மகாவித்துவான் சரித்திரம் – 2(7ஆ)

-உ.வே.சாமிநாதையர்

தமிழ்ப் புலமையில் மன்னரான திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், எளியவர்பால் இரங்கும் தன்மையும், நகைச்சுவை உனர்வும் மிகுந்தவர் என்பதை அவரது சரித்திரத்தை எழுதிய அவரது முதன்மை மானவர் உ.வே.சா. வாயிலாக அறிகிறோம். இந்த அத்தியாயம், மகாவித்துவா அவர்களின் கருணைக்கு ஒரு சிறு சான்று...

இரண்டாம் பாகம்

7. பட்டீச்சுர நிகழ்ச்சிகள் -ஆ


சுப்பையா பண்டாரம் மாம்பழம் வாங்கிவந்தது

பிள்ளையவர்களோடு உடனிருப்பவர்களிற் சுப்பையா பண்டாரமென்பவர் ஒருவர்; அவருடைய ஊர் திருவிடைமருதூர், ஆறுமுகத்தா பிள்ளைக்கு மைத்துனர். தமிழிற் சிறிது பயின்றவர். தமிழ்ப் பாடல்களிற் பிற்காலத்தனவாகிய சிலவற்றை மனனஞ் செய்து வைத்திருப்பவர். அப்பயிற்சியையே ஆதாரமாகக் கொண்டு தம்முடைய வறுமைத் துன்பத்தை மாற்றிக் கொள்ளுதற்குப் பல ஜமீன்தார்கள் முதலியோர்களிடம் போய் அவர்கள் நோக்கம் போலவே நடந்து அவர்களுடைய நிலைமையை அறிந்து பழைய பாடல்களை அவர்கள் பெயருக்கு மாற்றிச் சொல்லியோ வேறு பாடல்களைச் சொல்லியோ அவர்களை மகிழ்வித்துப் பரிசு பெற்றுக் காலங்கழிக்கும் இயல்பினர். தோற்றப் பொலிவுள்ளவர்; பிள்ளையவர்களையன்றி வேறு யாரையும் மதியார்; தைரியசாலி. இவருடைய காரியங்களைக் கவனித்துக்கொண்டு வருபவர். பாடம் கேட்கும் வழக்கம் மட்டுமில்லை; அதிற் பிரியமுமில்லை.

ஒருநாள் பகற்போசனத்திற்குப்பின் பிள்ளையவர்களுடன் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது மேற்கூறிய சுப்பைய பண்டாரத்தை நோக்கி மைத்துனரென்ற முறைமையால் ஆறுமுகத்தா பிள்ளை, “சுப்பையா, நீ அநேகரிடஞ் சென்று நூதனமான பாடல்களைப் பாடிப் பரிசுகள் பெற்று வருவதாகச் சொல்லுகிறாயே; அதனை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி இன்று கும்பகோணம் போய்த் தியாகராச செட்டியார் மீது ஏதாவது ஒரு பாடலியற்றிப் பரிசு பெற்று ஐயாவவர்களுக்குப் பிரியமான மாம்பழங்களை விலைக்கு வாங்கிவர முடியுமா?” என்றனர். அதனைக் கேட்ட இப்புலவர்பிரான் ஆறுமுகத்தா பிள்ளைக்குத் தெரியாதபடி, முடியுமென்று சொல்லும் வண்ணம் குறிப்பால் அவரைத் தூண்டினார். வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தாற் சொல்ல வேண்டுமா? உடனே அவர் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, “அவசியம் போய்ப் பாடல் செய்து சொல்லிக் காட்டி மகிழ்வித்துச் செட்டியாரிடம் பரிசு பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்” என்றார்.

ஆறு: ஒருநாளும் முடியாது.

சுப்: ஏன் முடியாது ?

ஆறு: உனக்குப் படிப்பில்லையே!

சுப்: எனக்குப் படிப்பில்லை யென்பதை நீர் கண்டீரா? எவ்வளவோ இடங்களுக்குப்போய்த் திரவிய முதலியவற்றைப் பெற்று வருகிறேனே; படிப்பில்லாவிட்டால் முடியுமா ?

ஆறு: படிப்பில்லாத இடமாகப் பார்த்துத்தான் நீ போய் வருகிறாய். எனக்கும் பிறர்க்கும் அது நன்றாகத் தெரியுமே.

சுப்: தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு என்பதுபோல் என் படிப்பை நீர் மதிக்கவில்லை.

ஆறு: செட்டியாரிடம் போனால் உன்னுடைய படிப்பு நன்றாக வெளியாகும்!

சுப்: அவர் என்ன செய்வார்?

ஆறு: உன் நரம்பை எடுத்துவிடுவார்; வெளிக்கிளம்ப வொட்டார்.

சுப்: நான் தான் அவர் நரம்பை எடுத்து விடுவேன். அவரிடத்தில் எனக்குக் கொஞ்சமேனும் அச்சம் இல்லை.

