமாக ஒட்டிக்கொண்டுள்ளது.
ஒரு கோணத்தில் பார்த்தால் இது ஒரு சமுதாய நோய். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற சமுதாய நோய் பரவியதற்கு முதல் காரணம் திரைப்படங்கள். நல்லதைப் பார்த்து கேலி செய்யும் பழக்கம் வேகமாக திரைப்படங்களின் மூலம் பரவச் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த நாட்டின் பாரம்பரியப் பண்பாடுகள் எல்லாம் கேலிக்குரியதாக்கப்பட்டன. நமது தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி ‘பட்டிக்காட்டு உடை’ என்று பரிகசிக்கப்பட்து. வெளிநாட்டில் இருந்து வருவதுதான் உயர்ந்தது, உன்னதமானது என்று அறிவு ஜீவிகளால் விளம்பரப்படுத்தப்பட்டு விதியாக்கப்பட்டது.
இதைவிட மோசமானது என்னவென்றால், நமது தேசத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்டத் தலைவர்கள்கூட இல்லை என்ற கருத்தில் வெளிநாட்டிலிருந்து பல தலைவர்கள், போராளிகள் இறக்குமதி செய்யப்பட்டது, செய்யப்படுவது. மாவீரன் பகத்சிங், ராஜகுரு, ஆசாதையும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையையும், ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போஸையும் விடவும் பெரிய மாவீரர்கள் வேறெந்த நாட்டிலும் பிறக்கவில்லை என்பதை நாம் ஏன் மறந்துவிடுகிறோம்?
இன்றைய இளைஞர்களுக்கு எல்லாமே வெளிநாட்டிலிருந்து வந்தால் தான் இனிக்கிறது. சொந்த நாட்டில் இருப்பவை எல்லாம் சுவையற்றவை என்ற எண்ணம் வந்துள்ளது. நமது பழைய பாரம்பரிய வேர்களின் மூலம் நல்லதை உறிஞ்சி எடுத்து ஊக்கம் பெற இன்றைய இளைஞர்களுக்கு உள்ளார்ந்த ஈடுபாடு இல்லை. அந்த ஈடுபாட்டை உருவாக்க சான்றோரும் அருகில் இல்லை.
ஆனால் காலத்தால் அழிக்கமுடியாத சில உன்னதத் தலைவர்கள் மறைந்த பின்பு கூட மாபெரும் சக்தியாக மாறி மக்களுக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய இந்தியாவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் இளைஞர்கள் என்று செய்திகள் சொல்கின்றன. இது ஒரு முக்கியமான விஷயம். 60 சதவீத இளைஞர்களுக்கு வழிகாட்ட ஒரு நல்ல தலைவன் நமக்கு அவசியம் தேவை. அந்த கோணத்தில் பார்க்கும்போது மக்கள்தொகையில் அதிக இடத்தைப்பிடித்துக் கொண்டு எதிர்கால இந்தியாவின் இணையற்ற தூண்களாக விளங்கப்போகும் நமது இளைஞர்களுக்கு ஒரு உன்னதத் தலைவனை நாம் அடையாளம் காட்டியாக வேண்டும்.
நாம் சரியான நேரத்தில், சிறந்த தலைவர்களை இளைஞர்களுக்கு அடையாளம் காட்டி இதயத்தில் பதிய வைக்காமல் போய்விட்டோம். அதன் விளைவு, இன்றைய இளைஞன் தனது தலைவனை சினிமாத் திரையில் தேர்ந்தெடுக்கிறான். தேர்ந்தெடுத்த தலைவனை மனக்கோயிலில் சிம்மாசனம் தந்து அமர வைக்கிறான். அந்த நிழல்த் தலைவனின் நிலையில்லாப் புகழை நித்தமும் பாடி சங்கீத ஆலாபனை செய்கிறான். நிழல் தலைவனின் வெளிப்புற ஒப்பனைகளை ஓயாமல் காப்பியடித்து தன் உடல்மீது ஒட்டவைத்துக் கொள்கிறான்.
உருவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறான்; உள்ளத்தில் உயராமல் குறுகி நிற்கிறான். திரையில் வந்த தீமைகளை மனதில் கலக்கிறான்; திறமைகளை வளர்ப்பதற்கோ மறந்து விடுகிறான்.
எதற்கும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் குணம் இளமையில் தான் இருக்கும். அந்த குணத்தை நல்ல விஷயங்களுக்காக போராடும் வகையில் திருப்பிவிட வேண்டியது சான்றோர்களின் சமுதாயப் பொறுப்பு.
