-மகாகவி பாரதி

9. சுதேசமித்திரன் 07.10.1916
மைசூரிலிருந்து நம்முடைய கடைக்கு ஒரு ஐயங்கார் வந்தார். “என்ன தொழில்?” என்று கேட்டேன்.
“சமாசாரப் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்து ஜீவிக்கிறேன்” என்று இங்கிலீஷிலே மறுமொழி சொன்னார். “இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு” என்றார். “நல்ல லாபமுண்டா?” என்று கேட்டேன்.
“ஒரு பத்திக்கு 6 ரூபாய் கிடைக்கிறது. மாதத்திலே ஏழெட்டு வியாசந்தான் எழுத முடிகிறது. ஒரு வியாசம் அனேகமாக ஒரு பத்திக்கு மேலே போகாது. என்னுடைய வியாசங்களுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. சில சமயங்களில் எனது வியாசமே தலையங்கமாகப் பிரசுரம் செய்யப்படுகிறது. ஆனாலும், அதிக லாபமில்லை. சிரமத்துடனே தான் ஜீவனம் நடக்கிறது. அன்றன்று வியாசமெழுதி அன்றன்று பசி தீர்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள். அந்தக் குழந்தைகளையும் பத்தினியையும் ஸம்ரக்ஷணை பண்ண இத்தனை பாடுபடுகிறேன்” என்று இங்கிலீஷிலே சொன்னார்.
“இவருக்குத் தமிழ் தெரியாதோ?” என்று தராசு கேட்டது.
ஐயங்கார் சொன்னார், இங்கிலீஷில்:- “தமிழ் தெரியும். நெடுங்காலம் கன்னட தேசத்தில் பழகின படியால் தமிழ் கொச்சையாக வரும். அதனால் இங்கிலீஷில் பேசுகிறேன்.”
தராசு சொல்லுகிறது:- “கொச்சையாக இருந்தால் பெரிய காரியமில்லை. சும்மா தமிழிலேயே சொல்லும்.”
ஐயங்காருடைய முகத்தைப் பார்த்தபோது அவர் சங்கடப்படுவதாகத் தோன்றிற்று. அதன் பேரில், ஐயங்கார் இங்கிலீஷிலேயே வார்ததை சொல்லும்படிக்கும், நான் அதைத் தராசினிடத்திலே மொழிபெயர்த்துச் சொல்லும்படிக்கும் தராசினிடம் அனுமதி பெற்றுக் கொண்டேன்.
தராசு கேட்கிறது:- ஐயங்காரே, கையிலே என்ன மூட்டை?
ஐயங்கார் பத்திரிகை வியாசங்களைக் கத்தரித்து இந்தப் புத்தகத்திலே ஒட்டி வைத்திருக்கிறேன். சம்மதமுண்டானால் பார்வையிடலாம் என்று அந்த மூட்டையைத் தராசின் முன்னே வைத்தார். தராசு அந்தப் புத்தகத்தைப் பரிசோதனை செய்து பார்த்து, நன்றாகத்தான் இருக்கிறது என்றது.
இதைக் கேட்டவுடனே ஐயங்கார்;-யூ சீ மிஸ்டர் பாலன்ஸ் என்று தொடங்கி …. (அடடடா! இங்கிலீஷில் அப்படியே எழுதுகிறேன்; வேறெங்கேயோ ஞாபகம்.)
ஐயங்கார் சொல்லுகிறார்:- கேளாய் தராசே, நானும் எத்தனையோ வியாசங்கள் எழுதுகிறேன். பிறர் எழுதுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனாலும், இந்த இங்கிலீஷ்காரருக்கு இங்கிலீஷ் பாஷை எப்படி வசப்பட்டு நிற்கிறதோ, அந்த மாதிரி நம்மவருக்கில்லை. நான் இப்போது இரண்டு மூன்று நாளாக ஒரு இங்கிலீஷ் புத்தகம் வாசித்துக் கொண்டு வருகிறேன். ஆஹாஹா! வசனந்தான் என்ன அழகு; நடை எத்தனை நேர்த்தி; பதங்களின் சேர்க்கை எவ்வளவு நயம்! என்று ஒரே சங்கதியைப் பதினேழு விதங்களிலே சொல்லிப் புகழ்ச்சி செய்யத் தொடங்கினார்.
அதற்குத் தராசு:- சுவாமி, இந்த ஜன்மம் இப்படித் தமிழ் பிராமண ஜன்மமாக எடுத்துத் தீர்ந்து போய்விட்டது. இனிமேல் இதைக் குறித்து விசாரப்பட்டு பயனில்லை. மேலே நடக்க வேண்டிய செய்தியைப் பாரும் என்றது.
இப்படியிருக்கும்போது, வெளிப்புறத்தில் யாரோ சீமைச் செருப்புப் போட்டு நடந்து வரும் சத்தம் கேட்டது. சில க்ஷணங்களுக்குள்ளே, ஒரு ஆங்கிலேயர் நமது தராசுக் கடைக்குள் புகுந்தார். வந்தவர் தமிழிலே பேசினார்:- காலை வந்தனம்.
தராஸுக்கடை இதுவாக இருக்கிறதா? என்று கேட்டார்.
ஆம் என்றேன்.
தராஸு எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லுமா?*’
சொல்லும். ஆனால், நீ இங்கிலீஷ் பேசலாம்; தமிழ்ப் பேசித் தொல்லைப்பட வேண்டாம் என்றேன்.
அப்போது தராசு:- “இந்த ஆங்கிலேயர் இப்போது எந்த ஊரிலே வாசம் செய்து வருகிறார்? இவர் யார்? என்ன வேலை?” என்று கேட்டது.