ஆறு: ஏன் அச்சமிருக்கும்? சிறிதேனும் படிப்பிருந்தாலல்லவோ படித்தவர்களிடத்தில் அச்சமுண்டாகும்; மகா மூடனாக இருக்கிற உனக்கு மகாபண்டிதராகிய அவரிடத்தில் எப்படி அச்சமுண்டாகும்? நீ மாத்திரம் அவரிடம் போய் ஒரு பாடலைச் சொல்லுவாயாயின் உன் சரக்கு வெளியாகும்.

சுப்: நீர் இப்படிச் சொல்வது என்னுடைய கெளரவத்திற்குக் குறைவாக இருக்கிறது.

ஆறு: உனக்கு என்ன கெளரவமிருக்கிறது? இருந்தாலல்லவோ அது குறையுமென்று நீ கவலைப்பட வேண்டும்?

சுப்: இருக்கட்டும். நீர் என்ன செய்யச் சொல்லுகிறீர்?

ஆறு: செட்டியார் மீது ஒருபாடல்செய்து பரிசு பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள் வர வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீ மனுஷ்யனேயல்ல.

சுப்: நீரென்ன சொல்லுகிறது? அப்படிச் செய்யாவிட்டால் நான் மனுஷ்யனல்லவென்று நானே சொல்லுகிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் புறப்படுதற்குத் தொடங்கினார்.

அதனைக் கண்ட ஆறுமுகத்தா பிள்ளை வழக்கம்போலவே சயனத்துக்குப் போய்விட்டார். அவர் நன்றாகத் தூங்கிவிட்டாரா வென்பதை அறிந்துவரச் செய்து இக்கவியரசர் தியாகராச செட்டியார் மீது புதிதாக ஒரு பாடலை இயற்றி எழுதுவித்து எழுதிய ஏட்டைச் சுப்பையா பண்டாரத்தினிடம் கொடுத்தனர். “இப்பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக்கொண்டு சென்று தியாகராசினிடம் நீர் செய்ததாகவே சொல்லிக் காட்டிப் பணம் பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள்ளே வந்துவிடும். அவன் என்ன சொன்னாலும் பயப்படாமல் எதிர்மொழி கொடும்; இதன் பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டுபோம்” என்று சொல்லி விட்டு அங்கே நின்ற மாணாக்கராகிய சரவணபண்டார மென்பவரை அவருடன் போய் வரும்படி அனுப்பினார். அந்தப் பாடலின் பொருளை நன்றாக அவருக்குப் போதித்தனுப்பும் வண்ணம் எனக்குக் கட்டளையிட்டார். பின்பு தாம் வழக்கம் போலவே சிரம பரிகாரஞ் செய்துகொள்ளத் தொடங்கினார்.

சுப்பையா பண்டாரம் இவர் சொன்னபடி என்னிடம் அச் செய்யுளின் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டு சட்டை முதலியன தரித்தவராகிக் கையிற் கோலொன்றை எடுத்துக்கொண்டு அந்தப் பாடலை நெட்டுருப் பண்ணிக் கொண்டும் பொருளைச் சிந்தித்துக் கொண்டும் சரவண பண்டாரத்துடன் தைரியமுடையவராகி ஊக்கமுற்றுக் கும்பகோணத்திற்குச் சென்று தியாகராக செட்டியாருடைய வீட்டையடைந்து விசாரித்தார். செட்டியார் இல்லை யென்பதை அறிந்து சுப்பையா பண்டாரம் அந்த வீட்டு வெளித் திண்ணையிலே இருந்தார்.

செட்டியார் 4  மணிக்குக் காலேஜிலிருந்து வந்தனர். வந்தவர் திண்ணையிலிருந்த அவரைக் கண்டு பரபரப்புடன், “ஐயாவவர்கள் வந்திருக்கிறார்களா?” என்று வினவவே, சுப்பையா பண்டாரம், “வரவில்லை; நான் மட்டும் இங்கே ஒரு காரியமாக வந்திருக்கிறேன்” என்றார். செட்டியார் வேகந் தணிந்து, “ஆனால் இங்கே இரும்; வந்துவிடுவேன்” என்று சொல்லி உள்ளே சென்று உத்தியோக உடைகளைக் களைந்துவிட்டு வேறு மட யொன்றைத் தட்டுடையாக உடுத்திக்கொண்டு விசிறியும் கையுமாகப் புறத்தே வந்து இருந்தனர்; பின்பு, “நீர் இவ்வளவு படாடோபமாக வந்த காரியமென்ன? வேறு யாரையேனும் பார்க்க வந்தீரா? ஐயாவவர்கள் ஏதாவது சமாசாரம் சொன்னதுண்டா?” என்று கேட்டார்.

சுப்: இல்லை; நான் உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறேன். வந்தது ஒரு காரியத்தை உத்தேசித்து; உங்கள் மீது ஒரு பாடலும் செய்து கொண்டு வந்தேன். தனியே எங்காவது சென்றால் இந்த வேஷத்தோடுதான் நான் போவது வழக்கம்; ஐயாவவர்களுடன் வந்தால் சாதாரணமாக வருவேன்.