இளமைப்பருவம் தான் சிறந்த எதிர்காலத்திற்கான நல்ல அடித்தளத்தை உருவாக்குவதற்கான உன்னதப் பருவம். இந்தக் காலகட்டத்தில் மனத்தை நன்கு உழுது பல நல்ல பண்புவிதைகளை விதைப்பதற்குச் செய்யப்பட வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இளம் மனம் என்ற நிலத்தை உழாமல் விட்டுவிட்டால், எண்ணற்ற களைகள் மண்டி பாழ்பட்டுப் போய்விடும்.
பயன்படுத்தப்படாத பாழ்நிலம் என்று தெரிந்தவுடன் பல கயவர்கள் வந்து இளம் மனதை ஆக்கிரமிப்பு செய்து சிறு சிறு குடிசைகள் போட்டு சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு குடிசைக்குள்ளும் சூதாட்டம், காமக்களியாட்டம் போன்றவை நடக்க ஆரம்பித்துவிடும். இதெல்லாம் ஆரம்பித்து பல வருடங்களாகிவிட்டன என்று ஒரு பேராசிரியர் என்னிடம் சொன்னார். வேதனை அதிகமானது.
நமது இளைஞர்களை இனியும் காப்பாற்றாமல் விட்டுவிட்டால், இந்தியாவையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இன்றைய நிலையில் இளைஞர்களைக் காப்பாற்ற நம் முன் ஒரு தெய்வீக வாய்ப்பு வந்து நிற்கிறது. அந்த மகத்தானதொரு வாய்ப்பு தான் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழா. இந்த நல்ல நேரத்தில் விவேகானந்தரை கொஞ்சமாவது நமது இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது மிகவும் அவசியமானது.
இந்த தேசத்தில் பிறந்த ஒரு ஆன்மிகத் தலைவரைப் பற்றி பெரும்பாலான இளைஞர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு தேசிய இழிவு. ஒரு சினிமாக் கதாநாயகனுக்கு கிடைக்கும் மரியாதைக்கூட இவர்களைப் போன்ற ஆன்மிகத் தலைவர்களுக்கு இளைஞர்களிடம் கிடைப்பதில்லை.
எவருடைய வாழ்க்கையை நன்றாக அறிந்தால் இளைஞர்களுடைய வாழ்வு முன்னேற்றம் அடையுமோ, அதுபோன்ற முன்மாதிரித் தலைவர்கள் எல்லாம் எளிதில் ஓரம் கட்டப்படுகிறார்கள். நேர்மை, தியாகம், விவேகம், சமுதாய நலன் ஆகியவற்றைத் தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்ட மாமனிதர்களும், மகான்களும் மறக்கப்படுகிறார்கள், மறக்கடிக்கப்படுகிறார்கள். கவர்ச்சிகளும், கண்ணியமற்ற பேச்சுகளும், தரம் தாழ்ந்த செயல்களும் இன்று இளைஞர்களை இறுக்கமாக கட்டிப்போட்டு வைத்துள்ளன. இந்த அவலட்சணமான கட்டுக்களை அவிழ்த்தெறியும் சக்தி விவேகானந்தருக்கு உண்டு.
அவருடைய வீரமொழிகள் ஒன்றிரண்டைப் படித்தால் கூட போதும், பல அவலட்சணக் கட்டுகள் அரைநொடியில் அறுத்தெறியப்பட்டு விடும். விவேகானந்தரின் சொற்களுக்கு மட்டும் அப்படியொரு வலிமை எப்படி வந்ததென்றால், அவர் இந்த நாட்டு மக்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். அதை அவரது வார்த்தைகளில் கேட்டால் தான் அவருடைய அன்பின் ஆழம் நமக்குப் புரியும்:
“எனது நாட்டின் மக்கள் முன்னேற்றத்திற்காக எலும்புகள் நொறுங்கும் வரையில் நான் உழைக்கப் போகிறேன். எனது நரம்புகள் வெடித்து சிதறும் வரையில் நான் வேலை செய்யப்போகிறேன். எனது தேச மக்களுக்காக நான் என் இதயத்தை உடைத்துக் கொள்ளவில்லை என்றால், வேறு யாருக்காக இதை செய்யப் போகிறேன்? அன்பு செலுத்துவதில் இப்படிப் பைத்தியமாகி விடும் பலவீனம் என்னிடம் உள்ளது”.
-ஆம், மக்களின் நல்வாழ்வுக்காகத் தன்னையே அழித்துக் கொள்ள சித்தமாக இருந்த சித்தபுருஷர் அவர்.
