சிவகளிப் பேரலை- 99

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

99. பரமன் திருவிளையாடல்

.

ம் தே யுக்தம் வா பரமசி’வ காருண்யஜலதே

தௌ திர்யக்ரூபம் தவ பசி’ரோ ர்ச’னதியா/

ஹரிப்ரஹ்மாணௌ தௌ திவி புவி சரந்தௌ ச்’ரமயுதௌ

கதம் ச’ம்போ ஸ்வாமின் கய மம வேத்யோஸி புரத://

.

கருணைக் கடலே உன்னுடை முடியடி

பிருமனும் பெருமாளும் பறவையாய் விலங்காய்

உருமாறி விண்மண் திரிந்தும் காணாரே?

தருமமோ என்முன் தெரிவது பரமனே?

.

     முன்பு 23-வது ஸ்லோகத்தில், எல்லாம் வல்ல எம்பிரானை நோக்கி, சிவபெருமானே பக்தனாகிய எனக்கு விரைவில் தரிசனம் கொடுத்து ஆட்கொள்வீராகுக! என்று இறைஞ்சிய சங்கராச்சார்யார், இந்த ஸ்லோகத்தில் அவரது திருக்காட்சியை கண்ணுற்று புளகாங்கிதமுற்று அந்த பரமானுபவத்தை மொழிந்துள்ளார்.

.அந்த ஸ்லோகத்தில் பரமேஸ்வரனே, எனது பக்திக்கு மெச்சி பிரும்மா போன்றோ, விஷ்ணு போன்றோ என்னை ஆக்கிவிட வேண்டாம். அப்படி  ஆகச் செய்தாயானால், உமது முடியையும், அடியையும் காண்பதற்காக அன்னப் பறவையாகவோ, வராக விலங்காகவோ உருமாறித் தேடத் தொடங்கிவிடுவேன்; அவ்விதம் அலைந்து திரிந்தும் உமது முடி, அடியைக் காண இயலாமல் தோற்றுப்போனார்கள்; ஆகையால் எனக்கு அந்தத் துன்பம் வேண்டாம் என்று கூறினார் ஸ்ரீஆதிசங்கரர்.

.இறைவனோடு ஐக்கியப்படும், அவரது பாதாரவிந்தத்திலே அடைக்கலமாகும், அத்வைத ஒருமையே மேலானது; அதற்குப் பதில் இறைவனுக்கு அடுத்தபடியான உயர்ந்த தெய்வ ஸ்தானம் கொடுத்தால்கூட தேவையில்லை என்ற கருத்திலேயே அருட்பெரும் சோதியாய் நின்ற அண்ணாமலை தத்துவப் புராண சம்பவத்தை மேற்கோள்காட்டி அந்த ஸ்லோகத்தை ஜகத்குரு சங்கராச்சார்யார் படைத்திருந்தார். (86-வது ஸ்லோகத்திலும் இதேபோன்ற கருத்தைக் கூறியிருக்கிறார்.)

     பரமனோடு இணையும் அந்த மேலான மோன நிலையை இந்த ஸ்லோகத்திலே மேலும் வலியுறுத்தியிருக்கிறார். 

.கருணைக் கடலாகிய சிவபெருமானே, பிரும்மாவும், நாராயணனும் பறவையாய், விலங்காய் உருமாறி, தமது சக்தி அனைத்தையும் பயன்படுத்தித் தேடியபோதிலும் உமது முடியையும், அடியையும் காணாது நின்றார்கள். ஆனால், எளியோனாகிய எனது கண்களின் முன் உமது பூரண வடிவத்தை தரிசனப்படுத்துகிறீர்களே? பிரும்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் கிடைக்காத பெருமையை எனக்குக் கொடுத்திருக்கிறீர்களே! என்று வியந்து வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

.இதன் பொருள், எல்லாம் வல்ல இறைவனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் வல்லமை படைத்த தெய்வங்களால்கூட இயலாத காரியத்தை, பக்தன் தனது பரிபூரண பக்தியால் நிறைவேற்றிக் கொண்டுவிட முடியும் என்பதே. இறையருளை கல்விச் செருக்காலோ, செல்வச் செருக்காலோ அடைந்துவிட முடியாது. பக்தியால் மட்டுமே ஈட்ட முடியும். பக்தனின் உண்மையான பக்திக்கு இரங்கி, அந்தக் கருணாமூர்த்தியாகிய பரம்பொருள், தம்மைச் சுருக்கிக்கொண்டு – அதாவது மிகப்பெரிய ஆலமரம் அதன் சின்னஞ்சிறிய விதைக்குள் எப்படி தன்னைக் குறுக்கிக்கொண்டு அடங்கியிருக்கிறதோ அதனைப்போல – பக்தனுக்கேற்ற எளிய வடிவில் காட்சி கொடுத்து ஆட்கொள்கிறார் என்பதே இதன் உள்ளார்ந்த கருத்து. அதுதான் ஆண்டவனின் திருவிளையாடல். அவனேதான் அனைத்தும். அவனேதான் ஆட்டமும். அவனேதான் அடக்கமும். இதனை உணர்ந்துகொண்டால் எந்தப் பாகுபாட்டுக்கும், ஐயப்பாட்டுக்கும் இடமில்லை.    

$$$

Leave a comment