தியாக: பாடல் செய்துகொண்டு வந்திருக்கிறேனென்று சொல்லுகிறீரே! உமக்குப் பாடல் செய்கிற வழக்கமுண்டோ ?

சுப்: ஏன் இல்லை? நான் செய்யுள் செய்வேனென்பது உங்களுக்கு மட்டும் தெரியாது. பல இடங்களுக்குப் போய்ப் போய்ப் பாடிப் பாடிப் பரிசு பெற்று வருவது எனக்கு வழக்கம்; என்னுடைய காலக்ஷேபத்திற்கு அதுதானே வழி. இது பலருக்கும் தெரியுமே.

தியாக: நீர் வெளியிடஞ் சென்று யாசகம் செய்துகொண்டு காலக்ஷேபம் செய்வதுண்டென்பது மட்டும் தெரியும். பாடல் செய்து கொண்டுபோய்ச் சம்பாதித்து வருவது இதுவரையில் எனக்குத் தெரியாது. பாடுவதென்றாற் படித்திருக்க வேண்டுமே!

சுப்: ஏன் படிக்கவில்லை? படித்திருக்கிறேனென்று சிலரைப் போல நான் பறையறைந்து கொண்டு திரிகிறதில்லை.

தியாக: படித்தவர்களெல்லாம் படித்திருக்கிறோமென்று சொல்லிக்கொண்டு தான் திரிகிறார்களா? நீர் சொல்வது நன்றாக இல்லையே. படித்திருந்தால் எப்படியும் பிறருக்குத் தெரியுமல்லவா? உம்மிடத்திற் புஸ்தகம் இருத்தலை நான் ஒருபொழுதும் கண்டதில்லையே. படிப்பிற்குரிய அடையாளத்தையும் உம்மிடம் இதுவரையில் நான் காணவில்லை. பிள்ளையவர்களோடு வந்து ஆகாரம் பண்ணிப் போவதை மட்டும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மதிப்புத்தான் உமக்கு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களைப் போலவே நீர் படித்துக் கொண்டிருந்ததையாவது பாடங் கேட்டதையாவது நான் இதுவரையில் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. அந்த விஷயம் இருக்கட்டும். நீர் செய்துகொண்டு வந்ததாகச் சொன்ன பாடலைச் சொல்லும்; கேட்கிறேன்.

சுப்:

புண்ணியமெல் லாந்திரண்ட வடிவென்கோ குறுமுனிவன் பொதிய நீத்திங்
கண்ணியதோர் வடிவென்கோ தமிழிலுள பலகலைகள் அனைத்துங் கூடி
நண்ணியதோர் வடிவென்கோ பின்னுமெந்த வடிவமென நாட்டு கோயான்
மண்ணியமா மணியனைய தியாகரா சப்புலவன் வடிவந் தானே.

தியாக: (புன்னகைகொண்டு): இதனை இன்னும் ஒருமுறை சொல்லும்.

சுப்: நல்லது அப்படியே. (பாடலை மறுபடியும் சொன்னார்.) எப்படியாவது என் பாடலை உங்கள் காதிற் போட்டு நன்மதிப்பைப் பெற்றுச் செல்ல வேண்டுமென்றே இங்கு வந்தேன்.

தியாக: இருக்கட்டும்; இந்தப் பாடலை நீரே செய்தீரா? வேறு யாரேனும் செய்து கொடுத்தார்களா? உமக்கு இப்படிப் பாட வருமா?

சுப்: ஏன் வாராது? நானே செய்தேன்.

தியாக: இதனை ஐயா அவர்களியற்றிய பாடலென்றே நிச்சயிக்கிறேன். எதற்காக இதை உம்மிடம் பாடிக் கொடுத்தார்கள்?

சுப்: நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு மிகவும் மானக் குறைவாக இருக்கிறது.

தியாக: நீர் செய்தது தானா ? உண்மையைச் சொல்லும்.

சுப்: அதில் என்ன சந்தேகம் ?

தியாக: பொருள் சொல்லுவீரா?

சுப்: திவ்யமாச் சொல்லுவேன்.

தியாக: முழுவதற்கும் சொல்ல வேண்டாம். இதிலுள்ள ‘என்கோ’ என்பதற்கு மட்டும் பொருள் சொன்னால் போதும். சொல்லும்; கேட்கிறேன்.

சுப்: அதற்கு, என்பேனோ வென்பது பொருள்.

தியாக: ‘என்கோ’ என்னும் சொற் பிரயோகத்தை வேறு எந்த நூலில் எந்த இடத்திற் கண்டிருக்கிறீர்? சொல்லும்.

சுப்: இடம் ஞாபகமில்லை.

தியாக: இடம் தெரியாதபோது நீர் இந்தச் சொல்லை அறிந்தது எப்படி? எனக்குச் சந்தேகமாகத் தான் இருக்கிறது.

சுப்: நீங்கள் செய்யும் செய்யுட்களில் பிரயோகிக்கிற சொற்களுள்ள இடங்களெல்லாம் உங்களுடைய ஞாபகத்திலிருக்குமா? பழக்கத்தினாலே வந்துவிடுமல்லவா?