விவேகானந்தர் அளவற்ற அன்பை நமது தமிழ்நாட்டின் மீதும் தமிழக மக்கள் மீதும்தான் வைத்திருந்தார். “சென்னையைப் பற்றி எனக்கு எப்போதும் மிகப் பெரிய நம்பிக்கை உண்டு. இந்தியாவையே மூழ்கடிக்கக்கூடிய மிகப் பெரிய ஆன்மீகப் பேரலை சென்னையிலிருந்தே கிளம்பி வரப்போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது. சென்னை மாநில மக்களாகிய உங்களிடம் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். சென்னைவாசிகளான உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் சக்திக்கெல்லாம் மீறிய வகையில் எனக்கு உதவி புரிந்துள்ளீர்கள். கடவுள் உங்களை எப்போதும் காப்பாராக” – இது தமிழகம் பற்றியும், சென்னை பற்றியும் சுவாமி விவேகானந்தரின் பதிவு.
சுவாமிஜியின் 150-ஆவது ஜெயந்தி ஆண்டான இந்த வருடத்தில் தமிழகத்தில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும். குறிப்பாக நமது இளைஞர்களிடத்தில் இந்த எழுச்சி கொழுந்துவிட்டு எரிய வேண்டும். அதற்கு சிந்தனையாளர்களின் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
நல்ல சிந்தனைகள் அறிவின் கூர்மையால் தோன்றும். தோன்றிய சிந்தனைகளுடன் இதயப்பூர்வமான உணர்ச்சியைக் கலந்துவிட வேண்டும். மேலும், நல்ல சிந்தனைகள் தனி மனிதனுடன் நின்றுவிட்டால் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
சிந்தனையாளர்களிடம் ஒரு சிறிய கஷ்டம் உள்ளது. உயர்ந்த சிந்தனைகள் உள்ளவர்கள் சாதாரண மக்கள் நிலைக்கு இறங்கி வந்து செயல்பட கொஞ்சம் தயங்கி நிற்பார்கள். இதன் காரணமாகப் பல நல்ல சிந்தனைகள் சமுதாய ரீதியாக பயன்தராமல் போய்விடுகின்றன. எனவே நமது சமுதாயத்தில் உள்ள நல்ல சிந்தனையாளர்கள் கொஞ்சம் விவேகானந்தர் பக்கம் திரும்பினால் ஒரு நல்லது நடக்கும். வேறொன்றுமில்லை, ஒரு விஷயத்தைச் சிந்திக்கும்போது அறிவையும் இதயத்தையும் எப்படி இணைப்பது என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
எங்கள் வீட்டு இளைஞன் நல்லவனாக வேண்டும், சிறந்தவனாக வேண்டும், சாதனையாளனாகவும் மாற வேண்டும் என்று எண்ணும் பெற்றோர், தங்கள் வீட்டில் விவேகானந்தரின் ஒரு படத்தை மாட்டி வைக்கலாம். இயலாவிட்டால் அவருடைய உணர்ச்சிதரும் ஒரு பொன்மொழி அட்டையையாவது மாட்டி வைக்கலாம். இவை தினமும் இளைஞர்களின் கண்களில் படும். அது, நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை இளைஞன் மனதில் உருவாக்கும்.
இளைஞர்கள் மீது இன்னும் அதிகமான அக்கறை உள்ள நல்லவர்கள் விவேகானந்தரைப் பற்றிய ஒரு சிறு நூலை தன்னுடன் பழகும் இளைஞர்களுக்குப் பரிசாகத் தரலாம். விவேகானந்தர் புத்தகத்தின் ஒன்றிரண்டு பக்கங்கள் படித்தாலே போதும். இளைஞர்களுக்கு ஆற்றல் வரும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்ற வீரியம் வரும்.
ஏன் சுவாமி விவேகானந்தரை மட்டுமே குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது.“வேறு யாருக்குமே இல்லாத ஆற்றல், வேகம், அமானுஷ்ய சக்தி வீரத்துறவி விவேகானந்தருக்கு மட்டுமே உண்டு” என்று மகாகவி பாரதியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
“விவேகானந்தரைப் படித்த பிறகு தான் என்னுடைய தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமானது” என்று தேசப்பிதா மகாத்மா காந்தியும் கூறியிருக்கிறார். காந்திஜிக்கே தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமானது என்றால், நமது இளைஞர்கள் படித்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய தேசபக்தி நூறு மடங்காவது அதிகமாகாமல் போய்விடாது. விவேகானந்தரின் அன்பு கலந்த தவசக்தி இளைஞர்களிடத்தில் நிச்சயம் ஒரு மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரும்.
இளைஞர்களின் மகத்தான ஆற்றல் அழிவு பாதையில் பாய்ந்து கொண்டிருப்பது தடுக்கப்பட வேண்டும். ஆக்கபூர்வச் சிந்தனைகள் அவர்களிடம் வளர வேண்டும். அதற்கு வழிகோலுவது சமுதாயக் கடமை.
- நன்றி: தினமணி
$$$