எனது கேள்விக்கும் தராசின் கேள்விக்கும் சேர்த்து, மேறபடி ஆங்கிலேயர் பின்வருமாறு மறுமொழி சொன்னார்:-
“எனக்குத் தமிழ் பேசுவதிலேயே பிரியமதிகம்.” (ஆங்கிலேயர் பேசிய கொச்சைத் தமிழை எழுதாமல் மாற்றி எழுதுகிறேன்.)
ஆங்கிலேயர் சொல்லியது:- “எனக்குத் தமிழ் பேசுவதிலே பிரியமதிகம். அது நல்ல பாஷை. தமிழ் ஜனங்களும் நல்ல ஜனங்கள். நான் அவர்களுக்கு ‘சுய-ஆட்சி’ கொடுக்கலாமென்று கட்சியைச் சேர்ந்தவன். இன்னும் கொஞ்ச காலத்துக்குள் சில சுதந்திரங்கள் வருமென்று நிச்சயமாக நம்புகிறேன். என் உத்தியோகம். நான் இப்போது வசித்து வரும் ஊர்- எல்லாவற்றையும் தங்களிடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் அதைத் தாங்கள் எந்தப் பத்திரிகையிலும் போடக் கூடாது” என்றார்.
‘சரி’ என்ற பிறகு தமது பூர்வமெல்லாம் சொன்னார். அவரிடம் வாக்குக் கொடுத்தபடி இங்கே அந்த வார்த்தைகள் எழுதப்படவில்லை.
அப்போது தராசு சொல்லுகிறது:- “ஆங்கிலேயரே, உம்மைப் பார்த்தால் நல்ல மனிதனாகத் தெரிகிறது. பொறுத்துக் கொண்டிரும். இந்த ஐயங்கார் கேள்விகள் போட்டு முடித்த பிறகு உம்மிடம் வருவோம்.” “ஐயங்காரே, தம்முடைய கேள்விகள் நடக்கலாம்.”
ஐயங்கார் சொல்லுகிறார், (இங்கிலீஷில்):- “இந்த ஆங்கிலேயரின் கேள்விகளை முதலாவது கவனியுங்கள். என் விஷயம் பிறகு நேரமிருந்தால் பார்த்துக் கொள்ளலாம்.”
அப்போது ஆங்கிலேயர் சொல்லுகிறார்:- “அவசியமில்லை. இருவரும் கேட்கலாம். மாற்றி மாற்றி இருவருக்கும் தராசு மறுமொழி சொன்னால் போதும்.”
“சரி, இஷ்டமானவர் கேட்கலாம்” என்று தராசு சொல்லிற்று.
ஐயங்கார் பேசவில்லை. சும்மா இருந்தார். சில நிமிடங்கள் பொறுத்திருந்து, ஆங்கிலேயர் கேட்டார்:- “ஐரோப்பாவிலே சண்டை எப்போது முடியும்?”
தராசு:- தெரியாது
ஆங்கிலேயர்:- இந்த யுத்தம் முடிந்த பிறகு ஐரோப்பாவிலே என்ன மாறுதல்கள் தோன்றும்?
தராசு:- தொழிலாளிகளுக்கும், ஸ்திரீகளுக்கும் அதிக அதிகாரம் ஏற்படும். வியாபாரிகளுக்குக் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். கிழக்குத் தேசத்து மதக் கொள்கைகள் ஐரோப்பாவிலே கொஞ்சம் பரவலாம்.
ஆங்கிலேயர்:- இவ்வளவுதானா?
தராசு:- இவ்வளவுதான் இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியும்.
ஆங்கிலேயர்:- தேச விரோதங்கள் தீர்ந்து போய்விட மாட்டாதா?
தராசு:- நிச்சயமில்லை. ஒரு வேளை சிறிது குறையலாம். அதிகப்பட்டாலும் படக்கூடும்.
ஆங்கிலேயர்:- சர்வ தேச விதிக்கு வலிமை அதிகமாய், இனிமேல் இரண்டு தேசத்தாருக்குள் மனத்தாபங்கள் உண்டானால் அவற்றைப் பொது மத்தியஸ்தர் வைத்துத் தீர்த்துக் கொள்வதேயன்றி, யுத்தங்கள் செய்வதில்லை’ என்ற கொள்கை ஊர்ஜிதப்படாதோ?
தராசு:- நிச்சயமில்லை. அந்தக் கொள்கையைத் தழுவி ஆரம்பத்திலே சில நியதிகள் செய்யக்கூடும். பிறகு அவற்றை மீறி நடக்கவுங்கூடும்
ஆங்கிலேயர்:- இரண்டு தேசத்தார் எப்போதும் நட்புடன் இருக்கும்படி செய்வதற்கு வழியென்ன?
தராசு:-ஒருவரையொருவர் நன்கு மதித்தல்; சமத்வ தர்மம். ஹிந்து வேதப் பழக்கம்.
ஆங்கிலேயர் சாயங்கால வந்தனம் என்று சொல்வதற்கு ‘சாங்கால வண்டனம்’ என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு எழுந்து போய்விட்டார்.
பிறகு ஐயங்கார் (தமிழில்):- நானும் போய் வருகிறேன். இந்த ஆங்கிலேயர் கேட்ட கேள்விகளைத் தான் நானும் கேட்க நினைத்தேன். அவருக்குச் சொல்லிய மறுமொழி எனக்கும் போதும். நான் போய் வருகிறேன், நமஸ்காரம் என்றார்.
தராசு:- “போய் வாரும், உமக்கு லக்ஷ்மிகடாக்ஷமும், தமிழிலே சிறிது பாண்டித்தியமும் உண்டாகுக” என்று ஆசீர்வாதம் பண்ணிற்று. ஐயங்கார் சிரித்துக் கொண்டே போனார்.
- சுதேசமித்திரன் (07.10.1916)
$$$