தியாக: வீண் பேச்சை இப்பொழுது நீர் பேச வேண்டாம். இந்தப் பாடலை எதற்காக அவர்கள் செய்தனுப்பினார்கள்? சொல்லும்.

சுப்: திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்களே. நான் தான் பாடி வந்தேன். வந்த காரியத்தைக் கேட்டு முடித்து அனுப்பக் கூடுமானால் அனுப்புங்கள். இல்லையானால் முடியாதென்று சொல்லி விடுங்கள்.

தியாக: சரி. இதில் ‘ என்கோ’ என்பதில் ஓகாரத்தை ஏற்ற மொழி எது? ஓகாரம் என்ன பொருளில் வந்தது? சொல்லும்.

சுப்: நீங்கள் பாடிய பாடல்களிலுள்ள சொற்களுக்கெல்லாம் இலக்கணம் சொல்லுவீர்களா?

தியாக: வீணான தைரியப் பேச்சினால் ஒரு பயனும் இல்லை காணும்! இந்தச் செய்யுள் நீர் பாடியது அன்றென்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுவிட்டேன். நீர் என்ன சொன்னாலும் நம்பேன். இந்த மாதிரி பாடுகிறதென்றால் எவ்வளவு படித்திருக்க வேண்டும்?

சுப்: படிக்காமலே கம்பன் காளிதாஸன் முதலியோர் பாடவில்லையோ?

தியாக: அவர்கள் படிக்கவில்லை யென்பதை நீர் கண்டீரா?

சுப்: வரகவியென்று சிலர் இப்பொழுதும் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் படித்துத்தானா பாடுகிறார்கள்? அருமையான வார்த்தைகளெல்லாம் அவர்கள் வாக்கிற் காணப்படவில்லையா?

தியாக: இவ்வளவு வார்த்தைகளும் நீர் படிக்கவில்லை யென்பதை நன்றாகக் காட்டுகின்றன. இருக்கட்டும். இந்தப் பாட்டை நீரே செய்ததாகச் சத்தியம் செய்வீரா?

சுப்: இதோ செய்கிறேன்; எந்த மாதிரியாகச் செய்ய வேண்டும்.

தியாக: துணியைப் போட்டுத் தாண்டவேண்டும். அது செய்வீரா?

சுப்பையா பண்டாரம்,  “இதோ தாண்டுகிறேன்” என்று சொல்லித் தமது அங்கவஸ்திரத்தைக் கீழே குறுக்கே போட்டு விட்டார். தியாகராச செட்டியார் நடுநடுங்கி அவர் கையைப்பிடித்துக் கொண்டு,  “நீர் சத்தியஞ்செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நான் நினையேன். துணியைத் தாண்ட வேண்டாம். நீர் வந்த காரியம் இன்னதென்று சொல்லிவிடும். உமக்கு வேண்டியவற்றைக் கொடுக்கிறேன்; வீணாக ஏன் பொய்சொல்லுகிறீர்?” என்று நயமாகக் கேட்கவே அவர் நிகழ்ந்தவற்றையெல்லாம் உள்ளபடியே சொல்லி விட்டார்.

செட்டியார் உடனே பழக்கடை சென்று மிகவும் உயர்ந்தனவாக 50 மாம்பழங்களை விலைக்கு வாங்கி இரண்டு தென்னங் குடலைகளில் அடக்கி ஒரு குடலையை அவருடன் வந்த சரவண பண்டாரத்தினிடத்தும் மற்றொன்றை ஒரு கூலியாளிடத்தும் கொடுத்து உடன் செல்லும்படி சொல்லி சுப்பையா பண்டாரத்தை அனுப்பி விட்டார். அந்த இருவரும் தமக்குப் பின்னே வரச் சுப்பையா பண்டாரம் அவர்களுக்கு முன்னே விரைவாகப் பட்டீச்சுரம் வருவாராயினர்.

பட்டீச்சுரத்தில் இப்புலவர்பிரான் நித்திரை கலைந்து எழுந்து,  “பண்டாரம் கும்பகோணஞ் சென்றாரா?” என்று விசாரித்து விட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினர்; தொடங்கினாலும் பாடஞ் சொல்லுவதில் மனம் செல்லவில்லை; சுப்பையா பண்டாரத்தின் விஷயத்தில் இவருக்குக் கவலையுண்டாயிற்று; “தியாகராசு சுப்பையாவை என்ன செய்கிறானோ? என்ன கேள்விகள் கேட்கிறானோ? சும்மா விட மாட்டானே! சுப்பையா விழிக்கக் கூடுமே!” என்று எங்களிடம் சொல்லிக்கொண்டே யிருந்தார்.

சூரியாஸ்தமனத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு வழக்கப்படி அவ்வூரின் தெற்கேயுள்ள திருமலைராயனாற்றங்கரைக்குச் செல்லாமற் கும்பகோணத்திற்குச் செல்லும் வழியை நோக்கி வடக்கே சென்று அங்குள்ள ஒரு குளக்கரையில் சுப்பையா பண்டாரத்தின் வரவை எதிர்பார்த்து வடதிசையை நோக்கிக் கொண்டே நின்றார். நானும் உடன் சென்று அருகில் நின்றேன். சுப்பையா பண்டாரம் வரவில்லை. இவருக்குக் கவலை அதிகமாயிற்று; “யாராவது வருகிறதாகத் தெரிகிறதா? பாரும்” என்றார். பார்த்து நான், ”ஒன்றும் தெரியவில்லை” என்றேன். “பார்த்துக் கொண்டே நின்று யாராவது கண்ணுக்குத் தோற்றினால் உடனே சொல்லும்” என்றார். அங்ஙனமே நான் வடதிசையை நோக்கி நிற்கையில் மூன்று உருவங்கள் முதலில் கண்ணுக்குத் தோற்றின.

நான்: மூன்று உருவங்கள் தோற்றுகின்றன.

மீ: அவர்களாக இருக்குமோ? சரவண பண்டாரம் மிகவும் உயரமுள்ளவனாதலால் அதைக்கொண்டு கண்டுபிடிக்கலாமே.

நான்: மூவரில் ஒருவருடைய உருவம் மட்டும் உயரமாகவே தெரிகிறது; அவர் சரவண பண்டாரமாகவே இருக்கலாம்.

மீ: பின்னும் நன்றாகக் கவனியும். தலையில் ஏதேனும் இருப்பதாகத் தெரிகிறதா?

நான் (அவர்கள் நெருங்க நெருங்க) : ஒருவர் தலையில் ஏதோ ஒரு குடலை தெரிகிறது. வேறொருவர் தலையிலும் ஒரு குடலை காணப்படுகிறது.

மீ: சுப்பையா பண்டாரம் வருகிறாரா?

நான்: வருகிறார்.

அவர் வருவதை நோக்கி அவரோடு பேச வேண்டுமென்ற ஆவலுடன் இவர் நிற்கையில் அவர் வேகமாக அருகில் வந்து இவரை நோக்கி, “என்ன ஐயா ? உங்களை நான் பரமஸாது வென்று எண்ணியிருந்தேன். பெரிய ஆபத்திலே கொண்டுவந்து விட்டீர்கள். என்னை அவமானத்துக்குள்ளாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே, நீங்கள் இவ்வளவு செய்வீர்களென்று இதுவரையில் நான் நினைக்கவில்லை. அந்த மனுஷ்யர் புலிபோலே என்னை உறந்துவிட்டாரே” என்றார்.

மீ: என்ன? என்ன?

சுப்: என்னவா? நீங்கள் பாடல் செய்து கொடுத்தீர்களே! அந்தப் பாடலை என்னுடைய சக்திக்கு ஏற்றபடி செய்துதர வேண்டாமா? அதில் நீங்கள் செய்ததாக நினைக்கும்படி ஏதோ அடையாளம் வைத்துப் பாடிவிட்டீர்களே. நான் பாடிக்காட்டும்பொழுது, ‘என்கோ என்பதற்கு என்ன அர்த்தம்? இந்தப் பிரயோகம் எந்த நூலில் வந்துள்ளது? இலக்கணமென்ன?’ என்று பல கேள்விகளைக் கேட்டு அந்த மனுஷ்யர் உபத்திரவம் செய்து என் பிராணனை வாங்கிவிட்டார். நான் சத்தியம் பண்ணிக் கொடுப்பதாகச் சொல்லியும் அவர் நம்பவில்லை.

மீ: அப்பால் நீர் எப்படி அவனிடம் தப்பி மாம்பழம் வாங்கி வந்தீர்?

சுப்: பிற்பாடு சொல்லுகிறேன். இப்பொழுது அதைச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

இவ்வாறு சொல்லுகையில் அவர் முகம் கோபக்குறிப்பை மிகவும் புலப்படுத்தியது. இவர் அந்நிலையை உணர்ந்து, “சரி; வீட்டுக்குப் போம்” என்றார்.

சுப்பையா பண்டாரம் தமக்குப் பின்னே வந்த இருவருடனும் வீட்டிற்குச் சென்றார். திண்ணையிலிருந்த ஆறுமுகத்தா பிள்ளை அவரைக் கண்டு, “என்ன சுப்பையா! போய்வந்தாயா? என்ன குடலைகள் ? மாம்பழக்குடலைகளா? செட்டியாரைப் பார்த்தாயா? புதிய பாடல் சொன்ன துண்டா? அவர் பழம் வாங்கிக்கொடுத்தாரா? கௌரவத்திற்காக நீயே சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கி வந்தாயா? உண்மையைச் சொல்” என்றார்.

சுப்: ஒரு பாடல் செய்து சொல்லிக்காட்டிச் செட்டியாரை மகிழ்வித்தேன். அவரே பழக்கடைக்கு வந்து பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அவர் அனுப்பிய ஆளே இவன்.

ஆறு: உன்னுடைய பாடலுக்காக அவர் பழம் வாங்கிக் கொடுத்திருந்தால் அவரைப் போலத் தெரியாதவர்கள் இல்லையென்று நான் உறுதியாகச் சொல்வேன்.

பின்னும் இப்படியே இருவரும் மேன்மேலும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் இக்கவிஞர் சிரோமணி அங்கே வந்து, “தம்பி, இவரை விட்டு விடுங்கள்; கோபத்தோடு இருக்கிறார்” என்று சொல்ல அவர் எழுந்து வேறிடம் சென்றார். எல்லாரும் தத்தம் இடம் சென்றார்கள். பின்பு அந்த மாம்பழங்களை எல்லாரும் வாங்கி யுண்டு திருப்தியுற்றுச் சுப்பையா பண்டாரத்தை வாழ்த்தினார்கள்.

மறுநாள் செட்டியார் பாடல் பெற்ற ஸந்தோஷத்தாற் பட்டீச்சுரத்துக்கு வந்து பிள்ளையவர்களை நோக்கி, “என்ன? நேற்றுப் பெரிய வேடிக்கை செய்து விட்டீர்களே!” என்று சொல்லிவிட்டு எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொன்னார்; கேட்டு யாவரும் நகைத்தார்கள்.

திருச்சிராப்பள்ளி சென்றது

பட்டீச்சுரத்தில் இருந்து வருகையில், ஆறுமுகத்தா பிள்ளையின் குடும்பக்காரியமாக இவர் பரிவாரங்களுடன் ஒருநாள் திருச்சிராப்பள்ளிக்குப் புறப்பட்டார். நீடாமங்கலம் வரையில் சாலை வழியே வண்டியிற் சென்றார். நல்ல மரச்செறிவுள்ள சாலையைக் கண்டால் வண்டியிற் செல்லாமல் நடந்தே செல்லுவதும் பாடம் சொல்லுதல் நூலியற்றுதல் முதலியவற்றை அப்பொழுது மேற்கொள்ளுதலும் இவருக்கு இயல்பு. அப்பொழுது இவர் செய்யும் காரியம் எதுவும் நன்றாக நடைபெறும். அங்ஙனம் அச்சாலையில் செல்லும்பொழுது தான் திருப்பெருந்துறைப் புராணத்துள்ள பெருந்துறைப் படலத்தில் 31- ஆவதிலிருந்து 40-ஆவது வரையிலுள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அவற்றை எழுதிக்கொண்டு நானும் உடன் சென்றேன்.

அப்பால் நீடாமங்கலத்தில் ரயில் வண்டியிலேறி திரிசிரபுரம் சென்று கீழைச் சிந்தாமணியிலுள்ள சொர்க்கபுரமடத்தில் இவர் தங்கினார். அந்த நகரத்தில் பத்து நாட்கள் இருந்தார். இவர் அங்கே வந்திருப்பதைக் கேள்வியுற்ற பழைய மாணாக்கர்களும் முக்கியமான பிரபுக்களும் காலை மாலைகளில் வந்துவந்து அளவளாவி ஆனந்தித்துத் தாம் படித்துவந்த நூல்களில் தமக்குள்ள ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு சென்றனர். பலர் திருப்பெருந்துறைப் புராணத்துள்ள பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர். காப்பிய இலக்கணங்களைச் சுவை ததும்ப அமைத்துப்பாடும் முறை இவர் புராணங்களில் மிகுதியாகக் காணப்படுமாதலால் இவர் இயல்பை அறிந்த பலர், ‘நாட்டுச் சிறப்பைக் கேட்க விரும்புகிறோம்; நகரச் சிறப்பைக் கேட்க விரும்புகிறோம்’ என்று தனித் தனியே தத்தம் ஆவலை வெளியிட்டு அங்ஙனமே அவ்வப் பகுதிகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.

சிலர் இடையிலே இவராற் செய்யப்பட்ட வேறு புராணங்களிலும் பிரபந்தங்களிலுமுள்ள பாடல்களைக் கேட்டு அவற்றில் அமைந்திருக்கும் கற்பனை நயங்களைப் பாராட்டினர். சிலர் தாம் இயற்றிய நூல்களைப் படித்துக் காட்டித் திருத்திக்கொண்டு சிறப்புப்பாயிரம் பெற்றனர். அக்காலங்களிற் சில பாடல்களுக்குப் பொருள் சொல்லிவிட்டு இவர் பதசாரம் சொல்லுதல் மிகவும் ஆச்சரியகரமாக இருந்தது.

சதாசிவபிள்ளை பாடல்

அங்ஙனம் வந்து செல்லும் பழைய மாணாக்கர்களிற் சிலர் அன்பின் பிகுதியால் இவர் மீது நூதனமாகப் பாடல்கள் இயற்றிப் படித்துக் காட்டிச் செல்வதுண்டு. அப்பாடல்கள் அருமையாக இருக்கும். அவற்றுள்ளே *10 சதாசிவ பிள்ளை யென்பவர் இயற்றிய துதிகவிகளில்,

(விருத்தம்)

"என்னகத்தி லவிச்சைகெட மெய்ஞ்ஞானக் கதிர்வீசும் இளம்பொன் றன்னைத்
தன்னகத்துச் சார்ந்தாரைத் தானாக்கு மேருவையித் தரணி தாங்கும்
பன்னகத்தின் மமதை கெடப் பாவிடியைத் தருமுகிலைப் பன்ஞா னங்கள்
மன்னகத்து மீனாட்சி சுந்தரநா வலனடியை வணக்கஞ் செய்வாம்"

                 [பொன் – சூரியன்]

என்ற பாடல் மட்டும் ஞாபகத்தில் இருக்கின்றது. இச்செய்யுள் இவரிடத்தில் மாணாக்கர்கள் கொண்ட அளவற்ற அன்பைப் புலப்படுத்துகின்றது. அந்தப் பத்து நாளும் ஆனந்தத்தை விளைவித்தன.

காலப்போக்கு

ஒவ்வொருநாளும் ஏதேனும் அருகிலுள்ள ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று இவர் ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு வருவார்; அச்சமயத்தில் அந்தத் தலசரித்திரம், அதன் சம்பந்தமான தேவாரம், நூல்கள், தனிப்பாடல் முதலியவை இன்னவை யென்று எங்களுக்கு எடுத்துரைப்பார்; அங்கே உள்ளவர்களைக் கொண்டும் எங்களுக்கு அவற்றைச் சொல்லச் செய்வார். இடையே சந்திப்பவர்களில், “நீங்கள் இவ்வூரைவிட்டுப் போன பின்பு இதற்குள்ள சோபை போய்விட்டது” என்போர் சிலர்; “உங்களால் இந்த ஊர் மிக்க கீர்த்தியை நாளுக்குநாள் அடைந்து வருகின்றது” எனப் பாராட்டுவோர் சிலர்; “உங்களுடைய அருமையான நூல்களை அடிக்கடி கேட்டு இன்புற இயலவில்லையே என்று வருந்துகின்றோம்” என்பவர் சிலர்; “இனி இந்த ஊருக்கு வந்து விடுங்கள்” என்பவர் சிலர். சிலர் தங்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விருந்து செய்வித்து உபசரித்து அனுப்பினர்.

உபதேசியார் ஆட்சேபித்தது

ஒருநாள் வரகனேரி சவரிமுத்தாபிள்ளை யென்னுஞ் செல்வர் இவரை அழைத்துச் சென்று அவ்வூர் அக்கிரகாரத்திலுள்ள ஒரு வீட்டில் விருந்து செய்வித்து உபசாரத்துடன் தம்முடைய வீட்டிற்கு அழைத்துப்போனார். அவர் பெரியபுராணத்தில் அதிபத்த நாயனார் புராணத்திற்குப் பொருள் சொல்ல வேண்டுமென்று இவரைக் கேட்டுக் கொண்டனர். இவர் சொல்லிவருகையில் தமிழ்க் கல்விமானாகிய கிறிஸ்தவமத உபதேசியாரொருவர் அங்கே வந்தார். இடையிடையே மனம் பொறாமல் அவர் துராட்சேபம் செய்து கொண்டேயிருந்தனர்; அப்பொழுது அப்பொழுது இவர் சமாதானஞ் சொல்லிவந்தும் மேன்மேலே அவர் இவருடைய பெருமையை அறியாமல் கேள்விகேட்டு வந்தனர். அவர் நோக்கத்தை யறிந்து, இவர்பாலுள்ள அன்பின் மிகுதியாலும் மதிப்பாலும் சவரிமுத்தா பிள்ளை பேசாமலிருக்கும்படி அவ் வுபதேசியாருக்கு முதலிற் கூறினர். அப்படியும் அவர் அடங்காமையால் அவரை எழுந்து போகும்படி கண்டித்துச் சொல்லிவிட்டார். அவர் திரும்பிப் பாராமல் விரைவாகப் போயினர். இவர் அவ் வுபதேசியாரை அன்புடன் அழைத்து, “ஐயா, ஞாபகமிருக்கட்டும்; மறவாதீர்கள்” என்றார். எங்களுக்கு அது மிகவும் வியப்பாக இருந்தது; இவருடைய பொறுமையைப் பாராட்டினோம்.

தஞ்சாவூர் சென்றது

காரியத்தை முடித்துக்கொண்டு இவர் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்துவிட்டார். அங்கே சில தினம் இருந்துவிட்டு ஆறுமுகத்தா பிள்ளையின் குடும்பக் காரியம் ஒன்றன் நிமித்தம் தஞ்சாவூருக்கு புரட்டாசி மாதம் முதலிற் சென்றார். கரந்தையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இவர் ஒருமாத காலம் தங்கியிருந்தனர். இவர் மாணாக்கரும் மார்ஷல் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமான ஐயாசாமி பிள்ளை யென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளை யென்பவரும் கோ. இராமகிருஷ்ண பிள்ளை யென்பவரும் வேறு சிலரும் அடிக்கடி வந்துவந்து பார்த்துப் பார்த்துத் தாங்கள் அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டும் இவருக்கு ஆகவேண்டியவற்றைக் கவனித்து விட்டும் சென்றனர். அப்பொழுது ஐயாசாமி பிள்ளை கல்லாடம் முழுவதையும் பாடங்கேட்டு முடித்தனர். இவர் விஷயத்தில் அவர் காட்டிவந்த அன்புடைமையும் கவனிப்பும் அதிகம். திருவையாற்றிலிருந்த முத்துசாமி பாரதியாரென்பவர் அடிக்கடி வந்து தமக்குள்ள சந்தேகங்களைக் கேட்டுப் போக்கிக் கொண்டனர். இப்படியே வந்து சென்றவர்கள் பலர்.

சின்னத்தம்பியா பிள்ளை

தஞ்சாவூரை அடுத்த ரெட்டிபாளையமென்னும் ஊரிலுள்ள பெரிய மிராசுதாராகிய சின்னத் தம்பியாபிள்ளை யென்பவர் தஞ்சைக்கு இவர் வந்திருப்பதைக் கேள்வியுற்றுத் தாமே வந்து பார்த்து அளவளாவி இவருடைய செய்யுள் நயங்களைத் தெரிந்து பெரிதும் இன்புற்று முடிவில் தக்க திரவிய ஸஹாயம் முதலியவற்றைச் செய்துவிட்டுச் சென்றார். அப்பால் இவர் அவருடைய அன்புடைமையில் ஈடுபட்டு,

(விருத்தம்)

"மழைபொழியு முகிலென்கோ வானுயர்கற் பகமென்கோ மகிழ்ந்தெஞ் ஞான்றும்
தழையுமிரு நிதியென்கோ தருசிந்தா மணியென்கோ தாவா மேன்மை
விழையுமொரு சுரபியென்கோ புண்ணியமென் கோவரன்றீ விழிநே ராகாக்
கழைமதவேள் நிகர்சின்னத் தம்பிமகி பாலாநின் கையைத் தானே"

என பாடலை முதலில் அமைத்து ஒரு கடிதம் எழுதியனுப்பினர்.

முத்துக்குமார பத்தரைப் பாராட்டியது

அந்தக் காலத்தில் தஞ்சாவூரில் இருந்தவரும் பித்தளையில் நுட்பமான சிற்ப வேலைசெய்வதில் அதிகத் திறமையுடையவரும் தமிழ் நூலறிவிற் சிறந்தவரும் சிவபக்திச் செல்வருமாகிய முத்துக்குமார பத்தரென்பவர் இவருடைய பூஜைக்கு உபயோகமாகக் கற்பூரப் பஞ்சஹாரத்தித் தீபமொன்றும் ஊதுவத்திச்செடி யொன்றும் அரிய வேலைப்பாடுள்ளனவாகச் செய்து அவற்றைப் பல அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இவரிடம் சேர்ப்பித்தனர். இவர் அவற்றை ஏற்று மகிழ்ந்து அவரது அன்புடைமையையும் அவற்றின் வேலைப்பாட்டையும் பாராட்டிவிட்டு,

(வெண்பா)

"மொய்வேலை சூழுலகில் முத்துக்கு மாரபத்தன்
கைவேலை போலநாம் கண்டதில்லை - அவ்வேலை
செய்யு மவற்குத் திறல்விச் சுவகருமன்
கையும் பொழியும்பொன் காண்"

என்ற செய்யுளை இயற்றி அளித்தனர். இவருடைய மனத்தில் எழுந்த சந்தோஷமே விரைவில் அப்பாடலாக வந்ததை உணர்ந்து அங்கிருந்தவர்கள் மகிழ்ந்தார்கள்.

பிரான்மலை ஓதுவார்

பின்பு ஒருநாள் பிரான்மலையிலிருந்து ஓதுவார் ஒருவர் மிக்க ஆவலோடு இவரைப் பார்க்க வந்தார். அவர் தேவாரங்களைச் சாரங்கி யென்னும் வாத்தியத்தில் அமைத்துப் பண்ணோடு ஓதுதலில் வல்லவர்; பல வித்துவான்களுடைய கீர்த்தனங்கள் அவருக்குப் பாடமுண்டு; குணவான். அவருடைய ஞானத்தையும் விருப்பத்தையும் பக்தியையும் அறிந்து தம்முடைய பூஜா காலத்தில் ஒவ்வொரு நாளும் தேவாரமோதுவதுடன் நல்ல கீர்த்தனங்களையும் பாடும்படி இவர் நியமித்து மாதவேதனங் கொடுத்து வந்தார். அவர் அதனை ஏற்றுக்கொண்டு அப்பணியை நாடோறும் செய்து வருவாராயினர். திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றி மீளும் வரையில் உடனிருந்து விட்டு அப்பால் விடைபெற்று அவர் தம்மூர் சென்றார்.

அடிக்குறிப்பு மேற்கோள்:  

10.  பக்கம் 39.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s